இந்துக்கோயில்களில் மிருகபலி ?
சர்ச்சைக்களம் 22 Apr 2016
உ
அரசியல்களத்தில் இதென்ன சமயக்கட்டுரை என்று,
காரணம் இருக்கிறது.
அண்மைக்காலமாக இம் மிருகபலி விடயம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாலும்,
விபரமற்ற பலபேர் இவ்விடயம் பற்றி,
கருத்துக்களை தம் இஷ்டத்திற்கு வெளியிட்டு வருவதாலும்,
இதுபற்றிய உண்மை நிலையை அனைவரும் அறிதற்காய்,
இம்முறை அரசியல்களத்தில்,
இந்துக்கோயில்களில் மிருகபலி பற்றி ஆராயலாம் என நினைக்கிறேன்.
☛☛☛
இந்தவிடயத்தில்,
சமய நிறுவனங்கள்,
அந்தணர்கள்,
அரசியல்வாதிகள்,
கல்வியாளர்கள் எனப் பலரும்,
தமது அருள் உள்ளத்தைக் காட்ட எண்ணி,
இப்பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதாய்,
உண்மையை அறியாமல் தெளிவின்றி,
பல கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
☛☛☛
ஆனால் இந்துமதத்தில்,
மிருகபலி சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பது பற்றியும்,
இந்து ஆலயங்களில் இன்று நடக்கும் மிருகபலி சரியானதா? பிழையானதா? என்பது பற்றியும்,
இவர்களில் யாரும் இதுவரை தெளிவுபடச் சொன்னதாய்த் தெரியவில்லை.
அதுபற்றிய உண்மை நிலையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம்.
இந்துசமயம் எனும் பெயரால் குறிக்கப்படுகிற நம் சைவசமயம்,
மிருகபலியை ஏற்கிறதா? இல்லையா? அறியப் புகுவோம்.
☛☛☛
நம் சைவசமயத்தின் முதல்நூல் வேதமே.
ஆனால் நம் சைவ ஆலயங்களின் அமைப்பு முறைகள்,
வழிபாட்டு முறைகள் பற்றியும்,
சைவ தத்துவமாகிய சைவசித்தாந்தம் பற்றியும்,
தனித்து வகுத்துத் தருபவை சிவாகமங்களேயாம்.
அதனால் சைவத்திற்கு வேதம் பொதுநூல் என்றும்,
ஆகமம் சிறப்புநூல் என்றும் கூறப்படுகின்றன.
☛☛☛
இங்கு சிறப்புநூல்கள் என்பதற்கு,
சிறந்த நூல்கள் என்று,
தெளிவில்லார் பலர் பொருளுரைக்கின்றனர்.
அஃது தவறாம்.
இங்கு சிறப்பு என்பதற்கு,
தனித்துவமான என்பதே பொருள்.
B.A. தமிழ்ச்சிறப்பு என்பதற்கு,
B.A. வகுப்பில் இவர் தமிழைத் தனித்துத் தேர்ந்து கற்றவர்,
என்பது போலவே இதுவுமாம்.
☛☛☛
வேதமே சைவத்திற்கும் முதல்நூல்.
சைவத்திற்கான தனித்த வழிபாட்டு விடயங்களை,
வகுத்துத் தருவதனாலேயே,
ஆகமங்கள் சைவத்திற்காம் சிறப்புநூல்கள் எனப்பட்டன.
எனவே நம் சைவமும்,
வேதத்தை அங்கீகரித்தே ஆகமத்தை அங்கீகரிக்கும்.
‘வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு’ என்றும்,
‘வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு’ என்றும்,
‘வேதமொழியர் வெண்ணீற்றர்’ என்றும்,
பல இடங்களில் இவ்வேதங்களை,
நம் திருமுறைகள் சிறப்பித்து உரைக்கின்றன.
☛☛☛
இவ்வேத வழிபாடே வேள்விகளை வகுக்கிறது.
இவ்வேள்விகளை வடமொழியில் ‘யக்ஞம்’ என்பர்.
நம் வேதங்கள், ஒருவன் செய்யவேண்டிய வேள்விகளை,
இருபத்தொன்றாய் வகுத்திருக்கின்றன.
பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், சோம யக்ஞம் என்று பிரிக்கப்படும்.
இந்த வேள்விப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும்,
ஏழேழு வீதமாய் மொத்தம் இருப்பத்தியொரு வேள்விகள்,
சொல்லப்பட்டிருக்கின்றன.
இவற்றில் பாக யக்ஞம் என்று சொல்லப்படும்,
ஏழு வேள்விகளிலும் மிருகபலி இல்லை.
ஹவிர் யக்ஞம் என்று சொல்லப்படும் ஏழில்,
முதல் ஐந்திலும் மிருகபலி இல்லை.
ஹவிர் யக்ஞத்தின் ‘நிரூடபசுபந்தம்’ என்ற,
ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் மிருகபலி ஆரம்பிக்கிறது.
சோம யக்ஞத்தில் சோமபானம் (அக்காலத்தில் சொல்லப்பட்ட மது)
படைக்கப்படவேண்டும் என்றும் வேதம் வகுத்திருக்கிறது.
மொத்தத்தில், வேதத்தில் சொல்லப்பட்ட இருபத்தியொரு யாகங்களில்,
ஒன்பது யாகங்களில் மட்டுமே மிருகபலி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை,
நாம் அறிதல் வேண்டும்.
(வேத யாகங்கள் பற்றிய விடயங்களை காஞ்சி மடாதிபதி சந்திரசேகரசரஸ்வதி சுவாமிகள்,
தனது தெய்வத்தின்குரல் நூலில் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.)
☛☛☛
யாகங்களில் கொடுக்கப்படும் மிருகபலியை,
வேதம், பசுபலி என்றே உரைக்கிறது.
வடமொழியில் பசு என்ற சொல்லுக்கு மாடு என்று மட்டும் அர்த்தம் இல்லை.
அச்சொல் அனைத்து மிருகங்களையும் குறிக்கும் பொதுவான சொல்லாம்.
☛☛☛
மேற்குறிப்பிட்ட யாகங்களைச் செய்யும் அந்தணர்கள்,
வேள்வியில் அவிசாய்க் கொடுக்கப்படும்,
மிருகங்களின் தசையின் ஒருபகுதியையும்,
சோமபானத்தின் ஒரு கூறையும்,
யாகப் பிரசாதமாய் உண்ணவேண்டும் என்றும் வேதங்கள் சொல்கின்றன.
ஒருகாலத்தில் மாமிசம் புசிப்பதற்காகவும், மது உண்பதற்காகவும்,
அந்தணர்கள், தாமே மேற்படி யாக ஒழுங்குகளை வகுத்துக் கொண்டனர் என்ற,
குற்றச்சாட்டும் இருக்கவே செய்திருக்கிறது.
ஆனால் ஒழுக்கமும், பக்தியும்,
வேதங்களில் ஆழ்ந்த அறிவும் நிறைந்திருந்த சான்றோர்கள்,
மேற்படி யாகங்களின் விதிகளை,
வேதவிதிகளாகவே ஏற்று அங்கீகரித்தனர்.
☛☛☛
இக்காலத்தில் இச்செய்திகளைப் பதிவு செய்யவே பயமாயிருக்கிறது.
‘சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்னுமாப்போல,
ஏற்கனவே மது, மாமிசம் உண்ண விரும்பி நிற்கின்ற ஒரு சில அந்தணர்கள்,
நான் மேற்சொன்ன விடயங்களை,
தம் பலயீனங்களுக்கான பிரமாணங்களாய்ப் பயன்படுத்தி,
அவர்தம் பாவத்தில் என்னையும் பங்காளியாய் ஆக்கிவிடுவரோ? என,
எனது மனம் அஞ்சி நிற்கிறது.
ஆயினும் கட்டுரைத் தேவைக்காக,
இவற்றை இங்கே உரைக்கவேண்டியிருக்கிறது.
☛☛☛
இங்ஙனமாய் நமது சமயத்தின் முதல் நூலான வேதம்,
மிருகபலியை ஏற்றுக்கொண்டிருப்பதை,
நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.
அதனை அறியாமல் நம் சமயம் மிருகபலியை ஏற்கவில்லை என்று,
சைவத்தைப் பெருமைப்படுத்துவதாய் எண்ணி,
பலர் தவறாக உரைத்து வருகின்றனர்.
அவர்தம் உரை பொய்யுரையாம்.
வேதக் கருத்தை மறுக்கும் உரிமை,
நம்மவர் எவர்க்கும் இல்லை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.
☛☛☛
நம்வேதங்கள்,
வேள்விகளில் மூன்று விடயங்கள் அவசியம் என வலியுறுத்துகின்றன.
மந்திரம், தேவதை, ஹவிஸ்(தேவர் உணவு) என்பனவே அவையாம்.
மந்திரத்தை வாயால் சொல்லி,
தேவதையை மனதால் தியானித்து,
ஹவிஸை உடலால் ஆகுதியில் செலுத்தவேண்டும் என்று வேதம் சொல்கிறது.
இதன் மூலம் மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒன்றியே,
யாகம் செய்தல் அவசியம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
குறித்த தெய்வத்திற்கான வேதமந்திரத்தை அட்சர சுத்தமாய் உச்சரித்து,
குறித்த தெய்வத்தை மனதில் அசைவின்றி தியானித்த பின்பே,
மிருகபலியை அக்கினியில் செலுத்தவேண்டும் என்பதே வேதவிதி.
அங்ஙனம் செய்தால் அவ்வேள்வி உடன் பயன்தருமாம்.
☛☛☛
இதையொத்த மிருகபலிகள் பண்டுதொட்டே வழங்கி வந்திருக்கின்றன.
திருமுருகாற்றுப்படையில் குறவர்கள்,
மிருகபலியிட்டு முருகனை வழிபட்டதாகச் செய்தி வருகிறது.
சிறுதினை மலரொடு விரையி
மறியறுத்து வாரணக்கொடியொடுவயின் படநிறீஇ
ஆனால் அப்பலியிலும் குறமகள் மனதால் முருகனைத் தியானித்து,
வாக்கால் மந்திர உச்சாடனம் செய்து பின்னரே பலியிடுவதாக,
சொல்லப்பட்டிருக்கிறது.
☛☛☛
நெய்யொடு ஐயவி அப்பி ஐது உரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்(டு) உடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கெழுவிடைக்
குருதியொடு விரைஇத் தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து
நெய்யொடு, வெண் சிறுகடுகைக் கலந்து
கோயில் வாயில்படி முதலிய இடங்களில்,
காவல் சிறக்க குறமகள் ஒருத்தி பூசுகின்றனள்.
கோயிலுக்குரிய பணியைச் செய்யும் போது,
மெல்ல மந்திரங்களை உரைத்தவாறு,
வணக்கத்தோடு அவள் செயற்படுகின்றாள்.
மலர்களைத் தூவுகின்றாள்.
இரண்டு வெவ்வேறு நிறமுடைய ஆடைகளை,
ஒன்றன் மேல் ஒன்றாக உடுத்திக்கொண்டு,
சிவந்த நூலினை முன் கையில் காப்புநாணாக அணிந்து கொண்டு,
வெண்மையான பொரியை பலியாகத் தூவுகிறாள்.
பின்னர் மிக்க வலிமை கொண்ட,
பெரிய கால்களை உடைய கொழுத்த,
ஆட்டுக்கிடாயின் இரத்தத்தோடு கலந்த,
தூய வெள்ளை அரிசியையும்,
பிற பலிப்பொருள்களையும் முருகன் முன் வைத்து,
மஞ்சளுடன் பல வாசனைப் பொருட்கள் கலந்த கலவையை,
ஆங்காங்கு குறமகள் தெளிக்கிறாள் என்பது,
மேற்குறிப்பிடப்பட்ட திருமுருகாற்றுப்படைப்பாடலின் பொருளாம்.
☛☛☛
இப் பாடல் பகுதியின் ஈற்றில்,
இவ்வேள்வியைச் செய்த இடத்திலும்,
முருகன் உறைகிறான் என்று கூறுவதன் மூலம்,
இவ்வேள்விப்பயன் உண்டாயிற்று எனக் கூறி,
இஃதும் வேதவேள்வியோடு ஒத்த வேள்வியாம் என,
நக்கீரர் உறுதி செய்கிறார்.
☛☛☛
நான் அறிந்தவரையில்,
மேற் சொன்னவகையில் உடன் பயன்தரும்,
வேதவேள்விகளைச் செய்யவல்ல அந்தணர்கள்,
இன்று நம்மத்தியில் இல்லை என்றே கருதவேண்டியுள்ளது.
சிலகாலத்திற்கு முன்பு யாழில்,
புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் ஒன்றின் போது,
அவரது ஆயுள் நீட்சிக்காக சில அந்தணர்களால்,
நல்லூர்ச்சிவன் கோயிலில் ஆயுசு ஹோமம் ஒன்று நடத்தப்பட்டது.
அவ் ஹோமம் நடத்தப்பட்டு ஒருசில ஆண்டுகளுக்குள்ளாகவே,
அவர் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
☛☛☛
இன்று நாம் பேணிவரும் சைவப் பண்பாட்டிற்கு,
மேற்சொன்ன மிருகபலி வேள்விகள் பொருத்தமற்றவையுமாம்.
நாம் மிருகபலியுடன் கூடிய,
வேதவேள்விகளைத்தான் செய்யவேண்டும் என்பதும் இல்லை.
வேதத்தில் மிருகபலியற்ற பன்னிரண்டு வேள்விகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தும் நாம்,
தெய்வங்களைத் திருப்தியுறச் செய்யலாம் என்பதை அறிதல் அவசியம்.
☛☛☛
இன்று சில ஆலயங்களில் வேள்வி என்ற பெயரால் நடத்தப்படும் மிருகபலிகள்,
பெரும்பாலும் வெறும் மிருகவதைகளேயாம்.
தமது மாமிசம் உண்ணும் இச்சைக்காக,
தெய்வத்தைக் காரணமாக்கி,
வகை, தொகையின்றி மிருகங்ளைப் பலிகொடுத்து,
இரத்தவேட்டையாடும் இத்தகு மிருகவேள்விகளை,
எக்காரணம் கொண்டும் வேதவேள்விகளோடு ஒப்பிடுதல் பெருந்தவறாம்.
☛☛☛
இனி, மேற் சொன்ன வேதவேள்விகளும்,
இன்று வேள்வி என்ற பெயரால்,
ஆலயங்களில் நடக்கும் மிருகவதையும்,
ஒன்றா என ஆராய்தல் வேண்டும்.
இன்றைய ஆலயங்களில் நடக்கும் மிருகபலி வேள்வி,
வேதங்கள் உரைக்கும் வேள்விகள் அன்றாம் என்பது நிச்சயம்.
அங்ஙனமாயின் இன்றைய இவ்வேள்வி முறை,
பிறந்தது எங்ஙனம் எனக் கேள்வி பிறக்கும்,
அதையும் சொல்கிறேன்.
☛☛☛
ஆலயங்களில் இறைவனை மகிழ்விக்கவென இசை வழங்கும்,
ஆற்றல் மிக்க நாதஸ்வர வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்டுவிட்டு,
சிறிய பிள்ளைகள் வீட்டிற்கு வந்து பூவரசம் இலையில்,
குழல் செய்து ஊதுமாப்போல,
வேதவேள்விகளைப் பார்த்துவிட்டு,
அதன் உட்பொருள் அறியாத சில பாமரர்கள்,
வெறுமனே மிருகங்களை பலியிட்டு,
இறைவனை மகிழ்விக்கலாம் என நினைந்ததன் விளைவாய்,
ஆரம்பிக்கப்பட்ட மரபே இன்றைய ஆலயங்களில் நடக்கும் மிருகவதையாம்.
☛☛☛
வேதவேள்விகளை மேற்கோளாய்க் காட்டி,
இன்று தம் இச்சைக்காய்,
வேள்வி என்ற பெயரில் மிருகவதை செய்வோர்,
குறித்த மந்திரத்தால் குறித்த தேவதையைப் பிரார்த்தித்து,
வேதம் வகுத்த முறைப்படி அக்கினியில் அவிசைச் சேர்ப்பதில்லை.
இது தேவதை, இது அதற்குரிய மந்திரம்,
இதுவே வேள்வி செய்யும் முறை என்பவை பற்றி ஏதும் அறியாமல்,
பக்தியின்றி வெறுமனே மிருகங்களைக் கொல்வது நிச்சயம் வேத வேள்வியாகாதாம்.
அவ்வேள்விகளை நம் இந்துமதம் ஏற்கமாட்டாது என்பது திண்ணம்.
☛☛☛
நீதிமன்றிற்குப் பயந்து,
வெட்டப்படும் மிருகங்களின் மாமிசத்திற்கு,
அரச அலுவலர்களைக் கொண்டு,
சுகாதார முத்திரை குத்துவிப்பதும்,
அந்த மாமிசங்களைப் பங்கு போட்டு விற்பதும்,
அம்மாமிசங்களை உண்பதன் முன் மது உண்டு களிப்பதும்,
வேதத்தின் பெயரால் செய்யப்படும் மாபாதகங்களேயாம்.
☛☛☛
அன்பேசிவம் என்று சொன்னது நம் சமயம்.
எனவே பக்தியின்றிச் செய்யப்படும் களியாட்டமான மிருகபலிகளை,
உடன் நிறுத்துவது அவசியத்திலும் அவசியமாம்.
பாரம்பரியமாய் நாங்கள் செய்து வந்த வேள்வியை,
எப்படி நிறுத்துவது? என்று ஒருசிலர் கேள்வி எழுப்பக்கூடும்.
அவர்களுக்கான விடையை,
நம் வள்ளுவக்கடவுளார் அருமையாய்த் தந்திருக்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று
என்பது அவர் காட்டும் புதியவழி.
அவிசுகளைக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட,
ஒன்றினது உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது நன்றாம் என்பது,
இக்குறளுக்காம் பொருள்.
☛☛☛
வள்ளுவரின் இக்குறளைப் படித்துவிட்டு ஒருசிலர்,
வள்ளுவரே வேள்விகளை நிராகரிக்கிறார் என்று,
சொல்லத் தலைப்படுவர். – அதுவும் தவறாம்.
வேதவழி வந்த கருத்துக்களை ஏற்றுரைக்கும் வள்ளுவர்,
நிச்சயம் வேள்விகள் தவறானவை என்று உரைத்திருக்கமாட்டார்.
ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட,
ஓர் உயிரைக் கொல்லாமல் விடுவது நல்லது என்ற அவரது ஒப்பீட்டில்,
வேள்விகளும் நல்லவையே எனும் பொருளும் பொதிந்திருக்கிறது.
☛☛☛
அதைவிட இது நல்லது என்று உரைக்கையில்,
இரண்டு நல்லவைகளையே நாம் ஒப்பிடுவது வழக்கம்.
வடையை விட பாயாசம் நன்றாய் இருக்கிறது என்று சொல்வோமே தவிர,
குப்பையை விட பாயாசம் நன்றாயிருக்கிறது என்று எவரும் சொல்வதில்லை.
வடையை விட பாயாசம் நன்றாய் இருக்கிறது என்று சொல்கையில்,
வடையும் நன்றாய் இருக்கிறது என்ற பொருள்,
தானாய் வெளிப்படுகிறதன்றோ! அதுபோலத்தான்,
வேள்வியை விட கொல்லாமை நன்று என்ற வள்ளுவரின் கூற்றில்,
வேள்வியும் நன்று என்ற பொருள் அடங்கியிருப்பதை நாம் உணரல் வேண்டும்.
எனவே வள்ளுவர் வேதவேள்விகளை நிராகரித்தவர் அல்லராம்.
☛☛☛
தியானமோ மந்திரமோ முறைப்படியான வேள்வியோ இன்றி,
தேவுக்களைப் பிரீதி செய்யவென,
இதுவரை செய்து வந்த பாரம்பரியமான வேள்வியை,
நாம் செய்தே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிப்போர்க்கு ஒன்று உரைப்பேன்.
அத்தகையோர் அவ்வேள்வியை விட உயர்ந்ததாக,
திருவள்ளுவரால் சொல்லப்படும்,
கொல்லாமை என்னும் வேள்வியைச் செய்து,
தாமும் திருப்திப்பட்டு தம் குலதெய்வத்தையும் திருப்திப்படுத்தல் கூடுமாம்.
இதுவே அவர்களுக்குரிய சிறந்த மாற்று வழியாம்.
☛☛☛
மாமிசம் உண்ணும் தம் ஆசைக்காக வேள்வி செய்வோர்,
ஒருபுறம் வேதத்தின் பெயரால் நம் சைவத்தை இழிவுபடுத்தி நிற்க,
அது தவறென்று உணர்ச்சிவயப்படுவோர் பலரும் கூட,
தாம் கொல்லாமை விரதத்தை மேற்கொள்ளாதவர்களாய் இருந்து கொண்டே,
மேற்படி குற்றத்தைக் கண்டிக்க முயல்கின்றனர்.
இது வேடிக்கையிலும் வேடிக்கை.
☛☛☛
தம் உணவாசைக்காக மிருகபலியை,
வேறு வேறிடங்களில் செய்வித்துக் கொண்டும்,
அவற்றின் மாமிசங்களைப் புசித்துக் கொண்டும்,
மற்றொரு புறம்,
ஆலயத்தில் மட்டும் மிருகபலி வேண்டாம் என்று,
வாதிட்டு நிற்கும் இப் பொய்ச்சைவர்கள் தாமும்,
முன்னை மிருகபலியிடுவோர் தரத்திலேயே உள்ளவராம்.
கொல்லாமை விரதத்தை மேற்கொண்டாரே,
ஆலயங்களில் நடக்கும் மிருகபலியைக் கண்டிக்கும்,
உரிமை பெற்றவராவர் என்பது உறுதி.
☛☛☛
நம் சமயத்தின் மூலநூலான,
வேதம் வகுத்த வேள்விகளின் தாற்பரியம் அறியாது,
ஆலயங்களில் தம் ஆசைக்காக,
மிருகபலியிட்டு அட்டூழியம் செய்து கொண்டு,
அவ் அநியாயப்பலிகளுக்கு வேள்வி எனப் பெயரிட்டு,
வியாபாரம் நடத்துவோர் ஒருபுறமும்,
வீட்டிலும், ஹோட்டல்களிலும் தேடித்தேடி மாமிசம் உண்டு கொண்டு,
பலி என்ற பெயரில் ஆலயங்களில் பாவம் நடப்பதாய்ப் பதறுவோர் ஒருபுறமுமாக,
வேடிக்கை மனிதர்களால் நம் வேதமதம் வீணாகிக் கொண்டிருக்கிறது.
☛☛☛☛☛☛☛☛☛