'இழந்த நலம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'இழந்த நலம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
'ம் முருகா! ... ஓம் முருகா!... ஓம் முருகா!'
சத்தம் கேட்டு வெளியில் வருகிறேன்.
பறவைக்காவடி ....
வெள்ளி ஆணிகளின் இழுப்பில் தசைகள் றப்பராய் இழுபட,
மனித வாழ்க்கை போல் மேலும் கீழுமாய்ப் போய் வருகிறான் அவன்.
துலாவில் தொங்கும் அம்மனிதனின் முகம் பார்க்கிறேன்.
என் கண் 'கமரா' அவன் முகத்தை 'ஸும்' பண்ணுகிறது.
அலகு குத்திய கன்னங்களில் மெல்லிய இரத்தக்கறை.
ஆணிகளின் வதைப்பின் மத்தியிலும் சிரிக்கும்,
அவன் முகம் ஆச்சரியந் தர,
அவனது பக்தி, என்னுள்ளும் தொற்றிக் கொள்கிறது.
என்னையறியாமல் மெய் சிலிர்க்கக் கைகூப்புகிறேன்.

 


'உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே' 
பறவைக் காவடியைத் தொடர்ந்த பஜனைக் கூட்டத்தில்,
காவி உடுத்த ஒருவரைச் சுற்றி ஈர்ப்புடன் ஒரு குழுவினர்.
தம்மை மறந்து பாடிவருகின்றனர்.
வேறு வேறு வயதுகள்,
வேறு வேறு வடிவங்கள்,
பக்தியால் ஒருமை கண்ட கூட்டம்.
திருவிழாச் சத்தத்தை மேவுவதற்காய்,
அடி வயிற்றிலிருந்து குரல் எடுத்துப் பாடுகிறார் காவியர்.
அச்சத்தத்திலும், தன் தலைமையை நிரூபிக்கும் விருப்புத் தெரிகிறது.
இனிமை குறைந்தாலும்,
மற்றைய சத்தங்களை வென்ற அந்தக் குரலில் ஓர் ஈர்ப்பு.
என்னையறியாமல் என் செவி அவரிடம் செல்கிறது.
'எல்லாம் அற என்னை இழந்த நலம் 
சொல்லாய் முருகா! சுரபூபதியே!'
கந்தர் அனுபூதி பஜனையின் ஆர்ப்பரிப்பு,
அவர் பாடிய அடியின் இரண்டு சொற்கள்,
மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க,
திடீரெனப் புத்தியில் ஓர் விறைப்பு.
'இழந்த நலம்!... இழந்த நலம்! ... இழந்த நலம்!'



தேவைகள் ... தேவைகள் ... தேவைகள் ...,
தேவைகள் நோக்கி ஓயாது ஓடும் உலகில்,
பெறுவதல்லவோ நலம்!
இழப்பும் நலமாகுமா?
அருணகிரிநாதரின் பிதற்றலோ?
'பக்தியும் ஓர் மனநோய் தான்.'
யாரோ சொன்னது ஞாபகத்தில் வருகிறது.
உலகியலை மறுக்கும் பஜனைப் பாடல்,
அக்கருத்தை உறுதி செய்வதாய்ப்பட,
எண்ணம் கலைத்து வீட்டுள் நுழைகிறேன்.



நல்லூர்,
யாழ்ப்பாணத்தின் தலைமைப்பதியாய்க் கருதப்படும் நகர்.
அங்கிருந்த முருகன் ஆலயத்தால் ஊர் நல்லூர் ஆயிற்றாம்.
பின் அதுவே ஆலயத்தின் பெயருமாயிற்றாம்.
சந்ததியாய் அச்சூழலில் வாழும் வாய்ப்பு என் பிறப்பால் கிடைத்தது.
நல்லூர்த் திருவிழா யாழ்ப்பாணத்தின் தலைமைத் திருவிழா.
அத்திருவிழாக் காலத்தில் கோயிலை நோக்கி,
ஒரே திசையில் பொங்கிவரும் மக்கள் கூட்டத்தால்,
யாழ்ப்பாணத்தின் அனைத்து வீதிகளும்,
நல்லூர்க்கான வீதிகளாகும்.
திருவிழா என்றதுமே,
கடலாய் வந்து கலக்கும் பக்தர்களைக் கவனிக்க,
கோயில் அயல் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்.
தேர்த்திருவிழாவுக்கு,
ஐம்பது பேராவது விருந்து உண்ணாத வீடு எதுவுமில்லை.
எல்லா வீடுகளும் எல்லார்க்கும் உறவாகும்.
எவர் வீட்டிலும் உறவாய் நுழைந்து உரிமையாய் உணவு கேட்கலாம்.
அன்போடு அன்னம் இடுவார்கள்.



அன்று ஓர் தேர்த்திருவிழா நாள்.
முருகனால் ஊர் ஒன்றாகி உறவாகியிருந்தது.
எங்கள் வீட்டிலும் விருந்து தடல் புடல்.
உறவென்றும் நட்பென்றும் விருந்து அல்லோல கல்லோலப்பட்டது.
மதியம் இரண்டு மணி.
பிந்தி வந்த மாமனுக்கு,
சத்தம் கேட்காமல் கறிவழித்து கடைசி விருந்திட்ட அம்மா,
சற்று ஓய்ந்து கிடக்க நினைக்கையில்,
'அம்மா ...ஆ..ஆ' என்று ஒரு நீண்ட ஓசை.



அவ்வழைப்பில் பசியின் அடையாளம் இருந்தது.
வாசலில் ஒரு கிழவன்.
அவன் முகத்தில் குழி விழுந்த கண்கள்.
சவரம் செய்யாத முகம் தரித்திரம் பேசிற்று.
கூனிய முதுகும் ஊன்றிய தடியும் அவன் முதுமையை அறிவித்தன.
ஆனாலும் சுத்தமாயிருந்தான்.
அழுக்கு வேட்டியைக் கசக்கிக் கட்டியிருந்தான்.
நெற்றி நிறைய விபூதி.
'பிள்ள! தூர இருந்து வர்றன்.
பசி தாங்கேலை, ஏதாவது சாப்பிடத் தாவனெணை?'
வேண்டுதல் கெஞ்சலாய் வெளிப்பட,
அம்மாவின் நிலை சங்கடமாயிற்று.



கறிகள் அனைத்தும் வழித்து மாமனுக்குப் போட்டாகிவிட்டது.
கிழவனின் கோரிக்கையில் தெரிந்த பசியால்,
மறுக்கவும் முடியாத சங்கட நிலை.
குசினிக்குள் ஓடுகிறா அம்மா.
அம்மாவின் தேடலில்,
ஒரு தட்டுச்சோறும் ஒரு சொட்டுக் குழம்பும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
கறி காணாது.
அம்மாவின் முகத்தில் குழப்பம்.
ஃப்றிஜ்ஜைத் திறக்கிறா.
என் அப்பா ஒரு மாமிச பட்சினி.
விரத நாட்களிலும் அவருக்கு 'மச்சம்' வேண்டும்.
இல்லாவிட்டால் சோறு இறங்காது.
புருஷனில் பாசத்தால்,
வெளி அடுப்பில், அம்மா ஏதாவது குழம்பு வைத்துக்கொடுப்பா.
மூன்று நாட்களின் முன் வைத்த மீன் குழம்பின் மிச்சம்,
ஃப்றிஜ்ஜுக்குள் எட்டிப்பார்க்க,
அதை வெளியிலே கொண்டுசென்று சூடாக்கி,
கிழவனுக்கான சோற்றின் ஓரத்தில் இடுகிறா அம்மா.
'அம்மா! திருவிழாவுக்க கிழவன் மச்சம் தின்னுமே?'
நான் கேட்க,
'பசியில சாகிறமாதிரிக் கிடக்குது, சரியான ஏழை.
அந்தாளுக்கு என்ன விரதம்? பசியில எதையும் தின்னும்.'
சொல்லியபடி அம்மா இலையோடு உணவைக் கொண்டுபோகிறா.



உணவைக் கண்ட கிழவனின் கண்களில் ஒளி.
உணவை வாங்க நீட்டிய கைகள் பசியால் நடுங்குகின்றன.
'முருகா' என்றபடி சோற்றிலையைத் தன்முன் வைத்து,
பசியோடு கை வைக்கச் சென்றவனின் கண்ணில்,
மீன்குழம்பு படுகிறது.



வேகமாய் நீண்ட அவன் கைகளில் தயக்கம்.
'அம்மா இது .....'
அவன் கைகாட்டிய இடத்தை நோக்கி,
'ஓம் ஓம் உது மீன்குழம்புதான்.
கிடந்த கறியெல்லாம் முடிஞ்சுபோச்சு.
உது நல்ல குழம்புதான் பசிக்குப் பரவாயில்லை சாப்பிடு.'
அம்மாவின் குரலில்,
ஏழ்மை எதையும் ஏற்கும் என்ற நம்பிக்கை.
கிழவன் முகத்தில் குழப்பம்.



அவன் முகத்தில் ஆயிரமான பாவங்கள்.
வெறும் சோற்றைத் தொடுவதும் உருட்டுவதுமாக,
அவன் கைகள் தடுமாறுகின்றன.
பசிக்கும்  பக்திக்குமான போராட்டம்.
புத்திக்கும், வயிற்றுக்குமான போராட்டம்.
அன்போடு தந்த உணவை நிராகரிப்பதா எனும்,
நாகரிகத் தயக்கம்.
கொள்கையை விடுவதா எனும் குழப்பம்.
அத்தனையும் ஒருசில விநாடிகளில்,
அவன் முக உணர்வில் பிரதிபலித்தன.
நடுங்கும் விரல்கள் சோற்றை அளைந்தபடி,
உண்ணாமலே நேரம் கழித்தான்.



'என்னப்பு என்ன யோகிக்கிற? சாப்பிடன்'- இது அம்மா.
'பிள்ள.. கோபிக்கப்படாது.
இண்டைக்கு முருகனுக்கு நான் விரதம்.
அச்சுவேலியில் இருந்து நேற்று வெளிக்கிட்டு நடந்து வர்றன்.
'பஸ்ஸிலை' வர, கையில காசில்லை.
அதுதான் பிந்திப் போனன்.
எல்லா வீட்டிலும் சாப்பாடு முடிஞ்சுது.
நீ இதை அன்பாய் தந்தனீ,
ஆனா ஒண்டுமேனை,
முருகனுக்கு விரதமெண்டு நினைச்சிட்டன்.
அதாலை மச்சம் தின்ன முடியேல,
கோவிக்கப்படாது. நான் இதை விட்டிட்டுப்போகவே?'
பசியுணர்ந்து உணவிட்ட அம்மாவின் மனம் கோணாது,
தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்,
கனிவாய் உணவை நிராகரிக்கிறான்.



அம்மாவுக்குச் சங்கடம்.
'மீன்குழம்பை ஒதுக்கிப்போட்டு தின்னன் அப்பு'
அவன் பசி நினைந்து அம்மா மாற்றுவழி சொல்ல,
'இல்ல பிள்ள,
மச்சக்கறி விழுந்த சோத்தை விரதகாரன் எப்படி தின்னுறது.
கோவியாதை நீ நல்லாயிருக்கவேணும்.'
சோற்றை நிராகரித்து,
துண்டைத்தோளில் போட்டு எழுகிறான் கிழவன்.
தடியூன்றிய அவன் கைகள் நடுங்குகின்றன.
தடுமாறும் அவன் கால்களில் பசியின் களை.
கண்கள் பசியைக் கொப்பளிக்க விடைபெறுகிறான்.
ஆனாலும் அவன் முகத்தில் ஒரு திருப்தி.



அம்மாவின் முகத்தில் அதிர்ச்சி.
அவவின் கண்கள் மெலிதாய்க் கலங்கின.
'பாருங்கோப்பா. இவ்வளவு பசியோட,
இந்த வயசுபோன ஏலாத நேரத்திலையும்,
முருகனுக்காக மச்சச் சோத்தை வேணாமெண்டிட்டு,
என்ன தெளிவாய்ப் அந்தப் படியாத மனுசன் போறானெண்டு.
நீங்களும் இருக்கிறியள்.
முருகனுக்குப் பக்கத்திலை இருந்துகொண்டு,
திருவிழாவுக்கையும் மீன் கேட்கிற படிச்ச மனுசன்.
கிழவனைப் பாத்துப் படியுங்கோ.'- அம்மா புறுபுறுக்க,
'நாளையோட விரதம் முடியுது.
பிறகு கொடியால கோழி இறங்கிடும் தானே!' என்று,
அப்பா வழக்கம் போலப் பகிடிவிட்டுச் சிரிக்கிறார். 



புறப்பட்டுப்போகும் கிழவனைப் பார்க்கிறேன்.
முதுமையும் வறுமையும் உடல் முழுவதையும் வாட்டினாலும்,
பசியின் கொடுமை, பற்றிப் பிடித்தாலும்,
சோற்றை நிராகரித்துச் செல்லும்,
கிழவனின் தளர்ந்த நடையிலும் ஓர் நிமிர்வு தெரிகிறது.
பசியில் குழிந்த கண்களில்,
துளியேனும் சோற்றையிழந்த கவலை தெரியவில்லை.
கொள்கைப் பிடிப்பால்,
இழப்பை நலமாய் நினைந்து,
ஏழ்மையிலும் தெளிவுற்று நடக்கும்,
அவன் நடையில் நிமிர்வு.
'இழந்த நலம்' யதார்த்தத்தில் நிதர்சனமாக,
அருணகிரியார் நெஞ்சில் நிமிர்கிறார்.
அரோகரா!.... அரோகரா!.... அரோகரா!
மீண்டும் ஒரு தூக்குக் காவடி.
ஓடிப்போய்க் கைகூப்புகிறேன்.
என்னையறியாமற் கண்களில் நீரூற்று.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.