உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 13 | பிரதமர் பிரேமதாசாவை அழைத்தோம்

19 Oct 2016

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
நான்காவது கம்பன் விழா03.05.1981
இவ்விழா 1981 ஆம் ஆண்டு மே 3,4,5 ஆம் திகதிகளில் நடைபெற்றது.முதன்முதலாக இந்தியப் பேச்சாளர் ஒருவர் கலந்துகொண்ட விழா இது.தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டும்,யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனரைத் திருமணம் செய்ததால்,இங்கு வாழ்ந்து வந்த திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்கள்,புகழ்பெற்ற சமயப் பேச்சாளராய் இருந்தார்.அவர்கள் பிராமண வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.அவரது கணவரான வைத்தியநாதன்,யாழ். ‘கொமர்ஷல்’ வங்கி முகாமையாளராய் இருந்தார்.
அக்காலத்தில் அவர்கள் மிக வசதியோடு வாழ்ந்து வந்தனர்.வசந்தா அம்மையார் அவர்களின் தங்கையார்,வித்துவான் ப. நீலா அவர்கள்,தர்மபுர ஆதீனக் கல்லூரியில் பேராசிரியராய் இருந்தார்.விடுமுறைக்காகத் தமக்கையார் வீட்டுக்கு அவர் வந்திருப்பதை அறிந்து,எங்கள் கம்பன் விழாவில் அவரைக் கலந்துகொள்ள வைக்கும்படி,திரு. வைத்தியநாதன் தம்பதியரைக் கேட்டுக்கொண்டோம்.திரு. வைத்தியநாதன் அவர்கள், எங்கள் வேண்டுகோளை ஏற்று,வித்துவான் ப. நீலா அவர்களை,இவ்விழாவிற் கலந்து உரையாற்ற வைத்தார்.“தூமொழி மடமான்”,“பகல் வந்த நிலா”“இலங்கையின் திலகம்”, எனும் மூன்று தலைப்புகளில்,மிக அருமையான உரைகளை அவ்வம்மையார் நிகழ்த்தினார்.அம்மையார் தந்திருந்த கைகேயி பற்றிய “தூமொழி மடமான்” எனும் தலைப்பை,சீதை பற்றியது என நினைந்த ஆசிரியர் “சொக்கன்”,அதனை வெளிப்படுத்தித் தலைமையுரையாற்ற,அதனால், பின் அவர் சற்று நாணவேண்டி வந்தது.மறுநாள் தலைமை உரையாற்ற இருந்த வித்துவான் ஆறுமுகம் அவர்கள், இதனால் பயந்துபோய், “இலங்கையின் திலகம்” யாரெனத் தெரியாமல்,அன்று இரவிரவாக இராமாயணம் முழுவதையும் படித்தார்.ஆரம்பகாலத்தில் இத்தகைய நகைச்சுவைகள் பல எங்கள் விழாக்களில் நடந்தன.தாரையை சுக்கிரீவனின் மனைவி என்றுகூட அறிஞர் சிலர் பேசினர்.அந்த அளவில்தான் அறிஞர்கள் மத்தியிலேயே,கம்ப காவிய அறிவு இருந்தது.இன்று குழந்தைகளுக்கும் அப்பாத்திரங்கள் அறிமுகமாகியிருக்கின்றன என்றால்,அது கழக முயற்சியின் வெற்றியே!

வாலிவதை நியாயமானதா?
இவ்விழாவின் நிறைவு நாளில்,வாலிவதை பற்றி ஒரு பட்டிமண்டபத்தினை நடாத்தினோம்.அக்காலத்தில் “ஓஹோ” என்ற பெயரில்,ஒரு சவர்க்காரம் அறிமுகமாகி இருந்தது.அதனை விளம்பரம் செய்யவென அந்நிறுவனத்தார்,எந்த வாசகமும் இல்லாமல்,வெறுமனே “ஓஹோ” “ஓஹோ” என,பல துண்டுப்பிரசுரங்களை அடித்து ஊரெல்லாம் ஒட்டியிருந்தனர்.பட்டிமண்டபம் மக்கள் மத்தியில் பரவவேண்டும் என்பதற்காக,நாமும் அந்த உத்தியைக் கடைப்பிடிக்க நினைந்தோம்.‘வாலிவதை நியாயமானதா?’ எனும் தலைப்பில்,வேறு ஒரு செய்தியும் இல்லாமல் ஒரு ‘போஸ்டர்’ அடித்து,விழாவுக்குச் சிலநாட்களின் முன்பே யாழ்ப்பாணம் முழுவதும் ஒட்டிவிட்டோம்.பலபேருக்கு அது என்ன விஷயம் என்றே புரியவில்லை.அந்த நாட்களில்த்தான் கோப்பாய் எம்.பி., கதிரவேற்பிள்ளை இறந்திருந்தார்.அவர் மரணத்தோடு தொடர்புபடுத்தித்தான்,இம் மர்மப் போஸ்டர்கள் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருப்பதாய்,அப்போதைய ஒரு ‘மாக்ஸிசப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இவ்விழாவில் வித்துவான் சி. குமாரசாமி,‘சிவத்தமிழ்ச் செல்வி’ தங்கம்மா அப்பாக்குட்டி,சங்கீதபூஷணம் பரம் தில்லைராஜா, பண்டிதர் கந்தையா, கலையரசி சின்னையா, காரை சுந்தரம்பிள்ளை ஆகியோரோடு,இசைக்கலைஞர்களான என்.ஆர். கோவிந்தசாமி,கே.ஆர். புண்ணியமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இவ்விழாவின்போதுதான்,முதன்முதலில் மக்கள் கூட்டத்தால் ஆதீன மண்டபம் நிறைந்தது.இவ்விழாவிலிருந்துதான், தனித்துக் கம்பனுக்கெனக் கூட்டம் வரத்தொடங்கியது.
வாலி விதைப் படலம்
இப்போதெல்லாம் கம்பன் விழாக்களுக்கான அழைப்பிதழ்களை,மிக ஆடம்பரமாக வெளியிடுகிறோம்.“அழைப்பிதழுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?” என்று,சிலர் அக்கறைப்படுமாப்போல் குத்தலாய்க் கேள்வி கேட்பார்கள்.“உலகத்திற்கு ஒன்றுமே பயன் செய்யாத நீங்கள் கூட,உங்கள் திருமண விழாவிற்கு மிகமிக ஆடம்பரமாக அழைப்பிதழ் அடிக்கிறீர்கள்.நம் தமிழினத்தை ஆயிரம் ஆண்டுகளாக,பண்பாட்டுப் பாதையில் வழிநடாத்தி வருகிற கம்பனுக்கு,இன்னும் அதிகமான செலவிலல்லவா அழைப்பிதழ் அடிக்க வேண்டும்?” என்பேன்.கேள்வி கேட்டவர் மனதுள் என்னைத் திட்டியபடி பேசாமல் போய்விடுவார்.இந்த நான்காவது கம்பன் விழாவிற்கு நல்லூரிலிருந்த மிகச்சிறிய திருவள்ளுவர் அச்சகத்தில்,மிகச் சாதாரண ‘நியூஸ் பேப்பரில்’தான் , அழைப்பிதழை அடித்தோம்.அப்போதெல்லாம் ஈய எழுத்துக்களைத் தனித்தனியாக எடுத்து,அச்சுக்கோர்க்கும் முறையே வழக்கத்திலிருந்தது.குமாரதாசன் மிக நன்றாகப் ‘புரூப்’ பார்ப்பான்.அக்கறையோடு அவன் பார்த்துக் கொடுத்தும்,அச்சுக் கோர்த்தவரின் பிழையால் வதை என்ற சொல்லில்,‘வ’ என்ற எழுத்திற்குப் பதிலாக ‘வி’ என்ற எழுத்துப் பதிவாகி,அழைப்பிதழும் வெளிவந்துவிட்டது.வாலி வதைப் படலம்,வாலி விதைப் படலமாக, நாம் பதறிப்போனோம்.பின்னர், எல்லா அழைப்பிதழையும் பேனையால் திருத்தி வெளியிட்டோம்.
பிரதமர் பிரேமதாசாவை விழாவுக்கு அழைத்தோம்
அப்போது இளமை தந்த உற்சாகத்தில் நாங்கள் அடித்த கூத்துக்கள் பல.அக்கூத்துக்களில் ஒன்றைச் சொல்கிறேன்.கொழும்பில் கம்பன் விழா ஒன்றை நடத்த வேண்டும் என்பது,அப்போதைய எங்கள் கனவாய் இருந்தது.அதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்கும் முன்னரே,அந்த விழாவுக்கு, அப்போது நாட்டின் பிரதமராகவிருந்த,பிரேமதாசாவை அழைக்க வேண்டும் என நினைந்தோம்.எமக்கு எந்தச் செல்வாக்குமில்லாத,எந்தச் செல்வாக்குள்ளவர்களையும் தெரியாத காலமது.இளமை தந்த அசட்டுத் துணிச்சலோ?அல்லது எதையும் பெரிதாய்ச் செய்யவேண்டுமென்ற,எங்களின் இயல்போ? தெரியவில்லை.யாருடைய சிபாரிசும் இல்லாமல்,பிரேமதாசாவை நாங்களே நேரில் சென்று காண்போம் என முடிவுசெய்தோம்.நாங்கள் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த காலம் அது.பிரதமர் வசித்து வந்த அலரி மாளிகையில் அதிகாலையில்,மக்களை பிரேமதாசா சந்திப்பார் எனும் செய்தி அறிந்து,அவரைச் சந்திக்கவென நானும், குமாரதாசனும், மாணிக்கமும்,கொழும்பு சென்றோம்.ஓர் அதிகாலைப்பொழுதில் அலரிமாளிகை வாசலில்,பொதுமக்கள் கூட்டம் நிறைந்த ‘கியூ’வில் நாமும் போய் நின்றோம்.‘‘நாங்கள் போய் அழைத்தால் அவர் வருவாரா?” என்று சிந்திக்கக்கூட இல்லை.பிரதமரின் செயலாளர் ஒருவர் ‘கியூ’வில் நின்ற ஒவ்வொருவரிடமும்,அவர்கள் வந்த நோக்கம் கேட்டு எழுதினார்.ஆங்கிலமோ, சிங்களமோ சரியாகத் தெரியாத நிலையிலும்,எங்கள் கோரிக்கையை முடிந்தளவு அவரிடம் முன்வைத்தோம்.எங்கள் தோற்றத்தையும், கோரிக்கையையும் பார்த்து,அவர் உள்ளே சிரித்திருப்பார் என்பது இப்போது விளங்குகிறது.எங்கள் கோரிக்கையை எழுதி வாங்கிக்கொண்டு,பிரதமரிடம் பேசி, பின் முடிவு அறிவிப்பதாக,எங்களை அவர் அனுப்பிவைத்தார்.ஆச்சரியம் என்னவென்றால், நாங்கள் யாழ். வந்து சேர்ந்த ஒரு சில நாட்களில்,பிரதமர் பிரேமதாசாவிடமிருந்துஎங்கள் விழா வெற்றி பெறுவதற்கான வாழ்த்தும்,கலந்துகொள்ள முடியாமைக்கான மன்னிப்பும் தாங்கிக் கடிதம் வந்தது.விபரமறியாத இளைஞர்களின் கோரிக்கையையும் செவிமடுத்த,பிரேமதாசாவின் தலைமைத்துவத்தை,இப்போதும் நினைத்து ஆச்சரியப்படுவேன்.
ஈ. சண்முகம் முதலாளி
பிரேமதாசாவைச் சந்தித்த பிறகு,எங்கள் கோரிக்கையை, செயலாளர் எழுதி வாங்கியபடியால்,ஒருவேளை அவர் எங்கள் கொழும்பு விழாவில்,கலந்துகொள்வார் என நினைத்தோம்.அவர் சம்மதித்து விட்டால் விழாவை எப்படி நடத்துவது?விழாவினை நடத்த, பணம் வேண்டுமே? யாரிடம் கேட்பது?கேள்விகள் எழ, அப்போது கொழும்பில் மிகப்பிரபலமாக இருந்த,‘மாணிக்கம் பிறதர்ஸ்’ உரிமையாளர்,சண்முகம் முதலாளியைச் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.சுருவிலைச் சேர்ந்த அவர்,எங்கள் நண்பன் மாணிக்கவாசகரின் உறவினர்.மாணிக்கவாசகரின் அண்ணன் கந்தசாமி, அவர்களின் கடையில்தான் அப்போது வேலை செய்து கொண்டிருந்தார்.முதல் வருஷத்தில் சுருவில் கோயிலில் நான் பேசியதைக் கேட்டு,எனக்கு மாலை போட்டு, சண்முகம் முதலாளி மரியாதை செய்திருந்தார்.இந்த இரண்டு தொடர்பையும் வைத்து,அவர்களது கடை அலுவலகத்தில் அவரைச் சந்திக்கலாம் எனப் போனோம்.முதலாளியைக் கண்டதும், மாணிக்கமும், கந்தசாமியும் சற்றுப் பயந்து போனார்கள்.உள்ளே கூப்பிட்டதும்,குமாரதாசன் உள்ளிட்ட நால்வரும் உள்நுழைந்தோம்.அவர் எங்களைத் தெரிந்து வரவேற்பார் என நாம் நினைக்க,அவரோ எங்களை இருக்கக்கூடச் சொல்லாமல்,வேண்டுமென்றே நீண்ட நேரம் நிற்கவைத்து,வந்த கடிதங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.பின் மெல்ல முகம் நிமிர்த்தி “என்ன வேண்டும்?” என்றார்.எங்களைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.பிரேமதாசாவின் பெயரைச் சொன்னால்,கொஞ்சம் அசைவார் என நினைந்து,“கொழும்பில் ஒரு கம்பன் விழாச் செய்ய இருக்கிறோம்.அதற்குப் பிரதமர் பிரேமதாசாவைக் கூப்பிட்டிருக்கிறோம்.அந்த விழாவிற்கு நீங்கள்தான் ‘ஸ்பொன்சர்’ செய்யவேண்டும்” என,துணிந்து கேட்டேன்.ஒரு மாதிரியாய் எங்களைப் பார்த்த அவர் பின்னர்,“அவர் வருவது உறுதியா?” என்றார்.இவருக்கு எங்கே பிரதமரைத் தெரியப்போகிறது என நினைந்து,“வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்” என்றேன்.“பிரதமர் வருவது நிச்சயமானால் வாருங்கள், காசு தருகிறேன்” என்று,வெறுங்கையோடு எம்மைத் திருப்பி அனுப்பினார்.பின்னாளில் ஒருமுறை பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தபோது,வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம் நடந்தது.கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது சண்முகம் முதலாளி வர,அவரைக்கண்டு பிரேமதாசா மேடையால் இறங்கி வந்து, அவரை வரவேற்றார்.அப்போதுதான் அவர்களிடையேயான நெருக்கம் தெரியவந்தது.ஷவெட்கினோம்.சண்முகம் முதலாளியும் சகோதரரும், பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும்,அக்கொலையோடு பிரேமதாசாவின் பெயர் இணைத்துப் பேசப்பட்டதும்,
கல்லூரி விழா
இவ்விழா நடந்த திகதி ஞாபகத்தில் இல்லை.கல்லூரி மாணவர்கள் மத்தியில்,கம்பனைக் கொண்டு செல்லவேண்டும் என்ற எங்கள் விருப்பத்தினால்,வேம்படி மகளிர் கல்லூரியில் ஒரு விழா நடத்த ஒழுங்கு செய்தோம்.அங்கு கற்பித்த இரு ஆசிரியர்களின் துணையினால்,கல்லூரி அந்த வாய்ப்பை எமக்கு வழங்கியது.முதல் நாள்த்தான் விழா நடாத்தவேண்டுமெனத் தெரியவந்தது. பட்டிமண்டபம் நடாத்தப் பேச்சாளர்கள் இல்லை.அன்று காலையிலேயே பேச்சாளர்களைத் தேடிப்பிடித்தோம்.எங்கள் ஆசிரியர்கள் தேவன், சிவராமலிங்கம், வித்துவான் வேலன் ஆகியோரோடு,பேராசிரியர் சண்முகதாஸ், திருமதி மனோன்மணி சண்முகதாஸ்,திருமதி வசந்தா வைத்தியநாதன்,அப்போது பேச்சாளர்களாய் உலாவந்த சண்டிலிப்பாய் பத்மசுந்தரி, சங்கானை சிவதெட்சணாமூர்த்தி, நவாலி நிர்மலேஸ்வர ஐயர் ஆகியோரையும்,ஏதோ விதத்தில் திடீரென ஒழுங்குசெய்து,அன்றைய நிகழ்ச்சியை வெற்றிகரமாய் நடாத்தி முடித்தோம்.அன்று காலை மரக்கறி வாங்கச் சென்றிருந்த ஆசிரியர் தேவனை,அந்த நிகழ்ச்சிக்காக,நானும் திருநந்தகுமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று,சந்தையில் போய்ப்பிடித்து அழைத்து வந்தது மறக்கமுடியாதது.
கழகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வு(22.05.1981)
குமாரதாசன் வீட்டில் இந்நிகழ்வைக் கொண்டாடினோம்.எங்கள் ஆசிரியர்களோடு,பல்கலைக்கழகப் பேராசிரியர்களான,சண்முகதாஸ், சுப்பிரமணிய ஐயர் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நடத்த, குமாரதாசன் குடும்பம் முழு ஒத்துழைப்புச் செய்தது.குமாரதாசனின் தந்தை பண்டிதர் கந்தையா,அறிஞர்களின் வருகையால் மகிழ்ந்தார்.இரண்டாமாண்டு நிறைவு விழாவில்,அவர் எம்மோடு கோபித்தது சுவையான கதை.அதைப் பின் சொல்கிறேன்.
கம்பன் அடிப்பொடியின் வருகை தடைப்பட்டது
இடைக்காலத்தில் கம்பன் அடிப்பொடி அவர்கள்,பல இந்தியத் தமிழறிஞர்களையும் அழைத்துவந்து,எங்கள் கம்பன்விழாவில் கலந்துகொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்தார். பெரும்பெரும் அறிஞர்களெல்லாம் அவர் உத்தரவையேற்று,யாழ். விழாவில் கலந்துகொள்ளச் சம்மதித்திருந்தனர்.அக்காலத்திற்தான் (31.05.1981) யாழ். நூலகம் எரிக்கப்பட்டது.அதனால், அவர்கள் பயணம் தடைப்பட அந்தவிழா நின்றுபோனது.அதுபற்றி வருந்த வேண்டாம் என எனக்கு ஆறுதல் சொல்லி,கம்பன் அடிப்பொடி கடிதம் எழுதியிருந்தார்.தொடரும்...கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பாகம் 013ல்...
ஐந்தாவது கம்பன் விழா தொழிலதிபர்கள் வீரவாகு, குகன்‘பொன்ட்’ கைகொடுத்தார்ஆசிரியர்களின் அச்சம்!ஒரு ரேடியோ வாங்கணுப்பா!வைத்தியநாதன் தம்பதியினர்கேசரி மண்ணாயிற்று!பேராசிரியர் சிவத்தம்பி முரண்பட்டார்விழாவில் அமிர்தலிங்கம் பேசினார்பழ. நெடுமாறனைப் பேச அனுமதிக்கவில்லை

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.