அதிர்வுகள் 04 | வாழ்க்கைக் கிரிக்கெட்

அதிர்வுகள் 04 | வாழ்க்கைக் கிரிக்கெட்
 
 
உள்ளம் சற்றுச் சோர்ந்திருந்தது.
தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்தேன்.
மனம் ஒருநிலைப்படாததால் எண்ணங்கள் எங்கோ இருக்க,
கண்கள் மட்டும் தொலைக்காட்சியில்.
ஒருப்படாத மனத்தின் இயல்பால்,

விரல்கள் 'றிமோட்' மூலம் 'சனல்களை' மாற்றியபடி.
அவுஸ்திரேலிய, இந்தியக் 'கிரிக்கெட் மச்'
டெண்டுல்கர் விளாசிய பந்து, 'பௌன்றி' யைத் தாண்ட,
'ஹோ' என ஆயிரமாய்த் தலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன.
'பதினொரு முட்டாள்கள் விளையாட,
பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு.'
'பேனார்ட்ஷா' கருத்துச் சரியாய்ப் பட்டது.
 

சலிப்போடு விரல்கள் தொலைக்காட்சியை அணைக்கின்றன.
மனச்சோர்வு விரிகிறது.
òòòòò
மனச்சோர்வின் காரணம் சொல்ல மறந்து விட்டேன்.
சமூகம் பற்றிய அக்கறையோடு,
அண்மையில் ஒரு சிறு சஞ்சிகையில் நான் எழுதியிருந்த கட்டுரை,
சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
தரமற்ற வார்த்தைகளால் தகுதியற்ற ஒருவர் எழுதியிருந்த மறுப்பை,
பொறுப்பற்ற முறையில் அதே சஞ்சிகையின் ஆசிரியர் வெளியிட்டிருந்தார்.
தனி மனித தாக்குதல் முயற்சி.
நடுவு நிலைமையாய் நடித்து மற்றொரு பத்திரிகை, அதை மறு பிரசுரம் செய்திருந்தது.
வழிமொழிந்து வன்னிப் பத்திரிகையில் இன்னொரு கட்டுரை.
இப்படியாய் என் தலை இஷ்டப்படி உருட்டப்பட்டது.
என் எழுத்து மருந்து வேலை செய்ததில் எனக்கு ஏகப்பட்ட சந்தோசம்.
இருபதாண்டுகளாக இது எனக்குப் பழக்கப்பட்டதுதான்.
சோர்வுக்குக் காரணம் அதுவல்ல.

♦  ♦

என்னைத் தாக்கி எழுதியவர் பற்றி எனக்குக் கவலையில்லை.
எழுதாதவர்கள் பற்றியே அதிகம் கவலைப்பட்டேன்.
அறிவுலகம், அறிவுலகம் என அதிகம் பிதற்றிக் கொள்ளும் பலரும்,
ஒரு சமூகப் பிரச்சினை பற்றிய எனது கருத்தை,
மறுக்கவோ, ஆதரிக்கவோ செய்யாமல் மௌனம் காத்தனர்.
'அட்ரஸ்' இல்லாத ஒருவரின் வெற்று ஆர்ப்பரிப்பை தட்டிக் கேட்கும் வலிமையின்றி,
என்னிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் 'உச்' சுக் கொட்டினர்.
'வெறும் பெட்டைப் புலம்பல்.'
அறிவாளிகளாய்த் தம்மைத்தாம் பிரகடனப்படுத்தும்
பெரிய மனிதர்களின், அந்த 'நபுஞ்சகத்' தன்மை எரிச்சலூட்டியது.

♦  ♦

பாஞ்சாலி துகில் உரியப்படுகையில் பார்த்திருந்த,
துரோணரும், கிருபரும், பீஷ்மரும் நினைவில் வந்தனர்.
பாண்டவர்க்குப் புத்தி சொல்லும் பலம் மட்டுமே அவர்களிடம்.
துரியோதனனிடம் பேசினால் தூக்கியெறியப்படுவார்கள்.
தர்மம் துகிலுரியப்பட தம் தனிக் கௌரவம் நோக்கி,
தலை தாழ்த்தி அமர்ந்திருந்தனராம் அவர்கள்.
அவர்களின் இயலாமைக்கு பொறுமை என்ற புகழாரம் வேறு.
கொதித்தெழுந்த இளைய விகர்ணனை மடக்க மட்டுமே அவர்தம் மதிக்கு வலிமை.
பாரதம் படிக்கும் பொழுதே பதறியிருக்கின்றேன்.
பின்னால் அம்புப் படுக்கையில் அழுந்திய அவர்கள் நிலைக்கு,
பாவத்தைப் பார்த்திருந்த குற்றமே, காரணமாய் எனக்குப்படும்.

♦  ♦

இன்று பாஞ்சாலியாய் நான்.
துரியோதனன் உத்தரவால் துச்சாதனன் ஆர்ப்பரித்துத் துகிலுரிந்தான்.
களம் அமைத்துக் கொடுத்து,
பின் அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் கண்ணில்லாத் திருதராட்டினன்.
விளையாட்டுப் பிள்ளையின் விருப்புக்காக தான் அமைத்துக் கொடுத்த களம்,
தன் தேசத்தையே அழித்து விடுமோ எனும் அச்சம் அவன் மனதில்.
களம் அமைத்துக் கொடுத்து பின், துரியோதனனைக் கண்டித்த அவன் வார்த்தைகளில்,
சத்தியத்தின் வலிமை இல்லை.
பாண்டவரைப் பார்க்கும் திறனின்றி,
குருடே தகுதியாய்ப் போக, குனிந்திருந்தான் அவன்.

♦  ♦

வஞ்சகச் சகுனி வழிமொழிந்து ஆர்ப்பரித்தான்.
பிழையென்று தெரிந்தும் பெற்ற உதவிக்காய் கர்ணனும் ஏதேதோ கதையளந்தான்.
ஆன்றோர் அமைதி காத்தனர்.
கண்ணன் மேற்கொண்ட நம்பிக்கையால் கழராது துகிலெனும் உறுதியுடன்,
கை தூக்கி நின்றாள் பாஞ்சாலி.
மீண்டும் பாரதம்.
சலிப்பின் காரணம் இது.

♦  ♦

புத்தியின் உத்தரவின்றியே,
கை, தொலைக்காட்சியை மீண்டும் போடுகின்றது.
பழையபடி அதே ஆயிரமான தலைகளின் ஆர்ப்பரிப்பு.
இப்பொழுது டெண்டுல்கர் 'அவுட்' டாகியிருந்தார்.
வெற்றிக்கும் ஆர்ப்பரிப்பு. தோல்விக்கும் ஆர்ப்பரிப்பு.
உலகின் இயல்பு தெரியாமல் புத்தி குழம்பிற்று.

♦  ♦

'ஹலோ! என்ன யோசனையாய் இருக்கிறியள்?
ஓ, டெண்டுல்கர் 'அவுட்டேங்கோ?' '
ஒவ்வொரு எழுத்திலும் உற்சாகம் பொங்க,
வார்த்தைகளை வாரியிறைத்து உள் நுழைகிறார் நண்பர் யோகநாதன்.
அது அவரது இயல்பு.
இவ்வளவு மகிழ்ச்சியான மனிதன் எப்படித்தான் 'கஸ்ரம்ஸ்' அதிகாரியாக இருக்கின்றாரோ?
மற்றவர்களை மிரட்டவும் இவரால் முடியுமா?-எப்பொழுதும் நினைப்பேன்.
சோர்ந்திருந்த மனம், அவர் வருகையால் சற்று மலர்ந்தது.
'என்ன, வழக்கமான சிரிப்பைக் காணேல? ஏதாவது பிரச்சினையே?'
அவர் வார்த்தைகளில் இருந்த கரிசனை ஈர்க்க,
முன்னர் உங்களுக்குச் சொன்ன பிரச்சினைகள் அத்தனையையும்,
கொட்டி முடித்தேன்.

♦  ♦

ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
நாக்கைக் கடித்தபடி அவரது வழமையான சிரிப்பு.
எல்லோருக்கும் வாய் மட்டுந்தான் சிரிக்கும்.
பாவி மனிசனுக்குக் கண்ணும், மூக்கும் சேர்ந்து சிரித்தன.
அது அவரது தனி முத்திரை.
'சீரியஸான' என் கருத்தைக் கேட்டுச் சிரிக்கும் அந்த மனிதரில் எரிச்சலுண்டானது.
முகத்தில் சலிப்புக் காட்டினேன்.
'என்னங்கோ இதுக்கெல்லாம் யோசிக்கிறியள். சின்னப் பிரச்சினை விடுங்கோ.
'காய்ச்ச மரந்தான் கல்லெறிபடும்' யோசியாதேங்கோ.'
பலரும் சொல்லும் பழமொழியை, தன் கண்டு பிடிப்பாய் எடுத்து விட்டார்.
நான் சொல்ல வந்தது அவருக்குப் புரியவில்லையோ எனப்பட்டது.
'ஐயா! எறி பட்டதில எனக்குத் துளியும் கவலையில்லை.
எவனும் எவனுக்கும் எறியலாம் கேட்க ஒருவரும் இல்லை என்ற,
சமூகத்தின் பொறுப்பின்மைதான் கோபமாய்க் கிடக்கு.'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
மீண்டும் அதே வில்லன் வீரப்பா சிரிப்பால் எரிச்சலூட்டினார்.

♦  ♦

இவரோடு பேசிப் பிரியோசனம் இல்லை.-உள்ளம் உரைத்தது.
'எப்பிடி உங்கட 'கஸ்ரம்ஸ்' எல்லாம் பிரச்சினை இல்லாமல் போகுதோ?'
கதையை மாற்றினேன்.
'என்னங்கோ நான் கதைக்கிறது பிடிக்கேலப் போல - கதையை மாத்திறியள்.'
மனிதர் என் மனதின் நாடி பிடித்து மடக்கினார்.
'சிரிக்காம என்னால ஒண்டையும் கதைக்க முடியாதுங்கோ,
அதுக்காக 'சீரியஸ்' விளங்காதவன் என்று நினைக்கப்படாது.
கொஞ்சம் பொறுமையா என்ட கதையக் கேளுங்கோ?'
மனிதர் ஏதோ அறுக்கப் போகிறார் என சற்று மனம் சலிக்கிறேன்.
ஆனாலும் முகம்மறுக்க முடியாத உறவு கேட்க வைக்கிறது.
எதைப் பற்றியும் கவலையில்லாமல் தொடர்ந்தார் அவர்.

♦  ♦

'இப்ப உந்த ரி.வி.யில என்னங்கோ பார்த்தனீங்கள்?'- அவர்
'கிரிக்கெட் மச் போகுது.'-நான்
'அதைப் பார்த்த பிறகுமோ யோசனை?'-மீண்டும் அவர்
'எனக்குக் 'கிரிக்கெட்' பிடியாது வேலையில்லாத விசரங்களின்ட
பொழுதுபோக்கு.'- சலித்தேன்.
'என்னைத்தான் விசரன் என்றியள் போல?'
வார்த்தைகளால் முகத்தில் எற்றினார். - அது அவர் பாணி.
வார்த்தைகளின் அர்த்தம் அறியாது பேசி விட்ட நாணம் தாக்கியது.
'சீச்சீ உங்களச் சொல்லேல, பொதுவா......' இழுத்தேன்.
'நீங்கள் ஆரைச் சொன்னாத்தான் என்ன?
ஒரு விதத்தில உலகத்தில இருக்கிற எல்லாரும் விசரங்கள் தான்.'
மனுசன் ஞானியாய்ப் பேசினார்.
மனத்துள் மதிப்புயர அவரை அண்ணாந்து பார்க்கிறேன்.

♦  ♦

'நான் சொன்னத நீங்கள் விளங்கேலப் பாருங்கோ,
உங்கள நான் 'கிரிக்கெட்ட' ரசிக்கச் சொல்லேல,
'கிரிக்கெட்' விளையாட்டப் பார்த்தால் வாழ்க்கைய விளங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் புத்திசாலி அதப் பார்த்து உலகத்த விளங்குங்கோ எண்டுதான் சொன்னனான்.'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
பேச்சின் இலவச இணைப்பாக ஏனென்று தெரியாத ஒரு சிரிப்பு.
'என்னது 'கிரிக்கெட்டப் 'பார்த்து வாழ்க்கயை விளங்கலாமோ? அதெப்பிடி?'- இது நான்.
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
'அப்பிடிக் கேளுங்கோ? அதக் கொஞ்சம் விளங்கப்படுத்தவே? உங்களுக்கு நேரம் இருக்கோ?'
வெகுளித்தனமாய்ப் பேசினாலும் வார்த்தைகளில் நாகரிகம் காட்டினார்.

♦  ♦

ஏதோ புதிதாய்ச் சொல்கிறார் என்ற அளவில்,
அவர் கருத்தைக் கேட்க மனம் ஆர்வப்பட்டது.
நேரமும் இருந்ததால் சற்றுக் காது கொடுத்தால் என்ன? எனப்பட்டது.
விளையாட்டைப் பற்றி விளையாட்டாய்ப் பேசும் மனிதரிடம்,
விளையாட்டாய்ப் பொழுது போக்க முடிவு செய்தேன்.
'அது என்ன பாருங்கோ 'கிரிக்கெட்டில' வாழ்க்கையைப் படிக்கிறது.
கனபேர் வாழ்க்கையே விளையாட்டென்கிறாங்கள்.
நீங்கள் விளையாட்டை வாழ்க்கை என்கிறீங்கள்.
சரி, உங்கட கண்டு பிடிப்பையும் ஒருக்காக் கேப்பம் சொல்லுங்கோ?'
உத்தரவு கொடுத்தேன்.
அவரது குதூகலம் எனக்குள்ளும் தொற்றிக் கொள்ள சற்று உற்சாகமாகியிருந்தேன்.
அவருக்கு ஆனந்தம்.
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
மீண்டும் தேவையில்லாத ஆனால், கொஞ்சம் ரசிக்க வைக்கும் சிரிப்பு.

♦  ♦

அடிக்கடி வந்து, அச்சிரிப்பு தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தது.
வினோதமாய் அவரை ரசித்தபடி அவர் சொன்னவற்றைக் கேட்கத் தொடங்கினேன்.
விளையாட்டாய் அவர் தொடங்கிய பேச்சு, 'கிரிக்கெட்டைப்'போலவே,
போகப் போக விறுவிறுப்பானது. உற்சாகப்பட்டேன்.
òòòòò
நான் உற்சாகப்பட, உற்சாகப்பட,
சபையின் ஆர்ப்பரிப்புக் கண்ட 'கிரிக்கெட்' வீரனாய் அவர் எழுச்சி கொண்டார்.
அவர் விளாசிய வார்த்தைப் பந்துகள் என் அறிவுப் 'பௌன்றி'யைக் கடந்து, 'சிக்ஸர்' களாய் விழுந்தன.
ஒரு விளையாட்டான மனிதர் விளையாட்டைப்பற்றி, விளையாட்டாகச் சொன்ன செய்தி,
மிகச் 'சீரியஸ்சாய்' இருந்தது.
என் அகத்துள் அடைபட்டுக் கிடந்த ஆயிரம் கதவுகள் திறந்தன.
உள்ளே பாய்ந்த ஒளியில், என் சோர்விருள் கலைந்தது.
தட்சணாமூர்த்தியாய் மனிதர் தரிசனம் தந்தார்.
அவர் சொன்ன அந்த அற்புதச் செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கே இக்கட்டுரை.
இதோ! அவர் சொன்ன பாணியிலேயே, அவர் சொன்ன செய்திகள்.
படித்துப் பாருங்கள்.

♦  ♦

'அப்ப நான் சொல்லுறதக் கேக்கப் போறியள் பெரிய சந்தோசமுங்கோ.
இப்ப நான் ஒரு வகுப்பெடுக்கப் போறன் பாருங்கோ.
நான் கேக்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேணும்'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
அதே சிரிப்பு.

♦  ♦

'இப்பிடி அடிக்கடி சிரிப்பன் யோசிக்கப்படாது.'
அவருக்கே அது சற்று மிகையாய்ப் பட்டிருக்கும் போலும் - தொடர்ந்தார்.
'இப்ப 'ரி.வி. ஸ்கிரீனைப்' பாருங்கோ. எத்தினபேர் விளையாடினம்? சொல்லுங்கோ பார்ப்பம்.'
ஐயத்திற்கே இடமில்லாத கேள்வி. ஆனாலும் பதில் சொல்கிறேன்.
'இரண்டுபேர் '(B)பட்' பண்ணுகினம். பதினொருபேர் '(க)பீல்ட்' பண்ணுகினம்.'
'இதிலயிருந்து உங்களுக்கு என்ன விளங்குது?'
மீண்டும் அவரிடமிருந்து கேள்வி.

♦  ♦

'விளங்கிறதுக்கு என்ன இருக்கு?
மொத்தம் பதின்மூண்டுபேர் விளையாடினம் எண்டு விளங்குது.'- சலிப்பைப் பதிலாக்குகிறேன்.
'இந்த நக்கல் தானுங்கோ வேண்டாமென்னுறது. நல்லா யோசிச்சுச் சொல்லுங்கோ! என்ன விளங்குது?'
எனக்குள் எரிச்சல். 'எனக்குத் தெரியேல நீங்களே சொல்லுங்கோ.' என்றேன்
'சரி, நானே சொல்லுறன். உலகத்தில இரண்டுபேர் சாதனை செய்ய நினைச்சால்,
பதினொருபேர் அவங்கள 'அவுட்' டாக்க நினைப்பாங்கள்.
இதுதான் 'கிரிக்கெட்டிலிருந்து' படிக்கிற முதல் வாழ்க்கைப் பாடம்'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
அவர் சொன்ன செய்தியால்,
அறிவில் ஒரு மின்னல் தெறிக்க,
முதல்த்தரமாய் அவர் சிரிப்பில் மதிப்புண்டாகிறது.

♦  ♦

' சரி இனி அடுத்த விசயத்துக்கு வருவம்.
இரண்டு 'ரீமிலும்' பதினொருபேர்தானே விளையாட இருக்கினம்?'
'ஓம்' - இது நான்.
'அப்ப ஏன் பாருங்கோ 'அவுட்' டாக்க பதினொருபேரும் விளையாட,
'ஸ்கோர்' எடுக்க இரண்டே இரண்டுபேர் மட்டும் விளையாடுகினம்?
அது எப்பிடியுங்கோ நீதியாகும்?'
வழமையில் ஊறி, மேற்சொன்ன விடயம் பற்றி இதுவரை சிந்திக்காத புத்தி,
நியாயமுள்ள அவரின் புதுக் கேள்வியால் அதிர்ந்தது.

♦  ♦

'அது........... அது வந்து...........' நான் தடுமாற,-தொடர்கிறார் அவர்.
'அது சரியோ, பிழையோ எண்டு, 'கிரிக்கெட்' காரர் முடிவு செய்யட்டும் பாருங்கோஇ
நாங்கள் வாழ்க்கையைப் படிப்பம்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், எப்பவும் சமமாய்த்தான் ஆக்கள் சேருவினம்.
ஆனால், பிரச்சினையெண்டு வந்திட்டால்,
தர்மத்தை விழுத்திறத்துக்கு, அதர்மக்காரரெல்லாம் ஒண்டாய் நிற்பாங்கள்.
ஆனால், தர்மக்காரர், ஒவ்வொருத்தராய்த்தான் துணைக்கு வருவினம்.'
அவர் நிறுத்த,-'இது தர்மக்காரரின் பலயீனம் என்கிறீயளோ?' நான் கேட்கிறேன்.
'இல்ல, பலம் என்னுறன்.'
'அதெப்படி?'
'பதினொரு அதர்மக்காரரை எதிர்க்க இரண்டு தர்மக்காரர் போதும்.
அதனால்த்தான் இரண்டுபேரை விளையாட விட்டிட்டு
மற்ற தர்மக்காரர் பார்த்துக் கொண்டிருப்பினம்;.
அது பலயீனமில்ல, பலமுங்கோ. இப்ப விளங்குதே உலகம்?'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
என் மனத்துள் அவர் சிரிப்பின் மதிப்பு மேலும் உயர்கிறது.

♦  ♦

'என்ன களைச்சுப் போனீங்களே?
இன்னுஞ் சொல்லவோ அல்லது இவ்வளவத்தோட விடவோ?'
விசயம் என்னை ஈர்ப்பது தெரிந்து மனுசன் மவுசு காட்டினார்.
'வலு திறமாய் இருக்குது பாருங்கோ,எவ்வளவு வேணுமென்டாலும் சொல்லுங்கோ,
கேட்க நான் தயார்.'-வெளிப்படையாய்ச் சரணடைந்தேன்.
அவருக்கு அளவில்லாத உற்சாகம்.

♦  ♦

'சரி. திரும்ப மைதானத்தைப் பாருங்கோ.
'(B)பட்' பண்ணுறவையள் எங்க நிற்கினம்?'
'பிச் சுக்குள்ள'
' (F)பீல்ட் பண்ணுறவை?'
'கிரவுண்ட்ஸ் முழுக்க நிற்கினம்.'
'இப்ப தெரியுதே? 'ரண்ஸ்' எடுக்கிறவ 'பிச்'சுக்குள்ள நிண்டுதான் விளையாட வேணும்.
'அவுட்' டாக்கிறவ எங்க நிண்டும் 'அவுட்' டாக்கலாம்.
இதிலயிருந்து என்ன விளங்குதுங்கோ?' - அவர் கேட்க,
'தர்மம் பற்றிச் சிந்திப்பவனுக்குத்தான் வரம்புகள்.
அவன விழுத்த நினைக்கும் அதர்மக்காரருக்கு எந்த வரம்பும் இல்ல.'
நான் விளங்கியதைச் சொல்கிறேன்.
'அட, பிடிக்கத் தொடங்கியிட்டியள்.'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
மீண்டும் சிரிக்கிறார்.

♦  ♦

'சரி, இன்னுஞ் சொல்லுங்கோ?'- இப்பொழுது நானே ஆர்வப்படுகிறேன்.
'ஒரு பெரிய ரகசியம் சொல்லட்டே?'- குரலில் இரகசியம் காட்டிப் பரபரப்பூட்டினார்.
'சொல்லுங்கோ.'
'இப்ப டெண்டுல்கர் அவுட்டாகினதப் பார்த்தனிங்களெல்லே?
என்னண்டு அவர் 'அவுட்' டாகினவர்?'
'ரண் அவுட்' என்றேன்.
'கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன்?'
'எதிர்ப்பக்கத்தில் நின்ற 'பட்ஸ்மென்' அவசரப்பட்டு ஓடிவர,
அவரைக் காப்பாற்ற இவரும் ஓட,
இவையளிட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி,
அவங்கள் 'அவுட்' டாக்கிப் போட்டாங்கள்.' - நான் சொன்னதும்,
'இதில இருந்து என்ன விளங்குது?' -மீண்டும் அவரிடமிருந்து கேள்வி.
'நீங்களே சொல்லுங்கோ?'
'எங்கள, எதிரிகள் மட்டும் விழுத்திறதில்ல.
சில நேரத்தில சேர்ந்து நிக்கிறவங்களே விழுத்திப் போடுவாங்கள்.
இது எப்படியிருக்கு?'-ரஜினி போல 'ஸ்ரைல்' காட்டி மீண்டும்,
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........
இப்பொழுது அந்தச் சிரிப்பு என்னிலும் தொற்றிக் கொள்கிறது.

♦  ♦

'முடிஞ்சுதோ? இன்னும் இருக்குதோ?'
'இனித்தான் முக்கியமான விசயமே இருக்குதுங்கோ.'
இயல்பாகவே பெருத்திருந்த முழியை மேலும் பெருப்பித்து உருட்டுகிறார்.
'அதென்ன முக்கியமான விசயம்?'
'கொஞ்சம் முந்தி டெண்டுல்கர் அடுத்தடுத்து மூண்டு 'சிக்ஸர்' அடித்தவர் பார்த்தனீங்களே?'
'ஓம்'
'அப்ப 'கிரவுண்ட்டுக்குள்ள' இருந்த சனம் என்ன செஞ்சது?'
'அதையேன் கேட்கிறியள்? பெரிய ஆர்ப்பாட்டம் தான், சத்தத்தில காது கிழிஞ்சுது.'
'சரி. இப்ப டெண்டுல்கர் 'அவுட்டானவர்' எல்லே?'
'ஓமோம்.'
'அப்ப சனம் என்ன செஞ்சது?'
'அப்பவும் பெரிய சத்தமும் ஆர்ப்பாட்டமுந்தான்.'
'இதிலயிருந்து என்ன விளங்குது?'
நான் யோசிப்பதற்குள் அவரே தொடர்ந்தார்.
'சனம், வெண்டாலும் கை தட்டும், தோத்தாலும் கை தட்டும்.
'சிக்ஸ்' அடிச்சவனுக்கும் கை தட்டும். 'கச்' பிடிச்சவனுக்கும் கை தட்டும்.
எப்பவும் சனங்கள் இப்படித்தானுங்கோ.
விளையாட இறங்க முன்னரே இது தெரிய வேணும். விளங்குதே?'
சிரிப்பின்றியே இம்முறை பதில் வருகின்றது.
அவர் சிரிப்பு, தன்னைத் தேட வைத்து வெற்றி காட்டியது.

♦  ♦

'இன்னொரு விசயம் கவனிச்சனிங்களே?' அவரே தொடர்ந்தார்.
'எதைச் சொல்லுறீங்கள்?'
'கொஞ்ச நேரத்துக்கு முந்தி, '(B)போல்' போட்டவர் L.B.W எண்டு கத்தினவரல்லே?'
'ஓம்.'
'அது L.B.W வே?'
'அப்பிடித்தான் கிடந்தது.'
'அவர் கத்தினவுடன சனம் என்ன செஞ்சதுங்கோ?'
'அவுட்தான் எண்டு நினைச்சு அப்பவும் ஆர்ப்பரிச்சது.'
'கூட விளையாடினவங்கள் என்ன செய்தவங்கள்?'
'(B)போலரோட சேர்ந்து கையையும், காலையும் ஆட்டி,
'அவுட்'   'அவுட்' எண்டு அம்பயரை நோக்கிக் கூவினவங்கள்.'
' 'அவுட்'டெண்டு ஆர்ப்பரிச்சது எத்தனை பேர்?'
'அது ஒரு ஐயாயிரம், பத்தாயிரம்பேர் இருக்கும்.'
' 'அவுட்', 'அவுட்' எண்டு, அம்பயரை வெருட்டினவங்கள் எத்தனை பேர்?'
' '(F)பீல்ட்' பண்ணின பதினொரு பேர்.'
'அப்ப மொத்தம் 'அவுட்' டுக்கு ஆதரவாய் இருந்தது எத்தனைபேர்?'
'என்ன கணக்குப் பாடம் நடத்திறீங்களோ?'
'உதுதானே வேண்டாம் என்னுறது, கேட்டதற்குப் பதில் சொல்லுங்கோ.'
'சரி. பத்தாயிரத்துப் பதினொரு பேர்'
'பத்தாயிரத்துப் பதினொரு பேரும் கத்தேக்க, '(B)பட்' பண்ணின டெண்டுல்கர் என்ன செய்தவர்?'
'ஒண்டும் பேசாம மௌனமா நிண்டவர்.'
'பிறகென்ன நடந்தது?'
' 'அவுட்' இல்லயெண்டு சொல்லியாச்சு.'
'அதச் சொன்னது யார்?'
'அம்பயர்'
' 'அம்பயர்' எத்தின பேர்?'
' 'மெயினானவர்' ஒரு ஆள்த்தான்.'
' அப்ப பத்தாயிரத்து பதினொரு பேரை எதிர்த்து, ஒராள் சொன்னவரோ?'
'ஓம்.'
' அது எடுபட்டதோ?'
'ஓம். அதுதானே எடுபடும்.'
'அதெப்படி? கனபேர் சொன்னதுக்கு எதிரா, ஒராள் சொன்னது எடுபட்டது.'
'அவர் சொன்னது உண்மையெண்டபடியால்.'
'அவர் சொன்னவுடன, 'அவுட்'டெண்டு சொன்னவங்கள் எல்லாம் என்ன செய்தவங்கள்?'
'பேசாமல் அடங்கிப் போனாங்கள்.'
'இதிலயிருந்து என்ன தெரியுது?'
'நீங்களே சொல்லுங்கோ?'
இப்போது, ஒரு சீடனின் பக்குவம் என் வார்த்தைகளில்.

♦  ♦

' 'அவுட்' டாகாத ஒருவன 'அவுட்' டாக்க, எதிர்த்து விளையாடுறவன் பொய்யா முயற்சிப்பான்.
அவன் சொன்னது சரியெண்டு சொல்லவும், ஆர்ப்பரிக்கவும், ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் அதால மட்டும் ஒராள 'அவுட்'டாக்க முடியாது.
அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதிரா, உண்மையைச் சொல்ல ஒருவன் இருப்பான்.
அவன் அதுக்கெண்டு நியமிக்கப்பட்டவன்.
உங்கட தமிழில அவனத்தான் 'சான்றோன்' எண்டு சொல்லுறதுங்கோ.
'கிரிக்கெட்' விளையாட்டில முடிவு சொல்லுற 'அம்பயரை'ப் போல,
வாழ்க்கை விளையாட்டில முடிவு சொல்லுற 'அம்பயர்', அந்தச் சான்றோர்தானுங்கோ.
ஆயிரம்பேர் சேர்ந்து கத்தினாலும், அந்த ஒராள் சொல்லுற முடிவைத்தான் உலகம் அங்கீகரிக்குமுங்கோ,
அது தெரிஞ்சுதான் அத்தனைபேர் கத்தவும் டெண்டுல்கர் பேசாமல் நிண்டவர். - இப்ப விளங்குதே?'
'ஓமோம் நல்லா விளங்குதுங்கோ.'- அவர் பாஷை என்னிலும் தொற்றிக் கொள்ள,
நான் என்னையறியாமல் தலையாட்டுகிறேன்.
'என்ன விளங்குது?'
'ஆர் கத்தினாலும் கவலைப்படாமல்,
நான் பேசாமல் என்ட விளையாட்டைத் தொடர வேண்டுமெண்டு.'
'பேந்தென்ன பிடிச்சிட்டீங்கள்? நான் வரட்டே.'
ஹா.......... ஹா........ஹா .......... ஹா........

♦  ♦

இப்போது அவர் சிரிப்பு, சிவனின் சிரிப்பாய் எனக்குப் படுகிறது.
கை 'ரிமோட்'டைத் தட்ட, இப்போதும் பிழையான ஒரு 'கச்' பிடித்து,
'அவுட்' கேட்கிறது விளையாட்டுக் கூட்டம்.
'(டி)பட்' பண்ணியவன் சலனமற்று நிற்கிறான்.- ஞானியாய் அவன்மேல் மதிப்புண்டாகிறது.
எந்தப் பதற்றமும் காட்டாமல் நிதானித்து, அவர்கள் கோரிக்கையை நிராகரிக்கிறார் 'அம்பயர்'.
ஆண்டவனின் சாயல் 'அம்பயரில்'.
மனத்துள் 'பேனார்ட்ஷா' தலை குனிவதாய்த் தோன்ற, 'கிரிக்கெட்' டில் மதிப்புண்டாகிறது.
சர்ச்சைக்குரிய அடுத்த கட்டுரைக்காய்ப் பேனாவை எடுக்கிறேன்.
♦  ♦  ♦  ♦
-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.