எவர் உளர் இனி நாயகர்? | அமரர் தெ. ஈஸ்வரன் அஞ்சலிக்கவிதை
கவிதை முற்றம் 07 Jan 2018
‘எழும்பு போ’ எனக் கலைத்தது போரே
ஏதும் இலாத அகதிகளாகக்
கொழும்பு மாநகர் வந்தடைவுற்றோம்
கோயில் தெய்வமாய் எமைக் காத்தாய்
விழுந்து போன கழகப்பணிகள்
வீறு கொண்டு மீள உயிர்ப்புடன்
எழுந்து கொள்ள உதவிய கையா!
எவர் உளர்இனி நாயகர் ஐயா?
கம்பன் கழகத் தலைவரென்றாகி
காசினி எங்கும் அதன் ஒளியேற்றி
தம்பியர்க் கெல்லாம் தகைமையைக் காட்டி
தக்க அரச பணிநிறை வேற்றி
செம்பொன் தனையே அறமென மாற்றி
சென்றனை பெரும் புகழ்தனை நாட்டி
கும்பிட் டுன்னை அஞ்சலிக் கின்றோம்
கோவே! நிலை பெறுக அவ்வீடே!
-கம்பன் கழகத்தினர்
கழகம் முழுக்கத் தவிக்கிறதே !
இளையோர் எமக்கும் இளையோராய்
இதங்கள் செய்து தெம்பூட்டி
சளையா அறங்கள் நிதம் பேணிச்
சடையப்பன் என வாழ்ந்தவனே
அழையாதோர்க்கும் விரைந்தோடி
ஆற்றும் பணிகள் ஒருகோடி
நிலையாய் உந்தன் பெயர் சொல்ல
நீயேன் போனாய் விரைந்தோடி
கம்பன் கழகப் பணி என்றால்
கரங்கள் உனக்கு நூறாகும்
தம்பி அதனை நான் பார்பேன்
தயக்கம் வேண்டாம் எனச் சொல்லி
எம்மாப் பெரிய செயலேனும்
எளிதில் எமக்காய்ச் சாதிப்பாய்
அம்மாப் பெரியோய் நீ இன்றி
அசையாதையா இனி ஒன்றும்
விண்ணின் விருந்தாய் விரைந்தனையோ
வரந்தான் அவர்க்கு இனி என்ன
மண்ணின் வரங்கள் ஒருசேர
மறைந்தன உந்தன் மறைவாலே
கண்ணில் வைத்து எமைக்காத்தாய்
கழகம் முழுக்கத் தவிக்கிறதே
அண்ணல் உந்தன் அடிபேணி
அஞ்சலிக்கின்றோம் அமைதியுறு !
-இளநிலை நிர்வாகத்தினர் சார்பாக கம்பநேசன் அ.வாசுதேவா