திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 10: "ஏதவன் ஊர்? ஏதவன் பேர்?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 10: "ஏதவன் ஊர்? ஏதவன் பேர்?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

 

ங்கையர்கள் தம் பயணம் மகிழ்வோடு தொடர்கிறது,
காலங்கடந்திருக்கும் கண்ணுதலான் பெருமைதனை,
முன்னே உரைத்தவர்கள் மூண்டிருந்த அன்பதனால்,
இடமதையும் கடந்த சிவன் ஏற்றமதை உரைக்கின்றார்.

❤❤❤❤

பெண்ணொருத்தி பாட்டாலே பேசத் தொடங்குகிறாள்.
இறைவனது திருவடிகள் எதுவரைக்கும் செல்லுமென,
நீளநினைந்தவளும் நெஞ்சுருகிப் பாடுகிறாள்.
மேலுலகு ஏழென்றும் மிகையின்றி நிறைந்திருக்கும்
கீழுலகு ஏழென்றும் கிளர்வார்கள் உலகத்தார்.
அதைநினைந்த இவ்வணங்கு ஆண்டவனின் திருவடியை,
பாதாளம் ஏழினும்கீழ் பாதமலர் எனச்சொல்லி,
மீண்டும் நினைக்கின்றாள். மெய்யாம் இறைவன்தாழ்,
வார்த்தைகட்கு அடங்காத வளம்நினைந்து உருகுகிறாள்.
பாதமலர் எனவே முன் பகன்றதனைத் திருத்தியவள்,
சொற்கழிவு பாதமலர் எனச்சொல்லி சுகம் கொண்டாள்.
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

❤❤❤❤

பாதாளம் கடக்கின்ற பாதங்கள் பேசிய பின்,
ஓதிச் சிவனாரின் உள்ளொளியில் கலக்கும் அவள்,
நீளமுடி நிமிரும் நிலைசொல்லத் துடிக்கின்றாள்.
விரியாத மலர்த் தொடைகள் விளங்குகிற இறையவனின்,
முட்டாமல் வான் கடக்கும் முடிநிமிர்வை நினைந்தவளும்,
எல்லாப் பொருள் முடிவும் இதன் கீழே என்றுரைத்து,
உலகப்பொருள் அனைத்தின் ஒப்பற்ற முடிவனைத்தும்
இறையவனின் முடியின் கீழ் இருப்பதுவே என உரைத்தாள்.
இடத்தாலும் அளத்தற்கு இடந்தாரா இறையவனின்,
பெருமைதனைச் சொன்னதிலே பேதைக்கோ பெருமகிழ்ச்சி.
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே

❤❤❤❤

இறையவனின் திருவடிவின் ஏற்றமதை அளந்தாற்போல்,
வார்த்தைகளால் உரைத்தோய்ந்த வனிதையினைப் பார்த்தந்த,
கூட்டத்தில் மற்றொருத்தி குலுங்கித்தான் சிரித்திட்டாள்.
ஆண்டவனின் வடிவதனை அளந்தாற்போல் சொன்னவளே!
எங்கள் இறையவர்க்கு எது வடிவு? இயம்பாய் நீ!
பார்வதியைப் பாகத்தில் பதித்திருக்கும் இறையவனார்,
ஓர்வதற்கு முடியாத ஒப்பில்லாத் திருமேனி,
பலகொண்டு திகழ்கின்ற பரமன் என அறிவாய்.
திருமேனி பலகொண்டு திகழும் அவன்தன்னை,
ஒருமேனியான்போலே உரைப்பதுவும் சரியாமோ?
என்றந்தப் பெண்ணவளும் இயம்பிச் சிரித்தாளாம்.
பேதை யொருபாற் திருமேனி யொன்றல்லன்

❤❤❤❤

பின்னுரைத்தாள் வார்த்தைகளைப் பேணி மனமொப்பி,
முன்னிரண்டு விழிசூழ முகிலதனைக் கொண்டிலங்கும்,
பெண்ணொருத்தி தன்கருத்தைப் பேசத் தொடங்குகிறாள்.
தோழீ! நீ சொன்னதுபோல் தூயசிவன் ஒருவன் அலன்.
ஆரறிவார்? அற்புதனாம் அரனாரின் வடிவமதை,
வேதங்கள் அவைதாமும் விண்ணவரும் மண்ணவரும்,
ஆயிரமாய்த்தாம் சொல்லி அன்போடு துதித்தாலும்,
ஓதமுடியாத ஒருவனென உரைத்தவளும்
முடித்திடுமுன் மற்றொருத்தி முன்வந்து இடைபுகுந்தாள்.
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்,
ஓத உலவா ஒரு ...


❤❤❤❤

இடைபுகுந்த பெண்ணவளும் ஏந்திழையாள் வார்த்தைகளை,
ஓத உலவா ஒருவனென முடித்திடுமுன்,
தோழன் அவன்தான் தொண்டர்க்கு எனவுரைத்து,
அடியார்க்கும் இறைவர்க்கும் ஆனநெடுந்தொடர்பதனை,
அன்பின் வழிகொண்டு ஆழ உரைக்கின்றாள்.
அளந்திடவே முடியாத அரனார்தான் அடியார்க்கு,
நிலந்தன்மேல் வந்தருளி நீழ்கழல்கள் காட்டுவதால்,
ஒப்பற்ற பெரும்நட்பாம் உறவாகி நிற்கின்ற,
உண்மை உரைத்து உளம்மகிழப் பணிகின்றாள்.
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

❤❤❤❤

தோழியரின் வாதம் தொடர்வதனைக் கண்டவொரு,
நீள இறையவனை நினைந்திருக்கும் பழஅடியாள்,
சீதப் பொழுதினிலே சிவனாரை நினையாமல்,
வாதம் எதற்கென்று வருந்தினளாம். அவர்தம்மை,
பாதம் நினைவதற்கு பயிற்றிடவே நினைந்ததனால்,
ஏதேதோ சொல்லி இறையவரைத் தெரிந்தவராய்,
ஓதத்தான் நினைக்கின்ற உத்தமிகாள்! அரனாரின்,
கோயிற்கென்றே உம்மைக் கொடுத்திட்ட மங்கையரே!
குற்றமிலா நலமுடைய குலத்துதித்த அணங்கணையீர்.
சிவனாரை நன்றாகத் தெரிந்தவர்போல் செப்புகிறீர்.
ஏதவனூர்? ஏதவன்பேர்? ஆறுற்றார்? ஆரயலார்?,
ஏதவனைப்பாடும் பரிசு? என்றே அவள் கேட்க,
மாதரெலாம் வாய்மூடி மௌனித்து நின்றார்கள்.
வார்த்தைகளுக்கடங்காத வான் முதலின் புகழதனை,
ஏத்தி உரைத்திருந்த ஏந்திழையார் தலைகவிழ்ந்தார்.
பெண்களெலாம் சிவனாரின் பெருமை உணர்ந்திட்டார்.
ஒன்றான உளத்தோடு உணர்ந்து வழிபட்டார்.
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
எதவனூர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.


❤❤❤❤

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் திருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.


❤❤❤❤

பத்தாம் பாட்டிதனுள் பதிந்துள்ள நுண்பொருள்கள்,
வித்தாகி எம்உயிரை வீட்டதனுள் விளைவிக்கும்,
முத்தான அப்பொருள்கள் முறையாகக் காண்பதற்கு,
சித்தம் தெளிந்திட நாம் சிவனாரின் தாழ் தொழுவோம்!

❤❤❤❤

பாதளம் கடக்கின்ற பாதத்தின் பெருமையதும்,
எல்லாப்பொருள் முடிவாய் இலங்குமுடிப் பெருமையதும்,
சொல்லத் தலைப்பட்ட சோதிமணி வாசகனார்,
பாதம் உரைத்தே பின் பகர்கின்றார் முடியதனை,
முடியதுவே என்றும் முதன்மை கொள வேண்டியது.
பாதத்தை அதன்பின்னே பகர்வதுவே முறையாகும்.
வரிசைதனில் நாம் பார்த்தால் வளமான நிலை இதுதான்.
வாசகனார்தாம் இங்கே வரிசைதனை மாற்றியது,
உன்னித்தான் அவர்செய்த ஒப்பற்ற பெருவேலை.
மெய்யடியார் இறையவனின் மேனிதனை நினைக்கையிலே,
தாழ்நினைந்த பின்னேதான் தலையதனை நினைவார்கள்.
பாதாதி கேசமெனப் பகர்வார் இந்நிலைதனையே
முடிதானும் உயர்ந்தோங்கி முன்னின்ற போதினிலும்,
அடி, தமக்குச் செய்கின்ற அருள்நினைந்து அடியார்கள்,
அடிகண்ட பின்னேதான் அற்புதமாம் முடிகாண்பார்.
இவ்வுண்மை உரைத்தற்கே ஏந்தல் மணிவாசகனார்,
முன்பின்னாய் தாமுரைத்தார். முறையதனை அறிந்திடுக!
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே


❤❤❤❤

சூட்சுமமாய் நிற்கின்ற தூயனவன் திருவடியை,
பாதமலர் என்றேதான் பருப்பொருளாய்ச் சொல்லிடினும்,
வார்த்தைகளுள் அடங்காத வளம் அதற்கு உண்டென்ற,
நேர்த்திதனைச் சொல்லிடவே நேசர் மணிவாசகனார்,
சொற்கழிவு பாதமெனச் சொன்னார் அதை உணர்வீர்!

❤❤❤❤

இறையவரின் திருவடியின் ஏற்றமுறும் மென்மையினை,
சொல்வதற்காய் 'பாதமலர்' எனும் சொல்லைப் போடுகிறார்.
அன்பால் நினைவார்தம் அகமலருள் அமர்கின்ற,
திருவடிகள் என்பதனால் தேர்ந்ததனைப் பாதமலர்,
என்றுரைத்தார் என்றிடினும் ஏற்றமது தான்சேரும்.

❤❤❤❤

அருவம், அருவுருவம், உருவம் என அரனார்க்கு,
பலவடிவும் இருப்பதனைப் பகர்வதற்கே இப்பாட்டில்,
திகழும் சிவனார் தான் திருமேனி ஒன்றல்லன்,
என்றுரைத்தார் எமையாளும் எங்கள் மணிவாசகனார்.
தத்துவங்கள் கடந்திட்ட சத்தான பரசிவனார்
வடிவங்கடந்தேதான் வார்த்தைகளுக்கு அப்பாலே,
திகழும் சொரூபத்தில் தேடற்கரி பொருளாம்.
அங்ஙனமாய் இறைவனவன் ஆன்மாக்கள் அறிவுக்கு,
அப்பாலே நின்றிட்டால் அடியவர்தாம் அவன் தன்னை,
அறிந்தடைவதெப்போது? அடிசார்வதெப்போது?
உருக்கொண்டு வந்தால்த்தான் உலகமது தான்உய்யும்
உய்ந்தடியார் அவனடியை ஓர்ந்தே உணர்ந்திடலாம்.
அதனாலே அருள் நிறைந்த அன்னையளாம் சிவசக்தி,
தான் கலந்து இறையவனையே தரணிக்கு உணர்த்திடுவாள்.
சக்திக் கலப்பே நம்சங்கரனார் வடிவங்கள்.
தத்துவமாம் இவ்வுண்மை தரணிக்கு உணர்த்திடவே,
பேதை ஒருபாலாம் என்றுயர்த்திப் பேசியவர்
திருமேனி ஒன்றல்லன் தேற்றமுறும் எம்பெருமான்
எனத் தொடர்ந்து அவன் விரிவை ஏற்றமுற உரைக்கின்றார்.

❤❤❤❤

வேதம் முதலாக விண்ணவரும் மண்ணவரும்,
ஓத முடியாத உயர்வதனைக் கொண்ட சிவன்,
வேதமுதல் எனும் சொல்லால் விளக்கமுறும் பெரியசிவன்,
காணற்கும் கருதற்கும் இயலாத அரியசிவன்,
ஒரு தோழனாய் நின்று உயிர்களையே மீட்டெடுக்கும்,
பெரிய விளையாட்டை பெருமையுடன் அப்பொண்ணும்
ஓத உலவா ஒரு தோழன் என்றுரைத்து,
ஆழப்பொருள் அமைய அன்போடு அழைக்கின்ற
நீளக்கருத்ததனை நெஞ்சில் நினைவீர் நீர்.

❤❤❤❤

தாசமாம் மார்க்கத்துத் தகுதி தனை முதற்பாட்டில்,
சொன்ன மணிவாசகனார் சோர்வற்ற சகமார்க்கம்,
தன்னைத்தான் இப்பாட்டில் தகுதிபடச் சொல்லுகிறார்.
நட்பாம் உறவோடு நாதர்தமைத் தொண்டரெலாம்,
எட்டிப் பிடித்தற்கும் இடமுண்டு எனச்சொல்ல,
ஒரு தோழன் என்கின்ற ஒப்பற்ற வார்த்தைதனை,
தேடிப்பிடித்துத் திகழ்ந்திடவே அமைக்கின்றார்.
(தாசமார்க்கம்-அடிமையாய்த் தொழுவது, சகமார்க்கம்-நண்பனாய்த் தொழுவது)

❤❤❤❤

பாட்டின் தொடக்கத்தில் பரமன் திருவடிவின்,
நீட்டத்தோடாழமதை நின்றிடவே உரைத்த அவர்,
முடிவில் அவன்தன்னை முற்றறிய முடியாதான்.
என்றுரைக்கத்தாம் எண்ணி ஏதவனூர்? ஏதவன்பேர்?,
ஆயிரமாம் கேள்விகளை அடுக்குகிறார் அதன் பின்னே,
தோழன் என உரைத்துத் தோன்றித்தான் விளையாடும்,
நீள அருளுடையன் நிமலன் என உரைப்பதனால்,
தேவர்க்கும் அரிய சிவன் தேடித்தனை வணங்கும்.
அடியார்க்கு எளியன் எனும் அன்புரைத்து மகிழுகிறார்.

❤❤❤❤



பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் திருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
💫

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.