ஒரு புள்ளியின் புலம்பல் ! - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

ஒரு புள்ளியின் புலம்பல் ! - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
 
லகம் வியப்புற்ற கோலமது.
நாற்புள்ளியிட்டு…
நயப்போடு தொடங்கிய அக்கோலம்
நாளடைவில்
எட்டாகி எழில் மிகுந்து
நாளாக நாளாக
புதிது புதிதாகப் புள்ளிகள் வளர்ந்து
காண்போர் வியக்க
கவனம் தனதாக்கி
பொன்னாய் ஜொலித்து
புவி முழுதும் பரவிற்றாம்.
 

➤➤➤

புவி வியந்த
அப்புள்ளிக் கோலத்தை
இணைத்தது ஒரு தனிக்கோடு
அங்கும் இங்குமாய்
ஏறியும் இறங்கியும்
ஓடியும் உருண்டும்
சுற்றியும்; சுழன்றும்
மற்றவர்க்காய்த் தனை மாற்றிய அக்கோடு
சிதறிக் கிடந்த சிறு புள்ளிகளைத் தான் சேர்த்து
காண்போர் வியக்கும்
கவின் கோலம் ஆக்கிற்றாம்.
➤➤➤

புள்ளிகளால் பலவாகி
கோலத்தால் ஒன்றான
அவ்வண்ண சித்திரத்தின்
வடிவழகை…
காணக் கிறங்கிற்று மனது
கண்டு மயங்கிற்று உலகு.
➤➤➤

விண்தொட்டு விரிந்த அக்கோலத்தில்
எவரதோ கண்பட்டுப் போயிற்று
கூடிக் கிடந்த அக்கோலத்தின்
ஒரு புள்ளி
தன்னைத் தனியாய்க்காட்டி
எண்ணம் வளர்க்க
ஏனோ விரும்பிற்றாம்.
➤➤➤

புள்ளிகள் சேர்ந்து
பொலிந்திருந்த அவ்வழகு
ஒற்றைப் புள்ளிக்கு…
தள்ளித் தனை விழுத்தும்
தளையாய்த் தெரிந்ததுவாம்.
ஒட்டியிருந்த ஒப்பற்ற அழகறுத்து
வெட்டிப் பிரிய விரும்பிற்றாம்
அப்புள்ளி.
➤➤➤

இச்சைக் கோலத்தின்
எழில் மிகுந்த இடத்தமர்ந்த
உச்சிப் புள்ளியது…
கோலத்தின் உச்சியிலே
குடியிருந்த காரணத்தால்
நீளத் தன் புகழால்தான்
நிலைக்கிறது கோலமென
சின்னப் புள்ளியதன்
சிறு மதியில் ஓர் எண்ணம்…
➤➤➤

மெல்லத் தன் கிளை அறுத்து
மேலான கோலத்தின்
உள்ளிருக்க மாட்டாமல்
உதறி வெளிப் போயிற்றாம்
➤➤➤

கோலத்தில் பொருந்தி
குடியிருந்த காலத்தில்
வாழக் கிடைத்த வழி மறந்து
அப்புள்ளி…
துள்ளிக் குதித்துத் தொடர்பறுத்துப் பகையோடு
தள்ளிக் கிடந்து தனித்ததுவாம்.
➤➤➤

எண்ணம் பெருத்து
எவர் என்முன் என நினைந்து
பழியதற்கு அஞ்சாமல்
பலர் வியக்கத் தனித்தேதான்
வெளிவந்த அப்புள்ளி
விண்தொட்ட புகழ் தேய
வண்ணக் கோலத்துள்
வாழ்ந்திருந்த பெருமையினை
மெல்ல இழந்து
மெலியத் தொடங்கிற்றாம்.
➤➤➤

புள்ளியிழந்த
அப்புகழ் இடத்தை
தனிக்கோடு…
மெல்ல வளைத்து
மீண்டும் ஒரு புள்ளியினை
உள்ளிழுத்து
இடம் நிரப்பி
ஒப்பற்ற வடிவாக்கி
அள்ளும் அழகோடு
அருங் கோலம் ஆக்கிற்றாம்.
➤➤➤

கோலத்தை குழப்பி
குடிபெயர்ந்த தனிப்புள்ளி
மீளத் தன் பெருமையது
மேதினியில் நிலைக்காமல்
வீழக் கண்டுள்ளம் விம்மிற்றாம்.
கோலத்தின் உச்சியதை
குறையென்று எண்ணியது
கேள்விக் குறியின் கீழ்
கிடந்து உழன்றதுவாம்.
➤➤➤

காலம் கடக்க
காணாமல் மெதுமெதுவாய்
நீளப்புகழ் குறைந்து
நிலைகுலைந்து போனதனால்
ஓலம் இட்டந்த
உயர்விழந்த தனிப்புள்ளி
ஆணவத்தால் அறிவிழந்து
ஆடியதை மனம் நினைந்து
தனித்தியங்க நினைத்ததனை
தான் உணர்ந்து வாடிற்றாம்.
➤➤➤

ஒற்றைப் புள்ளியது
ஒருநாளும் கோலமதாய்
நின்றியங்க முடியாத நிலையுணர்ந்த
அப்புள்ளி…
வேறு வழியில்லாமல்
விம்மும் மனத்தோடு
அழகிழந்து அணியிழந்து
அத்தனையும் தானிழந்து
வெற்றுப் புள்ளியதாய்
வெறுமை துரத்திடவே
முற்றுப் புள்ளியதாய்
மோனத்தில் மூழ்கியதாம்.
◆◆◆
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.