பெருந்தடங்கண்!

பெருந்தடங்கண்!
 
லகு முழுவதையும் தன் காவியத்துள் உள்ளடக்கியவன் கம்பன்.
மானுடத்தின் அத்தனை பதிவுகளும் இராம காவியத்துள் உள.
கற்பனையான இலக்கிய எல்லைக்குள் நின்று,
கம்பன் காட்டும் மானுட நுட்பங்கள் பலப் பல.
உள்நுழைந்து அந்நுட்பங்களைக் காணக் காண,
கம்பகாவியத்தினதும், கம்பனதும் பெருமை வானளாவி விரியும்.
அங்ஙனம், கம்பன் காட்டிய நுட்பங்களுள் ஒன்றாக,
பெண்மை பற்றி அவன் செய்த பதிவொன்றினைக் காண்பதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.
 


❃❃❃

பாலகாண்டம்.
அயோத்தியின் சிறப்புரைக்கத் தலைப்படுகிறான் கம்பன்.
அச்சிறப்புக்களுள் ஒன்றாய்,
அந்நாட்டின் பெண்மை நலம் உரைக்கத் தொடங்குகிறான்.
அங்கு வாழும் பெண்களின் அங்க இலட்சணத்தை,
முதலில், சுட்டும் அவன்,
அயோத்திப் பெண்கள்,
அகன்ற கண்களையும், சிறிய நெற்றியையும் பெற்றிருந்தனர் என்கிறான்.
பெருந்தடங்கண் பிறை நுதலார்க் கெலாம்
இவ்வருணனை கருத்துடன் கூடியது.
அது பற்றிப் பின் ஆராய்வாம்.

❃❃❃

அப்பெண்களுக்கு அயோத்தியில் அமைந்திருந்த தகுதிகளை,
தொடர்ந்து கூறுகின்றான் கம்பன்.
அயோத்திப் பெண்கள்,
சொத்துரிமையையும், கல்வி உரிமையையும் பெற்றிருந்தனராம்.
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
செல்வ, கல்வி உரிமைகளுக்காய்,
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் போராடிவரும் பெண்ணியத்தார்,
அன்றே கம்பன் செய்த இக்கருத்துப் புரட்சியைக் கருதுவார்களாக!
இப்பாடலடியில் வரும், பொருந்து எனும் சொல் முக்கியமானது.
இச்சொல்லை,
பாடலில் வரும் செல்வம், கல்வி எனும் இரண்டு சொற்களுடனும்,
இயைத்துப் பொருள் கொள்ளல் அவசியம்.
பொருந்து செல்வம் என இயைத்துப் பொருள் கொள்ளின்,
அயோத்தியிலிருந்த பெண்களுக்கான சொத்துரிமை,
போராடி  வலிந்து பெறப்பட்டதாய் அன்றி,
இயல்பாகவே சட்டத்தில் வகுக்கப்பட்டிருந்ததை அறிதல் கூடும்.
என்னே! கம்ப நாட்டின் கனிந்த நாகரிகம்!

❃❃❃

அவ்வாறே பொருந்து கல்வி என இயைத்துப் பொருள் கொள்ள,
கல்வி உரிமையும்,
அந்நாட்டில் இயல்பாய் வகுக்கப்பட்டிருந்தமையை,
அறிந்து மகிழ்கிறோம்.
பொருந்து கல்வி என்றலால்,
பெண்ணியல்புக்கு மாறுபடாத கல்வியை,
அங்குள்ள பெண்கள் பெற்றிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது.
இன்று, பெண்விடுதலை பேசி வருவோர் பலர்,
பெண்ணை எழுச்சி கொள்ளச் செய்வதாய் நினைந்து,
பெண்மையின் மென்மைக்குப் பொருந்தாத,
போர்ப்பயிற்சி முதலிய பல கல்வித்துறைகளையும் அவர்மேல் ஏற்றி வருகின்றனர்.
அஃது, ஒருமித்த சமூகநலன் நோக்கிய,
பெண்மையின் பங்களிப்புக்குத் தீதாம்.
இயல்பற்ற அக்கல்வி,
பெண்மையின் மென்மையைச் சிதைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆதலால், அப்பெண்ணியலாளர்,
பெண்மைக் கல்வி பற்றிய,
கம்பனது பொருந்து கல்வி எனும் தொடரை,
ஆழச் சிந்தித்தல் நன்றாம்.

❃❃❃

இப்பாடலில் வரும் பூத்தலால் எனும் சொல்லும் கவனத்திற்குரியது.
பூ இயல்பாய் விரிதலைப் பூத்தல் என்கிறோம்.
அவ்விரிவை வலிந்து செய்யின் அது பூத்தலன்றாம்.
அவ்வடிப்படை கொண்டு நோக்க,
அயோத்தியில் பெண்களுக்கான செல்வ, கல்வி உரிமைகள்,
பெண்களின் போராட்டத்தால் ஆண்கள் வழங்கியதாயன்றி,
இயல்பாய் அமைந்தது என்பது தெளிவுறத் தெரிய வருகிறது.
இதனால்,
மனிதப்பண்பு நோக்கிய உரிமைகளை இயல்பாய் உள்வாங்கியிருந்த,
அயோத்தியின் அறச் சிறப்பை உணர்கிறோம் நாம்.

❃❃❃

அடுத்து,
பெண்கள், கல்வி, செல்வ உரிமைகளைப் பெற்றமையால் விளைந்த,
பயனைக் கூறுகிறான் கம்பன்.
இன்று பெண்களின் உரிமை பற்றிப் பேசுவோர் பலர்,
தம் கடமை பற்றி நினைவதில்லை.
உரிமையை உரைத்த கம்பன்,
அவ்வுரிமையால் விளைந்த பயனையும் உரைக்கின்றான்.
விளையும் அப்பயன் மூலம்,
பெண்களின் கடமையும் அவனால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இயல்பான கல்வியும், செல்வமும் வாய்த்த அயோத்திப் பெண்கள்,
தம்மிடம்  வருந்தி வருவோர்க்கு,
பொருளை உரிமையாய் வழங்கியதுடன்,
நாளும் தம் இல்லத்தில் விருந்தேற்றும் மகிழ்ந்தனராம்.
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே?
சொத்துரிமை அமைந்திருந்ததால்,
வருந்தி வருவோருக்கு எவரின் அனுமதி இன்றி ஈயும் உரிமையும்,
கல்வி அமைந்ததால், ஆராய்ந்து வழங்கும் ஆற்றலும்,
அவர்க்கு அமைந்திருந்தன என்பதை,
குறிப்பால் உணர்த்துகிறான் கம்பன்.

❃❃❃

மேற்கூற்றினால்,
அயோத்திப் பெண்கள்,
சமூகக்கடமைகளை ஆற்றியிருந்ததை உரைத்த கம்பன்,
வைகலும் விருந்தும் எனும் அடுத்த கூற்றினால்,
அவர்கள் தம் இல்லறக் கடமைகளை ஆற்றியிருந்தமையையும்,
தெளிவு படுத்துகிறான்.
நாளும் அவர் இல்லத்தில் விருந்து நிகழ்ந்தது என்பதால்,
தம் குடும்பத்தையும், உறவையும் அவர் பேணி வாழ்ந்தமையை அறிகிறோம்.
சமூகத் தொண்டு இயற்றும் பெண்கள் பலர்,
இன்று இல்லத் தொண்டினை மறந்து போகின்றனர்.
வேறு சிலர் இல்லத்திற்கன்றிச் சமூகத்திற்குப் பணியாற்ற மறக்கின்றனர்.
அயோத்திப் பெண்கள் கல்வி, செல்வத் தகுதிகள் பெற்றதால்,
தம் மென்மை இயல்புக்கேற்ப,
சமூக, இல்லத்தொண்டுகளை இயற்றி இன்புற்றிருந்தமை,
கம்பனால் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

பெருந்தடங்கண் பிறை நுதலார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே?

❃❃❃

இப்பாடலில்,
பெண்களின் உரிமையையும், கடமையையும் உணர்த்திய கம்பன்,
அவர் இயற்றிய கடமைகள்,
பெண்மையின் இயல்புக்கேற்ப,
அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தமையைச் சுட்டுகிறான்.
ஆண் இயல்பு அறிவு சார்ந்தது.
பெண் இயல்பு உணர்வு சார்ந்தது.
அதனால், பெண்களுக்கு அன்பு செய்தல் இயல்பாற்றலாம்.
அவ்வன்பு செய்தலை,
ஆண்களால் அவரளவு இயற்ற  என்றும் இயலாது.
ஆண், பெண் இருபாலாரும் கல்வி, செல்வ உரிமைகளால்,
தத்தம் இயல்பாற்றலை விருத்தி செய்தலே,
சமூக முன்னேற்றத்திற்காம் அடிப்படை.
கம்பன், இவ்வடிப்படையை உணர்ந்தே,
கல்வி, செல்வ உரிமை பெற்ற பெண்களிடம் அன்பு விருத்தி பெற,
அதனால், இல்லற, சமூகக் கடமைகள் இனிதுற நடைபெற்றன என்கிறான்.

❃❃❃

இங்கு,
பெண்களின் அங்க வர்ணனையை,
அவர்தம் அன்பியல்போடு பொருத்தி மீண்டும் ஆராய்தல் அவசியமாகிறது.
மனித அங்கங்களிற் சில,
அவர்தம் குண இயல்புகளை வெளிக்காட்டும்.
இஃது, வழி வழி வந்த கருத்து.
கருணை எனும் பண்பினை வெளிப்படுத்துவன கண்களாம்.
அது நோக்கியே கருணைக்கு,
கண்ணோட்டம் எனும் பெயர் வழங்கலாயிற்று.
இவ்வுண்மை கொண்டு,
பெருந்தடங்கண் பிறை நுதலார் என,
அயோத்திப் பெண்கள் பற்றிக் கம்பன் உரைக்கும்,
அங்க வருணனையை ஆராயத் தலைப்படுகிறோம்.

❃❃❃

உணர்வு சார்ந்த பெண்கள் அன்பு செய்ய வல்லவர்கள்.
அதனால், கருணை அவர்க்குப் பெரிதாம்.
கருணையை வெளிப்படுத்தும் கண்கள்,
அக்கருணை விரிய விரியத் தாமும் விரியும்.
அதனாலேதான் பெண்களுக்குப் பெருங்கண்கள் இலட்சணமாயின.
வரையறுக்கப்பட்ட முக எல்லைக்குள் கண்கள் விரியின்,
நெற்றி சுருங்குதல் இயல்பாம்.
அதுநோக்கியே,
பெண்களுக்கு விரிந்த கண்களும், சிறிய நெற்றியும்,
இலட்சணங்களாய் உரைக்கப்பட்டன.
அவ்வங்க இலட்சணங்களை,
அயோத்திப் பெண்களிடம் அடையாளப்படுத்திய கம்பன்,
விரிந்த கண்களும், சிறிய நெற்றியுமான புற இலட்சணங்களுக்கேற்ப,
அவர்தம் அகத்திலும்,
கருணை, கடலாய்ப் பெருகியிருந்தமையை உணர்த்தவே,
கருணை வெளிப்பாட்டுச் செயல்களான,
ஈதலும், விருந்தும் அவரால் நிகழ்ந்தன என்கிறான்.
இவ்வுண்மை அறிய உவக்கிறது நம் மனம்.

❃❃❃

பெரிய கண்களைக் கொண்ட அயோத்திப் பெண்கள்,
தம் இயல்பான கருணையால்,
மற்றையோர் துன்பம் துடைப்பதை உரைத்த கம்பன்,
தன் காவியத்துள்,
மாற்றார் துன்பத்தைத் துடைக்கத் தலைப்படும் பெண்களிடமெல்லாம்,
அப்பெருந்தடங்கண் அங்க அடையாளத்தைப் பதிவு செய்வது,
இரசிப்புக்கும், வியப்புக்கும் உரியது.
அங்ஙனமாய் அமைந்த ஓரிரு இடங்களைக் காண்பாம்.

❃❃❃

பாலகாண்டம்
திருஅவதாரப்படலம்.
புதல்வர்கள் இல்லையே என வருந்திய தசரதன்.
என் பின் வையகம் மறு உறும் என மயங்கி,
தன் குலகுருவாகிய வசிட்டரிடம் தன் மனக்குறை உரைக்கிறான்.
தனது ஞான திருஷ்டியால்
திருமாலின் அவதாரம் நிகழப்போவதை உணர்ந்து,
கலைக்கோட்டு மாமுனிவரை அழைப்பித்து,
புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தசரதனைப் பணிக்கிறார் வசிட்டர்.
கலைக்கோட்டு முனிவன் யார்? எனத் தசரதன் வினவ,
அம் முனிவனின் வரலாறுரைக்கத் தொடங்குகிறார்  வசிட்டர்.

❃❃❃

உரோமபத்திரன் எனும் அரசனுடைய நாட்டில்,
மழையின்றிப் போக,
வருந்திய உரோமபத்திரனிடம்,
உயர்ந்தோர்,
கலைக்கோட்டுமுனிவரின், வான்பிலிற்றும் என்கின்றனர்.
தந்தையின் வலிய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்,
கலைக்கோட்டு முனிவரை இங்கு கொணரும் வகை யாது? என,
வருத்தமுறுகிறான் உரோமபத்திரன்.
கலைக்கோட்டுமுனிவரின் தந்தையின் சாபத்திற்கு அஞ்சி,
அம்முனிவரை அழைத்து வர யாவரும் அஞ்சுகின்றனர்.
அப்போது அவையிலிருந்த கணிகையர்,
அரசனதும், நாட்டு மக்களதும் துயர் தீர,
கலைக்கோட்டு முனிவரை,
தாமே சென்று யுக்தியால் அழைத்து வருகிறோம் என்கின்றனர்.
இவ்விடத்தில் மற்றையோர் துயர் தீர்க்கக் கருணையோடு எழுந்த,
அக் கணிகையர்களிடம் இப்பெருந்தடங்கண்களை
கருநெடுங்கண் எனப் பதிவு செய்கிறான் கம்பன்.

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்(கு) எனவே உன்னும்
கோதில் குணத்(து) அருந்தவனைக் கொணரும் வகை
யாவதெனக்? குணிக்கும் வேலை
சோதி நுதல், கருநெடுங்கண், துவர் இதழ் வாய்,
தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்(து), யாம் ஏகி அருந்தவனை,
கொணர்தும் என வணக்கம் செய்தார்.

❃❃❃

மிதிலைக் காட்சிப் படலம்.
மாடத்தில் நின்று இராமனைக் காண்கிறாள் சீதை.
அண்ணலும் நோக்க அவளும் நோக்க,
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்துகின்றனர்.
காதல் நோயால் கவல்கிறாள் சீதை.
தோழியர் அவள் துன்பம் தீர்க்கப் பல விதமாய் முயல்கின்றனர்.
வில் வளைக்கும் வீரனுக்கே சீதையென அறிவிக்கப்பட்டு,
மறுநாள் சுயம்வரம் தொடங்குகிறது.
இச்செய்தி சீதையின் வருத்தத்தை மிகுவிக்கிறது.
தான் மனத்தால் வரித்த நாயகன் அன்றி,
வேறெவரும் வில் வளைத்தால்,
தன் கற்புநிலை என்னாவது எனக் கலங்கி நிற்கிறாள் அவள்.
அவள் துன்பம் அகற்ற,
சபையில் நிகழ்வதை அறிந்து , உடன் அவளுக்கு அறிவிப்பதற்காய்,
அவளது அணுக்கத்தோழி நீலமாலை என்பாள்,
சுயம்வர மண்டபத்திற்கு வருகிறாள்.
பலரும் சிவதனுசைத் தீண்டமுடியாது திகைக்க,
சூடக வாள்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலை என அவ்வில்லை எடுக்கிறான் இராமன்.
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.
அவன் கைபட்ட சிவதனுசு முறிந்து வீழ்கிறது.

❃❃❃

அக்காட்சி கண்ட நீலமாலை,
சீதை மனம்கொண்ட மணாளனே வில் முறித்தான் எனும் செய்தியை,
அவளுக்கு உரைத்து அவளின் துன்பம் தீர்க்க ஓடி வருகிறாள்.
அவள் ஓட்டத்தின் கதியை,
கவிதை ஓட்டத்தால் நமக்கு உணர்த்துகிறான் கம்பன்.

என்று கொண்டுள் நைந்து நைந்திரங்கி விம்மி விம்மியே
பொன் திணிந்த  கொங்கை மங்கை இடரின் மூழ்கு போதின்வாய்
குன்றம் அன்ன சிலை முறித்த கொள்கை கண்டு குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்தொருத்தி செய்ததுரை செய்வாம்.

ஒரு நற்செய்தியை அன்பினார்க்கு உரைக்க விரைந்து ஓடிச் செல்லும் ஒருவர்,
ஓடிய களைப்பால் ஓரிரு இடத்தில் ஓய்ந்து நிற்பர்.
அன்பினாரை நெருங்கியதும்,
அக்களைப்புக் கருதாது விடாது ஓடிச் செய்தி உரைப்பர்.
இஃது இயல்பு.
மேற்பாடலில், வில்லுடைத்த இராமனின் செயல் உரைக்க,
நீலமாலை ஓடிவரும் செய்தி உரைக்கப்படுகிறது.
இப்பாடலில் முதலிரு அடிகளின் முடிவிலும்,
ஓசை ஓட்டத்தை ஓய்வுறச் செய்யும் கம்பன்,
மூன்றாம் அடியின் முடிவில் அவ்வோசை ஓட்டத்தை நிறுத்தாது,
தொடர்ந்து பாடலின் நிறைவிலேயே அதனை முடிக்கிறான்.
விம்மியே, போதின்வாய்  எனும்,
முதலிரு அடிகளின் நிறைவுச் சொற்களில்,
ஓசை நிறுத்தம் நிகழ்கிறது.
மூன்றாம் அடியின் இறுதிச் சொல்லான குளிர்மனத்து எனும் தொடரில்,
அவ்வோசை நிறுத்தம் நிகழாமல்,
தொடர்ந்து நான்காம் அடியின் இறுதித் தொடரான,
உரை செய்வாம் என்பதிலேயே,
அவ்வோசை நிறுத்தம் நிகழ்வதைக் கண்டு மகிழ்கிறோம் நாம்.
இங்ஙனம் வேறுபட்ட பாட்டின் கதிகளால்,
சீதையிடம் ஓடிவரும் நீலமாலை,
களைப்பினால் இருதரம் நின்று,
சீதையை நெருங்கியதும் நில்லாமல் ஓடிச் செய்தி உரைத்தமை
வெளிப்படுத்தப்படுகிறது.
கம்பனின் ஆற்றல் கண்டு அதிசயித்து நிற்கிறோம் நாம்.

❃❃❃

தொடரும் பாடலிலும்,
சீதையின் துன்பம் தீர்க்க ஓடிவந்த நீலமாலையின் செயலே உரைக்கப்படுகிறது.
கழுத்தணிகளும், காதணிகளும் அசைந்து வானவில்லாய் ஒளிரவும்,
அணிந்திருந்த மெல்லிய துகிலும், கூந்தலும் அவளின் ஓட்டத்தால் சோரவும்,
மின்னல்போல வேகமாய்ச் சீதையை அடைகிறாள் நீலமாலை.

வடங்களும் குழைகளும் வானவில்லிட
தொடர்ந்த பூங்கலைகளும் குழலும் சோர்தர
நுடங்கிய மின்னென நொய்தின் எய்தினாள்
நெடுந்தடங் கிடந்த கண் நீலமாலையே.

இப்பாடலில் தன் தோழியான சீதையின்மேல் கருணை மிகுந்து,
அவள் வருத்தம் தீர்க்க ஓடிவரும் நீலமாலையைச் சுட்டும் கம்பன்,
அவள் அகத்தில் கருணை இயல்பைப் பதிவு செய்ததால்,
புறத்திலும் கருணையை வெளிப்படுத்தும் அவளின் அகன்ற கண்களை,
நெடுந்தடங் கிடந்த கண் எனப்  பதிவு செய்கிறான்.
முன் அயோத்தியில் பெண்கள் இலட்சணம் உரைத்த கம்பன்,
அவர்தம் கருணைக்குப் பொருந்த அமைந்திருந்த கண்களை,
பெருந்தடங்கண் என, பதிவு செய்ததற்கேற்ப,
இங்கும் நீலமாலையின் கருணையைக் குறித்து,
நெடுந்தடங் கிடந்த கண் எனக் கண்களை வருணித்தல்,
முன்னுரைத்த அவனது கொள்கையை,
சித்தாந்தப்படுத்துகிறது.

❃❃❃

அயோத்தியா காண்டம்.
கைகேயி உத்தரவால் காடேகப் புறப்படுகிறான் இராமன்.
உடன் வருவேன் என்று,
உறுதிகொள்ளும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு,
அன்னை சுமித்திரையிடம் விடைகொள்ள வருகின்றான் அவன்.
தன் மாற்றாள்களான கோசலை, கைகேயி இருவர்க்கிடையிலான பூசலில்,
தான் பேசும் எச்சொல்லும் சார்பாய்க் கருதப்படும் எனக் கருதிய சுமித்திரை,
இராம இலக்குவர் பிரிவெண்ணி மௌனித்து அழுது வருந்துகிறாள்.

கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார்
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை
புண்தாங்கு நெஞ்சத்தனளாய் படிமேல் புரண்டாள்
உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்.

அவ்வேளை,
கைகேயியின் ஏவல் மகளிர் மரவுரி எடுத்துவர,
மனம்வருந்திய  இலக்குவன்,
தானும் மரவுரி ஏற்று காடேகுதற்கு,
தன் அன்னை உத்தரவு நல்கின்,
அதுவே பேறெனக் கருதி அன்னையின் தாள் பணிகிறான்.
தன் மைந்தனின் மேலும் இராமனின் மேலும்,
எல்லையற்ற கருணை கொண்ட சுமித்திரை,
இராமனின் தனிமை தீர்க்க விரும்பும் இலக்குவனின் உளம் உணர்ந்து,
அவனது துன்பம் தீரும் வண்ணம் உரை செய்கிறாள்.
இலக்குவனை நோக்கிய அவள்,
இனிக் காடே உனக்கு அயோத்தி, இராமனே தசரதன்,
சீதையே அன்னையர் என உரைத்து,
உடன் காடேகப் பணிக்கிறாள்.

ஆகாததன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்.

சுமித்திரையின் கருணை மேலும் பொங்குகிறது.
மைந்தன் இலக்குவனை நோக்கித் தொடர்ந்தும் பேசுகிறாள்.
இராமனுடன் தம்பியாய்ச் செல்லாதே, அவனுக்கு அடியாளாய் ஏவல் செய்,
பதினான்கு ஆண்டுகள் முடிவில்,
இந்நகர்க்கு அவன் வந்திடின் வா!
இல்லையேல் அவனுக்கு முன்னரே உயிர் துற! என உத்தரவிடுகிறாள்.

பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி
என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அதுவன்றேல்
முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள்.

கருணை பொங்கும் நெஞ்சோடு,
இராமனதும், இலக்குவனதும் துயர் துடைக்க,
தன் சோகம் மறந்து உரை செய்யும் சுமித்திரையின் அகவுணர்வை,
பதிவு செய்யும் கம்பன்,
கருணையாம் அவ்வக உணர்வுக்கேற்ப,
அவள் புறவடிவிலும்,
விரிந்த விழியினை மறவாமல் பதிவு செய்கிறான்.
வார் என்பதற்கு நெடிய என்பது பொருள்.
வார்விழி  என இங்கு கம்பன் இடும் தொடர்,
முன்பு அவனுரைத்த பெருந் தடங்கண்  என்பதனை வழிமொழிகிறது.

❃❃❃

ஆரணிய காண்டம்.
மாயமான் கண்டு மயங்குகிறாள் சீதை.
அவளின் பிடிவாதத்தால் இலக்குவனின் மறுப்பை நிராகரித்து,
மாயமானின் பின் செல்கிறான் இராமன்.
தாமதமாய் இஃது மாயமான் என்று உணரும் இராமன்,
அதன்மேல் அம்பு தொடுக்கிறான்.
அவனது அம்பு பட்டு,
இராமனின் குரலில் அலறி வீழ்கிறான் மாயமானாய் வந்த மாரீசன்.
தன் குரல் எடுத்து அலறும் மாரீசனின் செயல் கண்டு,
இதில் வஞ்சனை உண்டு என உணர்ந்த இராமன்,
சீதை இதுகேட்டு வருந்துவள் என நினைந்து  வருந்துகிறான்.

புழைத்த வாளி உரம் புக புல்லியோன்
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால்
மழைக்கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான்.

❃❃❃

இராமனின் அலறும் குரல்கேட்டு வருந்துகிறாள் சீதை.
அண்ணனுக்குத் தீங்கு இழைக்க யாராலும் ஆகாது என உரைத்து,
அவளை ஆறுதல் செய்ய நினைக்கும் இலக்குவனை,
கடுஞ்சொல் பேசி அவ்விடத்தினின்றும் அனுப்புகிறாள்.
இராம இலக்குவர் அகன்ற நிலையில்,
மூத்த முனி வேடமிட்டு,
சீதை இருக்குமிடம் வருகிறான் இராவணன்.

பூப் பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம்
தீப் பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன்
காப்பு அரு நடுக்குறும் காலன் கையினன்
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான்.

முதிய துறவியின் வருத்தம் கண்டு,
சீதையின் நெஞ்சில் கருணை பொங்குகிறது.
தன் துயரம் மறந்து,
வந்த முனியை வரவேற்கிறாள் வைதேகி.
வந்த இராவணன் வஞ்சனையாய்ப் பேசத் தொடங்குகிறான்.
இது யார் இருக்கை?
இங்கிருக்கும் அருந்தவன் யாவன்?
நீர் யார்? என,
அறியாதான்போல் வினாக்களை அடுக்குகிறான்.
இவ்வினாக்களைக் கேட்டு,
வந்த முதியவன் இவ்விடத்திற்குப் புதியன் என நினைந்த சீதை,
கருணை மிக,
இராம இலக்குவர் பற்றிய செய்தியைச் சொல்லத் தொடங்குகிறாள்.

இருந்தவன் யாவது இவ் இருக்கை? இங்கு உறை
அருந் தவன் யாவன்? நீர் யாரை? என்றலும்
விருந்தினர் இவ்வழி விரகு இலார் என
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள்.

தன் துயர் மறந்து,
வந்த முதிய முனியின்மேல் கருணை பொங்க,
அவனை உபசரித்து உரை செய்கிறாள் சீதை.
அவள் அகத்திலோ அளவிலாக் கருணை.
அக்கருணைக்கு ஏற்ப,
புறத்திலும் அகன்ற கண்களை மறவாமல் பதிவு செய்கிறான் கம்பன்.
இங்கும் முன்னர்த் தான் உரைத்த,
பெருந்தடங் கண் எனும் தொடரையே அவன் பதிவு செய்வது,
மேற் கருத்தை ஆழ உறுதிசெய்கிறது.

❃❃❃

கிஷ்கிந்தா காண்டம்.
வாலிவதை முடிகிறது.
மாரிகாலம் முடிந்ததும் சீதையைத் தேடத் துணை செய்வதாய்,
கொடுத்த வாக்கினை மறந்து,
சுக்கிரீவன் மது, மாது இன்பங்களில் மூழ்கிக் கிடக்கின்றான்.
சுக்கிரீவனின் வரவு காணாத இராமன்,
உம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு கொடுங் கூற்றும் உண்டு
எனும் செய்தியை இலக்குவனிடம் சொல்லி அனுப்ப,
கடுங்கோபத்துடன் இலக்குவன் கிஷ்கிந்தை வருகிறான்.
அவன் கோபத்தை ஆற்றும் திறன் அறியா வானரங்கள்,
கற்களால் நகர வாசலை மூட அவன் கோபம் மிகுகிறது.
இலக்குவனின் கோபத்தை ஆற்ற வழியறியாத அனுமன்,
அங்கதனையும் உடன் அழைத்துக் கொண்டு,
வாலியின் மனைவியான தாரையிடம் சரண் புகுகிறான்.
நல்லார் உறவு பேணும் தகுதி உமக்கில்லை  என,
அவர்களைக் கடியும் தாரை,
இலக்குவனின் கோபம் தீர்க்கும் பொறுப்பேற்றுச் செல்கிறாள்.

❃❃❃

தவறிழைத்த வானரங்களில் இரங்கி,
இலக்குவனின் கோபத்திலிருந்து அவற்றைக் காப்பதற்காய்,
கருணையோடு புறப்படும் தாரை,
இளம் வானரப் பெண்கள் பலரை,
இலக்குவன் வரும் பாதையில் நிறுத்தி,
அவர்களின் பின் மறைந்து நிற்கிறாள்.
பாதையின் குறுக்கே நின்ற இளம் நங்கையரால்,
இலக்குவனின் நடை வேகம் தடைப்பட,
மாமியார் குழாத்தில் அகப்பட்ட மருகன் போல்,
விரல் நிலம் கீற,
வில்லை நிலத்தில் ஊன்றி,
முகம் சிவக்கத் தலைகுனிந்து நிற்கிறான் அவன்.
அந்நிலையில் வானர நங்கையரை விலக்கித் தாரை முன்வருகின்றாள்.

தாமரை வதனம் சாய்த்து தனு நெடுந் தரையில் ஊன்றி
மாமியார் குழாத்தில் வந்தானாம் என மைந்தன் நிற்ப
பூமியில் அணங்கனார்தம் பொதுவிடைப் புகுந்து பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள்.

கோபமும், நாணமும் பொங்கும் இலக்குவன் முகத்தை,
சிவந்த தாமரையோடு ஒப்பிடுகிறான் கம்பன்.
தன் கருணை மிகுதியினால் வானரரைக் காக்க முன்வரும்,
தாரையின் செயல் இப்பாடலில் உரைக்கப்படுகிறது.
இங்கும் கருணை மிகுந்து மற்றோர் துயர் துடைக்க முன்வரும்,
தாரையின் அக அழகுரைத்த கம்பன்,
அவ்வக அழகுக்கேற்ப அவள் புற அழகிலும்,
கருணை உறுப்பாம் கண்கள் விரிந்திருந்தமையை,
நெடுங்கண் தாரை எனச் சுட்டி நிறைவு செய்கிறான்.
இஃதும் கம்பனது முன்னைய பெருந்தடங்கண் எனும்,
கருத்துரைப்பை வழிமொழியும் காட்சியேயாம்.

❃❃❃

அயோத்திப் பெண்களின் அகன்ற கண்களில்,
அவர்தம் கருணை இயல்பைப் பொருத்திக் காட்டிய கம்பன்,
காவியம் முழுவதிலும் ஆங்காங்கு,
கருணை செய்யும் பெண்களிடத்தில்,
அவ்வகன்ற கண்ணுறுப்பைப் பதிவு செய்வது,
கண்ணுக்கும், கருணைக்குமாக அவன் அமைத்த தொடர்பு,
அவனால் நினைந்தே செய்யப்பட்டது எனும் பேருண்மையை,
நிரூபணப்படுத்துகிறது.
கற்பனையான தன் காவியத்துள் மானுடத்தின் அகப்புறத் தொடர்பினை,
நினைந்தே பதிவு செய்யும் கம்பனின் அறிவாற்றல் கண்டு,
வியப்புற்று நிற்கிறோம் நாம்.

❃❃❃❃❃❃
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.