வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 11 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 31 Mar 2017
சென்ற வாரக் கட்டுரையில்,
வர்ண தர்மம் எப்படி வடிவம் மாறி அன்று போலவே இன்றும் இருக்கிறதோ,
ஆச்சிரமதர்மமும் அப்படியேதான் இருக்கிறது என்று சொல்லி,
அதற்கான சான்றுகள் சிலவற்றைச் சொல்லி நிறுத்தியிருந்தேன்.
அந்த இடத்திலிருந்து இந்த வாரம் தொடர்வோம்.
♦ ♦ ♦
எந்த நாட்டிலும் இளமைப்பருவம் கற்கும் பருவமே.
அதன் பின்பு வாழும்பருவமும், அதன் பின்பு ஓயும் பருவமும்,
எல்லா நாட்டிற்கும் இன்றும் அப்படித்தான் இருக்கின்றன.
என்ன? ஒரு சின்ன வித்தியாசம்.
அன்று வீட்டிலும் காட்டிலுமாய் வானப்பிரஸ்தம் செய்தவர்கள்,
இன்று வயோதிபர் மடங்களில் அதனைச் செய்கிறார்கள்.
செய்கிறார்கள் என்று சொல்வதைவிட,
செய்விக்கப்படுகிறார்கள் என்று சொல்வதே பொருத்தம்.
♦ ♦ ♦
அன்பைப் பண்பாகவும் அறத்தைப் பயனாகவும் கொண்ட,
நம் மூதாதையர் வகுத்த இல்லறம்,
மேற்கு நாட்டாருக்கு இன்னும் புரியவில்லை.
இளமை தரும் பலத்தை நம்பி,
அவ் இளமை நீங்காது எனும் மூடநம்பிக்கையில்,
வாழ்வு முழுவதும் இன்பம் தான் என்று மயங்கி நிற்கிறார்கள் அவர்கள்.
தம் இன்ப வாழ்வுக்கு இடையூறு எனக் கருதி,
குழந்தைகளையும் முதுமையுற்ற பெற்றோர்களையும்,
சுமையாய் எண்ணி அவர்களைச் சற்றுத் தூர வைத்தே வாழத் தலைப்படுகின்றனர்.
முற்பகலில் செய்தது பிற்பகலில் விளைகிறது.
இளமைக் காலத்தில் தமது சுய இன்பத்திற்காக மட்டும் வாழ்ந்து காட்டியதால்,
அவர்கள் பிள்ளைகளும் அங்ஙனமே வாழத்தலைப்படுகின்றனர்.
எங்ஙனம் இவர்கள் தமது பெற்றோரை முதுமைக்காலத்தில் கைவிட்டனரோ,
அங்ஙனமே இவர்கள் பிள்ளைகளும் இவர்களைக் கைவிடுகின்றனர்.
இளமையை நம்பி வாழ்நாள் முழுவதும் இன்பம் தான் என்ற கனவிலிருந்த இவர்கட்கு,
சக்தி அற்றுப்போகும் முதுமைக் காலத்தில் அன்பு காட்ட யாரும் இருப்பதில்லை.
♦ ♦ ♦
அதனால் அம்முதுமை நிலையில் அரசாங்கங்களின் ஆதரவில்,
முதியோர் இல்லங்களில் தமது வாழ்வைக் கழிக்கும் அவல நிலை,
அவர்களுக்கு உண்டாகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்ற அனுபவத்தால் சொல்லுகிறேன்.
அங்கு முதியோர் இல்லங்களில் வாழும் பெரும்பான்மையினர்,
அன்பிற்காய் ஏங்கி மனநோயாளிகளாகவே ஆகிவிடுகின்றனர்.
இல்லற வாழ்விலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு,
முதுமையை எதிர் கொள்ளத் தெரிந்து கொள்ளாததால் வந்த வினை அது.
குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தின் நடுப்பகுதி வரை ஏறும் இன்பமும் சக்தியும்
அதன் பின் மெல்ல மெல்ல இறங்கத் தொடங்கி துன்ப அனுபவங்களைத் தரும் என்று தெரிந்து,
அப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க, முன்னரே நாம் தயாராக வேண்டும் என்பதற்காய்,
வானப்பிரஸ்த நிலையை தனிமனித வாழ்வு நிலைகளில் ஒன்றாய் வகுத்த,
நம் பெரியோர்தம் பெருமையினை என்னென்பது.
♦ ♦ ♦
மேற்குலகத்தாரின் நாகரிகம் புதிதாய்த் தோன்றியது.
அவர்களின் சமூக வாழ்வனுபவம் சில நூற்றாண்டுகாலப் பழமையை மட்டுமே கொண்டது.
வாழ்க்கையை இப்போதுதான் அவர்கள் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கட்டுப்பாடற்ற பிரம்மச்சரியம்,
காமம் கரையுடைக்கும் இல்லறம் என,
அவர்களது வாழ்வு, போகங்களை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டிருக்கிறது.
இவ் வாழ்வுமுறையைத் தனிமனித சுதந்திரம் எனக் கருதுகிறார்கள் அவர்கள்.
அத்தனிமனிதச் சுதந்திரம் சாத்தியமற்றது என்பதை,
“எயிட்ஸ்” நோய் உணர்த்திய பின்பும் உணராத அறிவிலிகளாய் இன்றும் அவர்கள்.
நோய்க்கான காரணம் கட்டுப்பாடற்ற புணர்ச்சியே எனத் தெரிந்த பின்பும்,
‘ஒருவருக்கு ஒருவர்’ எனப் புணர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல்,
நோய் தொற்றாது புணர காவல்செய்யும் வகைகள் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் அடிபட அடிபடத்தான் எங்கள் தனிமனிதவாழ்வுக் கட்டுப்பாடுகள்,
அவர்களிடம் வந்துசேரும்.
அவர்கள் உண்மையை அங்கீகரிக்கும் விருப்புள்ளவர்கள்.
அதனால் சீக்கிரம் நம் வழிக்கு வந்துவிடுவார்கள்.
இயல்பான இன்ப நாட்டத்தால் தவறு செய்யினும்,
சரிநோக்கி நகரும் விருப்பு அவர்களிடம் நிறையவே இருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவத்தால் வாழ்வைப் பரிசோதித்து,
நல்லமுடிவுவை வாழ்வியலாக்கிய நம் மூதாதையர்தம் கருத்தை விட்டுவிட்டு,
முடிவு தெரியாமல் பலவாய் வாழ்வைப் பரிசோதித்துக்கொண்டிருக்கும்,
அரைகுறைகளின் அடிபற்றக் காத்திருக்கிறோம் நாம்.
நம் மூதாதையர் சோதித்துத் தீர்மானித்த நல்வாழ்வைப் பலிகொடுத்து,
அவர்தம் பிழைக்கு விலைகொடுக்கும் விருப்புடன் வாழ்கிறோம்.
என்னே நம் அறிவு?
♦ ♦ ♦
நம் இல்லறம் போலல்லாது கட்டவிழ்த்த காட்டுமிருகங்களாய்,
காமமே முதலென இல்லறம்செய்த மேலைத்தேயத்தாருக்கு,
முதுமையைச் சந்திக்கும் வகை தெரியவில்லை.
அவ்வளவு ஏன்?
முதுமை என்ற ஒன்று வரும் என்பதையே அவர்கள் இளமையில் உணர்வதில்லை.
நம் வாழ்விலோ இல்லறத்தார் பிரமச்சரியர்களை ஆதரிப்பதும்,
பிரம்மச்சாரிகள் இல்லறத்தாராகி பின் வானப்பிரஸ்தராகிவிட்ட,
முதியோரை ஆதரிப்பதும் வழக்கமாயிருக்கிறது.
அதனால் நம் வாழ்வியலில் சுயமாய் இயங்க இயலாத,
குழந்தைப்பருவமும், முதுமைப்பருவமும் அன்போடு பாதுகாக்கப்பட்டுகின்றன.
♦ ♦ ♦
வானப்பிரஸ்தத்தையே எதிர்கொள்ளத் தெரியாத அவர்களுக்கு,
முற்றும் துறப்பதான துறவறநிலை எங்ஙனம் வாய்க்கும்?
ஆனாலும் அபூர்வமாய் ஆன்ம பலம் பெற்று,
உலகை நேசிக்கும் தூய துறவறத்தைத் தொட்ட,
யேசுநாதர் போன்ற ஓரிருவர் அங்கும் அவதரிக்கவே செய்தனர்.
மேற்குலகார்தம்; தனிவாழ்க்கையையும்,
பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்று நம்மவர் சொன்ன,
நான்கு பிரிவுகளாகவே பிரிக்கவேண்டியிருக்கிறது.
மொத்தத்தில் உலகெங்கும் தனிவாழ்விலும் சமுதாயவாழ்விலும்,
இன்றும் வர்ணாச்சிரமதர்மந்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில்,
எவ்வித ஐயமும் இல்லை.
♦ ♦ ♦
என்ன?
உண்மை ரொம்பத்தான் சுடுகிறதோ!
புரட்சியாளர்களை நம்பி நீங்கள் போட்டிருந்த அத்திவாரம் ஆடத்தொடங்கி விட்டது போல.
உண்மையை ஜீரணிக்கவும் முடியாமல் அங்கீகரிக்கவும் முடியாமல்,
நீங்கள் மிகவும் சங்கடப்படுவது தெரிகிறது.
இனி என்ன? இருக்கவே இருக்கிறது ‘பேஸ்புக்’.
மொட்டை முகவரிகளில் என்னைத் திட்டத் தொடங்கவேண்டியதுதான்.
உங்கள் திட்டுக்களை எனக்கான அங்கீகரிப்புப் பட்டயமாய் எண்ணி மகிழ்கிறேன்.
உங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைத் தொடருங்கள்!
♦ ♦ ♦
ஆதி வர்ணாச்சிரமதர்மத்துள் பேதங்கள் இருக்கவில்லையென்றும்,
எப்படி இன்றைய அரசர்களும் கல்விமான்களும்,
உயர்ந்தவர்களால் வகுக்கப்பட்ட உன்னத தர்மங்களை,
தமக்கு வாய்ப்பாய் மாற்றிக்கொண்டுள்ளனரோ,
அப்படியே அன்றைய வர்ணாச்சிரமதர்ம வழிவந்த,
சுயநலமிக்க சில அரசர்களும், அந்தணர்களும்,
தமக்கு வாய்ப்பாய் வருணாச்சிரமதர்மக் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொண்டனர்.
அங்ஙனம் மாற்றப்பட்ட தர்மங்களே,
வர்ணாச்சிரமதர்மம் உரைக்கும் மனுநீதி நூலாய்,
இன்று நம் கைக்குக் கிடைக்கின்றது.
வஞ்சகர்களால் வகுக்கப்பட்ட அந்நூலை வைத்துக்கொண்டே,
இன்றும் உலகளாவி நடைமுறையில் இருக்கும்,
நம் மூதாதையர் தம் உயர்சிந்தனை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.
♦ ♦ ♦
இனி அவ் ஆதி வர்ணாச்சிரமதர்மத்துள்ளும் இருந்த,
சில பேதங்கள் பற்றி ஆராயவேண்டும்.
சூத்திரர் எனப்பட்ட உற்பத்தியாளனுக்கும்,
வைசிகன் எனப்பட்ட வணிகனுக்கும்,
இல்லாத சில உரிமைகள்,
உயர்ந்ததாய் நான் சொல்லும் ஆதி வர்ணாச்சிரமதர்மத்திலும்,
அந்தணர்க்கும், அரசர்க்கும் வழங்கப்பட்டிருந்தது உண்மையே.
இது தவறில்லையா? என்று கேள்வி பிறக்கும்.
தவறில்லை என்பது பற்றி முன்பே சில விளக்கங்களைச் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் பின்னாளில் சில உரிமைகள்
உயர்வர்ணத்தவர்களால் திட்டமிட்டும் தமக்காய் ஆக்கப்பட்டன.
அதுபற்றிச் சொல்கிறேன்.
♦ ♦ ♦
அன்று சூத்திரர், வைசிகர்களுக்கிடையில் இருந்த உறவை விட,
சத்திரியர் அந்தணர்களுக்கிடையில் இருந்த தொடர்பு அதிகம் நெருங்கி இருந்தது.
நிர்வாகப் பொறுப்பேற்ற அரசன் அந்நெறியில் தான் உயர,
அறிவாளியாகிய அந்தணனை தன் ஆலோசகனாய் வைத்துக்கொண்டான்.
அதனால் இவ்விருவர்தம் சிந்தனையே ஒட்டுமொத்த சமுதாயத்தின் நெறியாயிற்று.
அத் தகுதியால் இவ்விருவரும் ஏதோ விதத்தில்,
மற்றை வர்ணத்தாரின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
அறிவும் அதிகாரமும் மிகுந்த இவர்கள் சுயநலமிகளாய் ஆனபோது,
தமதும், தமது சந்ததியினதும் உயர்அந்தஸ்தை நிலைநிறுத்தும் வண்ணம்,
சட்டங்களை ஆக்கிக்கொண்டனர்.
தம் வளர்ச்சிக்காய் இவ்விருவரையும் நம்பியிருந்த,
கீழ்பட்ட வர்ணத்தாரால் அதைத் தடுக்கமுடியவில்லை.
அன்றும்சரி இன்றும்சரி நிலைமை அதுவாகத்தான் இருக்கிறது.
♦ ♦ ♦
வர்ணதர்மத்தில்,
அந்தணர்க்கு ஆறு தொழில்கள் வகுக்கப்பட்டிருந்தன.
அதனால் ‘அறுதொழிலோர்’ என்று அவர்களுக்கு ஒரு பெயருங்கூட இருந்தது.
கற்றல், கற்பித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவையே,
அவ் ஆறுதொழில்களாம்.
இன்றைய தமிழில் சொல்லப்போனால்,
தான் கற்பது, மற்றவர்க்குப் கற்பிப்பது,
உலகநன்மை நோக்கி தான் இயங்குவது,
உலகநன்மை நோக்கி மற்றவர்களை இயங்கச்செய்வது,
மற்றவர்தரும் தானத்தைப் பெற்றுக்கொள்வது,
தேவைப்படும்போது தானும் மற்றவருக்கு தானம் தருவது என,
அவ் அறுதொழில்களுக்கும் விளக்கம் உரைக்கலாம்.
அன்று இவ் ஆறுதொழில்களையும் செய்தவரே அந்தணர் எனப்பட்டனர்.
அந்தணர் என்ற சொல்லுக்கு அறிஞர் என பொருள்கொண்டால்,
இன்றும் அறிஞர்க்கு அவ் அறுதொழிலும் பொருந்துவதைக் காணலாம்.
♦ ♦ ♦
அடுத்த நேர உணவுக்கென்று பொருள் சேர்க்காதவனே,
அந்தணன் என்பது ஆன்றோர்தம் கருத்து.
பொருளில் ஈடுபாடு கொண்டவன்,
கல்வியில் மனம் செலுத்தமாட்டான் என்பதையறிந்து,
மேலோர் வகுத்த நெறி அது.
உலகத்திற்காய் வாழ்வதே அந்தணர்தம் கடமை என நினைந்ததாலேயே,
அவர்கள் அங்ஙனம் உரைத்தனர்.
ஆனால் அறநெறியில் தோய்ந்த ஒருசிலரைத் தவிர,
அறிவு நெறிப்பட்ட அனைவரும்,
உலகைக் காவல் செய்பவராய் வாழாமல்,
தம்மையும், தம் சந்ததியினரையும் காவல் செய்யும் சுயநலமிகளாகவே இருந்தனர்.
அதற்கும் அவ் அறிவே காரணமாயிற்று.
இதனால் சமுதாயத்தால் முழுமையாய் நம்பப்பட்ட அறிஞர்கள்,
தம் நல்வாழ்வு நோக்கி மற்றைய வர்ணத்தாருக்குத் துரோகமியற்றுவது,
அன்றும் வழமையாயிருந்தது. இன்றும் வழமையாயிருக்கிறது.
♦ ♦ ♦
அறம் தவிர்த்த இன்றைய அறிஞர் பலரும் கூட,
பொருட்பற்றாளர்களாகி சமுதாயம் தமக்கு வழங்கும் சலுகைகளை,
பொருட் தேட்டத்திற்காகவே பயன்படுத்தும் அவலம் நடந்துகொண்டிருப்பதையும்,
முதலாளிகளாய் தம்மை மாற்றிக்கொள்ளும் அவர்தம் விருப்பத்தால்,
அறிவாளிகள் எனும் போர்வைக்குள்,
அசடர்களாய் வலம்வரும் அறிஞர் தொகையே,
இன்று அதிகமாகிக் கொண்டிருப்பதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
♦ ♦ ♦
பழைய காலத்தில் தம் வர்ண நிலையில் நின்று வழிமாறியோரை,
அக்கால ஆன்றோர்கள் குறிப்பிட்ட அவ்வர்ணத்திற்குரியராய் ஏற்கவில்லை.
பிரமன் வழிவந்தும் ஒழுக்கத்தினைப் பேணாத இராவணனை,
பிராமணனாய் உரைக்காமல் அரக்கன் என்றே கம்பன் உரைத்தான்.
அதுமட்டுமன்றி பிராமணனான பரசுராமன் அந்தண நிலை நின்று தளர்ந்ததால்,
சத்திரியனான இராமனைப் பணியவேண்டி வந்ததாயும் காட்டுகிறான் அவன்.
பாரதத்திலும், அந்தண ஒழுக்கம் மீறிய,
துரோணாச்சாரியார் சத்திரியரோடு சமப்படுத்தப்படுகிறார்.
இவை வர்ண நிலைமீறியோரை அங்கீகரியாத,
நம் சான்றோர்தம் கருத்துக்காம் சாட்சிகள்.
♦ ♦ ♦
“நீ சொல்வது சரிதான்,
அந்தணர் என்பது காரணப்பெயர்தான்.
அக்காரணம் நீங்க பெயர் நீங்கும் என்று முன் நீ சொன்னதும்,
தற்போது அதையே வலியுறுத்துவதும் உண்மைதான்.
ஆனால் ஒரு கேள்வி எழுகிறதே” என்கிறீர்களாக்கும்.
உங்களிடமிருந்து என்ன கேள்வி வருமென்று எனக்குத் தெரியாதா என்ன?
காரணம் நீங்கினால் பெயர் நீங்கும் என்று சொன்னது சரி.
காரணம் வந்தால் பெயர் வருமா? என்பதுதானே உங்கள் கேள்வி.
சுருங்கச் சொன்னால் வர்ணதர்மம் மீறியவன்,
தன் வர்ணத்தில் இருந்து இறங்குவான் என்பது சரிபோல.
அதே நேரம் உயர் வர்ணத்தாரின் தர்மங்களைக் கடைப்பிடித்தவன்,
தாழ்ந்த வர்ணத்தில் பிறந்திருந்தும் உயர் வர்ணத்தவனாய் ஆவானா?
இது தானே உங்கள் கேள்வி.
கட்டுரைக்குக் கருத்துரைத்த பலரும் இதையே கேட்டிருந்தனர்.
முன்பு ஒருதரம் ஒரு நண்பர் தனது அலுவலகத்தில்,
பியோனாய் இருந்த ஒருவரின் மகன் இப்போது மனேஜராகியிருக்கிறான்.
அதுபோல உங்கள் வர்ணதர்மத்தில்,
கீழ் வர்ணத்தில் இருந்தவன் மேல் வர்ணத்திற்குச் செல்லமுடியுமா?
என்று கோபமாய்க் கேட்டிருந்தார்.
சுவாரசியமான இக்கேள்விக்கு அடுத்த அத்தியாயத்தில் பதில் சொல்கிறேன்.!
தர்மம் - தொடரும்
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Comments
Copyright ©
2025 - உகரம் - All rights reserved.