எறிகணை 38

எறிகணை 38
எறிகணை 27 Jun 2026

கேள்வி :

“மங்களவிளக்கேற்றல்” என்று எழுதுவது சரியா? “மங்கலவிளக்கேற்றல்” என்று எழுதுவது சரியா?

பதில் :

நமது தமிழ் அகராதி இவ்விரண்டினையும் சரி என்றே சொல்கிறது. 

 

கேள்வி :

கண்ணதாசன் கவிதைகள் பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?

பதில் :

அக்கவிதைகளில் எனக்கு ஆட்சி இல்லாததுதான் காரணம். இசைப்பாடல்களாய்க் கவிதைகளைக் கேட்கிறபொழுது, என் மனதில் கவிதையை விட இசை முதலிடம் பிடித்து விடுகிறது. அதனால் இசை, கவிதையைப் பின்தள்ளிவிட மனதில் கவிதை பதியாமல் போய்விடுகிறது.

பாடல்களை முணுமுணுக்கிற பொழுது கவிஞரின் கவிதை வரிகளை மறந்து இசையை நிரப்பத்தக்க சொற்களை என் இஷ்டத்திற்கு நானாகப் போட்டுப் பாடிக் கொள்வேன். அதனால் எந்தச் சினிமாக்கவிதையும் எனக்கு முழுமையாய்த் தெரிவதில்லை. பிழைதான். என்ன செய்ய பழக்கதோஷத்தை மாற்றமுடியவில்லை.

 

கேள்வி :

இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிலும் நம்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறைய சைவசித்தாந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் இச்சித்தாந்தக் கல்வியைப் பலரும் கற்று வருகின்றனர். பல அமைப்புக்கள் இந்த வகுப்புகளில் படிக்கிறவர்களுக்கு விதம்விதமான பட்டங்களைக்கூட வழங்குகின்றன. சைவசித்தாந்தத்தை எல்லோரும் படிக்க முடியுமா? எல்லோரும் படிக்கவேண்டுமா? படிப்பதால் பயன் விளையுமா? 

பதில் :

ஏற்கனவே சைவசித்தாந்திகள் பலருக்கு என்னை அதிகம் பிடிக்காது. நீங்கள்வேறு என் வாயைக் கிளறி அவர்களின் பகையை மேலும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் கேட்டதற்காக எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

ஒரு விடயத்தைச் செய்கின்ற பொழுது அதனால் கிடைக்கும் பயனை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று அதன் “மூலபயன்.” மற்றது அதன் “உபபயன்.” இந்த உபபயனை “அவாந்திரப்பயன்” என்று சொல்வார்கள்.

ஆலயத்திற்குச் சென்றால் இறைவனை வணங்குவது “மூலபயன்”. போகும்வழியில் “ஐஸ்கிறீம்” வாங்கிச் சாப்பிடுவது “அவாந்திரப்பயன்”. இப்போது மேற்சொன்ன விடயம் தெளிவாக விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

சைவசித்தாந்தத்தைப் படிப்பதிலும் இவ்விரு பயன்களும் உண்டு.

நான், எனது என்கின்ற அகங்கார, மமகாரங்களை நீக்கி, உலகியலைக் கடந்து இறையுடன் கலப்பதுவே சித்தாந்தம் படிப்பதன் “மூலபயன்.”  

பரீட்சையில் சித்தியடைந்து, பட்டங்கள் பெற்று, நான் ஒரு சித்தாந்தி என சொல்லிக் கொண்டு உலகியலில் வெற்றி பெற நினைப்பது, சித்தாந்தம் படிப்பதன் “அவாந்திரப்பயன்”.

மூலபயனோடு அவாந்திரப்பயனும் கிடைத்தால் தவறில்லை. மூலபயனை விட்டுவிட்டு அவாந்திரப்பயனை மட்டும் அடைவது அறியாமை.

சித்தாந்த வகுப்புகளில் சித்தி பெற்று பெறப்படும் பட்டங்களையோ, சான்றிதழ்களையோ காட்டுவதன் மூலம், “முக்தி” பெறுவதற்கான சலுகைகளை நாம் இறைவனிடம் பெறமுடியாது என்பது உறுதி.

அப்படியிருக்க அத்தத்துவத்தை வெறும் கல்வியாய்க் கற்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றே நினைக்கிறேன்.

முன்னறிவு இல்லாதவிடத்து எத்துறை சார்ந்த கல்வியையும் எவரும் கற்க முடியாது. இது பொதுவிதி.

சித்தாந்தத் தத்துவத்தைக் கற்பதற்குத் தேவையான முன்னறிவு எது? கேள்வி பிறக்கும். சிலர், இத்தத்துவத்தைக் கற்க இலக்கண, இலக்கிய, தர்க்க அறிவுகள் போதும் என நினைக்கின்றனர். அது தவறு.

மேற்சொன்னவை, சித்தாந்த நூல்களைப் படிக்கத் தேவையான முன்னறிவுகளேயன்றி சித்தாந்தத் தத்துவத்தை அறிவதற்கான முன்னறிவுகள் அன்றாம்.

சித்தாந்தத் தத்துவத்தை விளங்கவேண்டுமானால் ஆன்மவளர்ச்சி அல்லது ஆன்மவிசாரமே அதற்கான தகுதிகள் என உரைக்கப்படுகின்றது. அத்தகுதிகளைப் பெறாதவர்கள் சித்தாந்தத் தத்துவத்தை அறிய முற்பட்டால் எதிர்விளைவுகளும் ஏற்படலாம்.

 வெறுமனே சித்தாந்தத்தைக் கல்வியாகக் கற்றுவிட்டு, தமக்குச் சித்தாந்தம் தெரியும் எனக்காட்டியும், மற்றவர்களை மட்டந்தட்டியும், சிவனுக்கு உரியவர்கள் தாங்களே எனச் சொல்லியும், சிவனையும் சைவத்தையும் தாங்களே பாதுகாப்பதாய் நினைந்தும் ஆணவப்படுகிறவர்கள் பலபேரைப் பார்த்திருக்கிறேன்.

ஆணவத்தை நீக்குவதற்காகக் கற்கும் கல்வியைக் கொண்டு ஆணவப்பட்டால் அது அறியாமை அன்றி வேறென்ன?

 

கேள்வி :

அர்ச்சுனா செருப்பு மாலை இடப்பட்ட தனது “பனரை” தானே கிழித்தெறிந்த காட்சியைப் பார்த்தீர்களா?

பதில் :

நான் என்ன? எல்லோரும்தான் பார்த்தார்கள். பிழைக்கு மேல் பிழைகள் செய்வதும், அப்பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறவர்களை நிந்தனை செய்வதும் அர்ச்சுனாவின் வழக்கமாகிவிட்டது.

அவரது இந்த இயல்பால், பலரும் அவர் பற்றிக் கருத்துரைக்க அஞ்சுகிறார்கள். அர்ச்சுனா அதைத் தனது வெற்றியாய்க் கருதுகிறார். அவ் எண்ணம் தவறானது.

ஒருவரைக் கண்டு மற்றவர்கள் அஞ்சி தூரப்போனால், அத்தகையவர் சமூகத்தைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான் அர்த்தம். அந்த இயல்பை அரச்சுனா தவிர்ப்பது நல்லது.

என்னைப் பற்றியும் அவர் பலதரம் தூற்றியிருக்கிறார். அது பற்றி நான் கவலைப்படவில்லை. தனக்கு இருக்கக்கூடிய ஆற்றலை அவர் வீணாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றியே நான் கவலைப்படுகிறேன்.

அவருக்கு யார் நண்பன்? யார் எதிரி? என்று தெரியவில்லை. தனது பிழையைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் எல்லோரையும் தனது எதிரிகள் என்று அவர் கருதுகிறார். அவருக்கு “வால்முறுக்கிவிட” என்றும் சிலபேர் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் அந்த அநியாயத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். அர்ச்சுனாவின் வெளிநாட்டுப் பயணத்தோடு அவர்களும் ஓரளவு ஓய்ந்து விட்டார்கள்.

இன்னும் சிலபேர் அந்தக் காரியத்தைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்த்தான் அவரது பிழையான அரசியல்ப்பாதை தொடர்கிறது. அதன் விளைவுகளில் ஒன்றுதான் தன் “பனரை”த் தானே கிழித்த செயல்.

 

கேள்வி :

“அநுர”வை வீழ்த்த நினைந்து அரசியலில் வேறுபட்டிருந்தவர்கள் எல்லாம் ஒன்று படுவதைக் கவனித்தீர்களா? 

பதில் :

நன்றாகக் கவனித்தேன். இதுவரை “அநுர”வை மக்கள் மனதிலிருந்து நீக்க அவர்களுக்கு எந்தக் காரணமும் கிடைக்காமல் இருந்தது.

அமெரிக்க, ஈரான் போரால் ஏற்பட்ட, உலகப் பொருளாதார வீழ்ச்சியால், பல நாடுகளும் பாதிப்புற்றதைப் போலவே, இலங்கையும் பாதிப்புற்றது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, “அநுர”வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒன்றுபட்டு நடத்துவதன் மூலம் அவரை மக்கள் மனதிலிருந்து வெளியேற்றி விடலாம் என இவர்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்.

“பெரியவெள்ளிக்குண்டுவெடிப்பு”, “புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தங்கம்பற்றிய பிரச்சினை”, “நடந்துமுடிந்த காரணம்கண்டுபிடிக்கப்படாத கொலைகள்”, “முள்ளிவாய்க்கால் அழிவின்போது செய்யப்பட்ட மனிதஉரிமைமீறல்கள்” என்பவற்றோடு தொடர்புபட்டவர்களுக்கு, “அநுர”வின் அரசு அச்சத்தை ஊட்டியிருக்கிறது. அத்தகையவர்களும் இந்தக் கூட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

“அநுர” அரசு செய்யத்தொடங்கியிருக்கும் ஊழல்களுக்கெதிரான விசாரணைகள் சில அரசியல்வாதிகளின் வயிற்றில் “புளியைக்கரைக்கத்” தொடங்கிவிட்டது. இத்தகையவர்களும் இந்தக் கூட்டத்தில் அடங்குகிறார்கள்.

மக்கள் மனதைப் புரிந்து, தேசப்பற்றோடு, எளிமையாகவும், உண்மையாகவும் நடக்கத் தொடங்கியிருக்கும் “அநுர” என்கின்ற தனிமனிதத் தலைவன் இருக்கும் வரை இவர்களது முயற்சிகள் வெற்றிபெறும் என்று தோன்றவில்லை.

ஆனால் ஒன்று “அநுர” அரசு சில விடயங்களில் வேகம் காட்டவேண்டும். இல்லாவிட்டால் இத்தகையவர்கள் பலம் பெற்று விடுவார்கள்.

 

கேள்வி :

தமிழக சட்டசபையில் “விஜய்” கலக்கத் தொடங்கிவிட்டாரே! கவனித்தீர்களா?

பதில் :

கலக்குகிறார் என்பது உண்மைதான். இன்னும் கொஞ்சம் கண்ணியமாய்க் கலக்கினால் நன்றாய் இருக்கும்.

கேள்வி :

பாரத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஸ்ராலினை, “விஜய்” கலாய்த்ததை வரவேற்றிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :

“எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்” என்ற கதைதான். ஆனாலும் பாரதத்தின் கௌரவத்திற்குரிய பதவியில் இருக்கும் ஆளுமையாளரான நிர்மலா சீதாராமன் அம்மையார் இத்தகைய ஒரு பதிலை அளித்ததில் எனக்கு உடன்பாடில்லை.

தேவைகருதி பிழையான முன்னுதாரணங்களை ஆதரிக்கத் தலைப்பட்டால் பின்னாளில் அது தமக்கே கேடாய் முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது. 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.