அதிர்வுகள் 21 | பேர் வேண்டேன்!

அதிர்வுகள் 21 | பேர் வேண்டேன்!
 
லகத்தோடு முரண்படுபவனை,
அறிவில்லாதவன் என்கிறார் வள்ளுவர்.
எனக்கு அவருடனேயே முரண்பாடு!
அவர் எதை நினைத்துச் சொன்னாரோ? தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாய் ஒன்று தெரியும்.
உலகம் நினைப்பதெல்லாம் சரியல்ல.
உலகத்தோடு முரண்படாமல் வாழவும் முடியாது.
இது என் வாழ்க்கை அனுபவம்.
ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு,
இப்ப வள்ளுவரையே கடிக்க வந்திட்டார்.
உங்கள் முறைப்புக்கான அர்த்தம் தெரிகிறது.
என்ன செய்ய? என் தலைவிதி.
மற்றவர்களைப் போல,
உங்களைச் சந்தோஷப்படுத்தும் விடயங்களை,
எனக்குப் பொய்யாய் எழுதத் தெரியவில்லை.
மனதில் பட்டவற்றை அப்படியே உழறிக்கொட்டி,
உங்களிடம் திட்டு வாங்குவதே என் வேலையாகி விட்டது.
அடுத்த சண்டைக்கு ஆயத்தப்படுத்துகிறார் போல.
உங்கள் எண்ணம் புரிகிறது.
அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.
நான் சண்டைக்காரன்தான். மறுக்கவில்லை.
ஆனால் இந்தக் கட்டுரை சண்டைக்காக அன்று.
உங்கள் நன்மை கருதி என் அனுபவத்தினைப் பகிர்ந்துகொள்வதே,
இக் கட்டுரையின் நோக்கம்.
விரும்பினால் படியுங்கள்!
 

✾✾✾ 

‘அதென்ன உலகத்தோடு முரண்பாடு’ என்கிறீர்களா?
சொல்கிறேன் கேளுங்கள்.
காசு வேண்டும்! படிப்பு வேண்டும்! அழகு வேண்டும்! .....
இப்படி எல்லா ‘வேண்டு’ங்களிலும்,
ஒரு வேளை அனைவரும் ஒன்றுபடாமல் இருக்கலாம்.
ஆனால் பேர், புகழ் வேண்டும் என்பதில்,
உலகத்தில் எவருக்கேனும் மாறுபாடு இருக்குமா?
சத்தியமாய் இருப்பதாய்த் தெரியவில்லை.
எல்லோரும் பேருக்கும், புகழுக்குமாய்ப் பறந்து திரிகிறார்கள்.
ஆனால் என் மனமோ பேரும், புகழும் வேண்டாம் என்கிறது.
நீங்கள், என்னைப் ‘பைத்தியக்காரன்’ என்று சொன்னாலும் சொல்லுங்கள்.
எனக்கு அந்த விடயத்தில் உலகத்தோடு மாறுபாடு இருக்கவே செய்கிறது.
பேர் வேண்டும் என்பதற்காய்,
உண்மையைப் பொய் என்றும்,
பொய்யை உண்மை என்றும்,
கெட்டிக்காரனை மடையன் என்றும்,
மடையனைக் கெட்டிக்காரன் என்றும்,
நல்லவனைக் கெட்டவன் என்றும்,
கெட்டவனை நல்லவன் என்றும் சொல்லி,
பல படித்த மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்த பிறகும்,
தெளிவாய், உறுதியாய்ச் சொல்லுகிறேன்.
பேர் வேண்டும் என்பதிலே,
சத்தியமாய் எனக்குப் பெரிய முரண்பாடு இருக்கிறது.

✾✾✾ 

‘இவர் ஏதோ கொஞ்சம் பேரெடுத்திட்டு “லெவலுக்குக்”  கதைக்கிறார்.’
என்னைக் குறை சொல்வதே உங்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது.
“லெவலாவது”!, மண்ணாவது!
பேரெடுக்கப்போய் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.
இப்படியே நீட்டி என்ன பிரயோசனம்?
என் அனுபவங்களைச் சொல்கிறேன்.
பிறகு நீங்களே சொல்லுங்கள்,
பேர் வேண்டுமா? வேண்டாமா? என்று.
✾✾✾ 

ஒரு மனிதன் வாழ அடிப்படையாய் என்ன தேவை?
ஊன், உடை, உறக்கம் இவைதானே!
இதற்குப் பிறகுதானே நீங்கள் விரும்பும் பேரும், புகழும்.
நீங்கள் விரும்புகிற பேர் மட்டும் கிடைத்துவிட்டால்,
மேற்சொன்ன அடிப்படைச் சுகங்களே போய்விடும்.
உங்களுக்கு அது தெரியுமா?
‘மற்றவர்கள் பேர் எடுத்து விடக்கூடாது என்பதற்காய்,
வஞ்சனையாய்க் கதைக்கிறான்’
 நீங்கள் நினைப்பது புரிகிறது.
பேர் எடுத்ததால் நான் அடிப்படைச் சுகங்களை இழந்த கதையை,
ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.
அதைக் கேட்டுவிட்டுப் பிறகு நீங்கள் எப்படியும் நினையுங்கள்.
✾✾✾ 

கம்பன்கழகத்திற்கு உதவி செய்கின்ற,
ஒரு பெரிய கோடீஸ்வரர் வீட்டுக் கல்யாணம்.
“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்” அது நடந்தது.
ஊரிலுள்ள பிரமுகர்கள் அத்தனைபேரும் ஆஜராகியிருந்தனர்.
எனக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை தாலி கட்டியவுடன்,
தம்பதியரை ஆசீர்வதிக்க மேடைக்கு முதலில் அழைக்கப்பட்டேன்.
தமிழ்மேல் கொண்ட ஆர்வத்தால்,
மாப்பிள்ளையின் தந்தை தந்த மரியாதை அது.
மனத்துள் ஆணவ மாடு திமில் அசைத்துச் சிலிர்த்தது.
என்னைப் பிடிக்காத பலர் கண்களில் பொறாமைத் தீ.
‘சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு,
எல்லாத்திலும் முன்னுக்கு இடம் பிடிச்சிடுறார்’
பின் வரிசையில் யாரோ குசு குசுத்தது காதில் விழுந்தது.
நான் எடுத்த பேரால் எனக்கும் பிடிபடாத பெருமைதான்.
‘பேர் வேண்டாமெண்டு சொல்லத் தொடங்கிட்டு,
இப்ப தன்ர புகழ் பாடுறான்.’
உங்கள் எண்ணம் புரிகிறது.
நீங்கள் வேறு!
என் கஷ்டம் தெரியாமல் கோபிக்கிறீர்கள்.
நான் சொல்ல வந்த விடயம் இனித்தான் வரப்போகிறது.
✾✾✾ 

கல்யாணம் முடிந்து விருந்தினர்களைச் சாப்பிட அழைத்தார்கள்.
“ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்” சாப்பாடு.
கேட்கவும் வேண்டுமா?
அறுசுவைகளையும் அள்ளிக் கொட்டியிருந்தார்கள்.
அழகழகாய் உணவுகள் படைக்கப்பட்டிருந்தன.
வயிற்றைப் பார்த்துக் கண்கள் பொறாமைப்பட்டன.
கல்யாண அவசரத்தில் காலைச் சாப்பாட்டை மறந்ததில் பசி ஒருபுறம்.
தானே சமைத்துத் தானே உண்ணும் பிரமச்சாரிக்கு,
இப்படியொரு விருந்து கிடைத்தால்....
கம்பில் விழக் காய்ந்த மாடு தயாரானது.
✾✾✾ 

‘ஐயா! நீங்கள் முன்னுக்கு வாங்கோ’
“கியூ”வில் பின்னுக்கு நின்ற என்னை, ஒருவர் முன்னுக்கு அழைத்தார்.
‘இந்தாங்கோ “பிளேற்” ’- இது இன்னொருவர் உபசாரம்.
நின்றவர்கள் மரியாதையாய் வழி விட முன்னுக்கு நகர்ந்தேன்.
சீக்கிரம் வா! என்று அழைத்தது அந்த இனிய பூந்திலட்டு.
எனக்குப் பிடித்த பலகாரம்.
கஜு, முந்திரியைத் தாண்டி,
அங்கங்கு கஷ்டப்பட்டு முகம் நீட்டியது பூந்தி.
“ஹோட்டலில்” லட்டுக்கும் “ஸ்டார்” கொடுப்பார்களோ?
ஆர்வத்தோடு எடுக்கக் கை நீட்டினேன்.
‘பொறுங்கோ! பொறுங்கோ! உங்களுக்கு “டயபற்றிஸ்” எல்லோ,
உதுகள நீங்கள் தொடக்கூடாது.
போனமாசம் தான் கோண்டாவில் சுப்பிரமணியத்தாருக்குக் கால் கழட்டினவங்கள்.
நீங்கள் எங்கட தமிழின்ர சொத்து, அதை விட்டிட்டு மற்றதுகளை எடுங்கோ’
என்னைப் பயமுறுத்திப் பாசம் காட்டிய அந்தப் பரம வைரியைப் பார்த்து,
அசடு வழியச் சிரித்தபடி,
‘ஓம் ஓம் நீங்கள் சொல்லுறது சரிதான்’ என்று சொல்லிவிட்டு,
வயிற்றெரிச்சலுடன் என் காதல் லட்டைக் கைவிட்டுவிட்டு அப்புறம் நகர்ந்தேன்.
✾✾✾ 

அடுத்த தட்டில்,
அழகான “கட்லெட்”டுகள் பொன்னுருண்டைகளாய் பொலிந்து கிடந்தன.
ஒன்றுக்கு இரண்டாய் எடுக்கலாமெனக் கையை நீட்ட,
அதே பாவி இடை மறித்தார்.
‘ஐயோ அது முழுவதும் உருளைக்கிழங்கு,
"டயபற்றிஸூக்கு" அது நஞ்செல்லே. அதையும் விடுங்கோ’
ஆத்திரம் தலைக்கேற பொய்யாய்ச் சிரித்தபடி அடுத்த தட்டிற்கு நகர்ந்தேன்.
✾✾✾ 

எதற்கும் சோற்றை முதலில் எடுப்போம் என நினைந்து,
முத்தாய் மலர்ந்து கிடந்த சம்பாச் சோற்றில் கரண்டியை வைத்த நேரம்,
‘ஐயா, நீங்கள் இங்க வாங்கோ, புழுங்கல் அரிசிச் சோறு இங்க கிடக்கு’
நான் கேட்காமலேயே என் தட்டில் அதை அள்ளி வைத்தார் இரண்டாம் எதிரி.
ஐஸ்வர்யாராயை முந்தி வந்த ஆபிரிக்க அழகி போல்,
அந்தக் கறுத்தச் சோறு என்னை முறைத்துப் பார்த்தது.
சோற்றுத் தட்டை அவர் தலையில் கவிழ்த்தால் என்ன?
வந்த கோபத்தை, எடுத்து வைத்திருந்த பேர் தடுத்தது.
சகித்துக்கொண்டு அப்புறம் நகர்ந்தேன்.
✾✾✾ 

அடுத்துப் பருப்புக் கறி. இதை எவன் தடுப்பானோ? என்று,
பயந்து கொண்டே கை வைத்தேன்.
நல்ல காலம், எவரும் தடுக்கவில்லை.
பக்கத்திலேயே உருக்கிய நெய் - ஆசையாய் ஒரு கரண்டி அள்ள,
‘ஐயோ! இது முழுக்கக் “கொலஸ்ரோல்” உங்களுக்கு வேண்டாம்’
மூன்றாம் எதிரி குறுக்கிட்டார்.
எனக்குக் “கொலஸ்ரோல்” இல்லை - சமாளிக்கப் பார்த்தேன்.
‘இல்லாட்டி என்ன ஐம்பது வயதாயிட்டுதெல்லோ? இனி எப்பவும் வரலாம்,
பிறவியில இதைத் தொடதையுங்கோ’ - பலரும் என்னையே பார்த்ததால்,
மன நாக்குக்குச் சூடு வைத்து அப்புறம் நகர்ந்தேன்.
✾✾✾ 

கத்தரிக்காய் பொரிச்ச கறி - ‘உது எண்ணெய்’
பயிற்றங்காய் - ‘பொல்லாத வாய்வு’
வெண்டிக்காய்  - ‘வெறும் பித்தம்’
பன்னீர்க்கறி -  ‘சரியான கொழுப்பு’
இப்படியே ஐந்தாம், ஆறாம், ஏழாம் எதிரிகள்,
என் ஆசையில் மண்ணைப் போட,
“கியூ”வில் நின்றிருந்த ஒரு கிழவி என்னைப் பரிதாபமாய்ப் பார்த்து,
‘தம்பி! இதுதான் உங்களுக்கு நல்லது’ என்று சொல்லியபடி,
தண்ணியாய்க் கிடந்த இரசத்தால் எனது “பிளேற்றை” நிரப்பினார்.
✾✾✾ 

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்”,
பருப்பும், இரசமும் தின்ற பாவியாய் வெளி வந்தேன்.
வாசலில் நெய்யும், தேனும் பளபளக்கப் பால்ப் பாயாசம்.
அதனுள் கஜுவும், முந்திரிவத்தலும்,
கடற்கரை வெள்ளைக்காரராய்க் கவிழ்ந்து கிடந்தன.
ஆசை, தலைவரை ஏறினாலும்,
இதையும் யாரோ ஒரு எதிரி தடுக்கத்தானே போகிறான் என்று,
நகர முனைந்தேன்.
ஆச்சரியம்.  ‘ஒரு நாளைக்குத்தானே, ஒரு “ரம்ளரை”க் குடியுங்கோ!’
வாய் வரையும் கொண்டு வந்து நீட்டினார் ஒரு நண்பர்.
அவரின் ஏழு தலைமுறையையும் மனதுள் வாழ்த்தியபடி,
வாய் முழுதும் நீரூற “ரம்ளரை” வாய்வரை கொண்டுவந்து விட்டேன்.
✾✾✾ 

நஞ்சுண்ட சிவனின் கழுத்தை உமை பிடித்தது போல,
என் கையை ஒரு கை இறுகப் பிடித்தது.
எங்கிருந்து மோப்பம் பிடித்து வந்தானோ தெரியவில்லை,
அதே முதலாம் எதிரி!
என் பாயாசத் “டம்ளரைப்” பறித்ததோடல்லாமல்,
‘என்ன, அவரைக் கொல்லவோ பார்க்கிற’ தந்தவரிலும் பாய்ந்தான்.
அவ்வளவு பெரிய கல்யாண வீட்டில் அத்தனை ஆயிரம் பேருக்குள்ளே,
என்னையே சுற்றிச் சுற்றிப் பத்தியம் பார்த்த,
அந்தப் புண்ணியவானுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு,
மனதுள் திட்டியபடி வெளியில் வந்தேன்.
வாகனத்தில் என்னை ஏற்ற வந்த பாலேந்திரா,
‘எப்பிடி “ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்” சாப்பாடு?’
விசாரிக்க,
நான் முறைத்த முறைப்பில் நடுநடுங்கிப் போனார் அவர்.
✾✾✾ 

என் கதையைக் கேட்டு இரங்குவீர்கள் என்று பார்த்தால்,
உங்கள் கண்களில் இரக்கத்திற்கான பாவத்தைக் காணவில்லையே?
‘உன்னுடைய உடல் நலத்தில் எத்தனை பேர் அக்கறைப்படுகிறார்கள்.
இது பேரெடுத்ததால் வந்த பயனில்லையா?’
நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.
ஆரோக்கியம் என்றதுந்தான் நினைவுக்கு வருகிறது.
கடைசிக் “கிளினிக்கில்” டொக்டர் சிவகுமார்,
‘நீங்கள் ஒவ்வொரு நாளும் கட்டாயம் “வண் அவர் வோக்” போகவேணும்’ என்றார்.
அவர் வார்த்தையை வேதமாகக் கொண்டு தினமும் நடப்பதென முடிவு செய்தேன்.
கடற்கரை, பக்கத்திலேயே இருந்தது வாய்ப்பாகப்போயிற்று.
நடை பயணம் தொடங்கிய முதல்நாள்.
✾✾✾ 

பத்தடி நடந்திருக்கமாட்டேன்.
கடற்கரைக் காற்றை இரசித்தபடி நடந்த என்னை,
திடீரென ஒருவர் இடைமறித்தார்.
‘என்ன, “வோக்” போறியள் போல.... மெத்த நல்லது,
ஆனால் நீங்கள் நடக்கிற “ஸ்பீட்” காணாது.
இங்க பாருங்கோ, கால்களை இப்படி அகட்டி வைக்கவேணும்.
கைகளை இப்படி நல்லாய் வீசி நடக்கவேணும். தலையைக் குனியப்படாது.’
நடுவீதியில் நிறுத்தி வைத்து அவர் பயிற்சி வகுப்பு ஆரம்பித்தார்.
ஐந்து, பத்து, பதினைந்து என நிமிடங்கள் ஓடின.
எப்படித் தப்புவதெனத் தத்தளித்தேன்.
இருபதாவது நிமிடத்தில் திடீரெனப் பேச்சை நிறுத்திய அவர்,
‘அவ வந்திட்டா, நான் வரப்போறன்’ என்று வெளிக்கிட்டார்.
மனைவியின் வருகைக்காகக் காத்திருந்த நேரத்தில்,
எனக்கான ஆலோசனை வகுப்பு நடந்தியிருக்கிறான் பாவி மனுசன்.
தொலைந்து போகட்டும் என நினைந்து,
சற்று வேகமாக நடையைத் தொடர்ந்தேன்.
✾✾✾ 

இன்னுமொரு பத்தடி.
‘ஐயா, நில்லுங்கோ!’
வீதியின் எதிர்ப்புறத்தில் நடந்துகொண்டிருந்த ஒருவர்,
வாகனம் ஒன்றில் அடிபடப் பார்த்து,
நெளிந்து ஓடி சிரமப்பட்டு என்னிடம் வந்தார்.
‘வலு சந்தோஷம்,
நடக்க வந்திட்டியள், உங்களுக்கும் “டயபற்றிஸ்” போல.’
'ஓம்'.. 'ஓம்'.. என்று மெல்லச் சமாளித்து விடுபடப் பார்த்தேன்.
‘கொஞ்சம் நில்லுங்கோ! அப்ப சாப்பாடெல்லாம் என்ன மாதிரி.
ஒவ்வொரு நாளும் பாவற்காய் சாப்பிடுறனீங்களே?
காலையில பச்சையாக இடிச்சுச் சாறாகக் குடியுங்கோ.
அதே மாதிரி குறிஞ்சா இலையும் குடிக்க வேணும்.
இரவில கொஞ்சம் வெந்தயத்தை வாயில போட்டிட்டுப் படுங்கோ.’
அவரது மருத்துவ ஆலோசனைகள் நீண்டன.
‘துலைவானே!, நீ எந்த “மெடிக்கல் கொலேஜிலை” படிச்சனீ?’
மனத்துள் எழுந்த கேள்வியை பொய்ச் சிரிப்பால் மறைத்து,
‘அப்படியே? அதற்கென்ன செய்யிறன்’ என்று,
அவரிடமிருந்து தப்புவதற்காகச் சொன்னேன்.
அவர் கருத்தை நான் ஏற்றதில் அவருக்குப் பெருமை பிடிபடவில்லை.
‘அது மட்டுமல்ல, இன்னும் கொஞ்சமிருக்கு’ என்று,
மேலும் பத்து நிமிடத்தை விழுங்கி பின் விடை தந்தார்.
தப்பினேன் சாமி என நினைந்து நடையைத் தொடர்ந்தேன்.
✾✾✾ 

இன்னுமொரு பத்தடி.
‘என்ன தனிய நடக்கிறியள்.
நாடு இருக்கிற நிலைமையில நீங்கள் இப்படித் தனிய வரப்படாது,
வெள்ளைவானில எல்லாரையும் பிடிச்சுக்கொண்டெல்லே போறாங்கள்.
யாரையும் கூட்டிக்கொண்டெல்லோ வரவேணும்.’
தேவையில்லாமல் என்னைப் பயமுறுத்தி,
என்னில் அக்கறைபோல் நிறுத்தியவர்,
அந்த இடத்திலேயே என்னை நிற்க வைத்து,
நாட்டு நிலைமை பற்றிய தனது அலட்டல் ஆய்வை,
அரை மணித்தியாலமாய் எடுத்து விட்டார்.
பிறகு, ‘நேரமாச்சு வரப்போறன்,
இண்டைக்கு உங்களால என்ர “வோக்” போச்சுது’ என்று,
அநியாயத்திற்கு தன்ர அலட்டல் பழியை
என் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு  வெளிக்கிட்டார்.
✾✾✾ 

இப்படியாய் பேரெடுத்த பெரும் பயனால்,
ஆரோக்கியத்திற்காகத் தொடங்கிய எனது நடைப் பயணம்,
ஒன்றரை மணித்தியாலத்தில் முப்பது அடி நடந்ததோடு முடிந்துபோனது.
இந்தப் பாவிகளின் அறுவையைக் கேட்டு நடந்து சாகிறதை விட,
வீட்டிலை இருந்து சாகலாம் என்ற முடிவோடு,
அன்றையோடு நடையை விட்டவன்தான்!
✾✾✾ 

‘சரி, வீட்டிலை பேசாம இருக்கவேண்டியதுதானே’ என்கிறீர்களாக்கும்.
அதுவும் செய்து பார்த்துவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்.
இப்ப என்னுடைய முதல் எதிரி “கிரஹாம்பெல்” தான்.
சும்மா இருக்கமுடியாமல்,
அந்த மனுசன் “ரெலிபோனை”க் கண்டுபிடிக்கப் போய்,
சும்மா இருக்கமுடியாத மனுசர் கொஞ்சப்பேர்,
அதை வைச்சு மற்றவர்களைப் படுத்தும் பாடு பெரும்பாடு.
✾✾✾ 

ஒருநாள் இரவு,
வேலைகளால் களைத்துப்போய்,
ஓய்வெடுக்கலாம் என்று படுத்துக் கண்ணயர,
“ட்ரிங்” .....“ட்ரிங்” ....... “ட்ரிங்” ...........  “போன்” அடித்தது.
திடுக்கிட்டெழும்பிப் போனை எடுத்தால்,
‘ ஹலோ.. ஓ.. ஓ..! ஆரது கம்பவாரிதியே,
எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?’
அந்த இரவு நேரத்தில் என்னைச் சுகம் விசாரிக்கிற மனிதரில் மதிப்பு வர,
களைப்பையும் மறந்து, ‘ஓம் ஓம் நீங்கள் எப்படி?’ என்றேன்.
‘ பரவாயில்லைத் தம்பி, நான் இப்ப எடுத்தது என்னவெண்டால்....
பிரச்சினையில்லாட்டி மிஸ்டர் ஈஸ்வரன்ர  “நம்பர” ஒருக்காத் தரமுடியுமே?’
இரவு பதினெரு மணிக்கு அவர் என்னை நினைத்ததன் இரகசியம் புரிந்தது.
ரெலிபோன் “டிரெக்றியாய்” என்னை வைத்திருக்கும் அந்தப் பாவி மனிசனை,
மனதில் திட்டியபடி நம்பரைக் கொடுத்துத் தொலைத்தேன்.
✾✾✾ 

பிறகு, மெலிதாய்க் கண்ணயர,
“ட்ரிங்” .....“ட்ரிங்” ....... “ட்ரிங்” ........... திரும்பவும் “போன்” அடித்தது.
நித்திரையைத் தொலைத்த சினத்தோடு நேரத்தைப் பார்த்தால்,
இரவு பன்னிரண்டரை மணி.
யார் இந்தச் சாமத்தில்? யாருக்கு என்னவோ.....?
பதைத்தபடி “ரெலிபோனை” எடுத்தால்,
‘ “ஹலோ” ஜெயராஜ் ஐயாவோ? என்ன படுத்திட்டியள் போல.’
எதிர்க்குரல் நிதானமாய் விசாரித்தது.
‘எட விசரா! ராத்திரி பன்ரெண்டு மணிக்குப் படுக்காம,
நான் என்ன பேயே ஓட்டப்போறன்’
மனம் திட்டியதை வெளிக்காட்டாமல்,
ஓம் ஓம் இப்பதான் படுத்தனான், நீங்கள் யார் பேசுறது? - கேட்டேன்.
‘நான் இங்க கனடாவில இருந்து சுரேஷ் பேசுறன்.
எப்பிடி இருக்கிறியள்? நித்திரையைக் குழப்பிட்டன் போல,
நான் கொஞ்சம் பிந்தி எடுத்திருக்கலாம் தான்.
ஆனா என்ன? இங்க சாமமாப்போம், அதுதான் இப்ப எடுத்தனாங்கள்’.
‘துலைவானே! உன்ர நித்திரை “டைமை”க் குழப்பாமல் இருக்க,
என்ர நித்திரைத் “டைமை”க் குழப்பிறியே?’
மனதினுள் மட்டுமே திட்ட முடிந்தது.
✾✾✾ 

‘பரவாயில்லை, சொல்லுங்கோ?’ என்றேன்.
‘இல்ல, இங்க எங்கட சின்ன மகள் சிரோமி,
பேச்சுப்போட்டிக்கு ஒரு பேச்சு பாடமாக்கினவ.
அத ஜெயராஜ் மாமாவுக்குச் சொல்லிக் காட்டப் போறாவாம்.
ஒருக்காக் கேளுங்கோ.’
ஈவிரக்கமில்லாம தன்ர பிள்ளையை அந்தப் பாவி பேசவிட,
என்ர விதியை நொந்தபடி,
அரை நித்திரையில் அதைக் கேட்கத் தொடங்கினேன்.
‘பாரதியார் என்றொரு புலவர் இருந்தார் ......’ என்று தொடங்கிய குழந்தை,
மறந்ததையெல்லாம் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொடுக்க,
ஒரு மாதிரி ஒரு மணிக்குப் பேச்சைச் சொல்லி முடித்தாள்.
‘ “ஹலோ” எப்படி எங்கட சிரோமிட “ ரமில் ஸ்பீச்”?’
இது பிள்ளையின் தாய்.
உன்ர “ஸ்பீச்சே” உதவாது,
பிறகு பிள்ளையிட “ஸ்பீச்”சைக் கேட்கவேணுமே.
வாய்க்குள் வந்த பதிலை அடக்கிக்கொண்டு,
‘வலு கெட்டிக்காரியா இருக்கிறா நல்லாப் பேசுறா.’
சம்பிரதாயத்திற்கு நான் சொல்லப்போக,
மீண்டும் பிடித்தது சனி.
‘அப்பிடியே! சிரோமி, ஜெயராஜ் மாமாவுக்கு,
“லாஸ்ற் இயர் ஸ்பீச்சை”யும் ஒருக்கா சொல்லிக் காட்டுங்கோ?’
தாயார் பிரேரிக்க, பிள்ளை உடனே தொடங்கியது.
நான் விடுதலை பெற்றபோது இரவு ஒன்றரை மணி.
✾✾✾ 

என்னையறியாது கண் மயக்க மீண்டும் தூக்கம்.
“ட்ரிங்” .....“ட்ரிங்” ....... “ட்ரிங்” ...........
மீண்டும் “போன்” அடித்தது.
“ஹிட்லரின்” முகாமிலும் இப்படிக் கொடுமை நடந்திருக்காது.
இப்போது காலை நான்கு மணி.
தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் போனை எடுத்துவிட்டேன்.
‘ “ஹலோ” ஜெயராஜோ பேசுறது?’
எதிரில் பெண்குரல் ஒன்று கேட்டது.
‘ஓம் ஓம் நீங்கள் .....?’
நித்திரை மயக்கத்தில் ஆளைத் தெரியாமல் விசாரித்தேன்.
‘என்ன, என்னைத் தெரியேலையே?’
‘சனியனே! “ரெலிபோனு”க்குளால முகம் தெரியாது,’
நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டு,
‘சரியாய் விளங்கேல யாரெண்டு சொல்லுங்கோ?’ என்றேன்.
‘என்ன எங்கள மறந்திட்டியள் போல’,
 என் சினம் தெரியாமல் எதிர்க்குரல் விடிகாலையில் விளையாடியது.
‘சீச்சி அப்படியில்ல, டக்கெண்டு விளங்கேல,
ஒருக்கா ஆரெண்டு சொல்லுங்கோவன்’ - சமாளித்தேன்.
‘கடைசி வரைக்கும் சொல்லமாட்டன்
நீங்கள் கெட்டிக்காரனெண்டால்,
குரலை வைச்சுக் கண்டுபிடியுங்கோவன் பாப்பம்.’
விடியற்காலை நான்கு மணிக்கு,
அந்தக் குரங்கு எனக்கு “குவிஷ்” நடத்தியது.
சினத்தின் உச்சத்திற்குப் போனேன்.
‘இது பொறுப்பதில்லை’ என்ற பாரதி சொன்ன வீமனின் நிலை.
அரைத் தூக்கத்திலும் மூளை கொடூரமாய் வேலை செய்தது.
‘எங்க குரல வைச்சுக் கண்டுபிடியுங்கோ பாப்பம் நான் ஆரெண்டு.’
மீண்டும் எதிர் முனை பேச, எரிச்சலின் உச்சந்தொட்டு,
‘ஆர் நீங்கள் பி. சுசீலாவோ?’ என்றேன்.
டக்கென்று எதிர்முனையில் “போன்” வைக்கப்பட்டது.
நீங்களே சொல்லுங்கள் வேறு நான் என்னதான் செய்வது?
✾✾✾ 

“ரெலிபோன்” உரையாடலில்தான் இந்த அநியாயம் என்றால்,
நேரில் அதைவிடப் பெரிய கொடுமை.
நான் அவசரமாய் திருக்குறள் வகுப்புக்குச் செல்ல வெளியில் வர,
நிதானமாய் உள் நுழைந்தார் விருந்தாளி.
வெளிக்கிட்ட எனது கோலங்கண்டு,
‘எங்கேயோ வெளிக்கிட்டியள் போல’
தெரியாதவர் போல் விசாரித்தார்.
‘ஓம் ஓம் வகுப்புக்கு வெளிக்கிட்டன்.’
தன்ர மணிக்கூட்டை ஒருதரம் பார்த்துவிட்டு,
‘எனக்கு ஒரு இரண்டு நிமிஷம் தரமுடியுமே?’
மறுக்க முடியாத முகம்.
‘பரவாயில்லை இருங்கோ சொல்லுங்கோ?’ - நானும் இருந்தேன்.
✾✾✾ 

தன்ர புத்தக வெளியீடு பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர்.
என்ன புத்தகம்? ஏன் புத்தகம் எழுதினேன்? எப்பிடி எழுதினேன்?
எதுக்கு எழுதினேன்? எப்ப எழுதினேன்? என்றெல்லாம்,
தான் கேட்ட இரண்டு நிமிட எல்லையை மறந்து,
புராணம் பாடத் தொடங்கினார்.
என்னை வகுப்புக்கு அழைத்துச் செல்ல வந்த மாணவர்கள்,
வெளியில் தலையைச் சொறிய,
அவருக்கு என் சங்கடத்தை உணர்த்த நினைத்து,
கதிரை நுனிக்கு வந்து உட்கார்ந்து நெளிந்தேன்.
இந்தப் பெரிய சரீரம் படுகிற பாட்டைப் பார்த்தாவது,
அவர் நிலைமையை உணர்வார் என்று நினைத்தால்,
‘என்ன அந்தரமாய் இருக்கிறியள் வடிவாய்ச் சாய்ஞ்சு இருங்கோவன்,
அதுதான் முதுகுக்கு நல்லது’ என்ற அந்தப் பாவி மனிசன்,
‘எங்கை விட்டனான்’ என்று விட்ட இடத்தை என்னிடமே கேட்டால்,
நான் என்னதான் செய்ய?
✾✾✾ 

இப்படியாக நான் பெற்ற பெயரால்,
ஊன், உறக்கம், ஓய்வு மட்டும் போகவில்லை.
உடை விசயத்திலும் நான் படும்பாடு இருக்கிறதே அது பெரும்பாடு!
கனகாலமாய் “ரவுசர்” போட்டவன் நான்.
கொழும்பில் வந்து கொஞ்ச நாள் வேட்டி கட்டினேன்.
பிறகு ஒருநாள் “ரவுசரைப்” போட்டால்,
ஒட்டுமொத்தச் சமூகமே கொதித்தெழுந்தது.
✾✾✾ 

வெள்ளவத்தைச் சந்தியில் ஒருத்தர் மறித்தார்.
‘உதென்ன நீங்கள் “ரவுசர்” போட்டுக்கொண்டு.
மற்ற ஆட்கள் என்ன நினைப்பினம்?’
அடியாத குறையாய் அவர் விசாரிக்க,
என்பாடு பெரிய சங்கடமாயிற்று.
ஒரு மாதிரி விடுபட்டு அப்புறம் போனால், இன்னொருவர்,
‘நீங்களே “ரவுசர்” போடத் தொடங்கினால் தமிழிட கதி என்ன?’
கோபமாய்க் கேட்டுக் கடந்தார்.
தமிழுக்கும் “ரவுசரு”க்குமான தொடர்பு விளங்காமல் நான் விழித்தேன்.
✾✾✾ 

இன்னும் கொஞ்சத் தூரம்.
‘இதென்ன அலங்கோலம்?’ இது மற்றொருவர்.
இப்படியாக,
நான் ஏதோ பஞ்சமாபாதகங்களில் ஒன்றைச் செய்துவிட்டாற்போல,
வீதி என்றும் பார்க்காமல் என்னை விமர்சித்து விமர்சித்து,
என் ஆசை “ரவுசர்”களை எல்லாம் அடுப்பில் போட வைத்தார்கள்.
இன்றைக்கு அடிக்கடி அவிழுகிற வேட்டியை,
இழுத்து, இழுத்துக் கட்டியபடி,
நாயாய் நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.
✾✾✾ 

சரி,வேட்டியைத்தானும் நிம்மதியாய்க் கட்ட விடுகிறார்களோ என்றால்,
அதுவும் இல்லை.
கூட்டத்திற்குப் போனால்,
ஒருதன் ‘வேட்டியை மேலே ஏத்துங்கோ?’ என்கிறான்.
இன்னொருத்தன் ‘வேட்டியைக் கீழே இறக்குங்கோ?’ என்கிறான்.
தெரியாமல் ஒருநாள் ஆசைக்காக வெள்ளை வேட்டி கட்டிப் போக,
‘என்ன காவியை விட்டிட்டியள்? கலியாண ஆசை வந்திட்டுது போல.’
விமர்சித்தது ஒரு விழல் குரல்.
ஐயா! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறியள்?
இப்ப, என்ர உடுப்புக்கூட என்ர விருப்பப்படி இல்லை.
✾✾✾ 

இப்ப சொல்லுங்கோ?
பேரெடுக்கவேணும் பேரெடுக்கவேணும் என்று ஓடித் திரியிறியளே!
பேரெடுக்கிறதன் கஷ்டம் விளங்குதோ!
இந்த அநியாயத்தில திருவள்ளுவர்  உலகத்தோட ஒத்துப் போகட்டாம்.
அதனால்தான் தொடக்கத்திலேயே சொன்னனான்.
அந்த வேலை எனக்குச் சரிவராது என்று.
திருவள்ளுவர் என்ன நினைச்சாலும் நினைக்கட்டும்.
நீங்க என்ன நினைச்சாலும் நினையுங்கோ!
இந்த விசயத்தில் மணிவாசகர் கொள்கையே என்ர கொள்கை.
‘உற்றாரை நான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’
என்னமாய் அந்த மனிசன் அன்றைக்கே சொல்லிவிட்டார்.
என்னைப் போல அவரும் படாத பாடு பட்டிருப்பார் போல.
அவர் நிலை எப்படியோ?
என் நிலையை உறுதியாய்ச் சொல்லுகிறேன்.
உற்றாரை வேண்டுகிறேனோ? இல்லையோ?
ஊர் வேண்டுகிறேனோ? இல்லையோ?  ஒன்று மட்டும் உறுதி.
அவர் சொன்னது போல,
நான் இனி நிச்சயமாய்ப்
பேர் வேண்டேன்!
✾*✾*✾*✾*✾*✾ 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.