உகரம் வாசகர் பக்கம்

15 Mar 2016

உகரம் வாசகர்களுக்காக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் கருத்துக்களுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் உங்களுக்காக ஒரு தளம் இது.  Kandiah Pathmananthan"கம்பன் விழா சிறப்புற வாழ்த்தாக எழுதிய கவிதை ? ஒன்றை இங்குபதிவிடுகிறேன்."
காலங் கடந்தவன் கம்பன்

நாற் பயனை நூற்பயனாய் இங்கு 
நூற்றவன் தந்தவன் நாற்றிசையும் நின்று
நோற்றவெம் தவப் பயனாய் நூற்கவென
நேற்றவன் வந்தவன் நின்று நிலைப்பவன் !

காற்றென எழுந்தவன் சுழன்று தமிழ்ப்
பா(ற்)கடல் கடந்தவன் அதைக் கடைந்து
ஊற்றி ஆற்றி உள்ளிருக்கும் அருஞ்
சாற்றினைக் குடித்து சாரம் பிழிந்தவன் !

நாற்றத்தின் மேனியனாம் நாற் கால
மாற்றத்தின் காரணன் நாரணன் தன்
ஏற்றத்தை இயம்பியதால் இந்தக் கம்பன்
இற்றைக்கும் இருக்கிறான் எம் இதயத்தில் !

மாற்றான் மனை நோக்கும் மானுடம்
ஆற்றாத செயல் அடுத்தானை அண்டி
கூற்றாகி அறம் என்றும் கொல்லுமென்ற
தேற்றத்தை நிறுவித் தீயாய் பரப்பினான் !

ஆற்றங்கரை வேடனும் அன்பு ஊறும்
ஊற்றங்கரை இராமனும் ஒன்றே என்று
சாற்றினான் சமத்துவக் கொள்கை எழுதி
நீற்றினான் கவிதையில் சமனில் நிலை !

வேற்றாகி நின்றோரும் வேறு பலரும்
ஊற்றாகி வந்த அவன் கவிதைக்கு
மாற்றாகி நின்றதில்லை மறுத்தது இல்லை
நாற்றாகி நின்றது நம்மனம் வளர்கிறது !

தோற்றான் தமிழன் என்றே சாற்றும்
மாற்றான் தோற்கக் கம்பன் தமிழ்த்தாயை
நோற்றான் நோற்றுப் பின் நுண்டமிழில்
நூற்றான் காவியம் நூறாண்டு வாழ !

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.