உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 19 | வீடெல்லாம் மீன் வாசனை!

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 19 | வீடெல்லாம் மீன் வாசனை!
நூல்கள் 08 Jan 2018
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


இராமேஸ்வரக் கம்பன் விழாப் பயணம்
07.08.1982

எங்கள் விழாவிற் கலந்துகொண்ட,
இராமேஸ்வரம் இராஜகோபால் சாஸ்திரிகள்,
தங்களின் இராமேஸ்வர கம்பன்விழாவுக்கு எங்களை அழைத்தார்.
சிவராமலிங்கம் மாஸ்டர், வித்துவான் ஆறுமுகம்,
வித்துவான் வேலன் ஆகியோரும் உடன் வருவதாய் இருந்தது.
நிகழ்ச்சி நிரலில் அவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
அழைப்பிதழ் அச்சாகி வந்தபின்,
அவர்கள் திடீரென விழாவிற்கு வராமல் பின்வாங்கினர்.
ஆனாலும், நானும், குமாரதாசனும், குமரனும்,
எனது அம்மா, அண்ணன், தங்கை, குமாரதாசின் அம்மா,
மாணிக்கத்தின் தமையன் கந்தசாமி, தாயார்,
எங்கள் கழக உறுப்பினன் செல்லத்துரை என,
பெருங்கூட்டமாய் அவ்விழாவிற்குச் சென்றோம்.
குமரனும், நானும் அவ்விழா நிகழ்ச்சியிற் கலந்து உரையாற்றினோம்.
குமரன் கவியரங்கத்திலும் கலந்துகொண்டார்.
கம்பன் அடிப்பொடியின் மறைவின்பின்
நடந்த முதற்கம்பன் விழா இது.
கம்பன் விழாக்களை வழக்கமாகக் கம்பன் அடிப்பொடிதான் ஆரம்பித்து வைப்பார்.
அவர் இல்லாமல் நடந்த முதல் விழா ஆதலால்,
பேரறிஞர் பலரும் கண்ணீரோடு மேடையேறத் தயங்கி நின்றனர்.
என் குருநாதர் கலங்கிய கண்களுடன்,
கோதண்டராமக் கவுண்டர் எனும் பேரறிஞருக்கருகிற் சென்று,
“அண்ணா! இனி இந்தக் குடும்பத்திற்கு நீங்கதான் மூத்தவர்,
தயங்காம நீங்களே போய் ஆரம்பிச்சுடுங்கோ” என்று சொல்ல,
கண்ணீரோடு கவுண்டர் விழாவை ஆரம்பித்தது
மனதில் இன்றும் நிழலாடுகிறது.
என் மனதில், கழகம் ஒரு குடும்பம் என்ற உணர்வை,
ஆழமாக உருவாக்கிய விழா இது.
இவ்விழாவில் எனது குருநாதர் தலைமையில் நான் பேசினேன்.
தொடர்ந்து நடந்த சென்னை விழாவிலும்
குருநாதரின் சிபாரிசின் பெயரில்,
எனக்கு நிகழ்ச்சி தரப்பட்டிருந்தது.
அவ்விழா அழைப்பிதழிலும் என் பெயர் அச்சாகியிருந்தது.
இடையில் எங்களுடன்; வந்த வீட்டுப்பெண்களுக்குள்
சில பிரச்சினைகள் ஏற்பட,
சென்னை விழாவிற் கலந்து கொள்ளாமல்,
திருச்சியோடு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினோம்.

 





கோடூரார் தந்த கௌரவம்!

இராமேஸ்வரத்தில் நாங்கள் எல்லோரும் தங்குவதற்கென,
‘கொட்டேஜ்’ என்று சொல்லப்படும் சிறு வீடுகளை,
கோடூர் இராஜகோபால் சாஸ்திரிகள் ஒழுங்கு செய்திருந்தார்.
மிகப்பெரிய பண்பாளர் அவர்.
என் குருநாதரின் உயிர் நண்பர்.
இயற்துறையில் மட்டுமன்றி
இசைத் துறையிலும் பெரும் நாட்டங்கொண்டவர்.
நன்றாக வீணை வாசிப்பார்.
இசைமேதை மதுரை ரி.என். சேஷகோபாலனை உருவாக்க,
பெரும்பாடுபட்டவர் இவர்.
கோடூரார் வீடு என்றால் எவர்க்கும் தெரிந்திருக்கின்ற அளவு,
இராமேஸ்வரத்தில் பிரசித்தமானவர்.
‘கொமியூனிசக்’ கொள்கை கொண்ட  பிராமணர்.
அவரும் எங்களைத் தன் பிள்ளைகளைப் போலவே நேசித்தார்.
அக்காலத்தில் “இராமானுஜம்” கப்பல்,
இராமேஸ்வரத்தின் கரைக்குச் செல்லாமல் சற்றுத் தூரத்திலேயே நிற்கும்.
கப்பலில் வந்தவர்களை படகுகளிலேதான்
கரைக்கு அழைத்து செல்வார்கள்.
அவ்வூரில் மிகப் பெரியவராய்ப் போற்றப்பட்ட சாஸ்திரிகள்,
இளைஞர்களான எங்களை மதித்து,
படகேறி கப்பல்வரை வந்து வரவேற்றார்.



கோப்பிக்காக குருநாதரிடம் வாங்கிய பேச்சு

அவ்விழாவிற்குச் சென்றிருந்தபோது
படிப்பினையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
நாங்கள் தங்கியிருந்த குடில்களுக்கு,
விடியற்காலையிலேயே கோப்பி விற்பவன் வருவான்.
விடிகாலையில் தூக்கத்தால் எழும்பிவிட்ட நாங்கள்,
எங்கள் பணத்தில் அவனிடம்
கோப்பி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது என் குருநாதரும், சாஸ்திரிகளும்
புதுவை அருணகிரியாரும்,
எங்களைப் பார்க்கவென வந்தனர்.
எங்கள் கையில் கோப்பியைப் பார்த்ததும்,
“எப்போ காப்பி வந்தது?” என்று குருநாதர் கேட்டார்.
நாங்கள் காசுக்கு வாங்கி கோப்பி குடிப்பதை அறிந்ததும்,
குருநாதருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது.
“நீங்க சாஸ்திரிகளின் விருந்தினராய் வந்தப்புறம்,
ஒங்க காசுக்கு காப்பி வாங்கிக் குடிச்சால்,
அது அவருக்குச் செய்கிற பெரிய அவமரியாதை இல்லையா?
காப்பி வராமல் இருந்தால்கூட பேசாமல் இருக்கனுமே தவிர,
நீங்க பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கக் கூடாது.”
என்று சத்தம் போட்டார்.
குருநாதருக்குக் கோபம் வந்ததை முதல்முதலாய்ப் பார்த்தேன்.
இதேபோல முதல் தரம் காரைக்குடிக்குச் சென்ற போதும்,
நிகழ்ந்த அனுபவத்தை முன்னரே சொல்லியிருக்கிறேன்.
மேன் மக்கள் மேன் மக்களே!
நல்லோர் சங்கமத்தால் பண்பாட்டைப் பயின்றோம்.



ஆசிரியர் தேவன் மறைவு
(08.12.1982)

1982 டிசம்பர் 8 ஆம் திகதி ஆசிரியர் தேவன் மறைந்தார்.
டிசம்பர் 11 ஆம் திகதி பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி,
விழா ஒழுங்கு செய்திருந்தோம்.
தேவன் மறைவினால் அவ்விழா இரத்துச் செய்யப்பட்டது.
யாழ். இந்துக் கல்லூரியில் பலகாலம் ஆசிரியராய் இருந்தவர் தேவன்.
அவருடன் நான் செய்த ஒரு வழக்காடுமன்றத்தால்,
ஆரம்பத்தில் என்னை அவர் வெறுத்தார்.
பின் அவர் சுகயீனப்பட்டிருந்தபோது,
நானும் என் நண்பர்கள் சிலரும் அவருக்கு இரத்தம் கொடுத்திருந்தோம்.
அதன்பின் எங்கள் அன்பைப் புரிந்துகொண்டு,
எங்கள்மேல் பெரிய பாசம் காட்டினார்.
சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் ‘விண்ணர்’ அவர்.
சந்தைக்குச் செல்லும் போதெல்லாம்
ஜெயராஜுக்குப் பிடிக்கும் என்று சொல்லி,
தொடர்ந்து பலாப்பழங்கள் வாங்கி அனுப்புவார்.
பெரும் ஆங்கிலப் புலமையாளர்,
மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்,
சிறந்த நாடகாசிரியர், இயக்குனர்,
சிறுகதை நாவல்கள் பல எழுதியவர்,
விளையாட்டு விமர்சகர்.
மேடையறிவிப்பாளர் எனப் பல முகங்கள் தேவனுக்கு இருந்தன.
யாழ்ப்பாணத்தில் அவரைத் தெரியாதவர்கள் இருக்கவில்லை.
அவரது தமிழிலும் ஆங்கில வாடை இருக்கும்.
எங்கள் திருநந்தகுமாரின் இலட்சிய குரு அவர்தான்.
அவரை அவன் உயிராய் நேசித்தான்.
இன்றும் அவன் பேச்சில் அவரின் சாயல் தெரியும்.
அவர் மரணம் கழகத்திற்குப் பெரும் இழப்பாயிற்று.



மீண்டும் ஒரு இந்தியப் பயணம்

அதற்கிடையில் ஒரு தரம்,
நானும், குமாரதாசனும் மீண்டும் இந்தியா சென்று வந்தோம்.
ஒரு “பட்டிமண்டபத்தில் பேசலாம் வருகிறாயா?” என்று,
குருநாதர் விளையாட்டாய்க் கேட்க,
அதை, ‘சீரியஸாய்’ எடுத்துக் கொண்டு,
நானும் குமாரதாசனும் மீண்டும் இந்தியா பயணமானோம்.
அங்கு பட்டிமண்டபத்திற்கு,
வேறு பேச்சாளர்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில்
அப்பட்டிமண்டபம் நடந்தது.
எனக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அதனால், எனக்குச் சற்று மனக்குறைதான்.
ஆனாலும், குருநாதருடன் சென்று பட்டிமண்டபம் கேட்டேன்.
மேல்மருவத்தூர் ஆலயம் வளராமல் கொட்டிலிலிருந்த காலமது.
அங்குதான் முதன்முதல் ஆதிபராசக்தி அம்மாவின் பக்தர்களாக,
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் ஐயாவையும்,
இந்திய முன்னாள் நிதியமைச்சர் சி. சுப்ரமணியத்தையும் சந்தித்தேன்.
அப்பயணத்தாலும் செலவும் கடனும் கூடிற்று.



மறக்கமுடியாத தாய்மார்கள்

விழாக்களாலும், பயணங்களாலும் செலவுகள் கூடுகையில்,
நான் பெரிய அளவில் திண்டாடுவேன்.
அப்போதெல்லாம் எனக்குக் கைகொடுத்து உதவுபவர்கள் இருவர்.
ஒருவர் திருநந்தகுமாரின் தாயார் திருமதி திருநாவுக்கரசு அவர்கள்.
மற்றவர் எங்கள் வசந்தனின் தாயார் திருமதி கனகசிங்கம் அவர்கள்.
அவர்களுடனான எனது அனுபவங்களையும் மனம் பதிவு செய்ய விரும்புகிறது.



திரு.திருமதி திருநாவுக்கரசு பவளரத்தினம்

திருநந்தகுமாரின் பெற்றோர்கள் இவர்கள்.
பிள்ளையைக் கழகத்திற்குத் தானம் தந்து,
தாம் சுமை சுமந்து கழகத்தைக் காத்த பெருமையில்,
இவர்களும் பங்காளர்கள்.
திரு திருநாவுக்கரசு அவர்கள் முழுநேர விவசாயி.
கடும் உழைப்பாளி.
முயற்சியால் செல்வம் சேர்த்து,
இரண்டு பெண்பிள்ளைகளுக்கும்,
பொறியியலாளர்களை மாப்பிள்ளைகளாய் எடுத்த வல்லமையாளர்.
ஆனால் ஆண்பிள்ளைகளை அவர் நினைத்தபடி ஆக்கமுடியவில்லை.
ஆண்பிள்ளைகளில் மூத்தவன் திருநந்தகுமார்.
தந்தையை மிரட்டி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான்.
ஏ.எல். படிக்கும் காலத்தில் நாங்கள் எல்லாம்,
ஒரு புதுச் சைக்கிள் கிடையாதா? என நாம் அலைந்தபோது,
திருநந்தகுமாருக்கு அவன் தந்தை
ஒரு புது மோட்டார் சைக்கிளையே, வாங்கிக் கொடுத்தார்.
அது அவனது படிப்புக்குப் பயன்படாமல்
கழகத்திற்குத்தான் அதிகம் பயன்பட்டது.
அவர்கள் வீட்டு நிர்வாகம் முழுவதையும் நெறி செய்பவர்,
திருநந்தகுமாரின் தாயாரே.
ஆளுமை மிக்க பெண்மணி. கடும் கோபங்காரர்.
உறவு முழுவதும் அவர் கோபத்திற்கு அஞ்சும்.
நந்தனிடம்தான் அவரின் கோபம் முழுமையாய்ச் செல்லவில்லை.
ஆச்சரியமாக அவர் என்னை மிகவும் நேசித்தார்.
என்னோடு ஒருநாள்தானும் அவர் கடுஞ்சொல் பேசியதில்லை.
சுவாரஸ்யத்திற்காக ஒரு சம்பவம் சொல்கிறேன்.
திருநந்தகுமாரின் மூத்த தமக்கைக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது.
கல்யாணத்திற்கு ஒருவாரமே இருந்த நிலையில்,
திருகோணமலையில் ஒரு பட்டிமண்டபம்.
திருநந்தகுமாருக்கோ வர விருப்பம்.
ஆனால் வீட்டில் எப்படிக் கேட்பது? என்று தயக்கம்.
அந்தப் பொறுப்பை என் தலையில் போட்டான்.
ஒருநாள் விடிகாலை நேரம்.
அம்மாவின் முன்போய்த் தயங்கித் தயங்கி நின்றேன்.
தயவாக என்னிடம் ‘என்ன விடயம்?’ என்று கேட்டார்.
நான் பயந்து பயந்து குரலைத் தாழ்த்தி,
“உங்களிட்ட கொஞ்சம் பேச்சு வாங்கலாம் என்று,
வந்திருக்கிறன்” என்றேன்.
அவருக்கு இரக்கமாகிவிட்டது.
“நான் ஏன் உங்களப் பேசப்போகிறன்?
என்ன விஷயம் எண்டு சொல்லுங்கோ” என்று தணிவாகக் கேட்டார்.
பட்டிமண்டப விடயத்தை மெல்ல எடுத்துவிட்டேன்.
நானே எதிர்பார்க்காத விதமாக,
“அதற்கென்ன பரவாயில்ல அவரைக் கூட்டிக்கொண்டு போங்கோ” என்றார்.
அதைச் சொன்ன பிறகு அவர் சொன்னது தான்.
இந்த விஷயத்தின் ‘ஹைலைட்’.
கூட்டிக்கொண்டு போங்கோ என்றவர் தொடர்ந்து,
“உவர் இங்க நிண்டாப்போல ஏதோ செய்யவே போறார்” என்றாரே பார்க்கலாம்.
எங்கள் எல்லோர் முகத்திலும் அசடு லீற்றர் கணக்கில் வழிந்தது.
அந்த அம்மையாரும்,
மகனுக்குக் காசு கொடுக்க மறுப்பார்.
ஆனால், நான் கேட்டால் ஒருநாளும் தரமறுத்ததில்லை.
தன் பிள்ளையை தமிழுக்காக மினக்கெடுத்துகிறேன். என்று,
அந்தத்தாய் ஒருநாளும் என்னோடு கோபித்ததில்லை.
இன்று தெய்வமாகி விட்ட அவரை நினைக்க நெஞ்சு நெகிழ்கிறது.



திருமதி கனகசிங்கம்

என் நண்பன் வசந்தனின் தாயார் இவர்.
என்மேலும் குமாரதாசின் மேலும்,
இவருக்கு அளவற்ற அன்பு.
மென்மையின் இருப்பிடம்.
வஞ்சனையே அறியாப்பிறவி.
அவர் வார்த்தைகளில் வன்மையை நான் என்றும் கண்டதில்லை.
நாக்கைக் கடித்து அவர் முகத்தில் காட்டும் ஆச்சரிய பாவம்,
இன்றும் என் மனதில் நிற்கிறது.
“ஜெயராஜ் பாவம்” என்று சொல்லி,
மறுப்பில்லாமல் எனக்குக் கடன் தருவார்.
ஏதோ கடுமையாய்க் கணக்குப் பார்ப்பவர் போலப் பேசுவார்.
பணம் பெறுகையில் பலவற்றை விட்டுத்தருவார்.
அவர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள்.
கூழாம் பலாப்பழத்தை பிசைந்து வடித்து,
அதில் மா உருண்டை போட்டு,
“பாலில் வடித்தது” என ,
அவர்கள் வீட்டில் ஒரு பலகாரம் செய்வார்கள்.
அது அவர்கள் வீட்டின் ‘ஸ்பெஷல் மெனு’
எப்போது அதைச் செய்தாலும்,
எனக்கும் குமாரதாசுக்கும் எடுத்து வைக்க அம்மா மறக்கவேமாட்டார்.
தன் உயிர் இருக்கும்வரை என்னை அன்பால் நேசித்த,
அத்தாயையும் வாழ்நாளில் என்னால் மறக்கமுடியாது.



குமாரதாசனுக்கு வேலை கிடைத்தது

கழக முயற்சிகளாலே படிப்பைக் கைவிட்டு,
வீடுகளில் பகை தேடியிருந்த நிலையில்,
ஏ.எல். பரீட்சை இரண்டுதரம் எடுத்துவிட்டபடியால்,
கல்லூரியை விட்டும் வெளிவரவேண்டியதாயிற்று.
கல்லூரியால் வெளிவந்து,
உத்தியோகமும் இல்லாமல் நாம் வீணே திரிந்தோம்.
பெரிய மனக்கவலை.
இந்நிலையில்,
யாழ். பல்கலைக்கழகம்,
நூலக உதவியாளர் பதவிக்கு ஆட்களைக் கோரியது.
கோரப்பட்ட தகுதிகள் இருந்ததால்,
குமாரதாசன் அப்பதவிக்கு விண்ணப்பித்தான்.
அப்பொழுது கொழும்பில் தனியார் கம்பனியொன்றில்,
வேலை செய்து கொண்டிருந்த என் அண்ணனுக்கு,
யாழ்ப்பாணம் வந்து குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று
தீவிர விருப்பம்.
குடும்பத்தில் அன்புப் பைத்தியம் அவர்.
அவரும் அப்பதவிக்கு விண்ணப்பித்தார்.
தனக்கு உதவும்படி அவரும் என்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
கழகச்செல்வாக்கை
சுயநலனுக்காகப் பயன்படுத்தக்கூடாது எனும் கொள்கை,
எமக்கு அப்போது இருந்தது.
பின்னாளில் அக்கொள்கையை மாற்ற வேண்டி வந்தது.
கழகத்திற்காய்ச் சுயநலமின்றிப் பாடுபடுவோரை உயர்த்த,
அச்செல்வாக்கைப் பயன்படுத்தினால் தவறில்லை என,
பின்;னாளில் முடிவுசெய்தேன்.
அப்போதிருந்த கொள்கையால்,
அண்ணன், குமாரதாசன் இருவருக்காகவும்,
நான் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஆனாலும், குமாரதாசனைக் கம்பன் கைவிடவில்லை.
நேர்முகத்தேர்விற்கு முதல் நாள் தற்செயலாக பேராசிரியர் சண்முகதாஸ்,
சிவராமலிங்கம் மாஸ்ரரை ஏதோ வேலையாகச் சந்திக்க வர,
மாஸ்ரர் குமாரதாசன் வேலைக்கு விண்ணப்;பித்த விபரத்தைச் சொல்லி,
“கழகம் வாழ வேணும் என்றால்,
அவங்கள் வாழ வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.
பின்னர் பேராசிரியர் சண்முகதாஸின் முழு முயற்சியால்,
அப்பதவி குமாரதாசனுக்குக் கிடைத்தது.
நான் தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கோபித்து,
என் அண்ணன் எனக்குக் கடிதம் எழுதினார்.
கழகத்திற்காய்ப் பாடுபட்ட குமாரதாசனுக்கே,
கழகச் செல்வாக்கைப் பெறும் முதல் தகுதியுரியது என்பதால்,
அது பற்றி நான் கவலைப்படவில்லை.
வேலை கிடைத்ததால்; குமாரதாசன் வீட்டாருக்கு
ஓரளவு சாந்தி ஏற்பட்டது.



குருநாதரின் நிறைவுப் பயணம்

1983 பெப்ரவரி

குருநாதர் 1983 பெப்ரவரியில் மீண்டும் வந்தார்.
அவரது இப்பயணத்தின்போது
நான்கு கம்பன் விழாக்களை நடாத்தினோம்.
முதல்விழா வடமராட்சியிலும், இரண்டாவது விழா திருகோணமலையிலும்,
மூன்றாவது விழா இணுவிலிலும்,
நான்காவது விழா யாழ்ப்பாணத்திலுமாக நடைபெற்றன.
இந்தப் பயணம் ஈழத்திற்கான குருநாதரது இறுதிப்பயணமாயிற்று.
குருநாதரை தலைமன்னாரிலிருந்து அழைத்து வர ஒரு கார் இல்லாது தவித்தோம்.
முன்பு கார் தந்துதவிய வங்கி முகாமையாளர் வைத்தியநாதன்,
இம்முறை எமக்கு உதவுவதில் சற்றுப் பின்வாங்கியிருந்தார்.
எங்களோடு சிறு மனஸ்தாபம் அவருக்கு.
செத்த வீட்டில் திருவாசகம் பாடக் கூடாது என்று
பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள்,
“ஈழநாடு” பத்திரிகையில் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைக்க,
பாடலாம் எனப் பலரும் அவரை எதிர்த்து எழுதினர்.
நானும் பாடலாம் என அவரை எதிர்த்துக் கட்டுரை வரைந்தேன்.
கைலாசநாதக் குருக்களின்மேல்
வைத்தியநாதன் பெரிய மதிப்பு வைத்திருந்தார்.
நான் குருக்கள் அவர்களை எதிர்த்து எழுதியதில்,
வைத்தியநாதன் அவர்களுக்கு எங்கள்மேல் சற்று மனக்கசப்பு.
அதனால், குருநாதரை அழைத்துவர,
காரொன்றை ஒழுங்கு செய்து தருமாறு நாங்கள் கேட்க,
“பஸ்ஸில் அழைத்து வாருங்களேன்” என்றார்.
ஒன்றும் பேசாமற் திரும்பிவிட்டோம்.
என்ன செய்வதென்று தெரியவில்லை.
அடுத்தநாட்காலை நானும், குமாரதாசனும்,
யாழ் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த,
யோகேஸ்வரன் எம்.பி.யிடம் சென்றோம்.
எங்களை அவர் ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்.
எங்கள் பிரச்சினையைச் சொன்னதும்,
பேராசிரியரை அழைத்துவர யாரிடமோ ஒரு கார் வாங்கித் தந்தார்.
அதிற்தான் அந்தமுறை குருநாதரை அழைத்து வந்தோம்.



எமக்காய் இடர்கள் தாங்கிய குருநாதர்

இம்முறை குருநாதர் எங்கள் இரண்டாவது
அலுவலகத்திற்தான் தங்கியிருந்தார்.
எந்த வசதியுமில்லாத, ஒரு அறை மட்டுமேயுள்ள அலுவலகம் அது.
குருநாதர் கட்டிலிற் படுத்திருக்க
நாங்கள் சுற்றிவர நிலத்திற் படுத்திருப்போம்.
ஒரு கோழிக்கூட்டின் ஊடாகத்தான் கழிவறைக்குச் செல்ல வேண்டும்.
எத்தனையோ பணக்காரர்கள்,
குருநாதரைத் தங்கள் இல்லத்திற்கு வருமாறு அழைக்க,
அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டு,
“இந்தப் பசங்களோடதான் நான் தங்குவேன்” எனச்சொல்லி,
இடர்கள் தாங்கி எங்களோடு குருநாதர் தங்கி இருந்தார்.



வீடெல்லாம் மீன் வாசனை

அந்த அலுவலகம்பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன்.
வீட்டின் ஓர் ஓரத்திலிருந்த ‘அனெக்ஸ்சை’,
நாம் வாடகைக்கு எடுத்திருந்தோம்.
அந்த வீட்டின் வேறு சில அறைகளிலும்,
மாணவர்கள் சிலர் வாடகைக்கு இருந்தனர்.
எங்கள் பக்கத்து அறையிலிருந்த சுந்தரேசன், கணநாதன் என்கின்ற,
தமிழ் வைத்தியம் கற்று வந்த இளைஞர்கள் இருவர்,
எங்கள் அறையிலிருந்த அடுப்பில்,
தங்கள் பழைய கறிகளை வழக்கமாக, சுட வைத்துச் செல்வார்கள்.
குருநாதர் வந்திருந்தபோது ஒரு நாள் அவர் குளிக்கச் சென்றதும்,
அம்மாணவர்கள் வந்து கறி சுட வைக்கப் போவதாய்க் கேட்டார்கள்.
அவர்கள் சுட வைக்கப்போவது
மீன் குழம்பைத்தான் எனத்தெரியாது சம்மதித்தேன்.
அவர்கள் சுட வைத்துச் சென்றதும் வீடு முழுவதும் மீன் நாற்றம்.
வெங்காயம் கூட உணவிற் சேர்க்காத எங்கள் குருநாதர்,
எங்களுக்காகச் சகிக்க முடியாத அந்த மீன் நாற்றத்தை,
சகித்துக்கொண்டு முகம் சுளிக்காது இருந்தார்.



என்ன தவம் செய்தனை?

மற்றொரு நாள் குருநாதர் குளிக்கப்போக,
நான் அவருக்கு கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தேன்.
விழா நாட்களில் நான் என் உடைகளைக் கவனிப்பதில்லை.
குளித்துவிட்டு வந்த குருநாதரின் தோளில்
துவைத்த எனது வேட்டி கிடந்தது.
“ஒன் வேட்டி அழுக்கா இருந்திச்சு நானே அலம்பிட்டேம்பா” என்றார்.
துடித்துப்போனேன்.
“ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை”
இந்தப் பயணத்தில் குருநாதரை,
எங்கள் சங்கீத ஆசிரியை சத்தியபாமாவின் கணவர் ராஜலிங்கம்,
திரும்பத் தலைமன்னாருக்கு அழைத்து வந்து அனுப்பி வைத்தார்.
அவர்கள் தொடர்பு பற்றிப் பின் சொல்வேன்.



வடமராட்சிக் கம்பன் கழகம்

பருத்தித்துறையைச் சேர்ந்த மு.பொ. வீரவாகு,
குகன் ஸ்ரூடியோ அதிபர் குகன் ஆகியோர் பற்றி
முன்னரே சொல்லியிருக்கிறேன்.
கம்பன்கழகத்துடன் இவ் இடைக்காலத்தில்
இவர்கள் மிக நெருங்கியிருந்தனர்.
எங்கள் முயற்சிகள் அத்தனைக்கும் கைகொடுத்தனர்.
மு.பொ. வீரவாகு பெரும் செல்வர், ஆளுமையாளர், சண்டியர்.
நினைத்தால் நினைத்ததை எவருக்கும் அஞ்சாமற் செய்பவர்.
குகன் மென்மையானவர்.
நிறைந்த கடவுள் பக்தியுடையவர்.
நல்ல காரியங்களுக்குக் கைகொடுப்பதில் என்றும் பின் நிற்காதவர்.
இவ்விருவரது தொடர்பாலும் கம்பன்கழகம் பலம் பெற்றது நிஜம்.
என்மேற் கொண்ட அன்பாலும்,
குருநாதரது உரையில் ஏற்பட்ட விருப்பாலும்,
வித்துவான் வேலனின் தூண்டுதலாலும்,
மு.பொ. வீரவாகு வடமராட்சியில்
ஒரு கம்பன் கழகத்தை நிறுவ விரும்பினார்.
குகனும் முழுமனதோடு அதற்குத் துணைசெய்தார்.
இவ்விருவரது முயற்சியாலும்,
15.02.1983 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில்,
வடமராட்சிக் கம்பன் கழகம்,
எங்கள் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களால்,
அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



வடமராட்சிக் கம்பன் விழா
(15.02.1983)

இளையதம்பி தயானந்தா அறிமுகம்
இக்கழகத்தின் தலைவராக இ. உருத்திரா அவர்களும்,
செயலாளராக ஆ. தேவராஜன் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
15,16,17-02-1983 செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில்,
வடமராட்சிக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா,
பருத்தித்துறைச் சிவன்கோயிலில் அமைந்திருந்த,
“பர்வதவர்த்தினி” கலாமண்டபத்தில் நடைபெற்றது.
பட்டிமண்டபம், கவியரங்கம், இன்று சந்திக்கும் இவர்கள்,
தனியுரை எனும் நிகழ்ச்சிகள், இவ்விழாவில் நடைபெற்றன.
வீரவாகு, குகன் ஆகியோர்,
விழா நாட்களில் தங்கள் இல்லங்களில் பெருவிருந்திட்டு மகிழ்வித்தனர்.
அவ்வொரு விழாவோடு வடமராட்சிக் கம்பன் கழக முயற்சி
முடங்கிப்போயிற்று.



திருகோணமலையில் இரண்டாவது கம்பன் விழா
(18.02.1983)

இவ்விழா 1983 பெப்ரவரி 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
வடமராட்சி விழா முடிந்த அன்றிரவே, திருமலை புறப்பட்டோம்.
குருநாதருடனும் எங்கள் ஆசிரியர்களுடனும் கழக இளைஞர் கூட்டம்,
ஒன்று திரண்டு திருமலை வந்தது.
புதிதாய்க் கட்டப்பட்டிருந்த  ‘ஹோட்டல்’ ஒன்றில்,
எங்களுக்குத் தங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
அந்த ‘ஹோட்டலின்’ தரை மிக வழுவழுப்பாக இருந்தது.
அங்கு வந்த முதல் நாளே, சிவராமலிங்கம் மாஸ்ரர்
கால் வழுக்கி விழுந்துபோனார்.
ஏற்கனவே, நடக்க முடியாதிருந்த காலில் அடிபட்டு
மிகவும் வருந்தினார்.
அவரையும் பராமரித்து, விழாவையும் கொண்டாடினோம்.
அந்த மூன்று நாட்களும் எங்களுக்குக் கிடைத்தது சொர்க்க அனுபவம்.
விழாவின் எழுச்சியில் திருமலை கலங்கிப்போனது.
 
 
பேராசிரியரோடு சென்று,
வெந்நீரூற்று, கோணேஸ்வரம் போன்ற இடமெல்லாம் தரிசித்தோம்.
இவ்விழாவில், மறைந்த அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கட்கும்,
அமரர் தேவன் அவர்கட்கும் அஞ்சலி செலுத்தினோம்.
திருமலை மக்கள் தங்கள் தமிழார்வத்தால் எங்களைக் கலங்கடித்தனர்.
மூன்று நாட்களும் விருந்தும் விழாவுமாக,
அவர்கள் அன்பில் திக்குமுக்காடிப் போனோம்.
வித்தியாதரன் குடும்பம் முற்றுமுழுதாகத் தங்களை அர்ப்பணித்து,
இவ்விழாவுக்காகப் பாடுபட்டது.
வித்தியாதரனின் தாயார் ஆளுமைமிக்க கம்பீரமான பெண்மணி,
குருநாதரின் முழு அன்பையும் அவர் சம்பாதித்தார்.
ஒரு காரியத்தில் மனம் வைத்துவிட்டால்,
உடல், பொருள், ஆவி என அத்தனையையும்,
அதற்காகத் தியாகம் செய்யக்கூடியவன் வித்தியாதரன்.
திருமலைக் கம்பன் விழாவில், மேடையில் ஏறாமலே,
பின்னின்று முழுக்காரியங்களையும் சுயநலம் பாராது அவன் செய்தான்.
இவ்விழாவோடு, திருமலைக் கம்பன் கழக முயற்சிகளும் பின்னர் முடங்கிப்போயின.
நாட்டுச்சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணமாயிற்று.
அவ்விழா முடித்து அங்கிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டோம்.



அன்பில்லா அறிஞர்

இவ்விழாவில் பண்டிதர் உமாமகேஸ்வரனும் கலந்துகொண்டார்.
கம்பன் கழகத்தின் இந்த ஒரு விழாவில் மட்டுமே அவர் மேடையேறினார்.
இலக்கணப் புலமை மிக்க ஆழ்ந்த தமிழறிஞர் அவர்.
ஆனால், தனக்கு நிகர் வேறெவரும் இல்லை எனும் ஆணவம் கொண்டவர்.
மற்றவர்களைக் குறை சொல்லிச் சொல்லியே,
தன் உயர்வை நிரூபிக்க முயல்வார்.
எங்கள் ஆசிரியர்களான சிவராமலிங்கம் மாஸ்ரர்,
வித்துவான் வேலன், வித்துவான் ஆறுமுகம் ஆகியோர்,
அன்புக்கு அடுத்ததாகவே அறிவை மதிப்பவர்கள்.
அதனால், தம் நிலைவிட்டு இறங்கி வந்து,
சமூகத்தோடு கலந்து பழகி உறவாடுவார்கள்.
பண்டிதருக்கு எங்கள் ஆசிரியர்களை அதிகம் பிடிக்காது.
குறிப்பாக, சிவராமலிங்கம் மாஸ்ரரை
அவர் அறிவு குறைந்தவராகவே கணிப்பார்.
பண்டிதரிடம் சில காலம் பாடம் கேட்கச் சென்றேன்.
மற்றவர்களைக் குறை சொல்வதில் அதிக நேரத்தை அவர் கழித்ததால்,
அவ் வகுப்பு நின்று போயிற்று.
அந்த வகுப்புத் தொடர்பால்,
திருகோணமலைக் கம்பன் விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்திருந்தார்.
எங்களோடு சேர்ந்து விழாவிற்கு வராமல்,
விழாத்தொடங்கி அடுத்தநாள் வந்து சேர்ந்த அவரிடம்.
சிவராமலிங்கம் மாஸ்ரர் விழுந்த செய்தியைச் சொன்னோம்.
“நல்லதாய்ப்போச்சு” என்று அவரிடம் இருந்து வந்த பதிலால்,
கழகத்தார் அனைவரும் கசந்து போனோம்.
அங்கு நடந்த வழக்காடு மன்றத்தில்
அவரை ஓரளவு திக்குமுக்காட வைத்தேன்.
அவர் மனநிலை அறிந்த குருநாதர் அவர் பக்கமே தீர்ப்பளித்தார்.
கீழ் இறங்கியதும்,
“இது வீடணன் தந்த வெற்றி என்றாற் போல்,
கிடைத்த வெற்றி” என்றார் உமாமகேஸ்வரன்.
அவருக்கும் எங்களுக்கும் பின்னர் முரண்பாடாயிற்று.
எங்கள் வளர்ச்சி பொறாது வருந்தினார்.
ஆரம்ப காலத்தில் இலக்கண வித்தகரை,
தனது குருநாதராய்ச் சொல்லிப் போற்றி வந்த அவர்,
வித்தகர் எங்களை அங்கீகரித்ததும் அவரையும் குறையாய்ப் பேசினார்.
என் குருநாதரின் பேச்சையும் மற்றவர்களிடம் குறைத்துச் சொன்னார்.
பின்னாளில் எங்களைக் குறை சொல்வதற்காய்,
இராமனைக் குறை சொல்லி,
‘அதிதீரன்’ என்ற கட்டுரை எழுதினார்.
நான் எழுதிய ‘அழியா அழகு’ என்ற நூல்,
முன்னர் கி.வா.ஜ. வால் எழுதப்பட்டது என்று சொல்லித் திரிந்தார்.
ஆற்றல் மிகுந்த அவ் அறிஞரின் அன்பின்மை கண்டு வருத்தமுற்றோம்.



இணுவிற் கம்பன் விழா
(21.02.1983)

இவ்விழா 1983 பெப்ரவரி 21,22 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
கம்பன் கழகத்தோடு தொடர்புபட்ட ஊர்களில் இணுவிலும் ஒன்று.
எங்கள் கழகத்தலைவன் திருநந்தகுமாரின் ஊர் அது.
தமிழறிஞர்களும் இசைக்கலைஞர்களும் அங்கு நிறைந்திருந்தனர்.
இவர்கள் அனைவரது ஆதரவும் திருநந்தகுமாரின் முனைப்பும் ஒன்றுசேர,
இணுவிலில் ஒரு கம்பன் கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அக்கழகத்தின் சார்பில்,
இணுவில் கந்தசாமி கோயிலருகில்
இந்த இரண்டு நாட்களும் விழா நடைபெற்றது.
பட்டிமண்டபம், கவியரங்கம், தனியுரை ஆகிய நிகழ்ச்சிகள்,
இவ்விழாவில் நிகழ்ந்தன.
தவில் வித்துவான் சின்னராசா, புண்ணியமூர்த்தி ஆகியோர்,
எங்கள் குருநாதருக்கு விருந்தளித்தும் பரிசளித்தும் மகிழ்வித்தனர்.
இக்கழகமும் இவ்வொரு விழாவோடு முடங்கிப்போயிற்று.



எட்டாவது கம்பன் விழா (23.02.1983)
பத்மநாதன் பாராட்டு

வடமராட்சி, திருகோணமலை, இணுவில் விழாக்களை முடித்து வந்து,
நல்லூரில் இவ்விழாவை நடத்தினோம்.
“நல்லூர் விழா முக்கியம் கவனிச்சுக்கப்பா!” என்று
குருநாதர் அடிக்கடி சொல்வார்.
நல்லூர்ச் சபையில் குருநாதருக்கு அத்தனை மதிப்பு இருந்தது.
இவ்விழா 1983 பெப்ரவரி 23, 24 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
முதல் நாள் விழாவுக்கு வராதிருந்து,
வைத்தியநாதன் தம்பதியர் அடுத்தநாள் வர,
குருநாதர், அவர்களை அன்போடு மேடைக்கு அழைத்து
உட்கார வைத்தார்.
அத்தோடு அவர்களின் ஊடல் பறந்தது.
அப்போது, அரசாங்கத்தின் “கலாசூரி” விருதினைப் பெற்றிருந்த,
நாதஸ்வர வித்துவான், என்.கே. பத்மநாதன் அவர்களுக்கு,
விழாவின் நிறைவுநாளில் மலர்முடி சூட்டிப் பாராட்டு நடாத்தினோம்.
 
 
 
 


காசா? லேசா?

குருநாதரின் தொடர்பால்
இக்காலகட்டத்தில் கழகம் ஓரளவு வளர்ந்திருந்தது.
அவ்வளர்ச்சியால் பொருட்தேவையும் அதிகரித்திருந்தது.
பலரும் கழகத்திற்கென நிரந்தரமான ஒரு நிதியைச்
சேகரித்து வைக்கும்படி,
ஆலோசனை கூறி வந்தனர்.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.