எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-2 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-2 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
லகம் அதிரும் வண்ணம்,
இலங்கையின் அரசியற்களம் சூடுபிடித்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழ்நாட்டில் 'சர்க்கார்" ஏற்படுத்திய பரபரப்பைவிட,
நம்நாட்டின் 'சர்க்கார்" ஏற்படுத்தும் பரபரப்பு அதிகமாய் இருக்கிறது.
நாளுக்குநாள் அரங்கேறும் புதிய புதிய காட்சிகளால்,
மக்கள் அதிர்ந்து பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.
இலங்கை அன்னையை தமிழர்கள் சிதைக்கப்பார்க்கிறார்கள் என்று,
ஒருகாலத்தில் குற்றம் சாட்டியவர்கள் இன்று,
தாமே அக்கைங்கரியத்தைச் சிறப்புறச் செய்து வருகிறார்கள்.
அவைபற்றி நிறைய எழுதவேண்டும்.
அதற்கு முன்பாக சென்றவாரத் தொடர்ச்சியாய்,
வடக்கின் முக்கிய தலைவர்களை நோக்கி,
மக்கள் எழுப்பும் கேள்விகளைப் பார்ப்போம்.

◆◆◆

எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தரிடம்...
  1. உங்களுடன் ஒன்றிணைந்த கட்சிகளை உதாசீனம் செய்ததும், கூட்டுக்கட்சிகளின் தலைவராய் இருந்துகொண்டு தன்னிச்சையாய் முடிவுகள் எடுத்ததும்தான், இன்றைய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை உணர்கிறீர்களா? 
  2. நீங்கள் வலிந்து அழைத்துக்கொண்டு வந்த மு.முதலமைச்சர் கட்சிக்கு மாறாக நடக்கத்தொடங்கியபோதும், அவர் உங்களைப் புறக்கணித்து தமிழ்ப் பேரவையின் தலைமையை ஏற்றபோதும், வேற்றுக் கட்சிகளைப் பாராட்டிப் பகிரங்கமாய் உங்கள் அணியைக் குற்றஞ்சாட்டிய போதும் துணிந்து அவர்மீது நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன?
  3. மு.முதலமைச்சரின்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியாவில் வைத்து சுமந்திரன் அறிவித்த செய்தி சர்ச்சையாகி ஊடகங்களில் அடிபட்டபோது ஏதும் தெரியாதவர் போல் இருந்துவிட்டு பின்னர், அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று அறிவித்ததில் உண்மையில்லை என்பதை ஒத்துக்;கொள்கிறீர்களா?
  4. மு.முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை உங்களுக்குத் தெரியாமல்த்தான் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றை இன்னும் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா?
  5. தங்களுக்குத் தெரியாமல் அப்பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் தன்னிச்சையாய், அச்செயலைச் செய்த கட்சிக்காரர்களின்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
  6. மு.முதலமைச்சர் முரண்பட்ட நிலையில், அவரை தனியாய்; சந்தித்து நீங்கள் பேசியது என்ன?
  7. உங்களால் வலிந்து அழைத்துவரப்பட்ட மு.முதலமைச்சரால் இன்று கட்சியும், இனமும் பிளவுபட்டிருக்கும் நிலையில் அதற்கான பொறுப்பையேற்று கூட்டமைப்பின் மாற்றணியினரிடம் மன்னிப்புக்கோரும் கடமை உங்களுக்கு இல்லையா?
  8. மு.முதலமைச்சரின் இத்தனை கோளாறுகளையும் சகித்து இருந்த நீங்கள் அந்த சகிப்புத்தன்மையை ஆனந்தசங்கரியிடமும், கஜேந்திரக்குமாரிடமும், சுரேஷ் பிரேமச்சந்திரனிடமும் காட்டத் தவறியதன் காரணம் என்ன?
  9. இவர்களை விட மு.முதலமைச்சர் இனத்திற்காய் அதிகம் தியாகம் செய்தாரா?
  10. பலதரம் உங்கள் ஆதரவால் கூட்டாட்சி அரசாங்கத்தை காத்த நீங்கள் அரசியல்கைதிகளின் விடுதலையில் கூட அதிகாரம் செலுத்த முடியாமல் போனதன் காரணம் என்ன?
  11. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் அரசில் அங்கம் வகிக்கத் தயாரான நீங்கள் ஏன் ஒருசில முக்கிய அமைச்சுப்பதவிகளைக் கோரி தமிழ்மக்களுக்கு உதவியிருக்கக்கூடாது? 
  12. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் இனத்திற்காய் நீங்கள் சாதித்தவை எவை?
  13. உங்களின் தலைமைச் செயற்பாடுகள் உங்களால் தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது வெளியிலிருக்கும் பலமிக்க வேற்றுச்சக்திகள் உங்களை இயக்குகின்றனவா?
  14. தனது பதவியை சரிவர நிர்வகிக்காது, திரும்பத்திரும்ப உங்களை குற்றம் சாட்டிய, மு.முதலமைச்சரை கடைசிவரை என்ன காரணத்தினாலோ  பதவியிலிருக்க அனுமதித்த நீங்கள் பிரிந்து சென்ற ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரை இனநன்மை நோக்கி மீண்டும் ஒன்றிணைத்து தமிழ்த்தலைமையை ஒரே குடைக்கீழ் கொண்டுவர முயலக்கூடாதா? 
  15. கட்சியின் ஒற்றுமையை குலைக்கப்பார்த்தார்கள் என்று மற்றவர்கள்மேல் கோபம் கொண்ட நீங்கள், உங்களால் அழைத்துவரப்பட்டவர் கட்சியின் ஒற்றுமையைக் குலைத்தபோது மௌனம் சாதித்ததன் மர்மம் என்ன? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது இதனைத்தானா?
  16. இன்று மத்திய அரசில் ஏற்பட்டிருக்கும் பெருங்குழப்பத்தில் ஐக்கிய தேசிக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். கூட்டமைப்பின் மாற்றணியினரோடு கலந்து பேசித்தான் இம்முடிவை எடுத்தீர்களா?
  17. ரணிலை ஆதரிப்பதாய் முடிவெடுத்திருக்கிறீர்கள். ஒருவேளை ரணில் தோற்றால் மஹிந்தவால் தமிழினம் பாதிக்கப்படாதா? நடுநிலைமை வகித்தல் என்பது தங்கள் சார்பான சிறந்த தீர்வாய் இருந்திருக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?
  18. ரணிலை ஆதரிக்கவில்லை. ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம் என்கிறீர்கள். அங்ஙனமாயின் வங்கி ஊழல் பிரச்சினை வந்தபோது ஓர் எதிர்க்கட்சித் தலைவராய் தேசத்தின் நன்மை கருதி குரல் கொடுக்காததன் மர்மம் என்ன?
  19. அடுத்த முதலமைச்சராய் யாரை நியமிப்பதாய் முடிவு செய்திருக்கிறீர்கள்? உங்கள் தேர்வு முழுத்தோல்வி அடைந்து விட்டதால், அடுத்த முதலமைச்சர் தேர்வை மாற்றணியினர் செய்ய அனுமதிப்பீர்களா? அல்லது அவர்கள் கருத்துக்கேனும் மதிப்பளிப்பீர்களா?
  20. நீங்கள் முதுமையின் எல்லையில் நின்று கொண்டும் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என இன்றுவரை இனங்காட்டாமல் இருப்பது சரியா?
  21. பாராளுமன்றத் தேர்தலில் என்ன அடிப்படையில் உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடுகள் செய்கிறீர்கள்? 
  22. திரும்பத் திரும்ப ஒருவருக்கே பதவி கொடுத்து, பதவிகளைக் குடும்பச் சொத்தாக்க அனுமதிப்பது ஏன்?
  23. தகுதியும் விசுவாசமும் இனப்பற்றும் அற்ற கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுகிற தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் நீக்குவீர்களா? 
  24. உங்கள் தலைமையின் இறுக்கமின்மைதான் கட்சி உறுப்பினர்களைத் தன்னிச்சையாய் நடக்கச்செய்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
  25. உங்கள் நம்பிக்கை முழுவதும் சுமந்திரனின்மேல்த்தான் என்பது உலகறிந்த ரகசியம். அதைத்தானும் நீங்கள் வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்குவது ஏன்?


மு.முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரனிடம்...

 
  1. அன்றைய நிலையில் மக்கள் செல்வாக்கு இல்லாதிருந்த உங்களைத் தேர்தலில் நிற்கவைத்து உலகெல்லாம் சென்று பணம் திரட்டி பெருவெற்றி பெறவைத்த கூட்டமைப்புடன் ஓர் ஆண்டுக்குள் பகைவரக் காரணம் என்ன?
  2. பகை வந்தவுடன் அதை மக்கள்மன்றில் வெளிப்படச்சொல்லி விலகாமல் உடனிருந்துகொண்டு இடைத்தேர்தலில் வேற்றணியினரை மறைமுகமாய் ஆதரித்ததன் காரணம் என்ன?
  3. தமிழ்மக்கள் பேரவையை அமைத்தபோது பல கட்சிகளையும் அழைத்த நீங்கள் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்த தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடாதது ஏன்?
  4. ஆரம்பத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பிக்கு அமைச்சர் பதவி தர கடுமையாய் மறுத்தீர்கள். அதனால் அவர்கள் கூட்டமைப்போடு முரண்பட்டு வெளியேறிய நிலையில் கூட்டமைப்புடனான உங்களது பகையைச் சாதிக்க பின்னர் அதே நபருக்கு பிடிவாதம் பிடித்து பதவி கொடுத்தீர்கள். இதை வைத்து உங்களை சுயநலமியாய் குற்றம் சாட்டினால் என்ன பதில் சொல்வீர்கள்?
  5. ஆயுதக்குழுக்களுடன் என்னால் இயங்கமுடியாது என்று முன்பு பேசிய நீங்கள் இன்று அதே நபர்களுக்காக கஜேந்திரகுமாருடன் முரண்பட்டு நிற்பதன் ரகசியம் என்ன?
  6. மஹிந்தவின்முன் சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்று மற்றவர்களை நம்பச் செய்து நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் அவர் முன்னே சென்று சத்தியப்பிரமாணம் செய்ததன் நியாயம் என்ன?
  7. உங்களது அமைச்சர்கள் மீதான ஊழல்க் குற்றச்சாட்டில், நீங்களே அமைத்த விசாரணைக்குழுவின் தீர்ப்பு உங்களது கையாட்களுக்கு எதிராக வந்தபோது, அதனை மறுத்ததன் நோக்கம் என்ன?
  8. 'என்னை பொம்மையாய் பயன்படுத்த நினைத்தார்கள்." என்று, இன்று பதவி முடிந்ததும் குற்றம் சாட்டும் நீங்கள், அவ் உண்மை தெரிந்ததும் பதவியை உதறிவிட்டு வெளிவராமல் கடைசி நாள்வரை பதவியில் ஒட்டியிருந்து பயன்பெற்றுவிட்டு பதவி முடிந்தபின் புதிய கட்சி தொடங்கியது நியாயமா?
  9. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் இந்தியப் பிரதமரின் யாழ் வருகையின் போது சிறைகளிலிருக்கும் ஈழத்தவர்களுக்காக அன்றி கொலைச்சாமியார் பிரேமானந்தாவின் சீடர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்த அசிங்கத்தின் அடிப்படை என்ன?
  10. உரிமைக்காகத்தான் போராடுவேன் சலுகைகளுக்கு அடிபணியமாட்டேன் என்ற நீங்கள் பதவி முடியும் நிலையில் உங்களுக்கான வாகனச்சலுகை கேட்டு விண்ணப்பித்தது கேவலம் இல்லையா?
  11. மத்தியஅரசில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியோ அல்லது எனது நிலைப்பாடு  இதுதான் என்பது பற்றியோ நீங்களும் உங்களைச் சார்ந்த தமிழ்மக்கள் பேரவையும் இதுவரை வாய்திறக்காமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
  12. அகதிகளுக்கு வழங்கப்படவிருந்த பொருத்துவீடுகளை வேண்டாம் என்று உதறிய நீங்கள் அவ் அகதிகளுக்கு இன்றுவரை வீட்டு வசதிக்காய் செய்த உபகாரம் என்ன?
  13. பெரும்பான்மை பெறுவதற்காக மாற்றணி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயலை உங்கள் சம்பந்தி வாசுதேவ நாணயக்கார நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதுபற்றி ஒருதமிழ்த்தலைவராய் பொது அரங்கில் வாய் திறப்பீர்களா?
  14. கட்சிக்கட்டுப்பாட்டை மீறுகிறார் என தமிழரசுக்கட்சி குற்றம் சாட்டியபோது நான் கட்சி உறுப்பினன் அல்லன். சுதந்திரமானவன் என்று பகிரங்கமாய்ச் சொன்னவர் நீங்கள். இன்று தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாய் அதன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். முன்னைநாள் நீதியரசர் இங்ஙனமாய் மக்கள் மன்றில் பொய்யுரைக்கலாமா?


◆◆◆

மேற் கேள்விகளால் நம் தலைவர்கள் சிலவேளை கோபப்படலாம்.
அவர்கள் கோபப்படுகிறார்களோ இல்லையோ,
அவர்தம் 'வால்பிடிகள்" நிச்சயம் கோபப்படுவார்கள்.
அதுபற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?
தலைவர்களின் புகழும் பதவியும் மக்களால் கொடுக்கப்பட்டவை.
எனவே அவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும்,
மக்கள் மன்றுக்கு தலைசாய்த்துத்தான் ஆகவேண்டும்.
மக்களின் முட்டாள்தனந்தான் தங்கள் மூலதனம் என நினைந்து,
நம் தலைவர்கள் இதுவரை செய்த பொய்மைகள் போதும்.
மிக விரைவில் மக்கள் புத்திசாலிகளாகப் போகிறார்கள்.
தொடர்ந்தும் அவர்களை மூடர்களாக்கி முன்னேறலாம் எனும்,
இவர்களின் எண்ணம் கனவாகப் போவது நிஜம்.
அதற்கான ஓர் முன்னோட்டமாகத்தான் இக் கேள்விகள்.
யதார்த்த வெளியிலிருந்து வீசப்படும் கற்களாய்,
மேற்கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.
சமூகத்திற்குப் பதில் சொல்லாவிட்டாலும்,
இக்கேள்விகளுக்கான பதில்கள் தங்களிடம் உண்டா? என,
தலைவர்கள் தம் நெஞ்சைக் கேட்டுக் கொள்வது நல்லது.
தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தொடரும் சம்பவப்பதிவுகளோடு,
அடுத்தவாரம் சந்திப்போம்.
◆◆◆◆◆◆◆◆◆
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.