அற்புதமாம் 'சுவிஸ்" கம்பன் கழகம் வாழ்க!-கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
கவிதை முற்றம் 21 Nov 2018
உதித்தவனாம் கம்பனென்னும் எங்கள் ஐயன்
வளம் மிகுந்த அவன் பெருமை தினமும் சொல்லி
வாயார மனதார வாழ்த்தி நிற்போம்.
நிலமுழுதும் தன் அரிய தமிழதாலே
நிலைநிறுத்தி ராமகதை நிமிரச் செய்தான்.
அளவதிலா பெருமைமிகு தமிழாம் அன்னை
அவள் புகழை அகிலமெலாம் அறியச் செய்தான்.
வேற்றுமைகள் அழிவதற்கு வழிகள் சொன்னான்
வீறுடனே ஆண்களுக்கும் கற்பைச் சொன்னான்.
நேற்றுவரை தமிழரெலாம் நிமிர்ந்து நிற்க
நிகரதிலா அறங்கள் பல நிறுத்திச் சொன்னான்.
போற்றுகிற அன்பர்தமக் குலகில் வாழும்
பொன்னான நன்நெறிகள் எடுத்துச் சொன்னான்.
காற்றெனவே செந்தமிழைப் பரவச் செய்து
கற்றோர்கள் உளம் மகிழும் கவிகள் சொன்னான்.
அத்தகைய கம்பனையே அளக்கர் தாண்டி
அழைத்தேதான் நாம் மகிழ விழவெடுத்து
சொத்தெனவே போற்றுகிற குருக்கள் தம்மின்
சோர்வதிலா முயற்சியினை வாழ்த்துகின்றேன்.
வித்ததனை இட்டன்று நாங்கள் செய்த
வேள்வியது தொடர்பதனைக் கண்டே உள்ளம்
பத்தியுடன் இராமனடி போற்றி நிற்கும்
பயன் செய்த அனைவரையும் வாழ்த்தி நிற்கும்.
(அளக்கர்-கடல்)
கடல்கடந்து கம்பனையே கொண்டு சென்ற
கற்றவர்கள் மென்மேலும் உயர்வு கொள்க!
தடல்புடலாய் விழவெடுத்து மகிழ்வு கொள்ளும்
தாழ்வில்லா குருக்களவர் ஆர்வம் வெல்க!
வடமதனை தாம் பற்றிக் கம்பதேரும்
வலம் வரவே துணை நிற்கும் அன்பர் வாழ்க!
சடசடென கம்பனவன் பெருமை ஓங்கச்
சகமெல்லாம் மகிழ்வோடு அதனில் ஆழ்க!
அகில உல கெனும் அடையைத் தவிர்த்து நல்ல
அற்புதமாம் சுவிஸ் கம்பன் கழகம் என்னும்
தகமையுடன் உம் கழகம் வளரவேண்டும்
தகுதியிலா வெறும் பெருமை தக்கதன்று
நிகரதிலா ஈழமதன் மைந்தர் நீங்கள்
நித்தியமாய் அதன் பெருமை நாட்டவேண்டும்.
பகர்வதிது அன்பென்னும் உரிமையாலே
பண்புடனே இவை ஏற்க வேண்டி நின்றேன்.
ஊரதனைக் கூட்டிடவே முடியா நின்று
உலகதனின் கழகமென உரைத்தால் நல்லோர்
வேரதனில் பிழையென்று நினைந்து எம்மை
விரகரென இகழ்ந்திடுவார் வேண்டாம் அந்த
பேரெமக்கு. வாழுகிற நாட்டின் நல்ல
பெருமைமிகு பேரிணைத்துக் கழகம் தன்னை
நூறகவை கடந்து புகழ் கொள்ளவேண்டும்.
நுமதன்னை துர்க்கை அருள் செய்வாள் நன்றே!
***