இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1

இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன்  அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1
 
லகுய்யக் காவியம் செய்தவன் கம்பன்,
அவனது இராம காவிய பாயிரப்பாடலுள் ஒன்று,
அருமை மிகு இரசனைக்குரியது.
கடவுள் வாழ்த்தினுள் ஒன்றாய் அமைந்த அப்பாடலை,
உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தவிர்ந்த,
மற்றைப் பதிப்பாசிரியர்கள் பலரும்,
பிற்சேர்க்கையினுள் கொண்டு சேர்த்தனர்.
தம் ஐயக்கருத்தால்,
பிற்சேர்க்கையில் அவர் அமைத்த அப்பாடலை,
முதலில் அறிவாம்.

 

“நாராயணாய நம” என்னும் நன்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராறு மேனி கருணாகரமூர்த்திக்கு
ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!
***
ஏற்புடைக் கடவுள் வாழ்த்து,
வழிபடு கடவுள் வாழ்த்து என,
கடவுள் வாழ்த்து இருவகைப்படும்.
பாடப்புகும் பொருளுக்கியைந்த கடவுளை வாழ்த்துதல்
ஏற்புடைக் கடவுள் வாழ்த்தாம்.
நூலின் வெற்றி நோக்கி புலவன் தான் வழிபடும் கடவுளை வாழ்த்துதல்
வழிபடு கடவுள் வாழ்த்தாம்.
மேல் கடவுள் வாழ்த்து,
ஏற்புடைக்கடவுள் வாழ்த்தாகவும்,
வழிபடு கடவுள் வாழ்த்தாகவும்,
ஒருமித்து அமைந்த சிறப்புடையது.
***

இவ் அரிய பாடல்,
இலக்கிய இன்பம் பெற நினைவார்க்கு விருந்தாய் அமைவது,
இறை வழிபாட்டின் நுண்மையை உரைத்து நிற்பது,
கம்பனின் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவது,
இப் பாடலில் கம்பன் பொதித்து வைத்த,
உயர் கருத்துக்களை உள் நுழைந்து காண்பாம்.
***
 
தான் வணங்கும் திருமாலின் திருவடிகளுக்கு,
ஏதேனும் ஒரு பொருளை ஆராதனை ஆக்க,
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மனம் விரும்புகிறது.
எப்பொருளை அவன் திருவடிகளுக்கு அர்ப்பணித்தால்,
நெடுமாலின் மனம் மகிழும் என,
கம்பன் ஆராயத்தலைப்படுகிறான்.
ஏதேனும் ஒரு பொருளை மற்றவர் மனம் மகிழ அளிப்பதானால்,
வழங்கப்;படும் அப்பொருட்காம் தகுதி எதுவாதல் வேண்டும்?
அறிஞனாம் கம்பன் ஆழ்ந்து சிந்திக்கிறான்.
உள்ளது பெறுவதில் எவர்க்கும் உவப்புத் தோன்றா.
இல்லது கிடைக்கிலோ எவர்க்கும் இதயம் உவக்கும்.
இவ்வியல்புணர்ந்த கம்பன்,
திருமாலுக்காம் ஆராதனையைத் தெளிய முற்படுகிறான்.
அவன் சிந்தனை தொடர்கிறது.
***
 
செல்வத்தால் மகிழாதார் செகத்தில் உண்டோ?
அறிவில் எண்ணம் உதிக்க ஆனந்திக்கிறான் கம்பன்.
பொன், மணி, வைரம், வைடூரியம் என,
இவற்றுள் எவற்றை, எவ்வளவு திருமாலுக்குக் கொடுக்கலாம் என,
கணக்கிட முனைந்த கம்பனின் அறிவு திடுக்கிடுகிறது.
செல்வம் முழுவதற்கும் அதிபதியாய்த் திகழ்பவள்,
செந்தாமரைத் திருவாம் இலட்சுமியே,
அவ் அன்னை, ஐயன் தன் அகத்தில் அமர்ந்திருப்பவள்.
அங்ஙனம் இருக்க, அவ் ஐயனுக்கு ஆராதனையாய்,
எவ்வளவு செல்வத்தைத் தரினும்,
அவன் உள்ளம் உவக்குமா?
இல்லது கிடைத்தாளன்றோ இதயத்தில் ஏற்றமுண்டாகும்.
நினைந்த கம்பன்,
திருமாலின் திருவடிகளுக்கு,
ஆராதனையாய் பொருள் கொடுக்கும் எண்ணம்,
புல்லியது என உணர்ந்து,
அக்கருத்தினைக் கைவிடுகிறான்.
***
 
கம்பனின் சிந்தனை தொடர்கிறது.
பெரியதோர் நிலத்தை,
ஐயன் தன் ஆலயத்திற்கு அர்ப்பணித்தால் என்ன?
மீண்டும் சிந்திக்கிறது கம்பனின் மனம்.
மறுபடியும் அவனது மனதில் மருட்சி.
வாமனனாய் அவதரித்து, மாபலிச்சக்கரவர்த்தியிடம்,
மூவுலகையும் ஈரடியால் அளந்து பெற்றவனன்றோ அத்திருமால்,
ஏலவே இவ் அண்டசராசரம் முழுதும் அவனுக்குரியதாய் இருக்க,
அறியாமையால் நான் கொடுக்கும் சிறு நிலத்தால் அவன் அகம் மகிழுமா?
இல்லது கிடைத்தாளன்றோ இதயத்தில் ஏற்றமுண்டாகும்.
கம்பனின் மனதில் மீண்டும் மயக்கம்.
***
 
புதியதோர் எண்ணம் உதிக்க,
கம்பன் மீண்டும் உற்சாகமாகிறான்.
செகம் வியக்கும் சிறந்ததோர் பட்டினை,
ஐயன் தனக்கு ஆராதனையாய் தந்தால் என்ன?
அக்கருத்தும் இதயத்தில் நிற்க மறுக்கிறது.
பட்டுப்பீதாம்பரதாரி என்பது அவன் நாமங்களில் ஒன்று.
அவனிடம் இல்லாத பட்டினை, ஏற்றமுற நாம் வழங்குதல் கூடுமா?
தேவுக்கள் தந்த திகழும் பட்டுக்களின் இடையே,
மானிடப்பட்டு மதிப்புறுமா?
இல்லது கிடைத்தாளன்றோ இதயத்தில் ஏற்றமுண்டாகும்.
கம்பன் மனதில் மீண்டும் கலக்கம்.
***
 
மலர்மிசை ஏகும் அம் மணிவண்ணனுக்கு,
நல்லதோர் மாலையை கொடுத்தால் என்ன?
அதுவும், ஐயன் விரும்பும் துளசி மாலையாய் இருந்தால்?
நெடுமால் நெகிழானா?
பசுந்துளபமார்பன் என்பது அவன் பட்டப்பெயர்.
ஏலவே மாலைகள் நிறைந்து கிடக்கும் அவன் மார்பில்,
இவ் ஏழையிடும் மாலை ஏற்றமுறுமா?
இல்லது கிடைத்தாளன்றோ இதயத்தில் ஏற்றமுண்டாகும்.
அறிவு சோர கம்பன் அயர்ந்து போகிறான்.
***
 
இறையிடம் இல்லாததொன்றுண்டா?
யாதுமாகி நிற்கும் ஐயனிடம் ஏது இராது?
காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடும்,
ஏந்தலிடம் இல்லாததொன்றும் இருக்குமா?
மாதவன் உவக்க மண்ணில் பரிசுண்டா?
பூதளம் முழுவதும் அவன் உடமையன்றோ?
ஏதவன் திருவடிகற்கேற்ற பரிசு இங்கு?
***
 
கம்பன் மனதில் பெரும் சலிப்பு,
ஆயிரமாய்க் கவி செய்யும் ஆற்றல் இருந்தும்,
ஐயன் அடிகளுக்காம் அரிய ஆராதனை ஒன்றைக்கண்டு பிடிக்க,
அவ் அறிவு துணை செய்யவில்லையே என அயர்கிறான் அவன்.
வித்தகனாய்த் தனை நினைந்த வீறு போக,
தோற்றுத் துவண்டு, துடிதுடித்த அவன்,
தன் அறியாமை நினைந்து கவல்கிறான்.
திடீரென கம்பன் மனதில் ஒரு வெளிச்சம்.
அறிவொடுங்கி தோற்றதாய் நினைக்க,
அறியாமையே அறிவாகி, ஏற்றமுறும் பதில் இதயத்துதிக்கிறது.
அறிதொரும் அறியாமை கண்டான்.
அறியாமை உணர அறிவு கண்டான்.
அவன் வினாவுக்கு விடை தானாய் வெளிப்படுகிறது.
திருமால் தன் திருவடிகளுக்கு காணிக்கையாக்க,
அத்திருமாலிடமே இல்லாத ஒன்று கம்பன் அறிவில் உதிக்கிறது.
***
 
திருமாலிடம் இல்லாததை அறிந்தால் மட்டும் போதுமா?
அது தன்னிடம் இருக்க வேண்டாமா?
ஆராய, கம்பன் மனம் அளவின்றி உவக்கிறது.
தன் அகக் கருணையின்; காரணமாய்,
கார்முகில் வண்ணத்தை புறத்திலும் கொண்ட நாராயணனின்,
பாராலும் பாதத்தைப் பணியும் வகையறிந்து,
ஏராளமாய் உவக்கின்றான் எழிற்க் கம்பன்.
அவன் இதயத்துதித்த அவ்விடைதான் ஏது?
நாராயணனிடம் துலியும் இல்லாத,
நம்மிடம் நிறைந்து கிடக்கின்ற அப்பொருள் தான் ஏது?
அறிந்து நாமும் ஆனந்திப்போம்.
***
 
தன் அறியாமை நினைந்து வருந்திய கம்பன் மனத்தில்,
திடீரென ஒரு வெளிச்சம்.
வருத்திய விடயமே வரமாய் மாறுகிறது.
தன் அறியாமை நினைந்து வருந்திய கம்பன் மனதில்,
திடீரென ஒரு கேள்வி.
இவ் அறியாமை இறைவனிடம் உண்டா?
அறியாமை எனும் இருள் அணுகத்தானும் முடியாத,
ஒளியல்லவா அவ் ஒப்பற்ற இறைவன்.
ஒளியில் இருள் உண்டா?
அருளில் மருள் உண்டா?
நிறைவில் குறையுண்டா?
குறைவற்ற நிறைவல்லவா அவன் குணச்சிறப்பு.
எனவே, இறைவனிடம் அறியாமை துளியளவும் இருக்க வாய்ப்பில்லை.
இறையை நினைந்த கம்பன், பின் தன்னை நினைக்கிறான்.
அறிய அறிய அறியாமையுறும் அசடரல்லவா மானுடர்.
குறை அறிவே அவர்தம் குணமாய்க் கிடக்கிறது.
ஏற்றம் மறந்து இருளில் கிடக்கும் இழிவே அவர்தம் தெளிவு.
அம் மானுடருள் ஒருவனான தன்னிடமோ,
அறியாமை அளவற்று நிறைந்து கிடக்கிறது.
இறைவனிடம் இல்லாததும்,
தன்னிடம் நிறைந்து கிடப்பதுமான,
அறியாமையே இறைவன் திருவடிக்காம் சிறந்த ஆராதனை என,
அறிந்;து ஆனந்திக்கிறான் கம்பன்.
***
 
கம்பன், தனது அறியாமையை அறிய,
அவனது உண்மை அறிவு சிறக்கிறது.
அந்த ஞானத் தெளிவால்,
தன் அறியாமையையே இறைவன் திருவடிகளுக்கு ஆராதனையாக்கி,
உண்மை ஒளியுற்று உவக்கிறான் அவன்.
இல்லாதது கிடைத்ததில் இறைவர்க்கும் மகிழ்ச்சி,
உள்ள குறை  தொலைந்ததில் உயிர்க்கும் நிறைவு.
வித்தகக் கம்பன் தன் விளக்கத்தால்,
சத்தியம் உணர்ந்து சந்தோஷிக்கிறது நம் மனம்.
இதோ மீண்டும் அப்பாடல்.

“நாராயணாய நம” என்னும் நன்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராறு மேனி கருணாகரமூர்த்திக்கு
ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!
******
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.