வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 4 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 4 |  கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 09 Feb 2017
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

யர்ந்தோர்களால் வகுக்கப்பட்ட வர்ணாச்சிரமதர்மத்தின்,
அடிப்படையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
அதற்கு முன் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்.
வர்ணாச்சிரம தர்மம் சரி என்றோ, பிழை என்றோ,
உங்கள் புத்தியில் ஏற்கனவே ஏதாவது பதிவுகள் இருந்தால்,
தயைகூர்ந்து அவற்றை முழுமையாய்த் துடைத்து எறிந்துவிடுங்கள்.
நிறக்கண்ணாடிகளைப் அணிந்துகொண்டு காட்சிகளைப் பார்த்தால்,
எதிலும் உங்கள் கண்ணாடியின் நிறம் தான் தெரியும்.
அதுபோல, புத்தியிலும் ஏதாவது கருத்தை மாட்டிக்கொண்டு,
ஒருவிடயத்தைப் பார்த்தீர்களேயானால்,
பார்க்கும் விடயங்களிலெல்லாம் உங்கள் கருத்துத்தான் பதிவாகும்.
எனவே வெற்று அறிவோடு நாம் வர்ணாச்சிரம தர்மத்தை ஆராய்வதே நல்லது.

 

 

♦  ♦

இதை ஏன் சொல்கிறேன் என்றால்,
முடிந்த மூன்று அத்தியாயங்களைப் படித்து,
அபிப்பிராயங்கள் எழுதியவர்களின் கருத்துக்களில்,
வர்ணாச்சிரம தர்மம் பற்றிய,
கண்மூடித்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பே பதிவாகியிருந்தது.
நமக்கு அந்த இரண்டும் வேண்டாம்.
வெற்றுமனத்தோடு நான் சொல்லப்போவதை தயவு செய்து கேளுங்கள்.
சொல்வதில் சரியானவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பிழையென்று கருதுபவற்றை உணர்ச்சிகளைக் கடந்து,
தர்க்கமுறையோடு வெளிப்படுத்துங்கள்.
நானும் உங்கள் கருத்துக்களை அங்ஙனமே பார்ப்பேன்.
சரி! இனி வர்ணாச்சிரம தர்மத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம்.

♦  ♦

என்று, தனி ஒருவர் என்ற எல்லையைக் கடந்து,
கூட்டு வாழ்க்கையை நாம் ஆரம்பித்து விட்டோமோ,
அன்றே தனிமனித நலம் நோக்கியும் ஒட்டுமொத்த சமூக உயர்வு நோக்கியும்,
சில கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்ஙனம் சமூகநலம் நோக்கி விதிக்கப்படும் அவ் அறக்கட்டுப்பாடுகளில்,
தனிமனிதர்களாய், நாம் நம் விரிந்த சுதந்திரத்திற்கு,
சிலவேளைகளில் எல்லையிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பெரும்பான்மை நலம் பற்றி இடப்படும் அவ் எல்லைகளால்,
ஒரு சில தனிமனிதர்கள் பாதிப்புறுவது தவிர்க்கமுடியாததாகிறது.
இது உலகம் பூராவும் இருக்கின்ற ஒட்டுமொத்த சமூக அமைப்புகளின் பொதுவிதி.

♦  ♦

‘குடையைச் சுழற்றி நடக்கும் ஒருவனது சுதந்திரம்,
மற்றவனது மூக்குநுனி வரையிலானது’ என்ற வாசகம் பிரபல்யமானது.
குடையைச் சுழற்றுவது நமது சுதந்திரம் தான்.
ஆனால் மற்றவனின் மூக்கில் அது முட்டுமாயின்,
அது மற்றவன் சுதந்திரத்திற்குள் நாம் தலையிடுவதாய் முடியும்.
என் குடையை நான் சுழற்றுவேன் அதில் தலையிட நீ யார்? என்று கேட்க,
இருவர் வாழும் சமுதாயத்தில் இடமில்லை.
ஒருவனது சுதந்திரம், மற்றவனைப் பாதிக்காதவரையில்தான்,
சமூக அமைப்பில் தனிமனித சுதந்திரம் அங்கீகாரம் பெறும்.
மற்றவரைப் பாதிக்கும்வகையில் அச்சுதந்திரம் நீளும்போது,
அச்சுதந்திரத்திற்கு வேலியிடப்படுதல் விலக்கமுடியாத ஒன்றாகிவிடும்.

♦  ♦

இவ்வேலியை விலங்கு என்று சொல்வாரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நம்தமிழ் மூதாதையர்கள் பெண்களின் நலம்நோக்கி வகுத்த கற்பு என்னும் திண்மையை,
காவலாய் நினையாது கைவிலங்காய் நினைத்துப் பெண்விடுதலை பேசும் ஒரு சிலபேர்,
மேற்கருத்துக்காம் இன்றைய உதாரணர்களாய்த் திகழ்;கின்றனர்.
பொய்மையான மேற்கு நாட்டு நாகரீகப்பாணியில்,
ஒட்டுமொத்த சமூகநலனைக் கருதாமல்,
தனித்தனி முழுமைச் சுதந்திரம் வேண்டும் போக்கு,
இங்கும் தலையெடுத்ததன் வெளிப்பாடு இது.

♦  ♦

வனிதையர் சிலபேரின் வம்பை, தெரிந்தே விலைக்கு வாங்குகிறேன்.
என்ன செய்ய? உங்களைப்போல செல்வாக்கான இடங்களிலிருந்து அநியாயங்கள் புறப்பட்டால்,
மௌனித்து அதை அங்கீகரிக்க என் புத்தி விடுவதில்லை.
வலியர் என்று வழிமொழியும் இழிவினை ஏற்கமுடியாத எனது குணம்,
நான் அடக்க நினைத்தாலும் என்னை மீறி வெளிவந்து விடுகிறது.
விடுங்கள்! நாங்கள் விஷயத்திற்குள் போவோம்.

♦  ♦

கூட்டுவாழ்க்கையின் வெற்றிக்காய் விதிக்கப்பட்ட,
தனிமனித, சமூகக் கட்டுப்பாடுகளே,
சமூக அறங்களாயின என்று சொன்னேன் அல்லவா?
அங்குதான் நீங்கள் எல்லோரும் கொதிக்கின்ற சமூகப்பிரிவினை என்ற பிரச்சினை தொடங்குகின்றது.
இவ்வுலகின் எந்த மூலையிலும் அறத்தினையோ நீதியினையோ சொல்லத் தலைப்படும்போது,
பிரிவுகளை வகுக்காமல் எப்பேர்ப்பட்ட நிபுணனாலும் அறம் சொல்லமுடியாது.
என்ன? ஆச்சரியப்படுகிறீர்கள்.
உங்களுக்கு இது சற்று ஆச்சரியமாய் இருக்கலாம்.
ஆனாலும் உண்மை இதுதான்.
நான் சொன்ன இவ் உண்மையைப் பொய்யென்று நீங்கள் நிரூபித்து விட்டீர்களேயானால்,
இக்கட்டுரைத் தொடரையே நான் நிறுத்திவிடுகிறேன்.

♦  ♦

வெறுமனே முடிவினைச் சொன்னால் போதுமா? அதனை நிரூபிக்கவேண்டாமா?
நீங்கள் கேட்பது புரிகிறது. நிரூபிக்கிறேன்.

♦  ♦

என் கூற்றை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,
நீங்கள் சொல்கின்ற வளர்ச்சி பெற்ற இன்றைய சமூகத்தில் நடைமுறையில் இருக்கும்
நீதிக்காய் ஏற்படுத்தப்படும் சமூகப்பிரிவினைகள் பற்றி,
ஒரு சில உதாரணங்களை முதலில் சொல்லுகிறேன்.

♦  ♦

ஒருவர் பதினெட்டு வயதின் முன் திருமணம் செய்தால் அது சட்டத்தின்படி குற்றம்.
அவரே பதினெட்டு வயதின் பின் திருமணம் செய்தால் அது குற்றமாகாது.
இன்று நடைமுறையிலிருக்கும் சட்டம் இது.
பதினெட்டு வயதில் திருமணத்தகுதி பெறும் ஒருவருக்கு,
பதினேழு வயதில் திருமணத்தகுதி இருக்காதா?
இருக்கும் என்பது நிச்சயமான பதில்.
ஆனால் பதினெட்டு வயதுத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம்,
பதினேழு வயதுத் திருமணத்தை அங்கீகரிக்காமல் தடுக்கிறது.
காரணம்  என்ன? சிந்திக்கவேண்டியிருக்கிறது.

♦  ♦

ஒருவர் அரச உத்தியோகத்தில் சேர ஏதோ ஒரு குறித்த வயது நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வயதில் ஒன்றைத் தாண்டினால் கூட அவர் அரச உத்தியோகத்தில் சேரமுடியாது.
உதாரணத்திற்கு அவ் வயதெல்லையை முப்பத்தைந்து என்று வைத்துக்கொள்ளுங்கள்.
முப்பத்தைந்து வயதில் வேலையில் சேர்க்கப்படுபவரை,
முப்பத்தாறு வயதில் சேர்க்க மறுப்பதன் காரணம்  என்ன? சிந்திக்கவேண்டியிருக்கிறது.
தேர்தல் வாக்களிப்பு, ஓய்வூதிய வயது, பாஸ்போட் பெறுதல், பாடசாலையில் சேர்த்தல்,
இரத்ததானம் செய்தல் போன்றவற்றிற்கான சட்டங்களிலும் இப்பிரிவினைகளை நாம் காணலாம்.
இவையெல்லாம் ஒரு தனிமனிதனின் வயது எல்லையை வைத்துத் தீர்மானிக்கப்படும்,
உலகால் அங்கீகரிக்கப்பட்ட இன்றைய பிரிவினைகள்.

♦  ♦

இனி மற்றொரு பிரிவினைபற்றியும் சொல்கிறேன்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவோரில்,
இயக்குனர், முகாமையாளர், எழுதுவினைஞர், துப்பரவுத் தொழிலாளி,
கூலியாள் என்பனவான பிரிவுகளும்,
அப்பதவிகளுக்கான சம்பளம், சீருடை, இருக்கை, விடுமுறை,
அதிகார எல்லை, தனி வசதிகள் என்பவற்றுள் வேறுபாடுகளும்,
உலகம்பூராகவும் இன்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் அவ்வவ் நிறுவனத்தின் சட்ட எல்லைகளுக்குள் உட்பட்ட விடயங்களாகும்.
பதவி சார்ந்த இத்தகுதி வேறுபாடுகள் அரசியலிலும் உள.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் என,
ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதவி வரிசைகளும்,
அதற்கான உரிமைகளும் அதற்கான அதிகார வரையறைகளும்,
‘புறோட்டோ கோல்’ என்ற பெயரில் சட்டப்படி வகுத்து வைக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்திலோ அரசிலோ இவ்வரையறைகளை எவரும் மீறமுடியாதென்பதும்,
ஒருவர் அதிகாரத்தில் மற்றவர் நுழையமுடியாதென்பதும்.
மீறினால் அது சட்டப்படி குற்றமாகும் என்பதும்,
இன்று உலகம் முழுவதினாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட நியதிகளாகும்.

♦  ♦

அதுபோலவே வேறுசிலவற்றையும் சொல்லலாம்.
ஒரு கீழ்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மேல்நீதி மன்ற நீதிபதி மாற்றலாம்.
மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி மாற்றலாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பே சட்ட எல்லையின் இறுதி முடிவாயிருக்கும்.
ஆனாலும் அம்முடிவினை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

♦  ♦

ஒரு நாட்டில் பணியாற்றும் வேறொரு நாட்டுத் தூதர்,
தான் பணியாற்றிய நாட்டில் குற்றம் செய்தால்,
அந்நாடு அவரை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பலாமே தவிர,
தன் நாட்டுச் சட்டப்படி தண்டிக்கமுடியாது.

♦  ♦

மது குடிப்பது, துப்பாக்கி பாவிப்பது, போதைவஸ்தைப் பயன்படுத்துவது போன்ற பல விடயங்கள்,
சட்டத்தின்படி இன்று குற்றங்களாய் வகுக்கப்பட்டுள்ளன.
அச் சட்டத்தை வகுத்த அரசே  இவற்றைப் பயன்படுத்த,
ஒருசிலருக்கு மட்டும் அனுமதி வழங்குகிறது.
இப்படி இன்னும் ஆயிரம் சொல்லலாம்.

♦  ♦

ஆழ்ந்து பார்த்தால், மேற்சொன்ன விடயங்களிலிருந்து ஓர் உண்மை உங்களுக்குப் புலனாகும்.
தனிமனித வயதெல்லைப்பிரிவுகளை வைத்தும்,
அவரவர் சமுதாய அந்தஸ்;த்துப் பிரிவுகளை வைத்தும்,
வளர்ச்சி பெற்று விட்டதாய்ச் சொல்லிக்கொள்ளும் இன்றைய உலகநாடுகளிலும்
சட்டத்தின் பெயரால்; பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதே அவ்வுண்மையாகும்.

♦  ♦

சமுதாய உயர்வு, நலன் என்பவை நோக்கி சட்டங்களை வகுத்தபோது,
இதேபோலத்தான் அன்றைய நம் மூதாதையரும்,
தனிமனித வயது, சமுதாய அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில்,
சில பிரிவினைகளை உருவாக்கினர்.
குறித்த சிலபேரைத் தாழ்த்துவதும் குறித்த சிலபேரை உயர்த்துவதும்
அவர்களது நோக்கமல்ல.
இப்பிரிவுகளின்றி சமுதாயத்தை நெறி செய்யமுடியாது என்பதை,
அன்றே உணர்ந்ததால்தான் அங்ஙனம் அவர்கள் செய்தனர்.
இன்றைய பிரிவுகளைக் கேள்வியின்றி ஒத்துக்கொள்ளுவோர்,
அன்றைய பிரிவுகளில் குற்றம் கண்டு கொதித்து நிற்கின்றனர்.
நீங்களே சொல்லுங்கள்! அது எப்படி நியாயமாகும்?
“மாமியார் உடைத்தால் மண்குடம்,
மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற கதைதான் இது என்பதை,
நீங்கள் விளங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

♦  ♦

அந்தணர்களுக்கொரு சட்டம் மற்றவர்களுக்கொரு சட்டமா? என்று கேட்போர்,
மனேஜருக்கு ஒரு சட்டம் பியோனுக்கு ஒரு சட்டமா? என்றும்,
நீதிபதிக்கு ஒரு சட்டம், ஜனாதிபதிக்கு ஒரு சட்டமா? என்றும்,
சாதாரணர்களுக்கு ஒரு சட்டம், தூதர்களுக்கு ஒரு சட்டமா? என்றும்
ஏனோ கேட்கத் தயங்குகிறார்கள்.
தயங்குகிறார்கள் என்ன தயங்குகிறார்கள்?
கேட்பதேயில்லை என்பதுதான் உண்மை.
நீங்களே சொல்லுங்கள் இந்தப் பாரபட்சம் நியாயமாகுமா?
ஒரு உண்மை புரிகிறது.
ஒன்று, மேற் சொன்னவர்கள் வேண்டுமென்றே,
வர்ணாச்சிரமதர்மத்தைக் குற்றம் சாட்டுவதற்காக,
உண்மை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
அல்லது இவ் உண்மைகளை ஆழ்ந்து அறியும் அறிவு அவர்களுக்கில்லை.

♦  ♦

தெளிவாய் உறுதிபடச் சொல்லுகிறேன்.
எப்படித் தனிமனித வயதுப் பிரிவுகளுக்கும்,
தொழில்த்தகுதிப் பிரிவுகளுக்கும் ஏற்ப,
இன்று சட்டங்கள் வகுக்கப்படுகின்றனவோ அதேபோலத்தான்,
அன்றும் தனிமனித வயதுநிலை, தொழில்த்தகுதிநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே,
தர்மங்களை வகுத்தார்கள்.
பொறுங்கள்! ஒரு சின்னத்திருத்தம்.
இன்று போல் அன்று செய்யவில்லை.
அன்று போலத்தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வேடிக்கை!
நாம், அவர்களைப் பின்பற்றி அறங்களை இன்றும் வகுத்துக்கொண்டு,
அன்று அவர்கள் செய்தது பிழை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதனைத்தான்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையால்’ என்று,
அன்றே வள்ளுவரும் சொல்லிப்போனார்.
அவர் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அக்குறளுக்கு,
தத்தம் கொள்கைக்கேற்ப இன்று விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்!

♦  ♦

மீண்டும் மூலச்செய்தியை விட்டுவிட்டு சற்றுத்தூரம் வந்துவிட்டேன்.
ஆனால் இம்முறை அதனைச் செய்ததற்குக் காரணம் இருக்கிறது.
வர்ணாச்சிரம தர்மம் பற்றி உங்கள் கருத்தில் பதிவாகியிருக்கும்,
பிழையான அபிப்பிராயத்தை நீக்கினால்த்தான்,
உங்களுக்கு வர்ணாச்சிரம தர்மத்தின் மகிமை புரியும் என்பதற்காகவே அதனைச் செய்தேன்.
இனி விஷயத்திற்குள் நுழைவோம்.

♦  ♦

விஷயத்தை எங்கே விட்டேன் என்று மீண்டும் மறந்து போய்விட்டது.
புத்தி வயதானதை நினைவூட்டுகிறது.
கொஞ்சம் பொறுங்கள் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
ம்ம்ம்........... ம்....... ம்...... நல்லது.
விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது.
வர்ணாச்சிரமதர்மம் என்ன என்றும்,
அதில் சாட்டப்படும் குற்றங்கள் எவை என்றும் சொல்வதாய் சொல்லியிருந்தேன்.
முதலில் வர்ணாச்சிரமதர்மம் என்றால் என்ன? என்று சொல்கிறேன்.

♦  ♦

பலர் கூடிவாழும் ஒரு சமூகத்தையும்,
அச்சமூகத்தில் வாழும் ஒரு தனிமனிதனின் வாழ்வையும்,
பிரிவுபடுத்தி சமூகத்தின் நலம் நோக்கி,
நம் மேலோர் வகுத்த வகுப்பே வர்ணாச்சிரமதர்மம் ஆகும்.
அவர்களால் வகுக்கப்பட்ட சமூகப்பிரிவுகள் வர்ணங்கள் எனப்பட்டன.
தனிமனிதவாழ்வுப் பிரிவுகள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன.
அப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு,
சொல்லப்பட்ட தர்மமே வர்ணாச்சிரமதர்மமாம்.

♦  ♦

தனிமனித வாழ்வையும் சமூக வாழ்வையும்,
பிரிக்கவேண்டிய தேவை என்ன?
அப்பிரிவுகளுக்கு, தர்மம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் என்ன?
நீங்கள் புத்திசாலியாய் இருந்தால் உங்கள் மனதில் இக்கேள்விகள் பிறந்திருக்கும்.
என்ன? அவசரமாய்த் தலையாட்டுகிறீர்கள்.
அக்கேள்விகள் உங்கள் மனதிற் பிறந்ததாய் எனக்குத் தெரிவிக்கிறீர்களாக்கும்.
மெத்தச் சந்தோஷம்.
நீங்கள் ‘மகா கெட்டிக்காரர்கள்’ என்று எனக்கு எப்போதோ தெரியும்தானே!
அக்கேள்விகளுக்கான பதிலை இப்போது நான் சொல்கிறேன்.

♦  ♦

என்று மனிதன் கூடிவாழத் தலைப்பட்டானோ,
அன்றே அக்கூட்டுவாழ்க்கையின் ஒழுங்கினை,
வரையறை செய்யவேண்டிய தேவை வந்துவிட்டது.
நன்மை நோக்கிக் கூடிவாழத் தலைப்பட்ட மனிதர்,
அக்கூட்டு வாழ்க்கையின் வெற்றிக்காய்,
தமக்குத்தாமே சில கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அங்ஙனம் தனிமனித வாழ்விலும் சமூகவாழ்விலுமாய்,
வாழ்க்கை அனுபவம் கொண்டு வகுத்த கட்டுப்பாடுகளே தனிமனித, சமூக அறங்களாயின.

♦  ♦

தனிமனித, சமூகக் கட்டுப்பாடுகளை மேலோர் உருவாக்கிய விதத்தினைச் சொல்கிறேன்.
ஒட்டுமொத்த அறங்களை வகைசெய்யத் தலைப்பட்ட மேலோர்,
தனிமனித வாழ்வும், சமூகமும் பிரிவுகளை உள்ளடக்கியிருந்ததால்,
பொதுப்பட அறம் சொல்லமுடியாத இடர்ப்பாட்டை இனங்கண்டனர்.
அவ் இடர்ப்பாடு நீக்க மிக நுண்மையாய்க் கவனித்து,
ஆயிரமான பிரிவுகள் இருப்பினும்,
பெரும்பான்மை பற்றி தனிமனிதவாழ்வையும், சமூகவாழ்வையும்,
நன்நான்கு பிரிவாய் அமைக்க அவர்கள் வழிகண்டனர்.
இப்பிரிவுகள் ஏலவே இருந்த வாழ்வியலை விளங்கி வகுக்கப்பட்டனவேயன்றி,
அப்பிரிவுகளை வகுத்துப் பின் வாழ்வியலை அதனுள் அவர்கள் அடக்கவில்லையென்பது,
இவ்விடத்தில் நாம் முக்கியமாக விளங்கவேண்டிய ஒன்று.

♦  ♦

என்ன? உங்கள் முகத்தில் சோர்வு தெரிகிறது.
தொடர்ந்து ‘சீரியர்ஸா’ய் சொல்லிக்கொண்டிருக்கிறேனோ?
அப்படிப் பேசினால்த்தானே அறிவாளிகளான (?) உங்களுக்குப் பிடிக்கும்.
சிரிக்காமல் பேசுவதெல்லாம் சீரியஸான பேச்சு என்று ஏமாறுகிறவர்கள் தானே நீங்கள்.
அதனால்த்தான் கொஞ்சம் சீரியஸாகவே பேசிப்பார்த்தேன்.
என்ன முறைக்கிறீர்கள்?  வேறுவழியில்லை.
இதை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இதைவிட எளிமையாய் இந்த விடயத்தைச் சொல்லலாம்போல் தோன்றவில்லை.
ஆனாலும் களைத்துவிட்ட உங்களை வருத்தவும் மனம் வருகுதில்லை.
நீங்களும் எங்கும் ஓடப்போவதில்லை. நானும் எங்கும் ஓடப்போவதில்லை.
எனவே சற்று ஓய்வெடுங்கள்.
அடுத்த வாரம் சந்திப்போம்

வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
 
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Like
 
 
 
 
 
 
 
Love
 
 
 
 
 
 
 
Haha
 
 
 
 
Wow
 
 
 
Sad
 
 
 
Angry
 
 
 
Comments
Mohan Bharathi Mohan
 
 
Mohan Bharathi Mohan அடுத்த வாரம் சீக்கிரம்
எதிர் பார்க்கிறேன் ஐயா
 
 
Ravipalan Rasaratnam
 
 
Ravipalan Rasaratnam நீங்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறீர்கள்?
துருபிடித்துப்போன வர்ணாசிரம அதர்மத்தை தூசிதட்டி புதுப்பிக்க முயல்வதன் நோக்கம் என்ன?
தமிழர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்த அவர்களுக்கு நீதி நூல்கள் இல்லையா? உலகத்துக்கே பொதுமறை தந்தது தமிழினம். ஆரிய...See more
 
 
 
 
 
 
தர்ஷன் இராஜேந்திர சோழன்
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.