இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'

இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'
 
லகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி.
அவன்முன் சிதறிய சில ஓலைகள்.
அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள்.
ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை.
பழைய அவ்வோலைகளை,
படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு.
நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனும் நண்பனின்
வேண்டுகோளுக்காய்,
அப்பணியேற்று,
வெளித் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான் அவன்.
சுதந்திர வேள்வியில் கலந்த பாரதி,
ஆங்கிலேயரின் ஆணைக்கஞ்சி, சிறைபுகாமல் தப்ப,
புதுவை புகுந்திருந்த நேரமது.
பொழுதைக் கழிக்க,
படியெடுக்கும் வேலையை ஏற்றிருந்தான்.
உபநிடதம் தந்த உந்துதல்,
தமிழ் தந்த தத்துவ உணர்வு,
பிறவிகள் தந்த அனுபவம்,
இத்தனையும் ஒருங்குசேர,
தத்துவ விசார நிலையில் அவன் மனம்.
அவன் பார்வை முன்னிருந்த வீதியில் விழுகிறது.
 


அன்றொரு நாள் புதுவை நகர் தனிலே கீர்த்தி
அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா
என்ற பெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்
இராஜாராம் ஐயர் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்றாங்கண்
இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச் சாமி.
****

வீதியில் ஒரு குள்ளவடிவம்.
உடல் அதிகம் வளராத ஒரு விந்தை மனிதன்.
அழுக்குக் கந்தைகளை உடையாய் உடுத்தி நிற்கிறான்.
குழந்தைகளை, நாய்களைக் கண்டால் மட்டும்,
சிரித்து விளையாடுகிறான்.
மற்றவரைக் கண்டால் மௌனம்.
தலையெல்லாம் பரட்டை.
கண்களில் மட்டும் தெய்வஒளி.
யார் இவன்?
பைத்தியக்காரனா?
கண்களில் தெரியும் ஒளி, இல்லை என்கிறதே.
பின்னே?
வினாவெழும்ப,
வந்துபோன ஒரு சிலரிடம் பாரதி விசாரிக்கிறான்.
பித்தன் என்றனர் ஒரு சாரார்.
சித்தன் என்றனர் ஒரு சாரார்.
ஞானி என்றனர் ஒரு சாரார்.
பாரதிக்குக் குழப்பம்.
அவன் ஆன்ம அனுபவமோ,
இவனே குரு! இவனே குரு! இவனே குரு!
பற்று! பற்று! பற்று! என ஓலமிட்டது.
பற்றுவதாய் முடிவு செய்தான் பாரதி.
****

மற்றொருநாள்.
நடுப்பகலை அண்மித்த நேரம்.
பாரதி தனித்திருந்தான்.
வெயில் காரணமாய் வீதியில் ஆட்களில்லை.
ஓலை பார்த்து தலைநிமிர்த்திய பாரதிக்கு,
திடீரெனக் குரு தரிசனம்.
வீதியில் அதே குள்ளச்சாமி.
இன்று எப்படியும் அவர் அருளைப் பெற்று விடுவது என்று,
உறுதி கொள்கிறான் அவன்.
எழுந்தவன், குள்ளச்சாமியின் அருகிற்சென்று,
இறுக அவர் கையைப் பற்றுகிறான்.
புறம்புறந்திரிந்து சிக்கெனப் பிடித்த சீவனின் செயல்.
தனக்காக வந்தவரே இவர் என,
அவன் உள்ளம் சொல்கிறது.
விழிகொண்டு விழி நோக்குகிறான்.
அதன் ஒளிகண்டு உள்ளந் தடுமாற உரை தொடர்கிறது.
குருவை நோக்கிக் கேள்விக்கணைகள் பறக்கின்றன.
யாவன் நீ?
உனக்குள்ள திறமை என்னே?
யாது உணர்வாய்?
கந்தை சுற்றித் திரிவதென்னே?
தேவன்போல் விழிப்பதென்னே?
சிறியரொடும் நாய்களொடும் விளையாட்டென்னே?
பாவனையில் பித்தரைப்போல் அலைவதென்னே?
பரமசிவன் போல் உருவம் படைத்ததென்னே?
ஆவலுற்று நின்றதென்னே?

ஞானம் பெறாநிலையில் மோனம் சிதைத்து,
கேள்விகள் வெள்ளமாய்ப் பெருகுகின்றன.
குருவைக் கணிக்கச் சீடன் எடுக்கும் முயற்சி.
குருவின் ‘அளக்கலாற்றா அருமையும் பெருமையும்’
சீடனிடம் கேள்விகளைப் பெருக்குகின்றன.
குருவை உணர்தலின்றி அறிதல் எங்ஙனம்?
உபதேசம் கிடைத்தாலன்றி உணர்தல் கூடுமோ?
அறிவால் அறிந்துவிடலாம் எனும் அறியாமை,
பேச்சை விரிக்க,
பேச்சின் விரிவில் தன் அறியாமை உணர்கிறான் பாரதி.
எதைக் கேட்பது? எப்படிக் கேட்பது?
கேள்விகள் ஒன்றா இரண்டா?
ஐயத்துக்கும் முடிவு உண்டா?
சற்றுத் தெளிவு வர,
சரணடைகிறான்.
ஆரியனே!
தெரிந்ததெல்லாம் எனக்குணர்த்த வேண்டுமென்கிறான்.
அறிய முனைந்தவன் முடிவில் உணர முனைகிறான்.

அப்போது நான் குள்ளச்சாமி கையை
  அன்புடனே பற்றியிது பேசலுற்றேன்
அப்பனே! தேசிகனே! ஞானி என்பார்;
  அவனியிலே சிலர் நின்னைப் பித்தன் என்பார்
செப்புறு நல்லஷ்டாங்க யோகசித்தி
  சேர்ந்தவனென்றுனைப்புகழ்வார் சிலரென்முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்
  உத்தமனே! எனக்குநினை உணர்த்துவாயே.

‘யாவன்நீ? நினக்குள்ள திறமையென்னே?
யாதுணர்வாய்? கந்தை சுற்றித் திரிவதென்னே?
தேவன்போல் விழிப்பதென்னே? சிறியரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட்டென்னே?
பாவனையில் பித்தரைப்போல் அலைவதென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்ததென்னே?
ஆவலுற்று நின்றதென்னே? அறிந்ததெல்லாம்
ஆரியனே, எனக்குணர்த்த வேண்டுமென்றேன்.

அறிந்தவற்றை உணர்த்து எனும் பாரதியின் வேண்டுதலில்,
அவன் ஆத்ம அனுபவம் வெளிப்படுகிறது.
சீடத்தகைமை வெளிப்பட,
ஞானம் உணர்த்த வேண்டிநிற்கும் பாரதியை,
மேலும் சோதிக்க விரும்புகிறார் குள்ளச்சாமி.
****

பாரதியின் ஞானம் நோக்கிய பற்றும் விருப்பும் ஆர்வமும்,
எத்தகையது என அறிய முற்பட்டார் போலும் குரு.
பிடித்த கையை உதறி ஓட முயல்கிறார் குள்ளச்சாமி.
அறிவு தேடிய குருவா இவர்?
ஆன்மா தேடிய குருவன்றோ?
‘ஒளிசெய் மானுடம் ஆக நோக்கி’,
‘கல்லைப் பிசைந்து கனியாக்கி’,
‘அமுத தாரகைகள்,
எற்புத் துளைதொறும் ஏற்ற’வல்ல குருவை,
‘விட்டுடுதி கண்டாய்!’ என,
மேலும் விரைந்து பற்றுகிறான் பாரதி.
பற்றிய கை திருகி, ஓட முனைந்த அந்த ஞானி,
விடான் இவன் எனத் தெரிந்ததும்,
மேலும் விளையாட்டைத் தொடர்கிறார்.
சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை எனத்தெரிந்த பின்,
அருளுமாப்போல் ஒரு புன்னகை அவர் முகத்தில் வர,
கருணை செய்தார் குரு என நினைந்து,
கைவிட்டுக் காலில் விழுகிறான் பாரதி.
விட்டான் சீடன் என்றதும்,
அருகிருந்த வீட்டினுள் குரு ஓட,
பாரதி துரத்துகிறான்.
அருள் ஓட ஆர்வம் துரத்துகிறது.
ஞானம் ஓட அறிவு துரத்துகிறது.
பதி ஓடப் பசு துரத்துகிறது.
வீட்டின் கொல்லைப்புறம் பூட்டிக் கிடக்க,
கை அகட்டிக் குருவை நிறுத்தி விடுகிறான் சீடன்.

பற்றிய கை திருகியந்தக் குள்ளச்சாமி
பாய்ந்தோடப் பார்த்தான்; யான் விடவேயில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்
  தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
  வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.
****

விடாது பற்ற வரும் சீடனின் விருப்பை உணருகிறார் குரு.
ஆத்ம பசியின்றி யார் இங்ஙனம் தொடர்வார்?
வித்து இவனில் உண்டு.
விருட்சமென அதை வளர்க்க,
தத்துவங்கள் உணர்த்தின் தவறில்லை.
தீர்மானிக்கிறார் குரு.
மௌனப் பொருளறியும் மாண்பிருந்தால்; தானே,
அருவப் பொருள் உணர்ந்து ஆனந்திக்கலாம்.
ஆதலால்,
வார்த்தையின்றி உபதேசிக்க முடிவு செய்கிறார்
குள்ளச்சாமி.
பக்கத்தில்,
வீடு இடிந்த பாழும் சுவரொன்று நிற்கிறது.
குருவின் பார்வை அதில் விழ,
சீடனும் அதை நோக்குகிறான்.
இப்போது பார்வை மாறிப் பரிதியில் விழுகிறது.
சீடனும் அதை நோக்குகிறான்.
உச்சிவேளை.
பாவிப்பார் எவருமற்ற பாழுங்கிணறு.
அசையாத நீர்.
அதனுள்ளே சூரியனின் விம்பம்.
சூரியனைப் பார்த்து,
பின் கிணற்றில் விழும் அதன் விம்பத்தைப் பார்க்கிறார் குரு.
சீடனும் அதைப் பார்க்கிறான்.
உபதேசம் அறிந்தாயோ? குருவின் கண்கள் வினவ,
அறிந்தேன் என்கிறது சீடனின் கண்கள்.
கண்களாற்; கேட்ட குருவிற்கு,
கண்களாலேயே பதில் சொல்கிறான் பாரதி.
மௌன உபதேசம் உணர்ந்த சீடன் பெருமை கண்டு,
மகிழ்வெய்திக் குரு செல்கிறார்.
வேதாந்த மரத்தின் ஒரு வேரைக்கண்ட மகிழ்ச்சியில் சீடன்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனை யொன் றிருந்ததங்கே பரமயோகி
ஒக்கத்தன் அருள் விழியால் என்னை நோக்கி
  ஒரு குட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி
  அறிதிகொலோ எனக்கேட்டான் அறிந்தேன்என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான் யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.
****

தான் பெற்ற இன்பம் இத்தரணி பெற வேண்டும் எனும்
விருப்புடைய பாரதி,
இராமானுஜன் போல,
குரு உபதேசத்தையும்,
இக்குவலயத்திற்குக் கொடுக்க நினைக்கின்றான்.
குரு கைகாட்டி உரைத்த உபதேசத்தை,
உலகுக்குரைத்து உய்விக்கும் விருப்பு அவன் நெஞ்சில்.
தானுணர்ந்த தத்துவ ரகசியங்களை,
தமிழால் அள்ளிச் சொரிகிறான் அவன்.
மௌனத்தால் குரு உரைத்தது என்ன?
பாரதியின் கைபிடித்து அறிவோம் நாம்.
****

ஒவ்வோர் உடம்பிலும்,
இடகலை, பிங்கலை என இருமூச்சுகள் ஓடிக்கொண்டே
இருக்கின்றன.
ஓடி முடிந்து ஓயுமுன்,
அவற்றை சுழுமுனை எனும் கும்பகத்தில்,
யோக முயற்சியால் நிறுத்துக!
மண்ணின் இயல்பு பரவுதல்.
எத்துணை முயன்று அதை நேர் நிறுத்தினாலும்,
என்றோ ஒருநாள் இடிந்து அது பரவும்.
குட்டிச்சுவர் பார்.
இடியத் தொடங்கிய இயல்பு அறிவாய்.
இடியுமுன், இதனுள் எவரோ வாழ்ந்து முடிந்தது அறிவையோ?
அதுபோல் நின் பூதவுடம்பு குட்டிச்சுவராகுமுன்,
அதனுள்ளே சீவனை நிறுத்திச் சிவனை இருத்துவாய்!
குருவின் கண்கள் சொல்ல சீடனின் கண்களில் ஐயம்.
****

இறையை நிறுத்துதல் எங்ஙனம்?
எங்கோ இருப்பவன்,
எவரும் அணுகாப் பொங்கும் நெருப்பவன்,
அவனை அகத்துள் அகப்படச் செய்தல் ஆகுமா?
எவர்க்கு முடியும்? எங்ஙனம் முடியும்?
சீடனின் ஐயமுணர்ந்து,
குருவின் கண்ணுரை தொடர்கிறது.
****

அலையேதும் இல்லாது அடங்கிய நீரில்,
எங்கோ இருக்கும் சூரியவடிவம்,
ஒளியுடன் முழுதாய்ப் பொலிவுறத் தெரிவதை,
இக் கிணற்றுள் பார்ப்பாய்.
அலையிலாக் கிணற்று நீரில் ஆதவன் தெரிவான்.
எண்ணங்கள் நிற்க, உன்னுள் இறைவனும் தெரிவான்.
ஆணவம் அடக்கு!
பின்னால் ஆசைகள் அடக்கு!
ஆசைகள் அடங்க உந்தன் அகத்தினை அடக்கு!
உணர்ச்சிகள் இன்றிப்போக உளத்தினை அடக்கு!
மூச்சினை ஒழுங்கு செய்து முயன்றிடு!
பேசிய அந்த  நல்ல பேரின்பம் சித்தியாகும்.
உணர்வலை நின்றுபோனால் உள்ளத்தின் உள்ளே தெய்வம்,
தெளிவுறத் தெரியும்.
இதுவே தேசிகன் சொன்ன வார்த்தை.
****

பாரதி புரிந்துகொண்டான்.
பரிவுடன் குருதான் சொன்ன
வார்த்தைகள், கண்களாலே வாங்கியே தெளிவுகொண்டான்.
சிவமதைக் காண உந்தன் சிந்தைதான் அடங்க வேண்டும்.
உளமது அடங்க உந்தன் உரையெலாம் அடங்கிப்போகும்.
மனமது அடங்கிப்போனால் வார்த்தைக்கு வேலையில்லை.
வார்த்தைகள் அடங்கிப்போனால்?
மோனமே ஞான எல்லை.
பேசியே உண்மைகாணும் பேதைமை தொலைப்பாய்!
மோனமே ஞானம் ஈயும் முழுமையை உணர்வாய்!
கேள்விகள் நிறுத்தி உனையே விடையதாய் மாற்று!
எண்ணங்கள் விரியின் உன்னுள் கேள்விகள் எழும்பும்.
எண்ணங்கள் ஒடுங்கினாலோ கேள்விகள் முடியும்.
எண்ணங்கள் ஒடுங்க அந்த ஈசனும் தெரிவான்.
பேச்சினால் பயனே இல்லை.
அனுபவம் கொண்டு நீயும் ஆனந்தமடையப் பார்ப்பாய்!
குள்ளச்சாமியின் தௌ;ளிய வார்த்தைகள்,
கண்களினாலே கருணையாய்ப் பொழிய,
மாகவி தன்னுடை மனத்தினுள் நிரம்பினான்.
தாவிடும் நெஞ்சினை சடுதியில் நிறுத்தினான்.
பேசா அனுபவம் பெற்றனன்.
ஆசையால் அதனை அவனிக்குரைக்கிறான்.

தேசிகன் கை காட்டி எனக்கு ரைத்த செய்தி
     செந்தமிழால் உலகத்தார்க்கு ணர்த்துகின்றேன்
‘வாசியை நீ கும்பகத்தால் வலிந்து கட்டி
     மண்போலே சுவர்போல, வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
     தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
      பேரின்பம் எய்துவதே ஞானம’’ என்றான்.
******
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.