'ஒப்பற்ற பெருந்துறவி' | மாதுலுவாவே சோபித தேரருக்கான அஞ்சலிக்கவிதை

'ஒப்பற்ற பெருந்துறவி' | மாதுலுவாவே சோபித தேரருக்கான அஞ்சலிக்கவிதை
மாதுலுவாவே சோபித தேரர், இலங்கையில் அனைத்து இனங்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என உளத்தால் நினைந்து உலகறிய குரல் கொடுத்தவர். தமிழர் ஒருவரும் இலங்கையின் தலைவர் ஆகலாம் எனத் துணிந்து சொன்னவர். மகிந்த ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்டு வெற்றி கண்டவர். வணக்கத்திற்குரிய அவ் உத்தமர் இவ்வாரம் அமரர் ஆனார். அவ் உண்மைத்துறவிக்கு 'உகரம்' தன் அஞ்சலியை செலுத்துகிறது.
 

ஒப்பற்ற பெருந்துறவி விண்ணைச் சேர்ந்தான்!

உலகமெலாம் நெஞ்சுருகிக் கண்கள் சிந்த
ஒப்பற்ற பெருந்துறவி விண்ணைச் சேர்ந்தான்.
நலமுறவே மனிதரெலாம் ஒன்றாய் வாழ
நாளுந்தான் உழைத்த மகன் விண்ணைச் சேர்ந்தான்.
கலகமிலாப் பூமியென இலங்கை மண்ணை
காணுதற்குத் தவமிருந்தோன் விண்ணைச் சேர்ந்தான்.
நலமிகுந்த புத்தனது உண்மைத் தொண்டன்
நல்லவர்கள் ஏங்கிடவே விண்ணைச் சேர்ந்தான்.

சிங்களவர் தமிழர் எனப் பேதம் காணும்
சிறுமதியைத் துறந்ததனால் உயர்ந்து நின்றோன்.
எங்களவர் முஸ்லிம்கள் என்று சொல்லி
எல்லோரும் வாழ வழி செய்து நின்றோன்.
பங்கமிலாப் பெருங்குணத்துப்பண்பால் என்றும்
பலர்போற்ற உலகமதில் அமைதி பேணி
தங்கமென, துறவதனின் பெருமை சொல்லி
தரணியெலாம் ஈர்த்தமகன் விண்ணைச் சேர்ந்தான்.

ஒப்பற்ற இலங்கைத்தாய் உவந்து ஈந்த
ஓர் வயிற்றுப்பிள்ளைகளை இனங்கள் சொல்லி
தப்பற்ற நெறிபிறழச் செய்து தங்கள்
தனி வாழ்வுச்சுகம் தேடத் தரமே கெட்டு
உப்பற்ற உணவெனவே உறவை ஆக்கி
உதிரந்தான் வெள்ளமென ஓடச்செய்தோர்
கைப்பற்றி அரசதனை ஆண்டு நிற்க
கணநேரப் பொழுதில் அதை மாற்றி வைத்தோன்.

இனி வருமோ இங்கெமக்கு வாழ்வு என்று
ஏங்கித்தான் தமிழரெலாம் இழிந்து நின்றோம்.
தனிமனிதன் ஒருவனென நின்று எங்கள்
தரமுரைத்து இந்நாட்டின் தலைவர் என்றும்
இனித் தமிழர்  வந்திடலாம் என்று சொல்லி
ஏற்றங்கள் செய்த பெருந்துறவி இன்று
தனித்துழல எமைவிட்டு விண்ணைச் சேர்ந்தான்
தமிழரெலாம் நெஞ்சுருகி வருந்தி நின்றோம்.

ஆயரொடு மௌலவியும் ஐயர் தானும்
அருந்துறவி போனதனால் வருந்தி நின்று
தேயமெலாம் வியந்திடவே ஒன்றாய்ச் சேர்ந்து
தேம்பித்தான் தமது மனச்சோகம் சொல்லி
வாய், மனது, தேகமெலாம் ஒன்றாய்ச் சேர
வணங்கித்தான் அஞ்சலிகள் செய்தே நின்றார்.
தாய் மனது கொண்டவனின் இழப்பை இந்த
தரணியதும் தாங்கிடுமோ? தனித்தே போனோம்.

இராவணனாய், இரணியனாய் இந்த மண்ணை
இருள்சூழ வைத்தாண்ட அரக்கர் தம்மை
தராதரத்தில் வீழ்த்தவென தனித்து வந்து
தக்கோரை ஒன்றாக்கி தரணி பார்க்க
நிராயுதனாய் நின்றகிம்சை நெறியில் நின்று
நிகரில்லாப் புரட்சியினை செய்ததாலே
அராவனைய கொடியவரை வீழச்செய்தோன்
அதிசயங்கள் இம்மண்ணில் நிகழச்செய்தோன்.

என்னாகும் அப்புரட்சி இனித்தான் என்று
ஏங்கித்தான் நல்லவர்கள் வருந்தி நின்றார்
பொன்னான சோபிதராம் தேரர் தம்மை
போலொருவர் வருவாரா? இனியே என்று
கண்ணார நீர் வடித்துக் கவன்று நின்று
கற்றவர்தான் வருந்துகிறார், கடவுள் என்ன
விண்ணேறிப் பெரியவனும் விரைந்து போனான்.
விதி என்ன செய்திடுமோ யாரே கண்டார்?

*****
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.