ஆர்த்தந்த முருகன் தேர் ஏறும் காட்சி !

ஆர்த்தந்த முருகன் தேர் ஏறும் காட்சி !
 

லகுய்ய வேல் கொண்டு முருகன் வந்தால்
        ஒப்பற்ற தேவர்களும் உவகை கொள்வர்
நலம் தந்து சூரனையே வதைத்து ஆண்ட
        நம் தலைவன் இவனென்று பணிந்து நிற்பர்
தலமெங்கும் தோன்றிடினும் எங்கள் ஐயன்
        தான் நிற்கும் நல்லூரில் எழுந்து நின்றால்
நிலமெங்கும் வியந்திடுமே அழகன் என்ற
        நிகரில்லாப் பெரும் பெயர்க்கு ஈடு என்னே?
 

ஈழத்துத் தலங்களிலே எங்கள் ஐயன்
        ஏற்றமிகு நல்லூரே தலைமை கொள்ளும்
நாளுக்கோர் வடிவாக அழகு பொங்க
        நல்லூரான் வலம் வந்து மனதைக் கொய்வான்
ஆளுக்கோர் தலைதானே அமைந்ததெங்கள்
        அற்புதனின் தாள் வைக்க என்று சொல்லி
வேலுக்குள் மனம் வைத்து நின்று ஏங்கி
        வேதனையில் உழல்வார்கள் அன்பரெல்லாம்.

ஏறித்தான் கொடியினிலே சேவல் ஆட
        எல்லோரும் யாழினிலே கொலையை நீக்கி
மாறித்தான் தமைச் சைவ மாண்புக்காக்கி
        மரக்கறியே கதி என்று மகிழ்ந்து நிற்பர்
பேரில்த்தான் மனம் மாற்றும் பெருமை என்னே?
        பெரும் பெரும! நீயுந்தான் பச்சை சாத்தி
தேரில்த்தான் இறங்கையிலே உலகமெல்லாம்
        தெவிட்டாத பசுமை கொளும் புதுமை என்னே?

தெய்வானை வள்ளியோடு தேரில் ஏறி
        திருமுருகன் வருங்காட்சி தெவிட்டா இன்பம்
மெய்யான அன்பர்க்கு அள்ளி ஈயும்
        மெய்சிலிர்த்து அவரெல்லாம் அழுது நிற்பர்
வெய்தான துயர் தீர்க்க முருகன் வேலின்
        வேறுண்டோ ? அவன் காட்சி கண்ணில் காண
கை தானாய்த்; தலை ஏறும் கண்கள் தானும்
        கண்ணீரைக் கடலாகப் பெருக்கி நிற்கும்.


வீதியெலாம் வெண்மணலாய் விரிந்த கூட்டம்
        விதிர் விதிர்த்து உன் அழகைத் தேரில் கண்டு
நாதி இவன் திருவடிகள் என்றே சொல்லி
        நயந்தேதான் நெஞ்சுருகிக் கண்ணீர் வார்க்கும்
போதித்து பிரணவத்தின் பொருளை அன்று
        புகட்டியவன் தந்தைக்கே உபதேசித்த
ஆதித்தன் ஒளி இறைஞ்சி வேண்டி நிற்கும்
        ஐயனவன் திருவடிகள் சென்னி வைப்பாம்.


தீர்த்தத்தில் நனைந்தடியார் தீரா நின்ற
        தெருட்டுகிற வினை தீர்த்துத் தெளிவு கொள்வர்
பார்த்தந்த முருகனையே பார்த்துப் பார்த்து
        பழ வினைகள் தீர்ந்திடவே பக்தி கொள்வர்
பேர்த்தன்பர் துயரமெலாம் தீர்க்கும் வேலை
        பெருமுருகன் என்றேதான் பேணிக் கொள்வர்
ஆர்த்தந்த முருகன் தேர் ஏறும் காட்சி
        அவனியிலே கண்டார்க்கு முத்தி நல்கும்.
                            ✿
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.