மங்கள இசையிலுமா மாற்றம்? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

மங்கள இசையிலுமா மாற்றம்? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 

ய்யாமலே போய்விடப்போகிறதா நம் ஈழத்தமிழினம்?
பதிலில்லா இக்கேள்வியை நினைந்து பதறுகிறேன்!
இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த,
நம்மவர் வாழ்வைப் பார்த்துவிட்டதால்,
இன்று எம் இனத்தில் விரவிவரும்,
பொய்ம்மைப் பண்புகளைப் பொறுக்கமுடியவில்லை.
நான் மாற்றங்களுக்கு எதிரானவன் அல்லன்.
‘மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது’ என்றுரைக்கும்,
‘மாக்சீய’க்காரர்களின் கருத்தோடும் எனக்குப் பெரிய மாறுபாடில்லை.
ஆனாலும் சிறிய மாறுபாடு இருக்கவே செய்கிறது.
மாற்றங்கள் அவசியமானவைதான்.
ஆனால் எல்லாமே மாற்றமுறும் என்பதில்த்தான் எனக்கு மாறுபாடு.
உலகில் சூரியன் என்றும் கிழக்கில்தான் உதிக்கிறது.
சந்திரன் இரவில்தான் தோன்றுகிறது.
மாரி, கோடைகளும் கூட அப்படியே.
இவ் இயற்கை நியதிகளில் மாற்றம் ஏற்படுவதில்லை.
அவற்றிலும் மாற்றம் ஏற்படுமானால் நம் வாழ்வின் அமைதி சிதைவது நிச்சயம்.

 




அதுபோலத்தான் கணவன்-மனைவி,ஆசிரியன்-மாணவன்,
பெற்றோர்-பிள்ளைகள், சகோதரன்-சகோதரி போன்ற உறவுகளும்,
அவை சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை முறைகளும்.
இவையெல்லாம் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை என்பது என் கருத்து.
இல்லை  இவற்றிலும் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று வலிந்து செயற்பட்டால்,
நம் இனத்தின் விழுமியங்கள் சிதையப் போவது நிச்சயம்.
அதுமட்டுமில்லை, நாம் தமிழினம் எனும் தனித்துவத்தையும் இழப்போம்.
புரட்சியாளர்கள் என்ன நாசத்தையும் செய்துவிட்டுப் போகட்டும்.
நம் பாரம்பரிய விழுமியங்களில் அவர்கள் கைவைக்காவிட்டால் அதுவே பெரிய புண்ணியம்.



வறுமையுற்று நடுத்தரவாழ்வு வாழ்ந்த நம் மூதாதையரின்,
பண்பாட்டு வேரின் ஆழம் கண்டு முன்பு நான் சிலிர்த்திருக்கிறேன்.
உறவு முறைகளில் அவர்கள் காட்டிய நெருக்கம்.
பக்தி விடயத்தில் அவர்கள் காட்டிய உருக்கம்.
கல்வி விடயத்தில் அவர்கள் காட்டிய பெருக்கம்.
பண்பாட்டு விடயத்தில் அவர்கள் காட்டிய இறுக்கம் என்பவற்றோடு,
தன்மான விடயத்தில் அவர்கள் காட்டிய செருக்கும் ஆச்சரியம் தருபவை.
சிலவேளைகளில் அப்பண்புகள் யதார்த்தம் கடந்தும் இருந்ததுண்டு.
ஆனாலும் அவர்களின் இவ்விடாப்பிடிக் கொள்கைகளால்தான்,
பெரும் போர்களைச் சந்தித்த பின்பும் கூட,
எம் இனத்தின் தனித்துவம் நிலைத்து நிற்கிறது.



அண்மைக்காலமாக எங்கள் மண்ணில்,
ஆண்டாண்டுகளாய் தளைத்தும் நிலைத்தும் வந்த,
பண்பாட்டு வேர்களிலும் கிருமிகள் பற்றத் தொடங்கியிருக்கின்றன.
போர் கண்டும் அஞ்சாத என் நெஞ்சு,
இவ்விஷக் கிருமிகளால் நம் இனத்தின் தனித்துவம் அழிந்துவிடுமோ? என்று,
அஞ்சத் தொடங்கியிருக்கிறது.
பெற்றோரை அனாதை விடுதிகளில் விடுமளவுக்கு உறவு முறைகளில் ஏற்பட்டு வரும் தளர்ச்சி,
ஆலயத்தை ஆடம்பரக் களமாக்கும் அளவுக்கு பக்தியில் ஏற்பட்டு வரும் நெகிழ்ச்சி,
தேசத்தின் கடைசி வரிசையில் வந்து அமரும் அளவுக்கு கல்வியில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி ,
எதனையும் எவருக்கும் விற்றுவிடும் அளவிற்கு பண்பாட்டில் ஏற்பட்டு வரும் நீட்சி,
இழப்புகளைச் சொல்லி எவரிடமும் கையேந்தத் துணியும் அளவிற்கு,
தன்மானத்தில் ஏற்பட்டு வரும் தாழ்ச்சி என,
நம் மண்ணில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் காண அருவருப்பாய் இருக்கிறது.
புதிய தலைமுறைக்குப் பழைய பண்பாடு தெரியவில்லை.
பழைய தலைமுறைக்கோ புதியவர்க்குப் பண்பாட்டைச் சொல்லும் பலமில்லை.
என்ன செய்வது?



என்ன? தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்,
முன்னுரையாகவே கட்டுரை நீண்டு கொண்டிருக்கிறது என்கிறீர்கள் போல.
சொல்ல வரும் விடயத்திற்கு இம்முன்னுரை தேவையென்றபடியால்தான்,
இந்த அளவுக்கு இம்முன்னுரையை நீட்டினேன். பொறுத்துக் கொள்ளுங்கள்!
மேற் சொன்ன விடயங்களைப் பற்றி ஒவ்வொன்றாய் விரித்து எழுதுவதாயின்,
பல கட்டுரைகளை எழுதவேண்டி வரும்.
எழுத எனக்கெங்கே நேரம் இருக்கிறது?
வாசிக்கும் உங்களுக்கும் தான்!



அதனால் இக்கட்டுரையில்,
அண்மைக்காலமாக நம் தமிழினக் கலாசார மரபில் ஏற்பட்டு வரும்,
வேர் அரிக்கும் மாற்றம் ஒன்றினைப் பற்றி மட்டுமே எழுதப்போகிறேன்.
இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்,
‘இவர் யார் எழுத? நாங்கள் யார் கேட்க?’ என்று வீண் ஆணவப்படாமல்,
என் கருத்தேற்றுச் சிந்தித்து செயற்படவேண்டுமென,
இக்கட்டுரையின் முற்றத்திலேயே விண்ணப்பித்துக் கொள்கிறேன்.



பல விடயங்களில் ஈழத்தமிழினம் தமிழகத்திற்கு சவால் விட்டிருக்கிறது.
அங்ஙனம் சவால் விட்ட துறைகளில் ஒன்று தான் நம் மங்களஇசைத்துறை.
தமிழகத்தையே திகைக்க வைத்த தவில்மேதை தட்சணாமூர்த்தி என்ற ஒருவர் மட்டுமில்லை,
தவில் மேதைகளான என்.ஆர்.சின்னராசா, வாக்கன் கணேஷன்,
நாதஸ்வர வித்வான்கள் மாவிட்டபுரம் ராசா, என்.கே.பத்மநாதன், என்.ஆர் கோவிந்தசாமி,
பி.எஸ் ஆறுமுகம்பிள்ளை, எம்.பி பாலகிருஷ்ணன்,
 என். பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலகிருஷ்ணன் என,
தமிழக வித்வான்களை எதிர்கொள்ளும் ஆற்றலோடு பலர் நம் மண்ணில் வாழ்ந்து வந்தார்கள்.
இது நான் கண்ட கலைஞர்களின் முதல் வரிசை.



இவ்வரிசையின் வீரியம் குன்றாமல்,
அடுத்த தலைமுறையிலும் கலைஞர்கள் தொடர்ந்ததை நான் கண்டிருக்கிறேன்.
கே.ஆர். சுந்தரமூர்த்தி, வி.கே.கானமூர்த்தி, வி.கே.பஞ்சமூர்த்தி, எஸ்.சிதம்பரநாதன், ஆர்.கேதீஸ்வரன்,
காரை கணேசன், பி. நாகேந்திரன், நல்லூர் பிச்சையப்பா, சுதந்திரன், கொழும்பு செல்வராசா போன்ற நாதஸ்வர வித்வான்களும்,
புண்ணியமூர்த்தி, குமரகுரு, கைதடி பழனி, முருகானந்தம், வீராச்சாமி போன்ற தவில் வித்வான்களும்,
முன்னவர்களின் தரத்திற்குச் சற்றும் இளையாதவர்களாய்,
இம் மண்ணில் தம் கலைப்பணியைத் தொடர்ந்தார்கள்.
வாழையடி வாழையாக வந்த இத்திருக்கூட்டம்,
தமது பெருமையையும், நம்மினத்தின் பெருமையையும் ஒருசேர நிலைநிறுத்தி,
நம்மவர் புகழை உயர்வித்தது.



இன்றும் இவ்வீரிய விருட்சத்தின் வேர்கள் முற்றாய் அறுந்துவிடவில்லை.
பி. ரஜீந்திரன், நல்லூர் பாலமுருகன், கோண்டாவில் குமரன்,
அளவெட்டி நாகதீபன், சாவகச்சேரி சித்தார்த்தன்-பிரதித்தன், கொழும்பு கமலகாசன்-சூரியபிரசாத், கபிலதாஸ் போன்ற இளம் நாதஸ்வர வித்வான்களும்,
இணுவில் நித்தியானந்தன், அளவெட்டி ரி. உதயசங்கர், என்.ஆர்.எஸ் சுதாகரன், என்.ஆர்.எஸ் ரவீந்திரன், இணுவில் எஸ். ராமதாஸ், கொழும்பு ஆர். கீர்த்தி சங்கர் போன்ற தவில் வித்வான்களும்,
இன்றும் நம் இனத்தின் மங்கள இசைப்பெருமையை மாட்சிமைப்படுத்தியே நிற்கிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.
நான் கண்ட முன்னவர்களுக்கு தம் கலையின் பெறுமதி தெரிந்திருந்தது.
இன்றைய இளையோர் அப்பெறுமதியை முழுதும் உணர்ந்தார்களா?
இக்கேள்விக்கு ‘ஆம்’ என்று உடன் பதிலளிக்க முடியவில்லை.



ஒரு காலத்தில் இந்தியக் கலைஞர்களை தமக்கு பக்கவாத்தியங்களாகக் கொண்டு வந்து,
ஆட்சி புரிந்தனர் நம் கலைஞர்கள்.
இன்றும் கொண்டு வருகிறார்கள்.
ஒரேஒரு வித்தயாசம்.
அன்று வந்த இந்தியக் கலைஞர்களின் பெயர்,
நம் கலைஞர்களின் துணையால் பிரபல்யமானது.
அங்ஙனம் உயர்ந்தவர்களில் பிரபல தவில் வித்வான் வலையப்பட்டியாரும் அடங்குவார்.
எங்கள் தவில் வித்வான் சின்னராசாவைக் கண்டு இந்தியக் கலைஞர்கள் நடுங்கிய கதையை,
பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
திருச்சி திருவானைக்காவில் ஆலயத்தில் நேராகவும் கண்டிருக்கிறேன்.
மேடையில் ஆணவத்தோடு தவிலை உருட்டிவிட்ட இந்திய வித்வானை,
எங்கள் கலைஞர் சின்னராசா மிரட்டி அடக்கிய கதையை,
தவில் வித்வான் புண்ணியமூர்த்தி சொல்லக் கேட்டு வியந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் தவில் வித்வான்கள் ஒன்று சேர்ந்து,
தட்சணாமூர்த்தியை மடக்கவென கணக்குப்பண்ணி நுட்பமாய்த் தயாரித்த பாடத்தினை,
மேடையிலேயே முறியடித்து அவர்களால் வணங்கப்பெற்ற செய்தியை அறிந்திருக்கிறேன்.
இவ்வளவும் ஏன் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தியின் வெள்ளிவிழாவில்,
தன் தகுதிக்குரிய இடம் தரப்படவில்லை என்று கோபித்து,
என்.கே.பத்மநாதன் அவர்கள் விழாவை நடாத்திய எங்களோடு இறுதிவரை முரண்பட்டிருந்தார்.
இப்படி எத்தனையோ சொல்லலாம்.



தன் கையில் ஒரு ரூபாய் பணம் கூட இல்லாதநிலையில்,
பெருந்தொகை ‘அட்வான்ஸோடு’ கச்சேரி பேச வந்த ஒரு உபயகாரரிடம்,
“குறித்த தொகை தந்தால்த்தான் ‘அட்வான்ஸ்’ வாங்குவேன்” என்று கூறி,
அவரைத் திருப்பி அனுப்பினாராம் தவில் மேதை தட்சிணாமூர்த்தி.
“தான் மேடைக்கு வரும்போது இன்னின்னார்தான் மேடையில்  இருக்கவேண்டும்” என்று,
நிபந்தனை பேசி கச்சேரி செய்த கம்பீரமும் அவரிடம் இருந்ததாம்.



அதுபோலத்தான், தவில்காரர்தானே என்று சாதாரணமாய் நினைந்து,
யாழ் பெரியாஸ்பத்திரியில் தன்னை அவமதித்த டாக்டர் ஒருவரை,
‘வெளியில் வா பார்க்கலாம்’ என்று சொல்லி வாசலிலேயே உட்கார்ந்து விட்டாராம் சின்னராசா.
செய்தி கேள்விப்பட்டு மற்றைய தவில்காரர்களும் ஆஸ்பத்திரி வாசலில் குவிய,
நடுநடுங்கிப் போன டாக்டர் வெளியில் வந்து பகிரங்கமாய் சின்னராசாவிடம் மன்னிப்புக் கேட்டாராம்.



மற்றொருமுறை யாழிலிருந்து கொழும்பு நோக்கி தன் குழுவினருடன்,
சின்னராசா வந்தபோது இடையில் வழிமறித்த இராணுவத்தினர்,
“தவிலுக்குள் என்ன?” என்று கேட்டு அவர்களைக் கீழிறக்கினார்களாம்.
“அது வாத்தியம்” என்று இவர்கள் பதில் சொன்னதும்,
“அப்படியானால் இங்கிருந்து அதை வாசித்துக்காட்டு” என்றனராம் இராணுவத்தினர்.
“கண்டபடி அதை வாசிக்கமுடியாது.
அதற்கெல்லாம் ஒரு முறைமை இருக்கிறது” என்று சின்னராசா மறுக்க,
“இல்லை வாசிக்கத்தான் வேண்டும்” என்று இராணுவத்தினர் கட்டாயப்படுத்தினராம்.
கோபப்பட்ட சின்னராசா தன்குழுவினருக்குக் கண்ணைக் காட்டிவிட்டு,
வீதியில் கம்பளம் விரிப்பித்து அந்த  இடத்திலேயே உட்கார்ந்து,
தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்.
மிரண்டு போன இராணுவத்தினர் “போதும் போதும்” என்று தடுக்க,
“இது தெய்வீக வாத்தியம் தொடங்கினால் குறிப்பிட்ட நேரம் வாசிக்காமல் நிறுத்தமுடியாது” என்று கூறி,
ஒரு மணி நேரமாய்த் தொடர்ந்து தவில் வாசித்து இருக்கிறார் சின்னராசா.
பஸ்காரர்கள் சத்தம் போட ஒன்றும் செய்யமுடியாமல் போன இராணுவத்தினர்,
கும்பிட்டு மன்றாடி வாசிப்பை நிறுத்தப்பண்ணி,
மரியாதையுடன் சின்னராசா குழுவினரை ஏற்றி அனுப்பினார்களாம்.



இவையெல்லாம் கற்பனைக்கதைகள் அல்ல நிஜத்தில் நடந்தவை.
நம் கலைஞர்களின் இந்த திமிருக்குப் பின்னணியில் இருந்தது ஆணவம் அன்று கலைத்தகுதி.
அவர்கள் தம் கலையின் பெருமையைத் தாமே உணர்ந்திருந்தார்கள்.
அதனால்த்தான் எவருக்கும் எதற்கும் தம் நிமிர்வை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
மங்கள இசையில் தவிலுக்கா? நாதஸ்வரத்திற்கா? முதலிடம் என்ற தர்க்கமே அப்போது நடந்தது.
தவிலில் ‘தொப்பி’ தட்டிய பிறகுதான் நாயனம் ஊதலாம் என்ற மரபை வைத்து,
தவிலுக்கே முதலிடம் என்று சின்னராசா வாதிட்டதைக் கேட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் ஒரு காரணத்துடன்தான் சொல்கிறேன்.
இன்றைய இளங்கலைஞர்கள் பலர் வித்தையில் சோடை போகாமல் நிமிர்ந்து நின்றாலும்,
அவர்களுக்குத் தம் கலையின் பெறுமதி முற்றாய்த் தெரியவில்லை.
அதனால் ஆளுமை இழந்து மங்கள இசையின் மாண்பு குறையும் வண்ணம்,
பல இடங்களில் தம் நிலைவிட்டுத் தாழத் தயாராகி நிற்கிறார்கள்.
கச்சேரிக்குத்தாம் வாங்கும் தொகையை வைத்தே,
தம் தரத்தை நிர்ணயிக்க நினைக்கிறார்கள் இவர்கள்.
இவற்றைக் கடந்து வித்தைச் செருக்கு என்ற ஒன்று இருப்பதையும்,
அதுதான் ஒரு கலைஞனின் கௌரவத்தை நிர்ணயிப்பதையும் இவர்கள் அறிவதில்லை.
அதனைச் சுட்டிக்காட்டவே மேற்சொன்ன விடயங்களைச் சொன்னேன்.
கடந்த ஐம்பதாண்டுகளாக இசை வேளாளர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றதால்,
முன்னைய கலைஞர்களின் நிமிர்வை இன்றைய கலைஞர்கள் விட்டுக்கொடுப்பதைக் காண,
ஏனோ மனம் துடிக்கிறது.



அப்படி என்னதான் நடந்துவிட்டது என்கிறீர்களா?
அண்மைக்காலமாக நம்மவர்கள் தம் வீட்டுத் திருமணங்களில்,
ஒரு புதுமாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள்.
கல்யாணங்களில் தவில், நாதஸ்வரம்தான் என்ற நிலையை மாற்றி,
இன்று ஓகன், கிற்றார், ட்றம்ஸ், வீணை, வயலின் என பல வாத்தியங்களையும்,
மங்கள இசையுடன் இணைத்து வாசிக்கும் ஒரு புதிய முறையை,
சிலர் கொண்டு வருகிறார்கள்.
புதுமை செய்கிறார்களாம்!
நம் தவில், நாதஸ்வரம் எங்கே? அந்த வாத்தியங்கள் எங்கே?
தரம் தெரியாத இணைப்பு இது.
புதுமை என்ற பெயரில் எதையும் ஏற்றுக் கொள்ள,
நம் இனம் தயாராகிவிட்டதோ! என அஞ்சவேண்டியிருக்கிறது.



இசைக்கருவிகள் ஆயிரம் இருந்தாலும்,
‘மங்கள வாத்தியம்’ என்ற பெயரை தவில், நாதஸ்வர வாத்தியங்களுக்கு மட்டுமே,
நம் ஆன்றோர்கள் வழங்கினர்.-அவர்கள் என்ன அறிவிலிகளா?
வீணை போன்ற நிறை வாத்தியக்கருவிக்குக் கூட வழங்காத அப்பெயரை,
தவில், நாதஸ்வர வாத்தியங்களுக்கு அவர்கள் சும்மாவா வழங்கியிருப்பார்கள்?
நாதத்தின் நுட்பம் தெரிந்த அவர்கள்,
இவ்வாத்திய இசையில் பொதிந்திருந்த மங்களத்தை உணர்ந்திருந்ததால்தான்,
வேறு எந்த வாத்தியத்திற்கும் கொடுக்காத ‘மங்கள வாத்தியம்’ என்ற சிறப்புப் பெயரை,
மேற்படி வாத்தியங்களுக்கு வழங்கினார்கள்.
தெய்வ சந்நிதி, மங்கள காரியங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே வாசிக்கப்படும் தனிப்பெருமை,
நம் நாதஸ்வர, தவில் வாத்தியங்களுக்கு மட்டும்தான் உண்டு.
எங்காவது அமங்கள நிகழ்ச்சிகளுக்கு இவ்வாத்தியங்களை தவறியேனும் எவரும் பயன்படுத்தியதுண்டா?
‘ட்றம்ஸையும் ஓகனை’யும் அமங்கள நிகழ்ச்சிக்கும் பயன்படுத்துகிறார்களே.
மங்களத்திற்கென்று தனித்திருக்கும் மங்கள வாத்தியம் எங்கே?
அமங்களததிற்கும் பயன்படும் மற்றைய வாத்தியங்கள் எங்கே?
ஏன் இவற்றை இணைக்கவேண்டும்?
இதுதான் எனது கேள்வி.



இளையோரை இல்வாழ்க்கையில் இணைக்கும் திருமணங்களில்,
மங்கள வாத்தியத்தில் மட்டும் எழும்,
வேறெந்த வாத்தியத்திலும் இல்லாத மங்கள நாதத்தால்,
தம் இல்லக் குழந்தைகளின் வாழ்வு சிறக்கவேண்டும் என்றே,
அந்நிகழ்வின் தனிவாத்தியமாக மங்கள வாத்தியத்தை நம் பெரியவர்கள் நிச்சயித்தார்கள்.
அவ்வாத்திய நாதமே தம் குழந்தைகளின் வாழ்வில்,
மங்களத்தை உண்டாக்கும் என அவர்கள் உறுதியாய் நம்பினார்கள்.
இன்று இவ் உண்மைகளையெல்லாம் அறியாமல்,
புதுமை என்ற பெயரில் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து,
மற்றை வாத்தியங்களையும் மங்கள வாத்தியத்துடன் திருமணவீட்டில் வாசிக்க,
நம்மவரும் இடம் கொடுக்கிறார்கள்.
முன்பென்றால் இது நடந்திருக்குமா?
காலத்தின் கோலம்.



எந்தப் பெரிய சபையையும் தன் கெம்பீரநாதத்தால் ஆட்கொள்ளும் ஆற்றல்,
மங்கள வாத்தியத்தை விட வேறு எந்த வாத்தியத்திற்கும் இருக்கிறதா?
ஒலிபெருக்கியை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டால்,
இணைய வந்த வாத்தியங்கள் எங்கு என்று தெரியாமல் மறைந்து போய்விடும்.
நிலைமை அப்படி இருக்க அந்த வாத்தியங்களுக்குப் பக்கவாத்தியம் போல்,
மங்கள வாத்தியங்களைப் பாவிப்பதை மன்னிக்கவே முடியவில்லை.



சிறந்த நம் வாத்தியங்களான வீணை ஆகட்டும் வயலின் ஆகட்டும்,
நம் மரபில் மங்கள வாத்தியத்திற்கு அடுத்தபடிதான் அவற்றிற்கு இடம்.
அந்த வாத்தியங்களோடு இணைந்து வாசிக்கவேண்டும் என்பதற்காக,
வீரியத்தைக் குறைத்து தம் வாத்தியத்தை மங்களவாத்தியக்காரர் வாசிக்கும் போது,
சங்கடமாக இருக்கிறது.
பூனைக்குச் சமமாய் புலி பதுங்கி நடந்ததுபோல்தான் இது.
உடலில் கோடுகள் இருக்கும் ஒற்றுமையைத் தவிர,
பூனை எங்கே? புலி எங்கே?
அதுபோலத்தான் வாத்தியம் என்ற ஒற்றுமையைத்தவிர,
மற்றைய வாத்தியங்கள் எங்கே? மங்கள வாத்தியம் எங்கே?



இல்லை புதுமையும் தேவை.
மற்ற வாத்தியங்களுடனான இணைப்பும் தேவை என்று கலைஞர்கள் கருதினால்,
மங்கள வாத்தியத்திற்குத் துணையாகத்தான் மற்றைய வாத்தியங்கள் அமையவேண்டும்.
ஒரு திருமண வீட்டில்,
வீணைக்கு முதலிடம் கொடுத்து மங்கள வாத்தியம் அதைப் பின்தொடர்ந்தது.
தம் தரம் உணரா தாழ்ச்சி இது.



அண்மையில் ஒரு கல்யாணவீட்டில் பார்த்தேன்.
மிஞ்சி அணிந்து கணவனின் கைபிடித்து வலம் வந்த மணப்பெண்ணை,
தோளில் பிடித்து இழுத்து நிறுத்தினான் ஒரு புகைப்படக்காரன்.
அவன் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார் எவரும் இல்லை.
முன்பென்றால் அவனைக் கொன்றிருப்பார்கள்.
புதுமையின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு இது ஒரு முன்னுதாரணம்.
இப்புதுமைகளை ஏற்கத்தலைப்பட்டால் நம் மங்கள இசைக்கும் இதே கதிதான்.
இன்று நடப்பவற்றில் பல, கல்யாணங்களே அல்ல.
பெரும்பாலும் கல்யாணம் என்ற பெயரில் சினிமா ‘சூட்டிங்’தான் நடத்தப்படுகிறது.
ஆன்றோர்களுக்கு அதில் முக்கியத்துவம் இல்லை.
கவர்ச்சிக்காக எதுவும் செய்ய எல்லோரும் தயாராகிவிட்டார்கள்.
இன்று புகைப்படக்காரர்களின் ‘பிட்டங்க’ளுக்குத்தான்,
எல்லாப் பெரியார்களும் அறுகரிசி போடுகிறார்கள்.
பிழை. சரி சொல்லுவார் இல்லை.
‘நமக்கென்ன’ என்று இருப்பதுதான் நாகரிகமாம்.
எங்கே போகிறது நம் இனம்?



கம்பனுக்காக கை நீட்டப்போன நன்றிக்கடனால்,
இந்த அநியாயங்களை முன்வரிசையில் உட்கார்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது.
இதுவெல்லாம் புதுமையாம்!
இதை ஏலவே பலதரம் சொல்லிவிட்டேன்.
யாரும் கேட்பதாய்த் தெரியவில்லை.
மழை பெய்கிறதோ இல்லையோ மாரித்தவக்கை கத்திக்கொண்டுதான் இருக்கும்.
இந்த வரிசையில்தான்  இன்று நானும்.
புதுமை என்ற பெயரில் மாட்டைக் கடித்து ஆட்டைக் கடித்து இன்று
மங்கள வாத்தியங்களிலும் கைவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கல்யாணங்களின் புனிதத்தைக் கெடுக்கும் புதிய முயற்சி இது.
பணத்தைக் கொடுத்தால் எதையும் வாங்கலாம் என்ற ஒரு புதிய வழக்கம்
நம்மவர்களிடம் தோன்றியிருக்கிறது.
மங்கள இசைக்கலைஞர்கள் உசாராகாவிட்டால்,
நாளைக்கு மரணவீடுகளிலும் உங்களை வாசிக்கக் கூப்பிடுவார்கள்.
எனக்குப் பட்டதைச் சொல்லிவிட்டேன்.
இனி உங்கள் பாடு.



இசையில் வேறுபட்டவற்றை புதுமையின் பெயரால் ஒன்றாய்க் கலப்பதற்கு,
‘(f)பியூஷன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 ‘(f)பியூஷன்’ என்றால் கலப்பு என்று அர்த்தமாம்.
இப்படியே போனால் இசை மட்டுமல்ல,
நம் இனமும் ‘(f)பியூஷன்’ இனமாகத்தான் மாறப்போகிறது.
கடவுள் காப்பாராக!

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.