உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 20 | நாவலர் சிலைப் பிரச்சினை

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 20 | நாவலர் சிலைப் பிரச்சினை
நூல்கள் 09 Jan 2018
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


குடுமி முடிந்தேன்!

இன்றைய இளைஞர்கள் சில நடிகர்களைப் பார்த்து,
அவர்களைப்போலவே தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்கின்றனர்.
என் இளமைக் காலத்தில் அத்தகைய ஈர்ப்பு,
எனக்கு என் குருநாதரின்மேல்த்தான் இருந்தது.
தோற்றத்திலும் அவரைப்போல் ஆகவேண்டும் என்பதற்காக,
நான் குடுமி வளர்க்கத் தொடங்கினேன்.
எனது அச்செய்கை கண்டு என்னை அனைவரும் கிண்டல் செய்தனர்.
‘ரவுஸரும்’ ‘சேட்டும்’ போட்டு குடுமியோடு திரிந்த என்னை,
பஸ்ஸில் போகிறவர்கள்கூடத் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக என் குடுமி வளர்ந்தது.
இந்தக் காலத்திற்தான் முழுமையாக நான் குடுமி முடிந்தேன்.
அந்த எனது கோலத்தை என் குருநாதர் பார்க்கவில்லை.
நான் குடுமி முடிந்த அதே காலத்தில்,
அவர் குடுமியை மழித்து மொட்டை போட்டிருந்தார்.
அவரது அந்தக் கோலத்தை நானும் பார்க்கவில்லை.
இது நடந்து ஓரிரு மாதங்களில் என் குருநாதர் மறைந்தார்.
என் ஆசிரியர் வித்துவான் ஆறுமுகம் அவர்கள்,
“குடுமியிலதானடா அவற்ற உயிர்நிலை இருந்துது,
அத உனக்குத் தந்திட்டு அவர் போயிற்றாரடா” என்று,
சொல்லிச் சொல்லி அழுவார்.
குருப் பிரசாதமாய் எனக்குக் கிடைத்த அந்தக் குடுமி,
பின்னர் என்னைப் பலவழிகளிலும் நெறிப்படுத்திற்று.
நான் மாமிசம் சாப்பிடாமல் விட்டது,
எனக்கென்று ஒரு தனி அடையாளம் உருவானது,
மற்றவர்கள் பார்வையைத் தாண்டி நான் ஆளுமை பெற்றது,
என் இளமையைக் கடப்பித்தது எனப் பலவிதத்தாலும்,
இக்குடுமி என்னை நெறிப்படுத்திற்று.

 





1983 ஜுலைக் கலவரம்

இலங்கையின் சாபக்கேடாக 1983 ஜுலை மாதத்தில்
இனக்கலவரம் மூண்டது.
இக்கலவரத்தால் இலங்கையின் தலைவிதியே மாறிப்போனது.
எங்கள் கம்பன்கழகத்தின் தலைவிதியுந்தான்.
உற்சாகமாக இயங்கிவந்த எங்கள் கழகத்தின் செயற்பாடுகள்,
சிலகாலம் முடங்கிப்போயின.
யாழ். திருநெல்வேலி தபாற்பெட்டிச் சந்தியில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில்,
பதின்மூன்று இராணுவத்தினர் இறந்துபோக,
அதைத் தொடர்ந்து அச்சூழலில் இராணுவ அட்டகாசம் நிகழ்ந்தது.
பலர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எங்கள் கம்பன் கழகத்தின் இரண்டாவது அலுவலகமும்,
அச்சூழலில்தான் அமைந்திருந்தது.
அப்பொழுது ஆலயங்களில் நான் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தேன்.
அப்படி ஒரு சொற்பொழிவுக்காக,
வேலணை முருகன் கோயிலுக்கு நான் சென்றிருந்தபோதே,
இக்குழப்பங்கள் வெடித்தன.
அச்சொற்பொழிவுக்கு என்னோடு குமாரதாசனும் வந்திருந்தார்.
பண்ணைப்பாலம் ஓரிரு நாட்கள் மூடப்பட்டதால்,
நாங்கள் வேலணையில் தனபாலசிங்கம் என்பவர் வீட்டில்
தங்க வேண்டியதாயிற்று.
அவர்கள் எங்களை, பிள்ளைகள் போலப் பார்த்தனர்.
பின், பாலம் திறந்ததும் கழகம் வந்து சேர்ந்தோம்.
தொடர்ந்து கொழும்பில் ஜுலைக் கலவரம் வெடிக்க,
நாட்டுச்சூழல் தலைகீழானது.
எங்கள் முயற்சிகளையெல்லாம் சிலகாலம் நிறுத்தவேண்டி வந்தது.



1986 வரை விழாக்கள் இல்லை

1983 ஆம் ஆண்டு நடந்த விழாவின்பின் 1986 ஆம் ஆண்டு வரை,
பெரிய கம்பன் விழாக்கள் எதனையும் எம்மால் நடத்த முடியவில்லை.
1983 ஜுலைக் கலவரம் நாட்டை பெருமளவு பாதித்தது.
ஒரு சில சிறிய நிகழ்வுகளை மட்டும் இடையிடையே நிகழ்த்தினோம்.



பேராசிரியர் இராதாகிருஷ்ணன் மறைவு
(1983 செப்ரெம்பர்)

இக்காலகட்டத்தில் 1983 செப்ரெம்பர் மாதத்தில்,
என்குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் மறைந்தார்.
அச்செய்தியை, திருச்சி வானொலி மூலம் தற்செயலாய் அறிந்தோம்.
தலையில் இடி விழுந்தாற்போலாயிற்று.
அளவற்ற அதிர்ச்சி!
குருநாதரின் நினைவாக நல்லை ஆதீனத்தில்,
ஓர் அஞ்சலிக்கூட்டத்தினை நடாத்தினோம்.
அங்கு பேசிய பலரும் கண்ணீர் விட்டுக் கதறியழுதனர்.
இரண்டாண்டு காலத்துக்குள் வெறுமனே மூன்று தரம் மட்டும் வந்து,
குருநாதர் எத்துணைதூரம் ஈழத்தமிழர் மனதில்
இடம் பிடித்திருந்தார் என்பதை,
அக்கூட்டம் வெளிப்படுத்திற்று.
அந்த இரண்டாண்டு காலத்துக்குள் எங்களையும் கழகத்தையும்,
தன் தமிழால் பேராசிரியர் பிரபலப்படுத்தியிருந்தார்.
இன்று வரை அவர் வாழ்த்தாற்றான் கழகம் வாழ்கிறது.
குறிப்பாக, அவர் பெயர் சொல்லி நான் நிறைந்து வாழ்கிறேன்.
அறிவுத்துறையில் அவர் அள்ளிப்போட்ட பிச்சை கொண்டு,
மற்றவர் பார்வையில் நானும் ஒரு அறிவுச் செல்வனாய் வலம் வருகிறேன்.
என் அனுபவம் கொண்டு இவ் உலகிற்கு நான் தரவிரும்பும் செய்தி,
“குருவின் மனமார்ந்த வாழ்த்தினைப் பெற்றவன் என்றும் வீழான்” என்பதே.



வித்துவான் ஆறுமுகம் மறைவு
(1984 பெப்ரவரி)

1984 பெப்ரவரி மாதத்தில் எங்கள் வித்துவான் ஆறுமுகமும் மறைந்தார்.
குருநாதர் இராதாகிருஷ்ணன் மறைந்தநாள் முதல்,
ஒவ்வொருநாளும் எங்கள் அலுவலகத்திற்கு அவர் வருவார்.
“உங்களுக்கு இனி யாரடா துணை?” என்று,
பெண்கள்போல் கேவிக்கேவி அழுவார்.
அந்த ஐந்து மாதங்களிலும் எங்கள் சந்திப்புகளில்
அவர் அழாத நாட்கள் குறைவு.
அந்த இடைக்காலத்தில் வித்துவான் ஆறுமுகம் அவர்கள்,
தனது உடல் நிலையையும் கருதாது, பெரும் பாடுபட்டு,
நல்லை ஆதீனத்தில், பண்டித வகுப்பொன்றினை,
நடாத்தத் தொடங்கியிருந்தார்.
அவ்வகுப்பினால் எங்கள் உறவு மேலும் நெருங்கிற்று.
ஒரு சிவராத்திரிக்கு முதல்நாள் என்னிடம் வந்து,
“திருக்கேதீஸ்வரம் போகிறேன், காசு தா” என்றார்.
“உன்னிடமிருக்கும் தமிழ் நூல்களையெல்லாம்,
பண்டிதவகுப்பு மாணவர்களுக்குக் கொடு!” என்றார்.
இரண்டுக்கும் நான் மறுப்புத்தெரிவிக்க,
என்னோடு சண்டை போட்டார்.
அன்று தற்செயலாய் வித்துவான் வேலனும் வந்துவிட,
ஏதோ உற்சாக மனநிலையில்
வித்துவான் ஆறுமுகம் பல பாடல்களையும் பாடினார்.
வித்துவான் வேலன்,
“என்னண்ணை இண்டைக்கு வலு உற்சாகமாக நிக்கிறீங்கள்,
டான்சும் ஆடுவியள் போல” என்று சொல்ல,
‘ஏன் ஆடமாட்டேனா?’ என்று கூறி,
எழும்பி நின்று பரதநாட்டிய அபிநயம் பிடித்தார்.
அன்று மாலை திருக்கேதீஸ்வரம் போனார்.
சிவராத்திரி முடிந்து வந்ததும் வாந்தி எடுத்ததால்,
டொக்டர் கெங்காதரன் மருத்துவநிலையத்தில்,
அவரைச் சேர்த்திருப்பதாய்ச் செய்தி வந்தது.
உடன்போய்ப் பார்த்தோம்.
இரவு வாழைப்பழம் தின்றதாய் மகள் சொல்ல,
“இனி வயது போச்சு, வாயை அடக்கிப் பழகுங்கோ” என்று,
எங்களுடன் வந்த வித்துவான் வேலன் அவரைப் பேச,
அதனைச் சிரித்தபடி கேட்டார்.
அடுத்தநாட் காலையில் அவர் மறைந்த செய்தி வந்தது.
கம்பன் கழகம் ஒரு பெரும் சொத்தை இழந்தது.
என்மேல் அளவற்ற அன்பு கொண்ட ஒரு காவலரை நான் இழந்தேன்.
(40ஆவது இயலில் “ஆறுமுகம் ஆன பொருள்” கட்டுரை காண்க.)



கழகத்தின் மூன்றாவது அலுவலகம்

கந்தர்மடத்தில் நாங்கள் தங்கியிருந்த நேரமது.
நான், குமாரதாசன், வசந்தன், ரத்தினகுமார் ஆகியோர்,
சங்கீதபூஷணம் திருமதி. சத்தியபாமா இராஜலிங்கம் அவர்களிடம்,
சங்கீதம் படித்து வந்தோம்.
அவர்கள் பெரும் செல்வர்கள்.
திரு. இராஜலிங்கம் அவர்கள் மிக உயர்ந்த பண்புகள் மிக்க ஒரு கனவான்.
மிகப்பெரும் மனிதர்.
எங்கள்மேல் தனித்த அன்பு வைத்திருந்தார்.
எங்கள் பேராசிரியரைத் தலைமன்னாருக்கு ஒருமுறை அழைத்துச் செல்ல,
அவரே வாகனம் ஓட்டி வந்திருந்தார்.
எங்கள் கோடூர் ராஜகோபால் சாஸ்திரிகள்,
கம்பன் கழகத்தின் தொடர்பால்,
திருமதி சத்தியபாமா இராஜலிங்கத்தை
இராமேஸ்வரத்திற்கு அழைப்பித்து,
ஒரு முறை தனது இசை விழாவில் பாடவைத்திருந்தார்.
இராஜலிங்கம் தம்பதியரின் பிள்ளைகள் எல்லோரும்,
வெளிநாட்டில் வசித்து வந்தார்கள்.
அக்காலத்தில், இலங்கை முழுவதற்குமான
‘ரோட்டறி கவர்னராக’ இருந்த இராஜலிங்கத்துக்கு,
துணைவியாருடன் அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர்களுடன் இருந்த தொண்ணூறு வயதான
இராஜலிங்கத்தின் தந்தையாரை,
பார்த்துக்கொள்ள எவரும் இல்லாததால்,
மனைவியை விட்டுத் தனியே அமெரிக்கா செல்ல
இராஜலிங்கம் ஆயத்தமானார்.
அவர்களது ஒரே மகள் அப்போது அமெரிக்காவில் இருந்தாள்.
மகளைப் பார்க்க முடியாமற்போகிறதே என்று,
எங்கள் ஆசிரியை எங்களோடு வருத்தப்பட,
நாங்கள் அப்பெரியவரைப் பார்க்கும் பொறுப்பையேற்று,
அவர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தோம்.
மூன்று மாதத்தில் வருவதாய்ச் சொல்லிச் சென்ற அவர்கள்,
நாட்டுச்சூழ்நிலையால் கொழும்பிலேயே தங்கிவிட,
சில ஆண்டுகள் அவர்கள் வீட்டிலேயே நாங்கள் தங்க வேண்டியதாயிற்று.
பின்னர் இல. 50, வைமன் ‘ரோட்டில்’ அமைந்த அவர்களின் வீடே,
கழகத்தின் மூன்றாவது அலுவலகமாய்ச் செயற்பட்டது.

 



டாக்டர் கு. ஸ்ரீ ரத்தினகுமார்

இவனைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.
கம்பன் கழகத்தின் முதல் விழாவிலிருந்து
எங்களோடு தொடர்பு வைத்திருந்தவன்.
இவனும் யாழ். இந்துக்கல்லூரி மாணவன்தான்.
எங்களை விட இரண்டாண்டுகள் இளையவன்.
நன்றாகப் பாடுவான்.
இவனது தந்தை வி.கே.குமாரசாமி அவர்கள்
புகழ்பெற்ற வயலின் வித்துவான்.
சொந்த ஊர் கரம்பன்.
நல்லூரில்தான் இவன் குடும்பம் வசித்தது.
கலையார்வமே இவனையும் எங்களோடு இணைத்தது.
ஆரம்பத்தில் இவன் எங்களோடு நெருங்கியிருக்கவில்லை.
இக்கால கட்டத்திற்தான் இவன் எம்மோடு,
கழக முயற்சிகளில் உண்மையாய் இணைந்தான்.
பிந்தி இணைந்தாலும்,
இன்றுவரை கழகத்திற்காய் முழுமையாய்ப் பாடுபட்டு வருபவன் இவன்.
கல்லூரிப் படிப்பின் பின் சிலகாலம் யாழ்;. கச்சேரியில் வேலை செய்துவிட்டு,
தன் அயரா முயற்சியினால்
மருத்துவ மாணவனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
படிக்கும் வசதிக்காக எங்களோடு வைமன் ரோட்டில் வந்து தங்கினான்.
அன்றிலிருந்து கழகத்தோடு இரண்டறக் கலந்தான்.
மாணிக்கம் கைவிட்ட
கழகப் பொருளாளர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டான்.
1985 ஆம் ஆண்டின்பின் எங்கள் கழக முயற்சி அனைத்திலும்,
இவனது பெரும்பணி கலந்திருக்கிறது.
இன்பம் வந்தபோதும் துன்பம் வந்தபோதும்,
அசையாது உடனிருந்து பாடுபட்டான்.
பிரகாசமான எதிர்காலம் வெளிநாட்டில் காத்திருந்தும்,
எனதும் கழகத்தினதும் எதிர்காலம் கருதி,
அவற்றைத் தியாகம் செய்தான்.
உயிராபத்து வந்தபோதுகூடக் கழகத்தைச் சுமையாய்க் கருதாதவன்.
எத்தனையோ நிர்ப்பந்தங்கள் வந்தபோதும்,
சலிக்காமல் கழகத்திற்காகவும் எனக்காகவும் பாடுபட்டு வருபவன்.
மற்றவர்களிடம் எதுவும் எதிர்பார்க்காதவன்.
வசீகரித்துப் பேசத் தெரியாதவன்.
ஆனால் உண்மையானவன்.
கழகத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும்,
என்னைவிட இவனுக்கே அதிகம் பயப்படுவர்.
திருமணமாகிக் குழந்தை பிறந்த பிறகுங்கூட,
கழகத்தைத் தனது வீடாய்க் கருதும் மனநிலையை மாற்றாதவன்.
அதனால் ஏற்பட்ட பல கசப்புக்களைச் சகித்து விழுங்கிக் கொண்டவன்.
என் பழைய நண்பர்களில்,
இன்றுவரை என்னோடு இருப்பவன் இவன் ஒருவனே.
வெளிப்படச் சொல்லப்போனால் இன்று வரை,
எனதும் கழகத்தினதும் முழுப் பொறுப்பாளன் இவனே!
கழக வரலாற்றில் குமாரதாசனினதும் இரத்தினகுமாரினதும் பணிகளை,
எவராலும் இட்டு நிரப்ப முடியாது என்பது எனது உறுதியான எண்ணம்.
ஏதோ முன்னைப் பிறவித் தொடர்பு.
 




யாழ். மாநகர சபை ஆணையாளர் 
சீ.வி.கே. சிவஞானம்  (1986 ஜுன்)

இக்காலத்தில் போர் வலுப்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தைப் புலிகள் தம்வசப்படுத்தி இருந்தனர்.
அப்போது யாழ். மாநகரசபையின் ஆணையாளராக,
திரு சீ.வி.கே. சிவஞானம் அவர்கள் இருந்தார்.
மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர் அவர்.
மிகுந்த ஆளுமை கொண்டவர்.
அரச உத்தியோகத்தர் என்ற எல்லையைத் தாண்டி,
மக்களுக்காய்ப் பாடுபட்டவர்.
இனப்பற்று மிகுந்தவர்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில்,
யாழ். மாநகர சபையைத் திறம்பட அவர் நடாத்தி வந்தார்.
யாழ். மாநகர சபைக் கட்டடம் போரினால் சிதைந்த பின்பு,
நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் பேசி,
கோயிலுக்கு உரிமையாய் இருந்த பெருங்காணியைக் குத்தகைக்குப்பெற்று,
அதில், இன்று இயங்கும் மாநகர சபைக் கட்டடங்களை
அமைத்தவர் இவரே.
நோர்வே அரசாங்கத்துடன் பேசி,
குண்டு வீச்சுகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்திற்கென,
சொந்தமாகத் தீயணைக்கும் படைக் கருவிகளை
அக்காலத்தில் வருவித்தார்.
இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்கால யாழ்ப்பாணத்தில்,
நியமிக்கப்படாத ஒரு மக்கள் தலைவன் போல்,
இவர் துணிவுடன் செய்த செயல்கள் பலப்பல.



நாவலர் சிலைப் பிரச்சினை

நல்லூர்க் கோயிலின் முன் அமைந்திருந்த,
நாவலர் மணிமண்டபத்திலிருந்த நாவலர் சிலையை,
வைமன் ‘ரோட்’ சந்தியில் அமைந்திருந்த,
நாவலர் மண்டபத்திற்கு இவர் மாற்றியது,
அக்காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
நாவலரை இழிவு செய்து விட்டதாகப் பலரும் அவரை எதிர்த்தனர்.
அப்பிரச்சினையில் நான் தலையிட்டுத் தீர்வுகாண முனைந்தேன்.
அது சம்பந்தமாக ஒரு நாள் நானாகச் சென்று,
சி.வி.கே. சிவஞானம் அவர்களைச் சந்தித்தேன்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக,
சொக்கன் மாஸ்ரரையும் ஆணையாளரையும் உடனழைத்துக் கொண்டு,
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைச் சந்தித்தேன்.
என்னாலும் இச்சமரச முயற்சியில் வெற்றிகாண முடியவில்லை.
ஆனாலும், என் நடுவுநிலைமையான அணுகுமுறையைக் கண்டு,
சீ.வி.கே. அவர்களுக்கு என்மேல் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது.
எங்கள் கழக முயற்சிகளிலும் அவர் அக்கறை காட்டத் தொடங்கினார்.
அவரது முயற்சியால் நல்லூர்த் தேவஸ்தானம்,
எங்கள் கழகத்திற்கென கோயில் பின் வீதியில் 1986 ஜனவரியில்,
ஒரு காணியை குத்தகைக்குத் தந்துதவியது.
நாவலர் சிலையை மாற்ற உதவியதற்கு,
தேவஸ்தானம் எங்களுக்குத் தந்த பரிசு அது என,
சிலர் அப்போது கொச்சையாய்ப் பேசினர்.
அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
பின்னர், கழகச் செயற்பாடுகள் பலவற்றிற்கும்,
சீ.வி.கே. அவர்கள் செய்த துணை மறக்க முடியாதது.
இந்திய இராணுவத்தின் வருகையின்போது,
அவரது ஆளுமையால் அரசியலிலும் பின்னர் முக்கியப்படுத்தப்பட்டார்.
இந்திய ஒப்பந்தத்தின்பின், வடகிழக்கு முதலமைச்சராய்,
யாரைத் தேர்ந்தெடுப்பது? என்ற பிரச்சினை வந்தபொழுது,
புலிகள் கொடுத்த பட்டியலில் இவரது பெயரே முதலாவதாக இருந்தது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன,
இவரையே முதலமைச்சராய்த் தேர்ந்தெடுத்தார்.
அதன் பின்னர்,
புலிகள் வேறொருவரை அப்பதவிக்கு நியமிக்கும்படி வேண்ட,
பின்னர் குழப்பங்கள் உருவாகிற்று.
இந்திய சமாதானப் படை வந்தபோது,
அப்போதைய இந்தியத் தூதர் டிக்சிற்றுடன்,
புலிகள் சார்பாய்ச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியவர் இவரே.
புலிகளும் இந்திய இராணுவமும் மோதத் தொடங்கியபின்,
யாழ். மாநகர சபை அலுவலகத்தில் வைத்து,
ஒரு முறை இனந் தெரியாதோரால் சுடப்பட்டு, இவர் உயிர் தப்பினார்.
பின்னர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராய்,
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று,
இன்று அதன் சபாநாயகராய்ச் செயற்பட்டு வருகிறார்.
இன்றுவரை எங்கள்மீதான அவரது அன்பு தொடர்கிறது.



நாவலர் சிலைப் பிரச்சினையும் பண்டிதர் க.சி. குலரத்தினமும்

நாவலர் சிலை மாற்றப்பட்ட பிரச்சனையில் ஆணையாளருக்கெதிராக,
அப்போது, ஒரு பெரிய குழுவே வேலை செய்தது.
அக்குழுவில் இருந்தவர்கள்,
தங்களை நாவலரின் பெரும் பக்தர்களாய்க் காட்டிக்கொண்டனர்.
அக்குழுவில் முக்கியமான ஒருவராய் இருந்தவர்,
பண்டிதர் க. சி. குலரத்தினம் அவர்கள்.
முறையாகத் தமிழ் கற்றவர் அவர்.
தமிழர் தம் புலமை வரலாற்றை நன்கு அறிந்திருந்தவர்.
அக்காலத்தில் ஊரெல்லாம் பனை மரங்கள் நாட்டியும்,
‘மில்க்வைற்’ சவர்க்காரம் தயாரித்தும் புகழ் பெற்றிருந்த,
திரு. கனகராஜா அவர்களின் ஆஸ்தான புலவர்போல,
பல காலம் இவர் இணைந்து செயற்பட்டார்.
உடம்பு முழுவதும் காய்காயாய் அமைந்த
விகாரத்தோற்றம் பெற்றிருந்தார்.
உருவத்தில் குள்ளமானவர்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் எமது அலுவலகத்திற்கு வந்த இவர்,
“நாவலர் சிலை பற்றித்தான் உம்மோடு கதைக்க வந்திருக்கிறன்” என்றார்.
ஏதோ என்னைத் திட்டத்தான் வந்திருக்கிறார் என
நினைத்துக்கொண்டு, “சொல்லுங்கோ சேர்” என்றேன்.
“நாவலர் சிலை பற்றிக் கதைக்க, இங்க
யாருக்கு முதல் உரிமை இருக்கு சொல்லும் பார்ப்பம்” என்றார்.
“தெரியேல்லை சேர்” என்றேன்.
“எனக்குத் தான் காணும் அந்த முதலுரிமை” என்றார்.
நான் ஒன்றும் பேசவில்லை.
“எப்படி என்று கேளுமன்” என்று அவரே சொன்னார்.
“சொல்லுங்கோ, சேர்” என்றேன்.
“நல்லூரடியில, நாவலர் சிலை இருக்கிற பொழுது,
அங்க ஒவ்வொரு நாளும் போன ஒரே ஆள் நான்தான்” என்றார்.
எனக்கு அவர்மேல் கொஞ்சம் மதிப்பு உயர்ந்தது.
“ஏன் போனனான் எண்டு தெரியுமே?” தொடர்ந்து அவரே கேட்டார்.
“தெரியேல, சேர்” என்றேன்.
“பின்னேரத்தில ஒவ்வொரு நாளும் முருகனைக் கும்பிடப் போறனான்.
கும்பிட்டு வரேக்க ஒண்டுக்கு வரும்,
நாவலர் மண்டபத்தில ஒருவரும் இராயினம்,
அதனால அங்க போய்த்தான்,
வசதியா ஒண்டுக்கு இருக்கிறனான்” என்று சொல்லி விட்டு,
ஏதோ பெரிய நகைச்சுவை சொல்லி விட்டாற்;போல் பெரிதாய்ச் சிரித்தார்.
நாவலர் சிலைப் பிரச்சினையில்,
நான் ஏதோ நல்லூர்க் கோயில் ஆதரவாளன் என்பதாயும்,
நாவலர் சிலை இழிவுபடுத்தப்படுவதில் மகிழ்கிறவன் நான் என்பதாயும்,
கற்;பனை செய்து கொண்டு,
என்னைத் திருப்திப்படுத்த வக்கிரமாய் அவர் பேசிய பேச்சு,
துளியளவும் எனக்குப் பிடிக்கவில்லை.
பின்னர் நாவலர் சிலைப் பிரச்சினைக்கு,
உப்புச்சப்பில்லாத ஒரு சமரசத் தீர்வு சொன்னார்.
சமுதாயத்தில் பெரிய மனிதர்களாய்த் திரிந்தவர்கள்,
சமூகப் பிரச்சினையை முதுகெலும்பில்லாமல்,
எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.



காணி நிலம் வேண்டும்

அக்காலத்தில், கம்பன் கோட்டம் ஒன்றினை அமைப்பதற்கென,
ஒரு சிறு நிலத் துண்டேனும் கிடையாதா? என ஏங்கியிருந்தேன்.
நிலம் கிடைக்க வேண்டி, திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தொடங்கினேன்.
திருவாசகம் படித்து முடிகின்ற அன்று, மனதினுள் பதற்றம்.
ஏதாவது நல்லது நடக்க வேண்டுமே என நினைந்தபடி,
கடைசிப் பதிகத்தைப் படிக்கிறேன்.
படித்து முடிக்க வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
எழும்பி வந்து கதவைத் திறந்தால்,
ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானம் அனுப்பிய ஆளொருவர்,
இன்ன இடத்தில் உங்களுக்குக் கம்பன் கோட்டம் கட்ட,
காணி ஒதுக்கியிருப்பதாகவும்,
அதனைச் சென்று பார்க்கும்படியும்,
சீ.வி.கே. அவர்கள் சொல்லி அனுப்பியதாய் வந்து சொன்னார்.
உண்மையில் மெய் சிலிர்த்துப் போனேன்.
பலருக்கும் இது நான் கற்பனையாய்ச் சொல்லும் கதையாய்ப்படும்.
ஆனால், எனக்கு இவ்வுண்மை தந்த சிலிர்ப்பை
இன்றும் மறக்க முடியவில்லை.



ஆரம்ப ஆயத்தங்கள்

 



நல்லூர்த் தேவஸ்தானத்திடம் சி.வி.கே. சிவஞானம்
பெற்றுத்தந்த நிலத்துண்டில்,
கம்பன் கோட்டம் ஒன்றைக் கட்டுவதாய் முடிவு செய்தோம்.
எங்கள் கையிலோ ஒரு சதமும் இல்லை.
எங்களது “சீனியராய்”யாழ் இந்துவில் படித்த குணசிங்கம் என்பவர்,
அப்பொழுது புகழ் பெற்ற கட்டிட வரைஞராய் இருந்தார்.
நாம் சென்று கேட்டதும் கம்பன் கோட்டத்திற்கான வரைபடத்தை,
அவர் இனாமாய் வரைந்து தந்தார்.
அக்கட்டிடத்தினைக் கட்டி முடிக்க
மூன்று இலட்சம் ரூபா செலவாகும் என,
அவர் சொன்ன போது நாங்கள் திகைத்துப் போனோம்.
ஆனாலும் அவர் நீங்கள் முதலில் வேலையைத் தொடங்குங்கள்,
பிறகு காசு கிடைக்கக் கிடைக்க மிகுதியைக் கட்டலாம் என்று
ஊக்கம் தந்தார்.
தன்னோடு பணியாற்றிய குமணன் என்கின்ற பொறியியலாளரை,
கட்டிட மேற்பார்வைக்கெனத் தந்துதவினார்.
அவ்விருவரும் எவ்வித கட்டணங்களுமின்றி,
கம்பன் கோட்டக் கட்டிடப்பணிகளுக்குச் செய்த உதவிகளை
மறக்க முடியாது.
இன்று அவ்விருவரும் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றனர்.
இன்றும் அவர்கள் தங்களால் முடிந்த அளவு
கம்பன் பணிக்கு உதவி வருகின்றனர்.



மலசலகூட நிலத்தில் கம்பன் கோட்டம்

1986 பெப்ரவரி 10 ஆம் திகதி
அடிக்கல் நாட்டும் விழாவொன்றினை நடாத்தினோம்.
எங்களுக்குத் தரப்பட்ட
நல்லூர்க் கோயிலுக்குச் சொந்தமான நிலத்துண்டில்,
முன்பு ஒரு பொது மலசலகூடம் இருந்து வந்தது.
பலகாலம் பாவிக்கப்படாமல் இருந்த அம்மலசலகூடக் கட்டடத்தை,
எங்கள் கழகத் தொண்டர்களே இடித்துச் சுத்தப்படுத்தி,
ஒரே நாளில் அத்திவாரம் இடுமளவிற்கான நிலப்பரப்பாய் ஆக்கினர்.
கடுமையான அவ்வேலையால்,
தொண்டர்கள் பலரது கைகளிலும் இரத்தக் காயம் உண்டாயிற்று.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரான இராஜலிங்கம்,
தன் தேவைக்கு வாங்கி வைத்திருந்த,
இரும்புக் கம்பிகள் அனைத்தையும் எமக்குத் தந்துதவியதோடு,
குழாய்க்கிணறு வெட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.


பாகம் 021ல்...
· கம்பன் கோட்ட அடிக்கல் நாட்டு விழா 
· ஊக்கம் தந்த ‘ஈழநாட்டு’ ஆசிரியர்
· முதற்கட்ட வேலைகள் முடிந்தன
· கைவராமல் போன பணம்
· கிட்டுவின் கோரிக்கையை மறுத்தேன்
· புதுவை இரத்தினதுரை
· கல்வயல் குமாரசாமி
· எழுத்தாளர் அநுவை நாகராஜன்
· கடவுள் காத்தார்!
· சிறைப்பட்ட ஐங்கரநேசன்
· காக்கா என்னும் மனோகர்
· ஐங்கரநேசனை மீட்கத் துணைசெய்தேன்
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.