ஆகமம் அறிவோம் | பகுதி 5 | 'சைவசமயநெறி' கூறும் ஆச்சாரிய இலட்சணம்

ஆகமம் அறிவோம் | பகுதி 5 | 'சைவசமயநெறி' கூறும்  ஆச்சாரிய இலட்சணம்
 
ஆசாரியர்களுக்குரிய பஞ்சமுத்திரைகள்

உத்தம ஆசாரியர்களுக்குப் பஞ்சமுத்திரைகள் உள என்று,
ஆகமங்கள் கூறுகின்றன.
அப்பஞ்சமுத்திரைகளாவது,
விபூதி, உருத்திராட்சமாலை,
பூணூல், உத்தரீயம், தலைப்பாகை என்பவையாம்.




சூத்திர ஆசாரியர்கள் தவிர்க்கவேண்டியவை

சூத்திர ஆசாரியருக்கு
உத்தரீயமும், தலைப்பாகையும் என்றும் உரியதன்றாம்.



பூணூல் செய்யும் முறை

பூணூல் பருத்தி நூலினால்,
ஒன்பது இழை கொண்டதாக ஆக்கவேண்டும்.
கிழக்கு முகமாக இருந்து வலக்கையிலே.
நான்கு அங்குலப் பிரமாணத்திலே,
தொண்ணூற்றியாறு இழை சுற்றி,
மீண்டும் அப்படி இரண்டு தரம் சுற்றி,
அந்த மூன்று இழையையும் சேர்த்து,
மேன்முறுக்காக முறுக்கி ஒன்றாக்கி,
அதனை மூன்றாக மடித்து,
கீழ் முறுக்காக முறுக்கி ஒரு புரியாக்கி,
அப்படி முறுக்கப்பட்ட நூலை,
மூன்று பகுதிகளாய்ப் பிரித்து,
நடுநடுவே பிரமக்கிரந்தி என்னும் முடிச்சிட்டு,
ஒரு பூணூல் ஆக்கவேண்டும்.




நால் வர்ணத்தாருக்கும் உரிய பூணூல் வகை

மேற்குறிப்பிட்டவகையாய் தயாரிக்கப்பட்ட,
ஏழு பூணூல்களை பிராமணர்கள் தரிக்கவேண்டும்.
மூன்று பூணூல்களை சத்திரியர்கள தரிக்கவேண்டும்.
இரண்டு பூணூல்களை வைஷிகர்கள் தரிக்கலாம்.
சூத்திரருக்கு விதிக்கப்பட்டது ஒரு பூணூலேயாம்.



பூணூல் தரிப்பதற்குரிய மந்திரம்

பிராமணர், ஷத்திரியர், வைஷிகர், சூத்திரர் என்கின்ற,
நான்கு வர்ணத்தாரும் முறையே,
தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்கின்ற,
நான்கு மந்திரங்களாலும் பூணூலை மார்பில் தரிக்கவேண்டும்.
இப்படித் தரித்தால் அவர்களிடத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.
போகம், மோட்சம் எனும் இரண்டும் கிடைக்கும்.



சூத்திரர் பூணூல் தரிக்கும் ஒழுங்கு

இல்லறத்தில் ஒழுகுகிற சூத்திரர்,
தர்ப்பணகாலம், பூசாகாலம், அக்கினிகாரியகாலம், தீட்சாகாலம்,
உற்சவகாலம் முதலியவற்றில் பூணூலைத் தரிக்கலாம்.
சூத்திரருள் மூவகை ஆசையும் துறந்த நைஷ்டிக பிரமச்சாரி,
எக்காலத்திலும் பூணூல் தரிக்கலாம்.



ஆசாரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கருமங்கள்

நித்தியம், நைமித்தியம், காமியம் என,
ஆசாரியர்களுக்குரிய கருமங்கள் மூன்றாம்.
இம்மூன்று கருமங்களும்,
நித்தியம் நித்தியாங்கம் என்றும்,
நைமித்தியம் நைமித்தியாங்கம் என்றும்,
காமியம் காமியாங்கம் என்றும் ஆறாகப் பிரியும்.



நித்திய கருமம்

ஸ்நானம் பண்ணி தர்ப்பணம் செய்து,
சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்து,
அக்கினி காரியம் செய்தல் முதலியன நித்திய கருமங்களாம்.



நைமித்திய கருமம்

பிரதிஷ்டை, தீட்சை, சிவோற்சவம், சாந்தி முதலானவையும்,
ஆகமங்களை நன் மாணாக்கர்களுக்குக் கற்பித்தலும்,
நைமித்திய கருமங்களாம்.



காமிய கருமம்

சித்தபேதங்களை விரும்பி விஷேச தினங்களிலே,
விஷேசமாக சிவபூசை செய்தலும்,
மந்திரங்களைச் செபம் பண்ணுதலும் என்பதான,
அவரவர் விருப்பத்திற்கிசைந்த கருமங்கள்,
காமிய கருமங்களாம்.



நால்வகை ஆச்சிரமிகளுள் 
ஆசாரியர் ஆவதற்கு அதிகாரம் இல்லாதோர்

சன்னியாசியும், மனைவியுடனே வனத்தில் தங்கும் வானப்பிரஸ்தனும் ஆகிய,
இவ்விரு ஆச்சிரமிகளும் ஆசாரியராவதற்குத் தகுதியற்றவராம்.



மூவகை சன்னியாசிகள்

தபசுவி,
விவிதீஷீ,
வித்துவான் என சன்னியாசிகள் மூவகைப்படுவர்.
வனத்தில் தங்கி மாணாக்கர்களுக்குக் கற்பித்து,
தண்டு, கமண்டலம் தரித்து,
மணல் முதலியவற்றாலான லிங்கத்தைப் பூசை பண்ணிக்கொண்டு,
கையே பாத்திரமாக இரந்து வேறொரு செயலுமின்றி மௌனித்திருப்பவன்,
சன்னியாசிகளுள் தபசுவி எனப்படுவான்.
வேத, சிவாகமங்களைத் தான் அத்தியயனம் பண்ணியும்,
பிறருக்குப் பண்ணி வைத்தும்,
அவற்றை கேட்டும், சிந்தித்தும், மேற்சொன்ன,
கிரித்தியங்களையும் உடையவன்,
சன்னியாசிகளுள் விவிதீஷீ எனப்படுவான்.
ஆசாரியரால் அபிஷேகம் பெற்று,
மாணாக்கர்களுக்கு சிவாகம வியாக்கியாணம் பண்ணிக்கொண்டு,
அதனை எப்போதும் சிந்தித்திருத்தலோடு,
மேற்குறித்த கிரித்தியங்களையும் உடையவன்.
சன்னியாசிகளுள் வித்துவான் எனப்படுவான்.



இருவகை வானப்பிரத்தர்

சபத்தினீகன்,
விபத்தினீகன் என வானப்பிரத்தர் இருவகைப்படுவர்.
இல்லை விட்டு மனைவியோடு வனத்தில் சென்று,
பொறிகளை அடக்கி சிவபூசை, அக்கினிகாரியம்,
குருபூசை என்பனவற்றைச் செய்து கொண்டிருக்கும் வானப்பிரத்தர்,
சபத்தினீகர் எனப்படுவர்.
மனைவியோடு கூடாது மேற்காரியங்களைச் செய்யும் வானப்பிரத்தர்,
விபத்தினீகர் எனப்படுவர்.



சூத்திரர்களுள் சன்னியாசிகள் இருக்கின்றனரா?

நான்காம் வர்ணத்தவரான சூத்திரருள்,
சன்னியாசிகள் இல்லையெனச் சிலர் கூறுவர்.
அது தவறாம்.
சிந்திய விசுவ சாதாக்கியத்தில்,
பிராமணர் முதல் பத்துச்சாதியினருக்கும்,
நான்கு ஆச்சிரமும் உண்டு என்று விதித்திருத்தலாலும்,
இராமாயணத்தில் நான்கு யுகத்திலும் முறையே,
நான்கு வர்ணத்தார்க்கும் தபோ முக்கியத்துவம் கூறலாலும்,
பிரம்மாண்ட புராணத்தில்,
கிருதயுகத்தில் பிரமாண சன்னியாசியும்,
திரேதாயுகத்தில் ஷத்திரிய சன்னியாசியும்,
துவாபரயுகத்தில் வைஷிக சன்னியாசியும்,
கலியுகத்தில் சூத்திர சன்னியாசியும் முக்கியர்கள்,
எனச் சொல்லப்பட்டிருத்தலாலும்,
நான்காம் வர்ணத்தவருள் சன்னியாசிகள் இல்லை எனக் கூறல் தவறாம்.



ஆசாரியராவதற்கு அதிகாரமுடையோர்

பிரம்மச்சாரியும், இல்லறத்தானுமே,
ஆசாரியராவதற்கு தகுதியுடையவராம்.
பிரம்மச்சாரியாகிய ஆசாரியன்,
தன்னிடம் வந்த மாணாக்கர்களுக்கு,
மோட்சத்தை மட்டுமே கொடுத்தற்குரியவன்.
இல்லறத்தில் வாழும் ஆசாரியன்
போகம், மோட்சம் எனும் இரண்டையும்,
கொடுக்கும் அதிகாரம் உள்ளவன்.



ஆசாரியர் குருதட்சணை பெறும் முறைமை

மாணாக்கன் தந்த பொருள் முழுவதையும் வாங்காது,
அப் பொருளில் ஆறில் ஒரு பங்கை மாத்திரமே,
ஆசிரியன் வாங்கவேண்டும்.
மாணாக்கன் வானப்பிரத்தனாகவோ, சன்னியாசியாகவோ,
பற்றற்று இருப்பவனாகில்,
அவன் தரும் பொருள் முழுவதையும் ஆசாரியன் வாங்கலாம்.
மாணாக்கன் நைட்டீக பிரம்மச்சாரியாய் இருப்பின்,
அவன் தானாக விரும்பிக் கொடுக்கும் பொருளையே,
ஆசாரியன் வாங்குதல் வேண்டுமாம்.



தொடரும்…..
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.