வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 1 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 1 |  கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 20 Jan 2017
 
 
ள்ளத்தில் தயக்கத்துடன்,
மீண்டும் பேனாவைத் தொடுகிறேன்.
என்னவோ தெரியவில்லை.
நான் பேனாவைத்தொடும்போதெல்லாம்,
ஏதோ ஒரு துர்த்தேவதை,
என்எழுத்து சர்ச்சைக்கு ஆளாகவேண்டுமென,
சபித்துவிடுகிறது.
எப்போ இந்த மாடுவிழும்?
எப்படி இதற்கு குறிசுடலாம்?
எனக்காத்திருக்கும் சிலபேர்,
என்எழுத்தைக் கண்டவுடனேயே,
தம் கைக்கோலை தணலில் இட்டுவிடுகின்றனர்.
காய்ச்சிய கோலுடன் காத்திருக்கும் அவர்களை ஏமாற்றலாமா?
நான் சூடு வாங்கியாவது அவர்களை சுகப்படுத்தவேண்டாமா?
தொடங்குகிறேன்.
 



சொரணைகெட்ட இந்தப் புத்தி,
சும்மா இருக்கமுடியாமல்,
இடையிடையே எதையாவது சிந்தித்துவிடுகிறது.
சிந்தித்ததை மற்றவர்களோடு பகிராமல் எப்படி இருக்கமுடியும்?
உண்மையைச் சிந்திப்பதும், தெளிவதும், செப்புவதும்,
தற்போதைய தமிழர் அறிவுலகில் தடைசெய்யப்பட்ட காரியங்கள்.
பொய்ப்பரணில் ஏறி,
விதைக்காத தோட்டத்து விளையாத பயிரின்,
இல்லாத கதிரை எடுக்கப்பறந்துவரும்,
கற்பனைக் குருவிகளை கலைப்பதற்காய் கவணெறிவதுவே,
எங்கள் கற்றோர்க்குப் பிடித்தவேலை.
எவராவது எங்கே பயிர் என்றோ? ஏது கதிர் என்றோ?
தெரியாமல் கேட்டுவிட்டால்,
அவர் அறிவுலகால் தேசப்பிரதிஷ்டை செய்யப்படுவார்.
அது தெரிந்து, பேனாவைப்போட்டுவிட்டுப் பேசாமலிருந்தாலும்,
சிலவேளைகளில் பேனா தானாக நிமிர்ந்து,
என்கை புகுந்து கடதாசி நிலத்தை,
சுயமாய் உழத்தொடங்கிவிடுகிறது.
உண்மை விளைச்சலால் உதை வாங்கப்போவது தெரிந்தும்,
இக் கட்டுரைத் தொடரை எழுதத்துணிகின்றேன்.
♦  ♦

உங்கள் முன்னுரையே கட்டுரையை சர்ச்சைக்காளாக்கப் போகிறது.
பிரச்சனைக்குரிய கட்டுரையென பிரகடனப்படுத்தல் அவசியமா?
விலைகொடுத்துப் பகைவாங்கும் வேலை இது என்று,
என் மாணவன் முணுமுணுக்கிறான்.
எதிராளிகள் போர்தொடுத்த பின்பு,
பகைக்கு முகம்கொடுப்பதை விட,
போர்ப்பிரகடனம் செய்து களம் புகுதல் ஆண்மையன்றோ?
அதுநோக்கியே இம்முன்னுரையாம்.
♦  ♦

‘முன்னுரையால் வாசிக்கத்தூண்டும் முயற்சி இது.’
மூளைசாலிகள் சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது.
‘சர்ச்சைக்கு ஆளாகி தன்னை விளம்பரப்படுத்தும் விருப்பம்.’
இது வேறுசிலரின் விமர்சனம்.
‘எல்லோரும்போல் நானில்லை எனும் இறுமாப்பின் வெளிப்பாடு.’
இது மற்றொருவரின் மதிப்புரை.
என் முயற்சியின் பின்னணியில் இவையெல்லாம் இல்லையென்று நான் சொன்னால்,
நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?
எப்படியும் சொல்லிவிட்டுப் போங்கள்.
நான் நினைத்ததை எழுதத்தொடங்குகிறேன்.
♦  ♦

அப்படி என்னதான் எழுதப்போகிறாய்?
நீங்கள் விழி விரிப்பது தெரிகிறது.
இனியும் நீட்டிமுழங்குவது சரியல்ல.
விஷயத்திற்கு வருகிறேன்.
வருணாச்சிரம தர்மம்.
இதுதான் நான் இக்கட்டுரையில் ஆராயப்போகும் விஷயம்.
தலைப்பைப் பார்க்காமலா கட்டுரைக்குள் இறங்கியிருப்பீர்கள்?
அந்தளவுக்கு குறையுள்ள வாசகராய்,
உங்களை நான் நினைக்கவில்லை.
கட்டுரையைப் படிக்காமல் விட்டாலும் விடுவீர்கள்.
தலைப்பைப் படிக்காமல் விடமாட்டீர்களே.
என்ன முறைக்கிறீர்கள்?
நான் சொல்வது சத்தியம்.
தலைப்பை மட்டும் படித்துவிட்டு,
விமர்சனம் செய்யும் எத்தனைபேரை,
நான் நேரடியாய்ப் பார்த்திருக்கிறேன்.
உங்கள் முகச்சிவப்பில்,
உள்ளத்தின் கடுங்கோபத்தைப் புரிந்து கொள்கிறேன்.
தயவுசெய்து ஆறுதல் அடையுங்கள்.
எவர் எப்படியிருந்தால் நமக்கென்ன?
நாம் விஷயத்திற்கு வருவோம்.
♦  ♦

வருணாச்சிரமதர்மம்.
இதுதான் நான் கட்டுரையில் ஆராயப்போகும் விடயம்.

இந்துமதத்தின் குறுகியகொள்கை!

சாதி பாகுபாட்டின் வேர்!

சமூகபேதங்களின் வித்து!

மானுடசமூகத்தைப் பிளக்க இறுக்கப்பட்ட ஆப்பு!

ஆரியர்கள் இட்ட அழிவின் அத்திவாரம்!

இப்படி எத்தனையோ பழிச்சொற்கள் இத்தத்துவத்தின்மேல்.
தர்மம் என்ற பெயரோடு நம் மூதாதையர் நிலைநாட்டிய ஒரு விடயம்,
இத்தனை இழிவுகளையும் உட்கொண்டிருக்கிறதா?
உட்கொண்டது உண்மையாயின்,
நம் மூதாதையர் அத்தனைபேரும் மூடரா?
இவ்வுலகெல்லாம் பரவிய நம் இந்துமதம்.
ஒரு விஷவித்தின் வேரில் முளைத்ததா?
வருணாச்சிரமதர்மமே நம்இந்துமதத்தின் அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.
நம் அறங்களின் அடிப்படையும் அதுவே என்கின்றனர் தமிழ் அறநூல் ஆசிரியர்கள்.
அப்படியாயின், இந்துமதத்தின் கருவிலேயே களங்கமா?
தமிழர்தம் தர்மத்தின் வேரிலேயே விஷமா?
கருவே களங்கமாயின், வேரே விஷமாயின்,
இந்துமதமும் நம் தமிழும் காலங்கடந்து நிலைத்தது எங்ஙனம்?
கேள்விகள் தொடர்ந்து பிறக்கின்றன.
முரண்பட்ட இக்கேள்விகளால்,
உண்மை வேறெங்கோ ஒளிந்திருப்பது தெரிகிறது.
ஆராய்தலின் அவசியம் புரிகிறது!
♦  ♦

சென்ற நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகளாவி ஓங்கி,
மானுடசமரசம் பேசிய ‘மாக்ஸிசத்தின்’ எழுச்சி,
அம்பேத்கார் அறிமுகப்படுத்தி, இந்திய அளவில் விரிந்த,
தலித்தியக்கருத்துக்களின் தலையெடுப்பு,
தமிழ்நாட்டு எல்லைக்குள்,
ஈ.வே.ரா. பெரியார் எழுச்சி தந்த திராவிடச்சிந்தனைகள்,
இவையெல்லாமே வருணாச்சிரம தர்மத்தை,
காட்டுமிராண்டிகளின் கடுங்கொள்கையாக்கின.
சுனாமியாய்ச் சுருண்டெழுந்த அவர்கள் தந்த அழிவலைகள்,
உண்மை தர்மத்தை ஓங்கி அறைந்து உள்ளிழுத்து,
பொய்க் கொள்கைகளைப் புவனியெங்கும் பரவவிட்டன.
♦  ♦

இக்கொள்கைகளுக்குக் கிடைத்த உலகியல் வெற்றிகண்டு மிரண்டுபோய்,
காலாகாலமாய்த் தாம் கடைப்பிடித்த,
வழிவழிவந்த வருணாச்சிரம தர்மத்திற்காய் வாதிடவும் தெம்பின்றி,
நல்லோர் நலிந்தனர்.
எதிர்த்த ஒருசிலரையும் எற்றி எறிந்தது அவ் இழிவலைகள்.
அப்பொய்க்கொள்கையின் புவிவெற்றி கண்டு,
குலம்கெடுக்கும் கோடரிக்காம்புகள் சிலவும் கொள்கைமாறின.
அதுவரை தாம் போற்றிய அவ்வரிய தர்மத்தை,
கல்லார் தெளிவென்று கதைபேசத் துணிந்தன.
அவ் எட்டப்ப நெறியாலே,
எத்தனையோ பெரும்பதவி அவர்தமக்குக் கிட்டியது.
அப்பொய்யர்தம் வாக்கிலும், எழுத்திலும் மயங்கி,
உண்மைநெறி உணராது உலகம் அவர்பின் செல்ல,
அறிவுலகம், அரசியலுலகம், நிர்வாகவுலகம் என அத்தனையும்,
அவர்தம் கையதாயிற்று.
அதனால் உலகம் பொய்யதாயிற்று.
♦  ♦

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகௌவ,
கலியாம்கன்னி கால்மேல் கால்போட்டு,
அத்தனை சிம்மாசனங்களிலும் அசையாது அமர்ந்தாள்.
தர்மத்தாய் தனித்துத் தவித்தனள்.
அவள் துயில்பற்றும் துணிவோடு துச்சாதனர் பலர் துள்ளியெழ,
உண்மையுலகம் மிரண்டது.
♦  ♦

மேற்சொன்னவை எனது அபிப்பிராயங்கள்.
அவை கடந்தகால உண்மை வரலாறுமாம்.
இப்பழி நிகழ்ந்து கிட்டத்தட்ட,
நூறாண்டுகள் கழியப்போகும் நிலையில்,
தர்மத்தாய் தனது இறுதிமூச்சை,
எப்போது விடலாம் என ஏங்கித் தவிக்கும் நிலையில்,
கயவர் தம் சழக்கும்,
தமிழர் தம் கிழக்கும்
மெல்ல வெளுக்கத் தொடங்கும் நிலையில்,
பாஞ்சாலி துயிலுரியப்பட்ட சபையில்,
துணிந்து தர்மம் சொன்ன விகர்ணனாய்,
மெல்ல எழுகிறேன்.
இல்லை இல்லை எழுதுகிறேன்!
♦  ♦

புல்லர்தம் பொய் முகமூடி வீழுமா?
உண்மைச்சூரியன் முழுமையாய் உதிப்பனா?
தர்மத்தாய் மீண்டும் உயிர்ப்பளா?
அறிவியல் வளர்ச்சியென மானுடர் செய்யும் அதர்மத்தால்,
கொதித்தெழும் பஞ்சபூதங்களைக் கொஞ்சமேனும் ஆற்றமுடியுமா?
அறியேன்!
ஆனாலும் அவை நிகழவேண்டுமென என்மனம் அவாப்படுகிறது.
இக்கட்டுரை ஒரு சிறிய கல்லாய்,
அறியாமைச்சேற்றை உள்ளடக்கி,
பொய்த்தெளிவு காட்டும் நம் தமிழின தர்மக்குளத்தில்,
சிறிய அலைகளையேனும் ஏற்படுத்தினால்,
மகிழ்வேன்.
♦  ♦

விடயத்திற்குள் நுழையுமுன் மற்றொரு சிந்தனை.

வருணாச்சிரமதர்மம் முழுக்க முழுக்கச் சரியானதா?

அந்த தர்மத்துள் பிழைகள் ஏதும் இருக்கவில்லையா?

புரட்சியும், புதுமையும் கொணர்ந்த, மாக்ஸ்சும், பெரியாரும், அம்பேத்காரும் நம்மவர்க்கு நன்மைகளேதும் செய்யவில்லையா?

நம் சமுதாயத்தில், முன்னவர் கொள்கையும் ஏற்கப்பட்டது.
பின்னவர் கொள்கையும் ஏற்கப்பட்டது.

இதில் எதுசரி? எதுபிழை? அறிவது எங்ஙனம்?
இக்கேள்விகளுக்கு விடைகாணல் அவசியம்.
♦  ♦

வருணாச்சிரம தர்மம் முழுக்க முழுக்கச் சரியானதா?
வருணாச்சிரம தர்மத்துள் பிழைகள் ஏதும் இருக்கவே இல்லையா?
இவை ஆராயப்படவேண்டிய முதற்கேள்விகள்.
முதலில் இருந்து தொடங்குவோம்.
வருணாச்சிரம தர்மம் முழுக்க முழுக்கச் சரியானதா?
இக்கேள்விக்கு ஆம் என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
விளக்கம் செய்யாது நான் உறுதியாகப் பதிலளிப்பது,
உங்களில் பலருக்கும் கோபத்தைத் தரலாம்.
இக்கேள்விக்கு விளக்கம் செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
எனவேதான் முடிவான பதிலை முன்னுரைத்தேன்.
விளக்கம், தொடரும் கட்டுரையுள் தொடரும்.
♦  ♦

பிறகென்ன?
வருணாச்சிரம தர்மத்துள் பிழைகள் ஏதும் இருக்கவே இல்லையா?
இரண்டாம் கேள்விக்கும் இல்லை என்பதுதானே பதில் என்கிறீர்களா?
அதுதான் இல்லை.
வருணாச்சிரம தர்மத்துள் சிலபிழைகள் இருக்கவே செய்தன.
நீங்கள் கைகொட்டிச் சிரிப்பது தெரிகிறது.
முன்னுக்குப்பின் முரணான கூற்றுக்களைக் கண்டால்,
யாருக்குத்தான் சிரிப்பு வராது?
ஆனால் என்ன? நான் பதிலை முடிக்குமுன்,
சற்று அவசரப்பட்டுச் சிரிக்கிறீர்கள்.
பொறுமையாய் முழுவதும் கேளுங்கள்.
♦  ♦

வருணாச்சிரம தர்மத்துள் சிலபிழைகள் இருக்கிறது என்றேனே,
அதைக் கொஞ்சம் விரித்துரைக்க வேண்டும்.
பிழைகள் இருந்ததாய் நான்சொன்னது,
மூல வருணாச்சிரம தர்மத்தில் அன்று.
கடைப்பிடிக்கப்பட்ட வருணாச்சிரம தர்மத்தில் தான்.
அதென்ன மூலவருணாச்சிரம தர்மம்,
கடைப்பிடிக்கப்பட்ட வருணாச்சிரம தர்மம் என்கிறீர்களா?
உங்கள் கேள்வி சரியானதுதான்.
விளங்கச் சொல்கிறேன்.
♦  ♦

தத்துவங்கள் அனைத்தும் சரியாகவே பிறக்கின்றன.
இல்லாதுவிட்டால் அவை எப்படித் தத்துவங்களாகும்?
தத்துவம் என்றாலே உண்மை என்றல்லவா பொருள்.
அவ்வுண்மைத் தத்துவங்களில்,
தம் சுயநலத்தால் அழுக்கேற்றி,
பின்பற்றுவோர் சிலர் பிழை செய்கின்றனர்.
அத்தத்துவங்களை முன்வைத்து பின்செல்வார் செய்யும்பிழை,
அத்தத்துவங்களின் பிழையாகவே கணிக்கப்படுகிறது.
அவ்வடிப்படையில்தான்,
வருணாச்சிரம தர்மத்துள்ளும்,
சிலபிழைகள் இருந்தன என்று சொன்னேன்.
♦  ♦

அப்பிழைகளுடன் கூடிய வருணாச்சிரம தர்மந்தான்,
கடைப்பிடிக்கப்பட்ட வருணாச்சிரம தர்மம்.
உண்மைத் தத்துவமாய்ப் பிறந்ததுதான்,
மூல வருணாச்சிரம தர்மம்.
சமாளிக்கிறான், தப்பப்பாக்கிறான் என்றுரைத்து,
நீங்கள் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது தெரிகிறது.
கொஞ்சம் பொறுங்கள் ஐயா! பொறுங்கள்.
பின்பற்றுவாரால் பிழைபடுவது,
வருணாச்சிரம தர்மத்துக்கு மட்டும் நடந்த அவலம் அல்ல.
புதுமையைப் புகுத்திய புரட்சியாளர்கள்தம் கொள்கைகளுக்கும்,
அதே அவலம் தான் நடந்தது.
மாக்ஸ்சும், பெரியாரும், அம்பேத்காரும் கூட,
இவ் விதியிலிருந்து தப்பவில்லை.
என்ன சிரிப்பு நின்றுவிட்டது?
உண்மை சுடுகிறதோ?
அவற்றையெல்லாம்,
கட்டுரையில் பின்னால் விரித்துரைப்பேன்.
♦  ♦

புதுமைகொணர்ந்த, மாக்ஸ்சும், ஈ.வே.ரா. பெரியாரும், அம்பேத்காரும்,
நம் சமுதாயத்திற்கு நன்மைகளேதும் செய்யவில்லையா?
ஆராயப்படவேண்டிய அடுத்த கேள்வி இது.
பிற்போக்குவாதியான நீ,
இக்கேள்விக்கு இல்லை என்றுதானே பதிலுரைப்பாய்!
அவசரமாய் நீங்கள் தீர்ப்பு எழுதுவது தெரிகிறது.
ஆனால் பாவம். உங்கள் தீர்ப்பு இங்கும் பிழைத்துவிட்டது.
அப்படியாயின் ...?
என்ன விழி உயர்த்துகிறீர்கள்?
மேற்சொன்னவர்களும் நம்சமுதாயத்திற்கு,
சில நன்மைகளைச் செய்தே இருக்கிறார்கள்.
என்ன நன்மை என்கிறீர்களா?
உயர்ந்தோரால் ஓதப்பட்ட நம்வருணாச்சிரம தர்மத்தை,
கடைப்பிடித்தோர் சிலர் தம் சுயநலத்திற்காய் மாசுபடுத்திய நிலையில்,
மொத்த வருணாச்சிரம தர்மத்தினையும் குற்றஞ்சாட்டி,
இவர்கள் செய்த போராட்டத்தில்,
வருணாச்சிரம தர்மத்தை மாசுபடுத்திய,
சுயநலக்காரர் தம் பொய்த் தர்மக்கூறுகள் சில,
வீழ்ந்தது என்னவோ உண்மைதான்.
அதுவே மேற்சொன்னவர்கள் செய்த நன்மையாம்.
♦  ♦

அப்படியாயின்,
அவர்தம் கொள்கைகளை அப்படியே ஏற்கவேண்டியது தானே?
நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.
மன்னியுங்கள்.
அக்கருத்தை என்னால் ஏற்கமுடியாது.
மீண்டும் உங்கள் முகத்தில் கோபம்.
அழுக்கு அகற்றினார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறான்.
ஆனால், அவர்தம் கொள்கைகளை ஒத்துக்கொள்கிறானில்லை.
எப்போதுமே இவன் முரண்பாடுகளின் மொத்த உருவம் தான்.
உங்கள் வார்த்தைகள் காதில் விழுகின்றன.
உங்கள் கேள்விகளுக்கான என் ஒரே பதில்.
மேலிலுள்ள அழுக்கை அகற்றியதற்காக,
சவர்க்காரத்தை மேல் முழுதும் பூசித்திரிய முடியுமா?
அழுக்கை அகற்றியகையோடு,
சவர்க்காரத்தையும் அகற்றுவதுதானே வழக்கம்.
எப்போதும் நிலைத்திருக்க வேண்டியது,
உடம்பின் இயற்கையாகிய சுத்தம் தான்.
அழுக்கும் அகலவேண்டும்.
அழுக்கை அகற்றிய அதுவும் அகலவேண்டும்.
அப்போதான் இயற்கையேயான சுத்தம் மிஞ்சும்.
வருணாச்சிரம தர்மத்துள் புகுந்த பொய்க்கொள்கைகளே,
நம் இனத்தைப் பற்றிய அழுக்குகள்.
அவ்வழுக்குகளை அகற்ற வந்த சவர்க்காரங்களே,
மேற்சொன்ன புரட்சியாளர்கள்தம் போராட்டங்கள்.
அழுக்கை அழுக்குத்தானே அகற்றும்.
இவையிரண்டும் அகல மிஞ்சும் சுத்தமே,
வருணாச்சிரம தர்மமாம்!
♦  ♦

தன் கொள்கையை உயர்த்த,
எம் இலட்சியவாதிகளை இழிவுசெய்கிறான்.
நீங்கள் கோபத்துடன் பல்லைக் கடிப்பது தெரிகிறது.
இதற்குமேலும் உங்கள் கோபத்தை அதிகரித்தால்,
உங்களை நோயாளியாக்கிய பாவம் எனக்கு வந்துசேரும்.
எனவே, சற்று ஓய்வெடுங்கள்.
வரும்வாரத்தில் அடுத்த அதிர்வைச் சந்திக்கலாம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்

 
வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment
Comments
Saminathan Chennai
 
Saminathan Chennai தயக்கமா? தமிழே நீர் படைக்க... யாம் படிக்க .... தெளிய....உணர... !!!
Mathusuthan Kumarasamy
 
Mathusuthan Kumarasamy இராவணன் நல்வார கெட்டவரா
Saravana Kumar
 
Saravana Kumar அர்ஜணன்.அரவாண்.நாககன்னி பற்றி எழுதவும் ஐயா.
SivaBoo Thi
 
SivaBoo Thi பெரும் தெய்வமே.. 👣
Pushparani Ramanathan

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.