நேர்காணல்
உ
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்கள் “தமிழ்த்தீபம்” சஞ்சிகைக்காக
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுடன் நடத்திய நேர்காணல் - பகுதி 1
கேள்வி :-
உங்களது இலக்கியப் பிரவேசம் எப்போ நிகழ்ந்தது?
பதில் :-
இலக்கியவாதிகளிடம் பலரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். இலக்கியம் எங்கோ தனியே கிடப்பதாகவும், இலக்கியவாதிகள் வேறெங்கோ இருந்துவிட்டு குறித்த ஒரு சந்தர்ப்பத்தில் இலக்கியத்திற்குள் பிரவேசிப்பதாகவும், இக் கேள்வியின் பின்னணியில் ஓர் அர்த்தம் வரப் பார்க்கிறது.
நான் அப்படிக் கருதவில்லை. ஓர் இலக்கியவாதி இவ்வுலகத்திற்குள் பிரவேசிக்கும்போதே இலக்கிய உலகத்திற்குள்ளும் பிரவேசிப்பதாகவே நான் கருதுகிறேன். தென்றல், மலர், மழைத்துளி, நந்தவனம், கடற்கரை, மலை, அன்பு, கருணை, காதல், பரிவு என்பவை இவ் உலகம் பூராகவும் நிரம்பிக் கிடக்கின்றன. இவற்றின் அழகுப் பதிவுகளையே பெரும்பாலும் இலக்கியம் என்கிறோம்.
அதனாற்றான் இவ் உலகத்திற்குள் பிரவேசிக்கும்போதே இலக்கிய உலகத்திற்குள்ளும் ஒருவர் பிரவேசிப்பதாக நான் கருதுகிறேன். எல்லோரது உணர்வுகளுக்குள்ளும் இலக்கியப் பதிவுகள் உள்ளன. ஆனால் ஒருசிலருக்கு மட்டுமே அப் பதிவுகளை எழுத்தாகவோ, பேச்சாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்தும் ஆற்றலை இயற்கை வழங்குகிறது. அந்த வரம் பெற்றவர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!
கேள்வி :-
எப்படி இருப்பினும் உங்களுக்குள் இருந்த அந்த இயல்பாற்றலை யாரோ ஒருசிலர் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டுமல்லவா? அவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்.
பதில் :-
இந்தக் கேள்வி நியாயமானது. ஆரம்பத்தில் கல்கி சஞ்சிகையில் நான் வாசித்த ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகனும், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் எனக்குள் இருந்த இலக்கிய உணர்வைத்தட்டி எழுப்பின.
அதன் பின்னர் முகம் தெரியாமலே நான் வானொலியினூடாகக் கேட்ட எனது குருநாதர் திருச்சிப் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதமான உரைகள் என்னை இலக்கியத்தின்பால் முழுமையாய் ஈர்த்தன.
பின்னர் யாழ். இந்துக் கல்லூரியில் நான் படிக்கும் போது என் ஆசிரியர்களாய் இருந்த வித்துவான் க.ந.வேலன், க. சிவராமலிங்கம்பிள்ளை, வித்துவான் சி.ஆறுமுகம் ஆகியோரது சங்கமம் என்னை நெறிப்படுத்தி இலக்கியப் பாதையில் நடைபயிலச் செய்தது.
நிறைவாக, “இலக்கணவித்தகர்” நமசிவாய தேசிகரின் அருளால் சில இலக்கியங்களை முழுமையுறக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். மேற்சொன்னவர்கள் என் இலக்கியப் பயணத்திற்கு வெளிப்படையாகத் துணைபுரிந்தவர்கள். இவர்கள் தவிரவும் இன்னும் பலர் அவ்வப்போது என்னை இப்பாதையில் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அனைவர்களாலும் செதுக்கப்பட்ட சிலைதான் இன்று இருக்கும் ஜெயராஜ்.
கேள்வி :-
இலக்கிய உலகில் கம்பன் உங்களை ஈர்த்ததற்கு, அல்லது கம்பனை நீங்கள் முதன்மைப்படுத்துவதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
பதில் :-
நிச்சயம் இருந்திருக்கவேண்டும். அக் காரணம் புத்திப்பதிவுகளில் ஏற்படுவதற்கு முன்பே பிறவித் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். முற்பிறவிகளில் கம்பனுக்கும், எனக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கவேண்டும் என நண்பர்களிடம் விளையாட்டாய்ச் சொல்வேன்.
முதல் பார்வையிலேயே, சிலரை நமக்குப் பிடித்துப் போய்விடுகிறது. சிலரை நமக்குப் பிடிப்பதில்லை. புத்திபூர்வமாக இவற்றுக்குக் காரணம் சொல்லமுடியாது. நிச்சயம் ஆன்மாவில் ஏதோ முன்னைப் பதிவுகள் இருப்பதாற்றான் இவை நிகழ்வதாய் நான் கருதுகிறேன். முதன் முதலில் கம்பனை எனக்குப் பிடித்ததும் அப்படியாய்த்தான் இருக்கவேண்டும்.
பின்னர் கம்பனைக் கற்கக்கற்க அவனது உலகளாவி விரிந்த பார்வை, அற நம்பிக்கை, மிகவிரிந்த இலக்கியக் கண்ணோட்டம், அளவில்லாத கற்பனை வளம் எனப் பல விடயங்கள் அவன்பால் என்னை ஈர்த்தன. அவ் ஈர்ப்பே கம்பனை நான் முதன்மைப்படுத்துவதற்கான காரணங்கள். கம்பன் ஆரம்பத்தில் என் புத்தியில் பதிந்தான். பின் என் உணர்வில் பதிந்தான். இன்று அவன் என் ஆன்மாவில் பதிந்து விட்டதாய்த் தோன்றுகிறது.
கேள்வி :-
உங்களது பேச்சுலக வாழ்க்கை பற்றி….?
பதில் :-
ஆலயப் பிரசங்கங்கள் ஊடாகவே எனது சொற்பொழிவு வாழ்க்கை ஆரம்பமானது. இன்றுவரை அதுதான் என் அடையாளமாய் இருக்கிறது. இன்றும் என்னைப் பிடிக்காதவர்கள் “கதாப்பிரசங்கியின் கதையைவிடு” என்று சொல்லி என்னை இழிவுபடுத்த முயல்கின்றனர்.
அதுபற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது பேச்சுலக வாழ்க்கைக்குச் சமயச் சொற்பொழிவுகள்தான் அத்திவாரமாய் அமைந்தன. பின்னர்தான் பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளுக்குள் நுழைந்தேன்.
ஆலயச் சொற்பொழிவுப் பயிற்சி, ஒரு பேச்சாளனை முழுமையுறச் செய்கிறது. ஒரு சொற்பொழிவின் அடிப்படைகளான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்பவற்றை தனிச் சொற்பொழிவுகளின் மூலம் தான் பயிலலாம்.
ஆலயச்சபைகளில் பலதரப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்திருப்பார்கள். அனைவரையும் ஒருசேர ஈர்க்கும் கலையைக் கற்பது ஓர் அரிய விடயம். அதுமட்டுமன்றி ஆலயச் சூழலில் பலவித வெளியீர்ப்பு நிலைகள் இருக்கும். அவற்றிலிருந்து சபையோரை ஈர்த்து தனக்காக்குவது ஒரு தனிக் கலை. இங்ஙனமாய் ஆலயப் பேச்சுக்கள் தந்த முன் அனுபவங்கள் எனது சொற்பொழிவுப் பயணத்திற்குப் பெருந்துணை செய்தன.
கேள்வி :-
ஈழத்தில் பலரும் பேசி வந்த காலத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் வந்ததன் காரணம் என்ன?
பதில் :-
மற்றவர்களால் ஆராயப்படவேண்டிய விடயம் இது. ஆனாலும் உங்கள் கேள்விக்கு என் மனதிற்குப்பட்ட சில பதில்களைச் சொல்கிறேன்.
ஆசிரியர்களிடம் படிக்கும் காலத்திலேயே சுயமாய் ஆராயாமல் ஒரு விடயத்தையும் என் புத்தி, ஒத்துக் கொள்வதில்லை. எந்த ஒரு விடயத்திலும் எனக்கான ஓர் சொந்தப் பார்வையைச் செலுத்துவேன். அதனால் மற்றவர்களுக்குத் தெரிந்த விடயங்கள்கூட நான் சொல்லும்போது ஏதோ விதத்தில் புதுமை பெறும்.
இரண்டாவதாக, விடயங்களைச் சொல்லும்போது படித்தவற்றை அப்படியே ஒப்புவிக்காமல் அவற்றை மனதுள் செலுத்தி, எனது கற்பனைகளையும், தேடல்களையும் இணைத்து விவரிப்பேன்.
மூன்றாவதாக, புலவர்கள் வெளிப்படுத்திய செய்திகளை வரம்பாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தாண்டாமல், என்புத்தியால் உள்நுழைந்து புதிய கற்பனைகளை உருவாக்குவேன்.
நான்காவதாக, பேசப்படும் விடயங்களுக்கேற்ப தோற்றத்திலும் பாவங்களைப் புகுத்தி உரைகளை நிகழ்த்துவேன்.
ஐந்தாவதாக, சொல்லும் விடயங்களில் இயல்பாக நகைச்சுவைகளைக் கலப்பேன். நிறைவாக, பேசப்படும் விடயங்களின் பாவத்திற்கேற்ப குரலில் மாற்றங்களைச் செய்வேன். இவையெல்லாம் என் பேச்சுக்களை முக்கியத்துவப்படுத்தி இருக்கலாம்.
கேள்வி :-
சொற்பொழிவுகளில் நகைச்சுவை பற்றி உங்களது அபிப்பிராயம்?
பதில் :-
நவரசங்களில் “நகை” முக்கியமானது. அது சோர்ந்திருக்கும் எவரையும் ஊக்கப்படுத்தவல்லது. எவரையும் ஈர்க்குந்தன்மை கொண்டது. ஆகவே நகைச்சுவைகளைச் சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆழமான ஒரு விடயத்தைச் சொல்லி சபை களைப்புறும் வேளையில், இயல்பான, பொருத்தமான, தரமான ஒரு நகைச்சுவையைச் சொல்வதன் மூலம், சபையோரை ஊக்கப்படுத்திப் பின் மேலும் ஆழமான விடயங்களைச் சொல்லலாம்.
ஆனால் ஒன்று, சொல்லப்படும் நகைச்சுவை, விடயத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். இன்று, சம்பந்தமே இல்லாத கதைகளை நகைச்சுவைக்காகச் சிலர் மேடையில் சொல்கிறார்கள். அது பேச்சின் தரத்தைக் குறைக்கும். பேச்சில் நகைச்சுவை இருக்கலாம். நகைச்சுவையே பேச்சாக இருக்கக்கூடாது.
கேள்வி :-
பேச்சில் நகைச்சுவையைப் புகுத்துவதற்கான பயிற்சி ஏதேனும் உண்டா?
பதில் :-
தனிப்பட்ட பயிற்சி என்று ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. வாழ்க்கையில் நாம் செய்யும் சாதாரண உரையாடல்களின் போது, நகைச்சுவையோடு பேசிப்பழகினால்த்தான் மேடைப்பேச்சில் நகைச்சுவை இயல்பாய் வரும். நகைச்சுவையோடு இயல்பாய் பேசத்தெரியாதவர்கள் மேடையில் அதைக் கொணர முனைந்தால் அந்தப் பேச்சே நகைப்புக்கிடமாகிவிடும்.
கேள்வி :-
பேச்சின் அழகு எதில் தங்கியிருக்கிறது?
பதில் :-
சத்தியத்தில்தான்! அதனாற்றான் நம் பாரதியார், “உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும” என்றார்.
கேள்வி :-
பேச்சாளர்களாய் வரவிரும்புவோருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி?
பதில் :-
ஒரு விடயத்தை உலகத்திற்குச் சொல்வதற்குமுன் அதனை உங்கள் வாழ்க்கையிற் கடைப்பிடிக்க முயலுங்கள். சொல்லும், செயலும் ஒன்றானால் நிச்சயம் உலகம் உங்களைப் போற்றும்.
கேள்வி :-
சொற்பொழிவுகளுக்குப் பணம் வாங்கித் தமிழை நீங்கள் விற்பதாய்ச் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதுபற்றி?
பதில் :-
அதுபற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. கேட்பாரற்றுக் கிடந்த தமிழை விலைபேசி விற்கும் அளவிற்குப் பெறுமதியானதாக ஆக்கிவிட்டேனே என்று என் உள்ளம் பெருமைப்படத்தான் செய்கிறது.
இது, தமிழுக்கு எதுவும் செய்யாத வீணர்களின் குற்றச்சாட்டு. சில தமிழ் அறிஞர்கள் தங்களை உலகியலைக் கடந்த ஞானிகளாய்ப் பொய்யாகக் காட்டி, மற்றவர்களின் மதிப்பைப் பெற முயல்கிறார்கள். இப்படியாய் தங்களையும் ஏமாற்றி, உலகையும் ஏமாற்றித் திரிபவர்களுக்கு நடிப்பேதும் செய்யாமல் நாங்கள் உயருகிறபொழுது பொறாமை உண்டாகிறது. எங்களுக்குப் புகழும், பணமும் வருவதைக் கண்டு வயிற்றெரிச்சல்ப்படும் இத்தகையவர்கள் தான் மேற்சொன்னவாறு எங்களை இழித்துரைக்க முயல்கிறார்கள்.
தமிழால் வருமானம் வரும் என்ற நிலையிருந்தால்த்தான் இளைய தலைமுறையினர் தமிழைப் படிக்கவும், தமிழ்த்துறைகளில் ஈடுபடவும் தாமாக முன்வருவார்கள். வருமானத்தை வைத்துத்தான் இன்று பலரும் தாம் ஈடுபடும் கல்வித் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பொய்யாக இலட்சியம் பேசித் தாமும் கெட்டு, தமிழையும் கெடுக்காமல் இருக்கவேண்டுமென மேற்படி குற்றம் சாட்டுபவர்களிடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். முக்கியமான ஒன்று, தமிழால் நான் பெற்ற பணத்தைத் தமிழுக்குத்தான் செலவு செய்கிறேன்.
கேள்வி :- உங்களுக்குக் கிடைத்த பட்டங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
பதில் :-
பட்டங்களை வைத்து அறிவைத் தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆலயச் சொற்பொழிவாளன் என்று முன்னரே சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு ஆலயத்திலும் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி முடிக்கும் பொழுது, ஏதோ ஒரு பட்டத்தினைத் தருவார்கள்.
அதனோடு சேர்த்துத் தங்கப் பதக்கங்களும் தருவார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். பட்டங்களும், பதக்கங்களும் தருகிறவர்களின் அன்பின் அளவுகோல்களே அன்றி எங்களது அறிவின் அளவுகோல்கள் அல்ல.
கேள்வி :-
நீங்களும் “கம்பவாரிதி” என்ற பட்டத்தைப் பாவிக்கிறீர்களே?
பதில் :-
அதை நான் பெருமைக்காகப் பயன்படுத்தவில்லை. யாழ்ப்பாணம் திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் கோயிலில், நான் பதினைந்து நாட்கள் இராமாயணத் தொடர் சொற்பொழிவு ஆற்றிய போது தந்த பட்டம்தான் அது.
என்னை மிகவும் நேசித்த, தேர்களைச் செய்கின்ற சிற்பாசாரியார் சீவரத்தினம் அவர்கள் மூன்று பவுண் பதக்கத்தோடு தங்கச்சங்கிலியும் போட்டு அப்பட்டத்தை எனக்குத் தந்தார். கம்பனோடு எனக்குத் தொடர்பிருந்ததால் அப் பட்டம் நிலைத்து விட்டது.
'கம்பவாரிதி" என்ற பட்டத்திற்கு கம்பனில் கடல் போன்ற அறிவுடையவர் என்று அர்த்தம். தன்னடக்கத்திற்காக அன்றி நிஜமாகச் சொல்கிறேன். அப் பட்டத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒருவேளை இங்கிருப்பவர்களுள் நான் கம்பனைச் சற்று அதிகம் பயின்றிருக்கின்றேனோ என்னவோ? ஆனால் கடல்போன்ற அறிவு என்பதெல்லாம் நினைத்தும் பார்க்கமுடியாத விடயங்கள்.
கேள்வி :-
நீங்கள் என்னதான் சொன்னாலும் சில விருதுகளால் மனிதர்கள் பெருமைப்படத்தான் செய்கிறார்கள். உங்களுக்கும் அத்தகைய விருதுகள் கிடைத்திருக்கலாம். அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
பதில் :-
சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் தந்த 'கம்பர்விருது", பேராசிரியர் அறவாணன் அறக்கட்டளை தந்த 'உலகசாதனையாளர் விருது", வேலூர்க் கம்பன் கழகம் தந்த 'கம்பர்சீர் பரவுவார் விருது", திருக்கோவலூர் பண்பாட்டுக்கழகம் தந்த ‘கபிலர் விருது’, சென்னைக் கம்பன் கழகம் தந்த 'கம்பகலாநிதி இராதாகிருஷ்ணன் விருது", மலேசியா கண்ணதாசன் அறவாரியம் தந்த 'கம்பர் விருது", திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய 'சிவஞானக் கலாநிதி விருது", சென்னை சமண இலக்கிய அமைப்புத் தந்த 'திருக்குறள் தேனீ விருது", தர்மபுரம் ஆதீனம் தந்த 'சைவசித்தாந்தக் கலாநிதி விருது" ஆகியவற்றை எனக்குப் பெருமை தேடித்தந்த விருதுகளாய்க் கருதுகிறேன்.
இவற்றைவிட தமிழ்நாடு அரசின் சார்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கம்பர்’விருதினை 2016 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எனக்கு வழங்கினார்கள். அதுவும் எனக்குப் பெருமை தந்த ஒரு விருதாகும்.
கேள்வி :-
சின்னச்சின்ன விருதுகள் பெற்றவர்களைப் பற்றியெல்லாம் நமது பத்திரிகைகள் நிறைய எழுதுகின்றன. இவ்வளவு விருதுகளைப் பெற்றிருக்கும் உங்களைப் பற்றி அவை அதிகம் எழுதுவதில்லையே அதற்குக் காரணம் என்ன?
பதில் :-
அதுபற்றி அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.
கேள்வி :-
உங்களைப் பிடிவாதக்காரர், ஒற்றைப் போக்குடையவர், உலகத்தோடு சமரசம் செய்யத் தெரியாதவர் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே?
பதில் :-
உண்மைதான்! எனக்குச் சரியென்றுபடுகிற விடயங்களை நான் ஒருநாளும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கமாட்டேன். அந்த விடயத்தில் நான் பிடிவாதக்காரன் தான், ஒற்றைப்போக்குடையவன் தான், எனக்குப் பிழையென்று படுவதோடு எப்படிச் சமரசம் செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்?
கேள்வி :-
குறைநினைக்கமாட்டீர்களேயானால் மற்றொன்று….. வேறுசிலர் உங்களைச் சண்டைக்காரன் என்றும் சொல்கிறார்களே?
(தொடரும்)
நேர்காணல் செய்தவர்- திரு. கிரிசாந்