உயர் இசையின் வடிவாகி வாழ்ந்து நின்றோன்!
கவிதை முற்றம் 01 Dec 2016
ஒப்பற்ற ஞானத்தால் உலகை ஆண்ட
அயர்வறியாப் பெருங்கலைஞன் அவனி நீத்தான்.
அகிலமெலாம் அவன் நினைவால் வாடிப்போக
பெயர் அதனைச் சொன்னாலே இசையின் நல்ல
பெருமையெலாம் நினைவுறுத்தும் பெரியன் இன்று
வியன் உலகை ஆள்வதற்காய் அங்கு சென்றான்
விண்வாழும் தேவரெலாம் மகிழ்ச்சி கொள்ள
ஓங்காரம் ஒலிக்கின்ற உயர்ந்த நாத
ஒப்பற்ற குரல் கேட்டார் உணர்வை நீத்து
தாங்காதல் கொண்டதனில் மூழ்கிப்போவார்
தமை மறந்து விண்ணாளும் பேறைக் கொள்வார்
பாங்கான இசையதனின் நுட்பம் எல்லாம்
பலகாலம் பயின்றதனைப் பாருக்கீந்தாய்
நீங்காது உன் இசையும் நிலம் முற்றாண்டு
நெடுங்காலம் எம் செவியில் நிலைக்கும் ஐயா!
மூன்றான ஸ்வரம் தன்னில் ராகம் பாடி
மூக்கில்விரல் வைத்தறிஞர் வியக்கச் செய்தாய்
ஆன்றோர்கள் மகிழ்ந்திடவே அரிய நல்ல
அற்புதமாம் உருப்படிகள் பலவும் செய்து
சான்றோடு அவற்றையெலாம் நிலைக்கச் செய்ய
சாற்றித்தான் ‘முரளி’ எனும் நாமம் தன்னை
வான்சேரும் பெரும்புகழை ஈட்டிக்கொண்டாய்
வற்றாது இசை உலகை மீட்டிக்கொண்டாய்.
பால முரளீ என்னும் நாமந்தன்னை
பார்முழுதும் இசை எனவே பதிய வைத்தாய்.
ஆலமென விரிந்திசைக்கு நிழலே செய்து
ஆரிவரென்றனைவரையும் திரும்ப வைத்தாய்.
ஞாலமெலாம் இசைப்பெருமை பரவச் செய்து
ஞாயிறென எமதிசையை ஒளிர வைத்தாய்.
காலனவன் உனை அழைக்க விண்ணில் சென்று
கலங்கித்தான் ரசிகர்களை அழவும் வைத்தாய்.
திரை இசையைத் தீட்டெனவே ஒதுக்கா நின்று
திகட்டாத பாடல்பல ரசிகர்க்கீந்தாய்
கரை கடந்து இசைக்கடலின் விரிவுகாட்டி
கற்றவரை விண்பார்த்துக் களிக்கச் செய்தாய்
உரையதனில் உன் பெருமை அடக்கலாமோ?
உயர் இசையின் வடிவாகி வாழ்ந்து நின்று
இறையடியை இன்றடைந்தாய் இனிமேல் இங்கு
எவர் கிடைப்பார் இசைதனையே ஏற்றம் செய்ய?
***