கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்...

கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்...
 
போர்த் தினவில் 
வாழ்ந்து பழகிவிட்ட
பொல்லாத பலியாட்டுத்
தமிழனை,
மீண்டும் மீண்டும் 
குதூகலப்படுத்த
அறிக்கைப் போரில்
ஆயுதம் எடுத்தனர், தலைவர்கள்.

விடுப்பு வாயர்களுக்கான
விருந்தாய்
புதிய தேசியத் தலைமைகளின்
தோட்டா வார்த்தைகளில்
தொடங்கியது 
மகிழ்ச்சித் திருவிழா.
 


பூனைகளுக்கு வண்ணப் பூச்சில்
வரிகள் வரைந்து, 
வந்தது புலி என,
வெடிகொளுத்தும் திருவிழா
விமரிசையில், கேட்பதில்லை,
விளக்கேற்ற
கல்லறை தேடும்
தாயின் அழுகுரல்.

கசக்கி எறியப்பட்ட
குருத்துகளின் தாய்மாரின் …
பாட்டிமாரின்…
கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்,

உங்கள் பிள்ளைகளுக்கு உல்லாசம் தந்துவிட்டு
ஊர்ப் பிள்ளைகளை 
பலி கேட்கும் தலைவர்களே!
கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்.

இனத்தின் சகல இளசுகளையும்
சாப் பருந்து
கொத்திப் போனபின்,
யாரிடம் கொடுப்பீர்கள்
முதுசத்தின் சாவிக் கொத்தை?
 
 
 
✽✽✽
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.