எறிகணை 26
கேள்வி :
தகர்க்கப்பட்ட ஈரானிய கப்பலில் வந்தவர்களுக்கு அமெரிக்காவின் எதிர்ப்புப் பற்றிக் கவலைப்படாமல் ஜனாதிபதி அடைக்கலம் கொடுத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
ஆண்மை!
கேள்வி :
ஐ.நா சபையில் இஸ்ரேலியப் பிரதமர் ‘நெத்தன்யாகு’ மனமுருக பேசியிருப்பதைப் பார்த்தீர்களா?
பதில் :
பார்த்தேன்! அமெரிக்காவை நம்பி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர் இப்போது ஆட்டங்காண தொடங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. சுற்றிவர பெரிய நாட்டு எதிரிகளை வைத்துக் கொண்டு, வாழ வேண்டிய அவர்களது நிலையும் பரிதாபத்திற்குரிய ஒன்றுதான்.
அதே நேரத்தில் ஆயுதபலத்தை மட்டும் நம்பி, இத்தனை நாடுகளின் பகையைச் சம்பாதித்துக் கொண்ட இஸ்ரேலியர்களின் செயலும் புத்திசாலித் தனமானதல்ல.
“அயலோ தாயோ!” என நம் பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை. இன்றைக்கு யுத்தம் வெடித்ததும்தான் தங்களது நிலை, “கரணம் தப்பினால் மரணம்” என்பதாய் ஆகியிருப்பதைத் தெரிந்து, இதுவரை ஆணவமாய்ப் பேசிக் கொண்டிருந்த நெத்தன்யாகு நெகிழ்ச்சியாய்ப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்.
ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை “ட்ரம்ப்” கண்டித்தது கண்டு நெத்தன்யாகு நிச்சயம் குழம்பிப் போயிருப்பார். “ட்ரம்பின்” தலைமை எல்லா நாடுகளையும் குழப்பி இப்போது ஒட்டி நின்ற இஸ்ரேலையும் குழப்பத்தொடங்கி விட்டது.
உறுதியில்லாத அவரை நம்பி இனி, தாங்கள் இறுதிவரை வாழமுடியுமா? என எழுந்த கேள்வி தான் நெத்தன்யாகுவை உருக்கமாகப் பேச வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.
இது காலம் கடந்த ஞானம். இனி அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்குமான நட்புறவு நிச்சயம் துளிர்க்கப் போவதில்லை. பகையைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவேணும் முயற்சிப்பதுதான் செய்யக் கூடிய ஒரே காரியம். “யாரொடும் பகை கொள்ளலர் என்றபின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது” என்ற உண்மை உரைக்க அவர்களுக்கு ஒரு கம்பன் கிடைப்பானா என்ன?
கேள்வி :
விஜய்யின் கட்சியை ஒரு மாதிரியாக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் போல் தெரிகிறதே?
பதில் :
அப்படி நடந்தால் அது ‘விஜய்க்குக்’ கிடைக்கும் ஒரு ‘லாட்றி’ப் பரிசாகத்தான் இருக்கும். அது அவரது கட்சிக்கும் அவருக்கும் நல்லதென்றே தோன்றுகிறது.
நீங்கள் சொன்னது நடந்தால் கரூர் விசாரணை, “ஜனநாயகன்” ரிலீஸ், சங்கீதா வழக்கு போன்ற விஜய்யினது தனிப்பட்ட பிரச்சனைகளிலிருந்தும் அவர் மீள வழி கிடைத்தாலும் கிடைக்கலாம்.
த.வெ.க.வை வைத்து இந்தத் தேர்தலில் மற்றவர்களுக்கு “ஆட்டங்காட்டி” விட்டு, அடுத்த தேர்தலில் சட்டமன்றத்தைப் பிடிக்கலாம் என்பதுதான் விஜய்யினதும் அவரது ஆலோசகர்களினதும் நோக்கமாய் இருக்கின்றது என்கிறார்கள்.
ஆனால் அதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அது நடக்க இன்னும் பல வருடங்கள் அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கிடையில் என்னென்ன நடக்குமோ யார் அறிவார்? மனித வாழ்வு நிச்சயமற்றது. வருங்காலம் உறுதியாய்த் தெரியாதவிடத்தில் நிகழ்காலம் மட்டுந்தான் உறுதி என நினைத்து செயற்படுவதுதான் புத்திசாலித்தனம்.
விஜய்க்கான இன்றைய ஆதரவு என்பது, இலட்சியம், கொள்கை என்பவற்றிற்கானது அல்ல. அவரது சினிமாக் கவர்ச்சிக்கானது மட்டுமே! அந்தக்கவர்ச்சி அவரது தோற்ற இலட்சணத்திலும் தங்கியிருக்கிறது. இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் கழித்து அவரது இந்தத் தோற்றக் கவர்ச்சியும் குறைந்து போகலாம்.
அதுமட்டுமில்லாமல் வரப்போகிற காலங்களில் வேறு யாராவதொரு நடிகரின் படங்கள் வெற்றியாய் ஓடி, அந்த நடிகருக்கு இன்று விஜய்க்கு இருப்பது போன்ற “மவுசு” உருவாகிவிட்டால், இன்று இருக்கும் விஜய்யின் ரசிகர் கூட்டம் கலைந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.
இன்னுமொன்றையும் அவர் யோசிக்கவேண்டும். இம்முறைதான் அவர் தேர்தலுக்கு முதல்முறையாக முகம் கொடுக்கிறார். ஒருவேளை எல்லோரும் எதிர்பார்ப்பது போன்று, வாக்காளர்களின் பெரும் ஆதரவு அவருக்குக் கிடைக்காமற் போகுமானால், அடுத்த தேர்தலில் அவர் “சீண்டப்படாத” மனிதராய் ஆகிவிடுவார்.
இனத்திற்கான தியாகங்கள் ஏதும் செய்யாமலே, நிகழ்காலத்தில் விஜய்க்கு சுலபமாக “மவுசு” உண்டாகியிருக்கிறது. அவரின் ஆதரவு நோக்கி பலரும் பிச்சைப் பாத்திரம் ஏந்தத் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் எவரோடும் இணைய அவர் முடிவு செய்தால் “டிமாண்ட்” பண்ணி தனக்கான வாய்ப்பை அவர் அதிகரித்துக் கொள்ளலாம்.
இன்றைய நிலையில் அவருக்கு இரட்டை எண்களில் தொகுதிகளை ஒதுக்க பலரும் முன்வருவார்கள். தேர்தலில் மற்றைய கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் சேர, அவரது வெற்றி பெரும்பாலும் உறுதிபண்ணப்படும். அதனால் சட்டமன்றத்திற்குள் அவர் பலத்தோடு உட்புகலாம்.
அங்ஙனம் கிடைக்கும் வெற்றியால் சில அமைச்சுக்கள்கூட அவர் கைக்குவர வாய்ப்பிருக்கிறது. அதை வைத்து தமது கட்சிக்காரர்களுக்கான பதவிகளைப் பெற்றுக் கொடுக்கலாம். அப்பதவிகள் மூலம் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம். பின்னர் அடுத்த தேர்தலில் தமக்கான முதன்மையைப் பெற்று முதல்வராய்க்கூட உட்காரலாம்.
இத்தகையை வாய்ப்புகளை விட்டுவிட்டு நாளை கிடைக்கக்கூடிய பரிசிற்காக இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தாமல் விடுவதென்பது நிச்சயம் அறிவீனமான செயலாகத்தான் இருக்கும்.
அரசியலுக்கு வந்தநாள் தொடக்கம் விஜய்க்கு சகுனங்கள் நன்றாக இல்லை. அடுத்தடுத்து அவருக்கு இடையூறுகள் வந்தபடியே இருக்கின்றன. மத்திய அரசு நினைத்தால் விஜய்யை இன்னும் பல சிக்கல்களுக்குள் மாட்டக்கூட முடியும்.
அவற்றைத் தாங்கி நின்றுபிடிக்கின்ற மன வலிமை விஜய்க்கு இருப்பதாய்த் தெரியவில்லை. கரூரில் மக்களை அனாதரவாய் விட்டுவிட்டு தலைதெறிக்க அவர் ஓடிய ஓட்டமே அதற்குச் சான்று. அப்படியிருக்க பெரும் பிரச்சினைகள் வந்தால் அவரோடு கட்சியும் விழப்போவது நிச்சயம்.
சினிமாவையும் விட்டுவிடப் போவதாய்ச் சொல்லியிருக்கிறார். இருக்கும் சொத்தில் பெரும்பகுதி விவாகரத்து வழக்கால் இழக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு நிற்கும்” அவர், புத்திசாலித்தனம் இருந்தால் தக்கவர்களின் ஆலோசனை பெற்று இந்தச் சூழ்நிலையை பயன்படுத்துவதுதான் நல்லது. அதற்கு அவரைச் சூழவுள்ள இடையூறுகள் இடமளிக்குமா? என்பதுதான் கேள்வி.
கேள்வி :
சென்ற முறை ஆகமம் பற்றிய கேள்விக்கான உங்களது விடை பலரையும் பாதித்திருக்கும். தங்களை ஆகம அறிஞர்களாய் இதுவரை காட்டிக் கொண்டிருந்த பலரும், உங்கள் மீது பாய்வார்கள் என்று நினைத்தேன். ஒருவரும் “மூச்சுவிட”க்காணோம். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:
அவர்கள் தமது பொய் முகமூடி கழன்றுவிட்ட அதிர்ச்சியில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நியாயம் இருந்தால்த்தானே பாய முடியும்.
கேள்வி :
உங்களுக்கு இதுவரை தரப்பட்ட பட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அவை தந்தவர்களின் அன்பைத்தான் வெளிப்படுத்துவனவேயன்றி, என் அறிவை வெளிப்படுத்துவன அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். அவ்வளவுதான்.