அதிர்வுகள் 22 | “கிராமம்”
அதிர்வுகள் 25 Jan 2016
இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது.
எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என,
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும்,
இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முடிகிறது.
விரிந்து கிடந்த உலகம் நம் கைக்குள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது.
விஞ்ஞானத்தின் விரிவால்,
உலகம் ஒரு கிராமமாய் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறார்கள்.
ஆனால், அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை.
கிராமம் என்ற சொற்பிரயோகம்,
சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல.
கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு, என பல விடயங்களையும்,
அச்சொல் உட்கொண்டு நிற்கிறது.
இன்று உலகத்தைக் கிராமம் என்கிறவர்கள் பாவிக்கும்,
கிராமம் எனும் சொற்றொடருக்குள்,
மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.
நாங்கள் முன்பு பார்த்த கிராமம் வெகுளிகளின் இதயவயப்பட்டது.
இன்று சொல்லப்படுகிற உலகக் கிராமம் புத்திசாலிகளின் மூளைவயப்பட்டது.
உலகக்கிராமத்தில் வஞ்சனை, சூது, சுயநலம் என்பவைதான் நிரம்பிக்கிடக்கின்றன.
அதனாற்றான், ஊடகங்களால் சுருக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகத்தை,
கிராமம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
✾✾✾
‘டவுண்’களில் வாழ்ந்துவிட்டு,
நான் எனது தாயாரின் கிராமத்திற்குச் சென்றபோது,
எனக்கு வயது பதினைந்தாகியிருந்தது.
நாங்கள் அங்கு சென்றபோது பட்டின நாகரிகத்தின்,
நிழல்கூட அங்கு படிந்திருக்கவில்லை.
அன்போடும், உண்மையோடும்,
வெகுளித்தனத்தோடும், எளிமையோடும் இருந்த,
அந்தக்கிராமம் என்னை மிகவும் ஈர்த்தது.
அங்கு சமூகம் என்ற சொல்லுக்குள்,
மனிதர்கள் மட்டும் அடக்கப்பட்டிருக்கவில்லை.
தாவரம், பறவை, மிருகம் என அனைத்து ஜீவராசிகளும்,
அக்கால கிராம சமூகத்திற்குள் அங்கத்துவ உரிமை பெற்றிருந்தன.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்,
உறவாய்க் கொண்டு வாழ்ந்த அக்கால மனிதர்களோடு,
உடன் வாழும் மனிதர்களையே ஜடமாய் நினைக்கும்,
இக்கால மனிதர்களை ஒப்பிட,
நாம் வளர்ந்திருக்கிறோமா? தாழ்ந்திருக்கிறோமா?
எனும் ஐயம்தான் உருவாகிறது.
அன்றைய மனிதர்களின் வாழ்வை,
இன்றைய இளைஞர்க்கு அறிமுகம் செய்ய,
அப்போதைய ஒருசில சம்பவங்களை,
இவ்வார அதிர்வில் பதிவு செய்கிறேன்.
✾✾✾
எங்கள் கிராமத்தில்,
இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரிய மோதல்.
பரம்பரையாய் விளைந்த பகைஅது..
அப்பகையால் சிறுசிறு சம்பவங்களும்,
அந்தக்குடும்பங்களுக்கிடையில் மோதலாய் வெடிக்கும்.
அவ்விரண்டு குடும்பங்களும் அடுத்தடுத்த வீட்டில் வசித்தன.
ஒருமுறை முதல் வீட்டு இளம்பையன்,
அடுத்த வீட்டுப்பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுக்க,
அது பெரும் பிரச்சினையாகிவிட்டது.
வெட்டுக்கொத்து என்று பகை வளர்க்க முற்பட்ட அவர்களை,
ஊர்ப்பெரியவர்கள் ஒருவாறு சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனால், கடிதம் கொடுக்கப்பட்ட பெண்ணின் தமையனுக்கு,
மனம் சமாதானம் ஆகவில்லை.
தன் கோபத்தை ஏதோவகையில் காட்ட நினைத்த அவன்,
கடிதம் கொடுத்த பையனின் வீட்டார்,
ஒருநாள் கோயிலுக்குப் போயிருந்த இரவுவேளையில்,
வீட்டெல்லையில் நின்ற.
அவர்களது கறுத்தக்கொழும்பான் மாமரத்தை,
வெட்டி வீழ்த்திவிட்டான்.
அடுத்தநாள் ஊரில் பெரிய பரபரப்பு.
மிகுதிக்கதையைக் கேட்க நீங்கள் ஆர்வமாய் இருப்பீர்கள்.
ஆனால், இக்கதையைச் சொல்வது அல்ல என் நோக்கம்.
அதனால் இந்தளவில் கதையை நிறுத்திவிட்டு,
நான் சொல்ல நினைத்ததைச் சொல்கிறேன்.
✾✾✾
கிராமத்தின் பெருமை சொல்வதாய்க் கூறிவிட்டு,
இக்கதை மூலம்,
பகை விளைந்த கிராம இழிவைச் சொல்வதாய் நினைப்பீர்கள்.
உங்கள் நினைவு தவறு.
நான் சொன்ன கதை நூறில் ஒன்றாய் விதிவிலக்காய் நிகழ்ந்தது.
அக்கடும் பகைகூட பின்னாளில் நீங்கிப்போய்,
அவ்விளைஞனுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்து,
அவர்கள் ஒற்றுமையாகி உறவாகிவிட்ட கதை.
நான் சொல்ல வந்த விடயத்திற்குத் தேவையற்றது.
நான் சொல்ல வந்தது இதனைத்தான்.
இப்போதெல்லாம் யாரோடும் பகை மூண்டுவிட்டால்.
அதனைத் தீர்க்க மனிதர்களை வெட்டிப்போடுகிறார்கள்.
அன்று ஒரு மரத்தை வெட்டிப் பழிதீர்க்க நினைந்ததிலிருந்து,
உங்களுக்கு என்ன தெரிகிறது?
ஒரு வீட்டிலிருக்கும் மரத்தைக்கூட,
அவ்வீட்டின் உறவாய் நினைந்து,
அதனை வெட்டுவதன் மூலம்,
பகை தீர்க்க நினைந்த உண்மை உங்களுக்குப் புரிகிறதா?,
மரத்திற்குக் கூட மனித அந்தஸ்து!
நான் சற்று மிகைப்படக் கூறுவதாய் நினைப்பீர்கள்.
காலையில் மரம் வெட்டப்பட்டுக் கிடந்தது தெரிந்ததும்,
அவ்வீட்டுப்பெண்கள் அம்மரத்தைச் சூழ நின்று,
அதனைத் தடவித்தடவி அழுத அழுகையை நீங்கள் கண்டிருந்தால்,
அப்படி நினைக்கமாட்டீர்கள்.
ஒருமரத்தையும் உறவாய் நினைந்த,
அன்றைய கிராமத்தை தெரிந்து வைத்திருப்பதாற்தான்,
இன்றைய உலகத்தைக் கிராமம் எனச் சொல்ல என் மனம் மறுக்கிறது.
✾✾✾
எங்கள் வீட்டில் அம்மா கோழிக்கு அடைவைத்திருந்தார்.
கடகப்பெட்டிக்குள் வைக்கல் அடுக்கி,
கடைசியாய் அது இட்ட பத்து முட்டைகளைச் சேர்த்து,
அதற்குள் தாய்க்கோழியை இருத்தி கூடையால் மூடி,
குசினிக்குள்ளேயே அக்கடகத்தை வைத்து அம்மா பாதுகாத்தார்.
எங்களுக்கு அது ஒரு புது அனுபவம்.
நானும், அண்ணனும் அம்மா இல்லாத நேரமாய்ப் பார்த்து,
மெல்லப்போய்க் கூடையை திறந்து பார்ப்போம்.
நாம் கூடையைத் தொட்டதுமே தாய்க்கோழி,
தனது செட்டைகளைப் பரப்பி விரித்து,
முட்டைகளை மூடிப்பிடித்துக்கொண்டு,
அடித்தொண்டையால் ‘கேறி’,
எமது குறும்பை அம்மாவுக்கு அறிவிக்கும்.
வழக்கமாய் கைக்கு அகப்படாமல் ஓடித்திரியும் அக்கோழி,
கூடை திறந்தாலும் வெளியில்வராமல்,
பக்குவமாய் உள்ளேயே உட்கார்ந்து தவம் செய்யும் அழகு கண்டு,
ஆச்சரியப்படுவேன்.
✾✾✾
உணவு உண்ணக்கூட அது வெளியே வராது.
ஒன்றுவிட்ட ஒருநாள்,
அதனைப் பலவந்தமாக வெளியில் எடுத்து,
கடகத்திலிருந்து முற்றத்தில் கொண்டுவந்துவிட்டு,
இரவு தண்ணீரில் போட்டு ஊறவிட்ட சோற்றை,
அம்மா அதற்கு போடுவார்.
பெட்டிக்குள் நெடுகக் கிடப்பதால்,
கோழியின் உடம்பில் ஏறும் சூட்டைத்தணிக்கத்தான்,
அதற்கு ஈரச்சோற்றுணவு என்று அம்மா சொல்லுவா.
பெட்டியிலிருந்து வெளியே விட்டதும்.
தூர ஓடிப்போகாமல் செட்டைகளைச் சிலிர்த்தபடி,
ஒருசில நிமிடம் மட்டும் வெளியில் நின்று,
அம்மா போடும் சோற்றைக் கடகடவென அது தின்னும்.
அந்த அவசரத்தில் முட்டைகளைப் பாதுகாக்கும் அதன் எண்ணம் புரியும்.
பின்னர் அருவருக்கும் நாற்றத்துடன் சலேரென தண்ணியாய்ப் பீச்சிவிட்டு,
ஓடிப்போய் கடகத்திற்குள் உட்கார்ந்து கொள்ளும்.
✾✾✾
பதினெட்டுப் பத்தொன்பதாவது நாட்கள் வர,
அம்மாவின் முகத்தில் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.
இருபதாவது நாள் கோழியை மெல்ல ஒதுக்கிப்பிடித்து,
அம்மா முட்டைகளைத் தண்ணீரில் போட்டுப்பார்ப்பா.
மிதப்பதையும், தாழ்வதையும் வைத்து,
எதில் எதில் குஞ்சுகள் இருக்கின்றன என்பதை,
பெரிய ‘கைனகோலஜிஸ்ற்’ போல கண்டுபிடித்துச் சொல்லுவா.
இருபதாவது நாள் இரவு ஒருவரும் தூங்கமாட்டோம்.
அம்மா கடகம் திறந்து பார்க்க நாங்களும் சூழ நின்று எட்டிப் பார்ப்போம்.
முட்டைக்கோது புள்ளியாய்ப்பொருமி முதலில் சொண்டு வந்து,
பின்னர் அவ்வுடைப்பு மெல்ல மெல்லப் பெருத்து,
கோது கழண்டு இரத்தமும் சதையுமாய் குஞ்சு வந்து விழ,
நாம் வியந்து போவோம்.
ஒரு சில முட்டைகளை உடைக்க குஞ்சு சிரமப்பட்டால்,
அம்மா மெல்ல மெல்ல ஓடு நீக்கி, அது வெளியே வர உதவி செய்வார்.
✾✾✾
அடுத்தநாள் காலை கூடை திறந்து பார்த்தால்,
முதல்நாள் நனைந்து வெளி வந்த குஞ்சுகளெல்லாம்,
சிறு சிறு பஞ்சுப்பொதிகள் போல,
தாயின் செட்டைக்குள் இருந்து எட்டிப்பார்த்து நம் உயிரை ஈர்க்கும்.
பாவம் இன்றைய பிள்ளைகளுக்கு,
இந்த அனுபவமே இல்லாமல் போய்விட்டது.
இவர்களுக்குக் கடைகளில் உரித்துத் தொங்கும்,
‘புறொயிலர்’ கோழியோடு மட்டும்தான் உறவு.
ஒருமுறை,
அடைக்கு வைத்து பதினெட்டாம் நாளில்,
ஊரில் கோழிகளுக்குப் பரவிய நோயால்,
தாய்க்கோழி கடகத்திற்குள்ளேயே செத்துக்கிடந்தது.
அன்று என் அம்மா அழுத அழுகையையும்,
வீடு முழுவதும் அன்று சூழ்ந்த சோகத்தையும்,
இன்றைய மனித இறப்புக்களிலும் காணமுடிவதில்லை.
✾✾✾
இன்னொரு சம்பவம்.
எங்கள் வீட்டு இலட்சுமிப் பசு முதல் முதலாய் சினைப்பட்டது.
ஆளுயர வேலி தாண்டிப்பாயும் சண்டிப்பசு அது.
அது கயிற்றை இழுக்கிற இழுவையில்,
பெரிய மாட்டுக்கொட்டிலே விழுந்து விடுமாப்போல் ஆடும்.
அத்துணை சண்டித்தனமானது இலட்சுமி.
பொதுவாகப் பசு மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடமாட்டார்கள்.
ஆனால் எங்கள் வீட்டுக்கு வரும் போதே,
இலட்சுமிக்கு மூக்கணாங்கயிறு போட்டிருந்தார்கள்.
தப்பித்தவறி இலட்சுமி கயிறறுத்துவிட்டால்,
பத்து இளந்தாரிகள் சேர்ந்தாலும் அதனைப் பிடிக்க முடியாது.
பிடிப்பதற்காய் இளைஞர்கள் அதனைச் சூழ்ந்து நெருங்க,
பத்தடி பனையோலை வேலியை அது ஒரே ‘ஜம்பில்’ தாண்டும்.
பத்துப்பதினைந்து பேர் சேர்ந்;து அதனை கயிறெறிந்து பிடிப்பதற்குள்,
ஊரே இரண்டு பட்டுவிடும்.
✾✾✾
அத்தனை முரட்டுத்தனமான எங்கள் இலட்சுமி,
சினைப்பட்டதும் மிகச்சாதுவாக மாறிவிட்டது.
அதனுடைய வேகமெல்லாம் குறைந்து,
அடிமேல் அடி எடுத்து நடக்கத்தொடங்கியது.
புல்லு, புண்ணாக்கு, தவிடு என,
அம்மா அதற்கு அடிக்கடி உணவு வைத்து,
அதன் வயிறு ஊதுவதைக்கண்டு இரசிப்பா.
நாயின் கர்ப்பகாலம் இரண்டு மாதங்கள்.
ஆட்டின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்
மாட்டின் கர்ப்பகாலம் மனிதரைப் போலவே பத்து மாதங்கள்.
இலட்சுமிக்கு ஆறு, ஏழு மாதங்களாகிவிட,
‘கடைவாய்’ விரிந்து,
வயிற்றில்; பால் நரம்பு பெருக்கத் தொடங்கியதைக் கண்டதும்,
அம்மாவிற்கு அளவற்ற ஆனந்தம்!
அவை மாடு சினைப்பட்டதற்கான அடையாளங்களாம்.
அம்மா அடிக்கடி இலட்சுமியின் முலைக்காம்பை இழுத்து இழுத்து,
பால் கசிவு இருக்கிறதா என்று பார்ப்பா.
துளியாய் நீர் நிறத்தில் பால் கசிய மகிழ்ந்து போவா.
✾✾✾
எட்டு மாதம் முடிந்துவிட்டது.
இப்போது இலட்சுமி இருந்து எழும்பக்கூடச் சிரமப்பட்டது.
அதன் சோர்வு கண்டு அம்மா கலங்குவா.
சோற்றுக்கு அரிசி பிடைக்கையில் வரும் ‘குறுணல்’ அரிசியையெல்லாம்,
சேர்த்துச் சேர்த்து பழைய பொங்கல் பானை நிரம்ப வைத்திருப்பா.
மாட்டுத் தொழுவம் தினமும் கழுவப்படும்.
காலை, மாலை சாம்பிறாணி போட்டு,
தொழுவம் தூய்மைப்படுத்தப்படும்.
மெல்ல அருகில் போய்த் தடவினாலும் இப்போ இலட்சுமி பேசாமல் நிற்கும்.
அதன் முன்னைய துடுக்குத்தனங்கள் எங்கு போயினவோ தெரியவில்லை.
✾✾✾
அன்று சித்திரை வருஷப்பிறப்பு.
மருதடிப்பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா.
முதல் நாள் இரவே,
பிரசவ வேதனையில் இலட்சுமி துடிக்கத்தொடங்கிவிட்டது.
இருப்பதும், கஷ்டப்பட்டு எழும்புவதும், சலம் விடுவதும்,
‘அம்மா!’ என்று ஓலமிட்டு அடிக்கடி கதறுவதுமாக,
அது பட்ட கஷ்டத்தைக் கண்டு வீடே கலங்கியது.
ஆச்சி, ஆசையம்மாக்கள் என,
அனைவரும் வந்து பார்த்து வருந்தினார்கள்.
மாடு வளர்த்த அனுபவமுள்ள குலநாயகம் அப்புவைக் கூப்பிட்டனுப்ப,
அவர் வந்து முன்னும், பின்னுமாய்ப் பார்த்துவிட்டு,
“கன்னி ஈத்து கன்டு போட எக்கணம் கொஞ்ச நேரமாகத்தான் போகுது,
ஆராவது ஒருத்தர் எப்பவும் பக்கத்தில இருங்கோ” என்று,
ஆலோசனை சொல்லிவிட்டுப் போனார்.
விடிய விடிய வீடே விழித்திருந்தது!
✾✾✾
விடிகாலை நேரம்.
இடைக்கிடை நிகழ்ந்த இலட்சுமியின் கதறல் அடிக்கடி நிகழத் தொடங்கியது.
இப்போது இலட்சுமி நிற்பதும், படுப்பதுமாய் மாறி மாறி அந்தரப்பட்டது.
இலட்சுமியின் கடைவாயிலிருந்து சளியாய்த் திரவம் வழியத் தொடங்க,
அம்மா அண்ணனைப் பார்த்து,
“கெதியில ஓடிப்போய் குலநாயகம் அப்புவைக் கூட்டிக்கொண்டு வா,
இலட்சுமி கண்டு போடப்போகுது” என்று துரத்தினா.
குலநாயகம் அப்புதான் எங்கள் ஊர் கால்நடைகளின் ‘கைனகோலஜிஸ்ற்’.
✾✾✾
“மாடு வெருளுது இந்தப் பெடி பெட்டைகளை அங்கால கலையுங்கோ”, என்று சொல்லி,
குலநாயகம் அப்பு வந்ததுமே எங்களைப் பகைத்தார்.
போகுமாப் போல் போய்,
கதவிடுக்குக்குள்ளாலும், வேலி பொட்டுக்குள்ளாலும்,
இலட்சுமியின் பிரசவக்காட்சியை,
“டெண்சனோடு” நாம் பார்க்கத்தொடங்கினோம்.
இலட்சுமி முதுகைச் சற்றுக் கூனிப்பிடித்து, முக்கி,
‘அம்மா’ என்று கதற, ‘மழுக்கென்று’ அதன் கடைவாயில்,
பெரிதாய் ஏதோ வெளிப்பட்டது.
கண்டு தான் வந்துவிட்டது என்று,
ஒளிந்து நின்ற நாங்கள் பழையபடி அவ்விடத்திற்கு ஓட,
“பன்னீர்க்குடம் வந்திட்டுது இனிக்கன்று போட்டிடும்” என்று சொல்லி,
அப்பு வேட்டியை மடித்துக் கட்டி ‘புல் அட்டென்சனுக்கு‘ வந்தார்.
✾✾✾
இலட்சுமி இப்போது படுத்துவிட்டிருந்தது.
அது மீண்டும் ஒருதரம் கதறி முக்க,
சளியால் மூடப்பட்ட கன்றின் தலை வெளிவந்தது.
அப்பு வெளி வந்த கன்றை மெல்லப்பிடித்து மெதுவாய் இழுக்க,
இலட்சுமி ‘அம்மா’ என்ற கதறலுடன் இன்னொரு முக்கு முக்கியது.
‘தொழுக்’கென்று கன்று முழுமையாய் வெளியில் வந்து விழ,
எங்களுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.
அப்பு எந்த அரியண்டமும் பாராமல்,
கன்றின் முகத்திலிருந்த சளியையெல்லாம் வெறுங்கையால் வழித்தெடுத்தார்.
இலட்சுமியும் எழும்பி நின்று,
தன் நாக்கால் கன்றைச் சுற்றியிருந்த சளியையெல்லாம் நக்கி நக்கி நீக்கியது.
அப்பு தனக்கும். கன்றுக்கும் உதவுவது அதற்கு தெரிந்திருக்கும் போல,
புது ஆக்களைக் கண்டால் வழமையாய் மிரளும் அது,
அன்று பேசாமல் நின்றது.
அப்பு பின்னர் தன் மடியிலிருந்த வில்லுக்கத்தியை எடுத்த விரித்து,
வெள்ளை வெளேரென்று களி போல் இருந்த,
கன்றின் கால் குளம்பை வெட்டி எடுத்தார்.
''ஒரு பழந்துணி இருந்தா கொண்டு வா மேன'' என்று கேட்டு வாங்கி,
கன்றை முழுமையாய்த் துடைத்துவிட்டார்.
“சோக்கான கண்டடி குலமணி கவனமாய்ப் பார்க்க வேணும்,
கொஞ்ச நேரத்தால நஞ்சுக்கொடி விழும்,
ஒரு உமல்ப் பை இருந்தால் கொண்டு வா,
அது டக்கெண்டு தின்னப்பாக்கும்.
திண்டா மாட்டுக்குக் கூடாது“ என்று சொல்லி,
தானே காவல் இருந்து விழுந்த நஞ்சுக்கொடியை,
மாடு தின்னாமல் எடுத்து உமல்ப்பைக்குள் போட்டுக் கட்டி,
அண்ணனைக் கூப்பிட்டு, “இந்தா ரவி இதைக் கொண்டு போய்,
எங்காவது பால் மரத்தில நாய்களுக்கு எட்டாத உயரத்தில கட்டிட்டு வா!,
அப்பதான் மாட்டில நல்லா பால் வரும்” என்று கொடுக்க,
அண்ணன் அருவருப்போடு கயிறின் நுனியைக் கையில பிடித்து,
பால்மரம் தேடி ஓடினான்.
✾✾✾
அம்மாவிடம் பழைய பொங்கல் பானை ஒன்றை வாங்கி
“கண்டு குடிக்கிறதுக்கு முதல் கடும்புப்பால் கறக்க வேணும்” என்று சொல்லி,
இலட்சுமியின் காலடிக்குச் சென்றார் அப்பு.
இன்டைக்கு இலட்சுமியிடம் அவருக்கு நிச்சயம் உதைதான் என நினைந்து,
பயத்தோடு நாம் பார்த்திருந்தோம்.
மடியடியில் உட்கார்ந்து மெல்லிய சுடுதண்ணியால் அப்பு மடியைக் கழுவ,
இலட்சுமி சாதுவாய்ப் பேசாமல் நின்றது.
இந்த சாந்த குணம் இதற்கு எங்கிருந்த வந்ததென,
நாம் ஆச்சரியப்பட்டுப்போனோம்.
அப்பு, புடைத்திருந்த அதன் மடியைப் பிடித்து,
பக்குவமாய் இழுக்க இழுக்க மெல்லிய மஞ்சள் நிறத்தில்,
கடும்புப்பால் கொட்டத்தொடங்கியது.
இலட்சுமியின் முகத்தில் பால் வேதனை குறைந்த சுகம் தெரிந்தது.
கிட்டத்தட்ட ஆறு போத்தல்.
அப்பு, “குலமணி கடும்புப்பால் ஆறு போத்தலுக்குக் கிட்ட இருக்கும் போல,
அப்ப மூன்று போத்தல் என்டாலும் இனிப் பால் கறக்கும்,
இப்ப இதை இவங்களுக்கு வறுத்துக்குடு” என்று சொல்லிவிட்டு,
பிரசவக்கிரியை முடித்து வீடு போனார்.
✾✾✾
புதுக்கன்று மெல்ல மெல்ல எழும்ப முயன்று,
நாலு காலும் விரித்து வீழ்ந்து,
திரும்பத் திரும்ப முயன்று,
கொஞ்ச நேரத்தால் முழுமையாய் எழுந்து நின்றது.
பின் குடிகாரர் போல அங்குமிங்குமாய் தடுமாறி நடந்து,
நேராக இலட்சுமியின் மடியில் போய் வாய் வைத்தது
அங்குதான் பால் இருக்கிறது என்று அதற்கு யார் சொன்னார்களோ?
கன்று மடியில் வாய் வைத்ததும்,
இலட்சுமிக்கு ஆனந்தமான ஆனந்தம்.
தலை திருப்பி கன்றின் பின்புறத்தை நக்கித் தீர்த்தது.
✾✾✾
இலட்சுமிக்குப் பிரசவ வேதனை வந்ததும்,
அம்மா பட்டபாடு இப்போதும் நினைவிருக்கிறது.
எங்கள் குலதெய்வமாகிய ஐயனாருக்கு,
நேர்ந்து நேர்ந்து அவ அழுததும்,
கன்று போட்ட மறுநாளே,
முதல் வேலையாய் ஐயனாருக்குப் பொங்கல் நடத்தியதும்,
இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
கன்று போட்டு ஒரு வாரத்திற்கு,
அம்மா சேகரித்து வைத்திருந்த குறுணல் அரிசியில்,
கரையக்காய்ச்சிய கஞ்சிதான் இலட்சுமிக்குச் சாப்பாடு.
பசுவிற்கும் பத்திய உணவு!
✾✾✾
இது நடந்து பத்து வருடங்களுக்குப் பிறகு,
கலியாணம் கட்டி லண்டன் போன சின்னக்காவுக்கு முதல் பிரசவம்.
ஆஸ்பத்திரியில் சேர்த்தாகி விட்டது என்று அறிந்ததுமே,
அம்மா அழத்தொடங்கினார்.
மறுநாள் தொலைபேசி அழைப்பு,
சின்னக்கவே பேச அம்மாவுக்கு ஆச்சரியம்.
பிள்ளை பிறந்ததும் வெள்ளைக்கார ‘நர்சு’கள்.
தன்னைக் கொண்டே பிள்ளைக்குக் குளிக்க வார்த்ததையும்,
பிள்ளை பிறந்த அன்றே பாணும், ‘சொஷேஜ்ஜூம்’ சாப்பிட்டதையும்,
அக்கா சொல்லச்சொல்ல அம்மா விதிர்விதிர்த்துப் போனா!
“பிள்ளை பெத்தவளுக்கு பண்டி இறைச்சியைக் குடுத்திருக்கிறாங்களே,
எக்கணம் அவளுக்கு என்ன செய்யப் போகுதோ?” என்று பயந்து,
அம்மா ஒருவாரம் நடுங்கியபடி இருந்தா.
கிராமத்தில் மாட்டுக்கு இருந்த மரியாதை,
இலண்டனில் மனிசருக்கு இல்லை.
நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
✾✾✾
பிரசவத்தின் பின் இலட்சுமியைப் போலவே,
அக்காவும் ஆரோக்கியமாய் எழுந்தது உண்மை.
ஆனால் இலட்சுமியின் பிரசவத்தில்,
எத்தனை உறவுத் துடிப்பு, எத்தனை அன்புப் பிணிப்பு,
அக்காவின் பிரசவத்தில் அவை ஏதும் இல்லை.
அது ஒன்றே குறை.
✾✾✾
அன்றைய கிராமத்தில்,
மரம் உறவாய்க்கருதப்பட்டது.
பறவை உறவாய்க்கருதப்பட்டது.
மிருகம் உறவாய்க்கருதப்பட்டது.
உறவும், அன்பும் அவைக்கும் கிடைத்தன.
இன்றைய உலகத்தில், மனிதருக்கு மனிதரே கூட உறவில்லை.
அன்பும், உறவும் இல்லாத ஆரோக்கியத்தில் தனித்து அவர்கள்.
✾✾✾
முன்னர் சொன்னதை மீண்டும் உரைக்கிறேன்.
கிராமம் என்ற சொற்பிரயோகம்,
சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல.
கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு எனப் பல விடயங்களையும்,
அச்சொல் உட்கொண்டு நிற்கிறது.
விஞ்ஞானத்தால் சுருங்கி விட்ட,
இன்றைய உலகத்தைக் கிராமமாய் உரைக்கின்றார்கள்.
அவர்கள் சொல்லும் கிராமம் எனும் சொல்லுக்குள்,
மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.
அப்படியிருக்க நெருங்கிவிட்டதால் மட்டும்,
இன்றைய உலகத்தைக் கிராமம் என்று சொல்லலாமா?
சொல்லொக்கும் பொருள் ஒவ்வாது.
✾✾✾ ✾✾