செய்தியும்.. சிந்தனையும் .. 05 | வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?| கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

செய்தியும்.. சிந்தனையும் .. 05 | வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?| கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
செய்தி 

தினக்குரல் 2017 ஆகஸ்ட் 26  சனிக்கிழமை
அமைச்சர் குணசீலனுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை
கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக ரெலோ விசனம்.

தினக்குரல் 2017 ஆகஸ்ட 30  புதன்கிழமை
எங்களோடு இருந்தவர்களே எமக்கு எதிரிகளாகின்றனர்.
தமிழரசுக்கட்சிப் பொதுச்செயலாளர் தெரிவிப்பு.

சிந்தனை
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு                   (அதிகாரம் 11, குறள்-110)
 
பொருள்:-
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?

 



உலகம் வியக்கும் தமிழர்தம் வாழ்வியல் நெறிகள், அறத்தை அடிப்படையாய்க் கொண்டவை.
இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தால், அறநுட்பங்களைப் புரிந்து,
இவ் வாழ்வியல் நெறிகளை வகுத்தனர் நம் மூதாதையர்.
அங்ஙனம் அறத்தோடு பொருந்திய வாழ்வியல் நெறிகளை பின்பற்றியதால்த்தான்.
காலம் கடந்தும் நம் தமிழினம் இவ் உலகில் நிலைத்து நிற்கிறது.

✦✤✦

தமிழர்தம் அறவாழ்வின் முழுமையை வெளிப்படுத்தி நிற்கும் தகுதி, நம் திருக்குறள் நூலின் தனித்தகுதி.
சுருக்கமாகவும் விளக்கமாகவும் அறத்தை தெளிவாய் வகுத்துத் தந்த இக்குறள் நூலே,
தமிழர்தம் வாழ்வியல்; சட்டமாய் இன்று வரை வழங்கிவருகிறது.
திருக்குறள் நெறியோடு உடன்பட்டு வாழ்வோரை உயர்ந்தோர் என்றும்,
உடன்படா வாழ்வுடையாரை தாழ்ந்தோர் என்றும் தமிழுலகம் இன்று வரை கணித்து வருகிறது.

✦✤✦

இன்றைய நம் தமிழ்த் தலைவர்களை மேற்சொன்ன கணிப்பிற்கு உட்படுத்தினால்,
அவர்கள் உயர்ந்தோராய்க் கணிக்கப்படுவரா? தாழ்ந்தோராய் விலக்கப்படுவரா?
தமிழினம் தடுமாறி நிற்கும் இன்றைய நிலையில் ஆராய்தல் அவசியமாகிறது.
நம் விருப்பு வெறுப்புக்களைத்தாண்டி வள்ளுவ அறநூற்தராசில் நம் தலைவர்களை ஏற்றி,
தகுதி காண்போமாயின் நிச்சயம் அது நம் இனத்தின் உயர்விற்கு வழிசெய்யும்.
ஆதலால் அம்முயற்சியில் சற்று ஈடுபடுவோம்.

✦✤✦

வள்ளுவர் தனது இல்லறவியற் பகுதியில் சமூகவாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறார்.
ஒரு மனிதன் சமூக மனிதனாய் மாறும் விதத்தை வள்ளுவர் வரையறை செய்யும் விதம் அற்புதமானது.
தனிமனிதன் ஒரு பெண்ணோடு கூடி குழந்தைப் பேறடைந்து அன்பு செய்தலில் ஆரம்பப் பயிற்சி பெறுகிறான்.
அவ் அன்பு மெல்ல மெல்ல விருத்தியாக, சமூகம் நோக்கி அவனது அன்பு விரியத் தொடங்குகிறது.
அங்ஙனம் சமூக மனிதனாக மாறும் ஒருவனுக்கு,
நன்றி அறிதல், நடுவுநிலைமை எனும் இரு பண்புகளும்,
மிக மிக அவசியம் எனக் கருதிய திருவள்ளுவர்,
அவ்விரண்டினைடையும் தன் நூல்வரிசையில் முதன்மைப் படுத்திச் சேர்த்துக் கொள்கிறார்.
அதனை வைத்து சமூகவாழ்வுக்கு நன்றி அறிதலும், நடுவுநிலைமையும்,
அவசியப்பண்புகள் என நாம் தெரிந்துகொள்கிறோம்.

✦✤✦

என்ன, இது அரசியல் கட்டுரையா, திருக்குறள் கட்டுரையா என்று சிந்திக்கிறீர்களா?
காரணத்தோடுதான் இதனை எழுதுகிறேன்.
பேரழிவுகளைக் கண்ட இனத்தின் தலைவர்கள் தாமே என்றுரைத்து,
சமூகவாழ்வுக்குள் நுழைந்து பதவிகளைப் பற்றி நிற்கும்,
நம் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வள்ளுவர் சொன்ன,
நன்றி அறிதலும் நடுவுநிலைமையும் இருக்கின்றனவா?
இதுதான் இக்கட்டுரையில் நான் ஆராயப் போகும் விடயம்.
அவை இருந்தால் அவர்களை நாம் தலைவர்களாய்க் கொண்டாடலாம்.
இல்லையேல் நம் தலைவிதியை நொந்து திண்டாடலாம்.
இவ்விடயத்தை என் புத்தியை வைத்து நான் ஆராயப்போவதில்லை.
வள்ளுவர்தம் அறத்தராசை வைத்தே ஆராயப் போகிறேன்.
அத்தராசில் ஏற்ற நம் தலைவர்களில் பலர்,
இந்த விடயத்தில் படுதோல்வி அடைந்து நிற்கிறார்கள்.

✦✤✦

நன்றி மறத்தல் ஒரு பெரிய ஒழுக்கமீறல் ஆகுமா? உங்களில் சிலர் கேட்பீர்கள்.
அதனை சமுதாய வாழ்வின் பெருங்குற்றமாய்க் கருதுகிறார் வள்ளுவர்.
அதனால்த்தான் அக்குற்றத்தைச் செய்தார்க்கு ‘உய்வில்லை’ என்று கடுமையாக உரைக்கிறார்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு  என்பது குறள்.
‘உய்வில்லை’ என்னும் சொல்லுக்கு ஒருவகையாலும் மீட்;சி இல்லை என்பது பொருளாகும்.
இக்குறளை வைத்தே சமூக வாழ்வில் நன்றி அறிதலின் அவசியத்தை நாம் உணரலாம்.

✦✤✦

அதென்ன நம் தலைவர்களின் நன்றியின்மை என்கிறீர்களா?-ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்! கேளுங்கள்.
ஒன்றிணைந்து செயற்படுவதாய்க் கூறி, கூட்டமைப்பில் பல கட்சிகளும் அங்கம் வகிக்க முன்வந்தன.
கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சி, தனக்கான சில தகுதிகளை நினைந்து,
புலிகளின் மறைவுக்குப் பின் மற்றைக் கட்சிகளைத் துரும்பாய் நினைத்து,
நன்றி மறந்து செயற்பட்டு நம்பிக்கைத் துரோகத்திற்கு முதல் முதலாய் வித்திட்டது.
இது நன்றியின்மையின் முதல் வெளிப்பாடு.

✦✤✦

மாகாணசபையைத் தேர்தல் வந்தபோது சம்பந்தன் தன் வயதையும் தகுதியையும் மறந்து நேராய்ச் சென்று,
கெஞ்சிக் கூத்தாடி நீதியரசர் விக்னேஸ்வரனின் நிபந்தனைகளுக்கெல்லாம் உடன்பட்டு,
வலிந்து அவரை அரசியலுக்கு அழைத்து வந்து தமிழரசுக் கட்சிப்பட்டியலில் நிற்கவைத்ததோடு,
தேர்தலில் பெரும் வெற்றியும் ஈட்டவைத்து அவரை மாகாணசபையின் முதலமைச்சர் ஆக்கினார்.
ஒருவருடமே முடிந்த நிலையில் காரணம் ஏதும் சொல்லாமல்,
கூட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் செயற்படத் தொடங்கிய முதலமைச்சர்.
இன்றுவரை அப்பாதையில் வீம்புக்கு நடைபோட்டுக்கொண்டு இருக்கிறார்.
இது நன்றியின்மையின் இரண்டாவது வெளிப்பாடு.

✦✤✦

எதிர்பார்த்த பதவி தம்பிக்கு முதலமைச்சரால் தரப்படவில்லை என்பதற்காக,
முதலமைச்சரோடும் கூட்டமைப்போடும் முரண்பட்டு நின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன்,
பின் தேர்தலிலும் தோற்று ஒதுக்கப்பட்டார்.
கடுங்கோபத்துடன் இருந்த அவருக்கு,
முதலமைச்சருக்கும் கூட்டமைப்புக்குமான விரிசல் வாய்ப்பாய்ப் போக,
முதலமைச்சரின் சார்புபட்டு இயங்கி அவரின்; அன்புக்குரியவராகி,
இன்று எந்தப் பதவியைத் தர முதலமைச்சர் முன்பு மறுத்தாரோ,
அதே அமைச்சுப்பதவியைத் தம்பிக்குப் பெற்றுக்கொடுத்து,
கூட்டமைப்புக்குத் தலையிடி தந்து கொண்டு இருக்கிறார்.
இது நன்றியின்மையின் மூன்றாவது வெளிப்பாடு.

✦✤✦

அதன் பின் கூட்டமைப்பின் எதிராளிகள் ஒன்றிணைந்து முதலமைச்சரின் தலைமையில்,
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்த போது,
தமக்குப் பதவி வழங்கப்படாத கொதிப்பில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்றவர்கள்,
அதுவரை தாம் சார்ந்திருந்த தமிழரசுக்கட்சியுடன் ஆலோசிக்காமல்,
அக்கட்சியைப் பழிவாங்கும் உணர்வோடு அவ் அமைப்பின் கூட்டங்களில் மகிழ்ந்து கலந்து கொண்டார்கள்.
இது நன்றியின்மையின் நான்காவது வெளிப்பாடு.

✦✤✦

புளொட், ரெலோ தலைவர்களும்,
தமிழரசுக்கட்சி முன்செய்த உதாசீனத்திற்குப் பழிவாங்குவதாய் நினைந்து,
தமிழ் மக்கள் பேரவை நடாத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு,
கூட்டமைப்பை விட்டு முழுமையாய் வெளிவராமலும், முழுமையாய் உள்நிற்காமலும்,
கொள்கையைப் பறக்கவிட்டு பதவிக்காய்ப் பறந்து,
வேலியில் நிற்கும் ஓணானாய் அங்குமிங்கும் தலையாட்டினார்கள்.
(இன்று தத்தமது கட்சிகளுக்குள்ளேயே பதவிகளால் குழப்பம் விளைவிக்கும்,
முதலமைச்சரின் செயல்கண்டு அவர்களே திகைத்து நிற்பது வேறு கதை)
இது நன்றியின்மையின் ஐந்தாவது வெளிப்பாடு.

✦✤✦

தியாகிகளான போராளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக,
திருமதி அனந்திக்கு தமிழரசுக்கட்சிப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டது.
பதவி கிடைத்த சில நாட்களிலேயே அவரும் பாதை மாறத்தொடங்கினார்.
இன்று தம் கட்சிப்பட்டியலில் இருந்த, வேறொருவர் பெயரை,
அமைச்சுப் பதவிக்காக தமிழரசுக்கட்சி சிபாரிசு செய்ய,
அதை ஏற்காத முதலமைச்சர் அனுபவமே இல்லாத அனந்திக்கு அப்பதவியை வழங்கி,
தமிழரசுக்கட்சியுடனான தன் பகையை மீண்டும் ஒருதரம் தீட்டிக்கொண்டார்.
தன்னை வளர்த்துவிட்ட கட்சிக்குத் துரோகம் செய்து,
கட்சியின் கருத்தைக் கேளாமல் அப்பதவியை ஏற்றுக்கொண்டார் அனந்தி.
இது நன்றியின்மையின் ஆறாவது வெளிப்பாடு.

✦✤✦

இதே நிகழ்வு இன்று ரெலோ, புளொட் கட்சிகளிலும் நிகழ்ந்திருக்கிறது.
கட்சி சிபாரிசு செய்தவரை விடுத்து மாற்றாரை அமைச்சர்களாய் நியமித்து,
குழப்பம் விளைவித்திருக்கிறார் முதலமைச்சர்.
கட்சியின் கருத்தைக் கேளாமல் பதவிக்காக,
முதலமைச்சரின் வழிபற்றி, புதிய அமைச்சர்களும் குழப்பம் விளைவித்திருக்கின்றனர்.
இது நன்றியின்மையின் ஏழாவது வெளிப்பாடு.

✦✤✦

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை,
கட்சி உறுப்பினர்களுடன் சென்று ‘கவர்னரி’டம் கொடுத்தார் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள்.
கட்சியின் அனுமதியின்றியும் தலைவரின் அனுமதியுமின்றியுமா அவர் அக்காரியத்தைச் செய்திருப்பார்?
அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக முதலமைச்சருக்கு ஆதரவாக இளைஞர்கள் சிலர் குரல் கொடுக்க,
குற்றம் செய்தவர் அவைத்தலைவர் தான் என்பது போலாக்கி தப்பிக்கொண்டார் சம்பந்தர்.
தன்னை நம்பியவரைக் காட்டிக் கொடுத்த செயற்பாடு இது.
இது நன்றியின்மையின் எட்டாவது வெளிப்பாடு.

✦✤✦

இங்ஙனமாய் இன்னும் பல சொல்லலாம்.
பதவிப் பேய் பிடித்து ஆட்ட, செய்நன்றி மறந்து செயற்படும் தலைவர்களால்,
இன்று தமிழர்தம் அரசியலில் ‘நன்றியின்மை’ பொதுப்பண்பாய் ஆகிக்கொண்டிருக்கிறது.
எதிரிகள் செய்யவேண்டிய மித்திரபேதத்தைத் தான் செய்து,
தமிழினத்தையும் தன்னையும் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
அவரோடு போட்டி போட்டுக் கொண்டு மற்றைய தலைவர்களும்.

✦✤✦

நம் தலைவர்கள் மத்தியில் நல்லொழுக்கம் சிதைந்து சீர்கெடுகிறது.
தீயொழுக்கம் மிதந்து மேம்படுகிறது.
ஒன்று + ஒன்று என்று எழுதினால் விடை இரண்டாகத்தான் வரும்.
மூன்றாய் வந்தால் என்ன? என்று கேட்பது மூடத்தனம்.
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்று,
வள்ளுவர் ஒழுக்கக் கணக்கின் சரியான விடையை என்றோ எழுதிவிட்டார்.
தீயொழுக்கத்தைப் பின்பற்றிக்கொண்டு,
நல்ல கதி நம் இனத்திற்கு வரும் என்கிறார்கள் நம் தலைவர்கள்.
பொய்யாமொழிப்புலவனின் தீர்ப்பும் பிழைக்குமா?
தீயொழுக்கம் நிச்சயம் இடும்பை தரப்போகிறது.
தலைவர்களுக்கு மட்டுமல்ல,
அவர்களை நம்பிய நம் இனத்திற்கும் தான்.

✤✦✤✦✤✦

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.