அறம் எதற்கு

அறம் எதற்கு

அறம் எதற்கு?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகம் முழுவதும் இன்று,

நிம்மதியையும், அமைதியையும் வேண்டித் தவமிருக்கிறது.

உலகில் மனிதர்கள் நிம்மதியாய் வாழ வழி என்ன?

ஏழை, செல்வர் என்ற பேதமின்றி,

எல்லோர் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்வி இது.

இக்கேள்விக்கான விடையை,

என்றோ நம் தமிழ் அறிஞர்கள் தெளிவுபடச் சொல்லிவிட்டனர்.

அறவாழ்வே அமைதிக்கான ஒரேவழி என்பதே,

அவ் ஆன்றோர் கூறும் விடையாம்.



நம்மில் சிலர் அறம் வேறு,

இறைவழிபாடு வேறு என்று கருதுகின்றனர்.

அது தவறு.

அறமே இறைநோக்கிய பயணத்தின் முதற்படியாம்.

அறத்தில் கால் பதிக்காமல்,

எவராலும் இறைவனை நோக்கிப் பயணிக்கமுடியாது.

அறத்தில் ஒருவர் உறுதியுடன் நின்றுவிட்டால்,

அதுவொன்றே அவரை ஆண்டவனிடம் சேர்ப்பிக்கும் என்கிறார்,

திருக்குறளுக்கு உரை செய்த பெரும்புலவர் பரிமேழலகர்.

அறத்தில் கால் பதித்து ஆண்டவனை அடையும் வழியை,

அவர் நமக்கு எளிமையாய்ச் சொல்லுகிறார்.

அவர்தரும் விளக்கத்தைக் காண்போம்.



ஒளி வளரவளர இருள் தேய்வது போல,

அறத்தில் ஒருவர் நிலைநிற்க,

அவரது பாவம் தேயும்.

நம் அறியாமைக்குப் பாவமே காரணம்.

எனவே, பாவம் தேயத்தேய அறியாமை நீங்கும்.

அறியாமை நீங்கினால்,

உலகில் நிலைத்தவை எவை? நிலையாதவை எவை? எனும்,

உண்மைகள் தோன்றத் தொடங்கும்.

அது தோன்ற வீடுபேறாகிய இன்பமே நிலையானது என்பதும்,

மற்றவை அனைத்தும் நிலையில்லாதவை என்பதும் தெரியவரும்.

அது தெரிந்தால் நிலைத்த இன்பமான வீடுபேற்றின்மேல் விருப்பம் உண்டாகும்.

அவ்விருப்பம் உண்டானால் பிறவிக்குக் காரணமாகிய பயனில்லாத முயற்சிகள் நீங்கி,

வீடுபேற்றிற்குக் காரணமாகிய பயனுள்ள யோகமுயற்சிகள் உண்டாகும்.

அந்த யோகமுயற்சியினால் மெய்யுணர்வு தோன்றும்.

அம் மெய்யுணர்வினால் ‘எனது’ என்கின்ற புறப்பற்றும்,

‘நான்’ என்கின்ற அகப்பற்றும் நீங்கும்.

‘நான்’, ‘எனது’ எனும் இவ் இரண்டு பற்றும் நீங்க,

இறை அடியை அடைதலாகிய வீடுபேற்றின்பம் கிட்டும்.

அறத்தினூடு ஆண்டவனை அடையும் வழி இதுவே என,

வள்ளுவரின் “ஒழுக்கத்து நீத்தார் பெருமை” எனும் குறளுக்கு,

உரை செய்கையில் தெளிவுபட உரைக்கிறார் பரிமேலழகர்.



இதைப் படித்ததும்,

இத்தனை படிகளையும் கடந்துதான்,

நாம் ஆண்டவனை அடையமுடியுமா?

எனும் பிரமிப்பு உங்களுக்கு உண்டாகும்.

ஆனால் அப் பிரமிப்பு அவசியமற்றது.

இறைநோக்கிய பாதையில் பயணித்து அவனை அடைய,

நாம் நம்முயற்சியால் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.

அறவழியில் நிற்பதே நம் முயற்சியால் செய்யவேண்டிய அவ்வொன்றாம்.

அறவழி எனும் முதற் படியில் முயன்று நாம் நிலைத்து நின்றுவிட்டால்,

மற்றைய படிகளை எல்லாம் நம் முயற்சியின்றி கடந்து விடலாம்.

அதெப்படி என்கிறீர்களா? சொல்கிறேன்.



விமானநிலையங்களிலும்,

பெருங்கடைத் தொகுதிகளிலும் (shopping complex)

மாடிகளுக்கு ஏறவென இப்போதெல்லாம்,

இயங்குபடிகள் (moving steps) வந்துவிட்டன.

அந்த இயங்குபடிகளில் மாடி ஏற,

நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.

ஒருபடியில் நாம் கால் வைத்துவிட்டால் போதும்.

பின்னர் அந்தப்படியே நகர்த்தி நகர்த்தி,

நம்மை மற்றைப்படிகளுக்கு ஏற்றி,

நிறைவில் மாடியை அடையச் செய்யும்.



அதுபோலத்தான் அறத்தில் நாம் கால் வைத்துவிட்டால்,

அதுவே இறைநோக்கிய பயணத்தில் நம்மை ஒவ்வொரு படியாக நகர்த்தி,

இறுதியில் இறைவனை அடையச் செய்துவிடுமாம்.

இதனைத்தான் பரிமேலழகர் மேற் சொன்னவாறு விரித்துரைத்திருக்கின்றார்.

நம் பெரியவர்கள் இவ் உண்மையை உணர்ந்ததால்த்தான்,

அறநூல்களை சமயநூல்களின் வரிசையில் சேர்த்துக் கொண்டனர்.

எமது சமயத்தின் முதல்நூல் எனச் சொல்லப்படுவது வேதமே!

அது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என,

நான்காக வியாசமுனிவரால் வகுக்கப்பட்டது.

உலகில் பலவாய் விரிந்திருக்கும்,

அறிவுத்துறைகள் அனைத்தினதும் ‘மூலமாய்’ இருப்பது,

இவ் வேதங்களே என்கின்றனர் நம் சான்றோர்கள்.



இவ்வேதத்தின் நுண்மையை அறிய,

அனைவராலும் முடியாததென்பதால்த்தான்,

நம் பெரியவர்கள் அவ்வேதங்களை,

மலினப்படுத்தாமல் எளிமைப்படுத்தி,

அனைவரிடமும் அவற்றைச் சேர்ப்பிக்க முயன்றனர்.

அம்முயற்சியால் வேதநூல் வரிசை என்ற ஒன்று உருவாக்கிற்று.

வேத, ஆகம, புராண, இதிகாசம் என்பவையே,

அந்நூல் வரிசையில் அடங்கி இருக்கின்றன.

வேதத்துள் அடங்கிக்கிடக்கும் பேருண்மைகளை,

அதன் ஆழம் குறையாமல் படிப்படியாய் இறக்கி,

அனைவர்க்கும் விளங்க உரைக்கும் வேலையையே,

இவ்வேதநூல் வரிசையில் அமைந்த நூல்கள் செய்தன.

அவ் அடிப்படையில் வேதக்கருத்துக்களை மிகமிக எளிமைப்படுத்தி,

உரைத்தவையே நமது இதிகாசங்களாம்.



இவ் இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என,

மூன்றாய் உரைக்கப்படுகின்றன.

இம்மூன்றனுள் இன்று பலராலும் பயிலப்படுபவை,

இராமாயணமும், மகாபாரதமுமேயாம்.

இவ்விருநூல்களும், அறவழியில் நம்மை நிறுத்தப் பிறந்தவை.

அறத்தினைச் சொல்ல ஒரு நூல் போதாதா?

ஒரே விடயத்தைச் சொல்ல இரண்டு நூல்கள் எதற்கு?

எனும் கேள்வி பிறக்கும்.

இன்னன்னவற்றைச் செய்க!

இன்னன்னவற்றைச் செய்யாதுவிடுக! என,

அறத்தை இருகூறுகளாய் உரைப்பது வழக்கம்.

இன்னன்னவற்றைச் செய்க!

என்பதைச் சொல்லப் பிறந்தது இராமாயணம்.

இன்னன்னவற்றைச் செய்யாதுவிடுக! என்பதை,

சொல்லப் பிறந்தது மகாபாரதம்.

பொய்பேசாதே! என,

எதிர்மறையாய் அறத்தினைச் சொல்வதை விட,

உண்மைபேசு! என,

நேர்முகமாய் அறத்தினைச் சொல்வதே உயர்ந்தது என,

நம் பெரியவர்கள் கருதினார்கள்.



அவர்கள் அங்ஙனம் கருதுவதற்கு ஒரு காரணம் இருந்தது.

இன்னதைச் செய்யாதே! என்று சொல்லும் போது,

பிழையினை முதலில் சொல்லவேண்டியிருப்பதால்,

அப் பிழையினைத் திரும்பத் திரும்பச் சொல்ல,

ஒருசிலருக்கு அதன்மேலேயே விருப்பம் உண்டாக வாய்ப்பும் உள்ளது.

அதனாலத்தான் நேர்முகமாக அறம் சொல்வதையே,

உயர்ந்ததாய்க் கருதினார்கள் நம் பெரியவர்கள்.



பாரதத்தைவிட இராமாயணத்திற்கு,

அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது இதனால்த்தான்.

பாரதம் ஆயிரம்தான் சுவையுடைய கதையாய் இருந்தாலும்,

இராமாயணம் அதனை  முந்தி இருப்பதன் ரகசியமும் இதுதான்.

இத்தகைய உயர்வுள்ள அரிய, பெரிய இராமாயணத்தை,

வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றினார்.

அக்காவியத்தின் தரம் குன்றாது,

தமிழில் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அதனை ஆக்கித்தந்தார்.

கம்பராமாயணத்தை ஒரு நாடக காவியமாகவே,

நாம் பார்த்துப் பழகிவிட்டோம்.

அக்காவியத்துள் வேதம் கூறியதான,

அற இரகசியங்கள் அனைத்தையும், உள்ளடக்கியதான,

ஒரு பொக்கிசமாய்க் கருதியே நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர்

அக்காதையை நுண்மையாகப் தமிழில் பதிவு செய்துள்ளார்.

அங்ஙனம் தன்காவியத்துள் கம்பர் பதிவு செய்த அறங்களை,

நம் இளையோர் அறிந்து கொள்வது அவசியமாம்.



 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.