பாரதியின் கனவெல்லாம் பாழாய்ப் போச்சோ ?

பாரதியின் கனவெல்லாம் பாழாய்ப் போச்சோ  ?
 
 
ஆடவரை மயக்க வல்ல ஆடையோடும்
ஆண்மையினைச் சீண்ட வல்ல தோற்றத் தோடும் 
பீடுநடை போடுகின்ற பெண் மக்காள் கேண்மின்
பேசரிய பெண்ணியத்தின் பெருமையிதோ சொல்மின்
நாடு புகழ் நங்கையராய் நலஞ் சேர்ப்பீர் என்று
நாளும் உமை மீட்டெடுக்க நன்றுழைத்த வேந்தன்
பாடு பொருளாக வைத்தான் பாவையர்க்கு மீட்சி
பாரதியாம் அவன் கனவு பாழாய்த் தான் போச்சோ ?

வெளிநாட்டு வாழ்வதனை வெளிச்சமென நம்பி
வேர் கொண்ட தன் நிலத்தைத் துச்சமென எள்ளி
அழிகின்ற எம்மினத்தின் அவலமதைச் சொன்னால்
ஆயுளது போதாது அளவு மாளாது
விழுதாகி  விதைத்தோர்க்கு பயன் செய்தல் அன்றி
வீறான தனி நீதி வேறென்ன உண்டு
பழி தேடி அழிகின்ற பாழ்சாதி ஆனோம்
பார் கூடிச் சிரிக்கின்ற பாவியராய்ப் போனோம்

கற்பொழுக்க நெறிமுறைகள் தொலையக் கண்டோம்
காளையரின் நிமிர்வுகளை சிதைத்துக் கொண்டோம்
நற்தவத்தோர் வழிவந்த நம் இனத்தின் மேன்மை
நாள் முழுதும் நாதியற்று தொலைவுறுதல் ஏனோ ?
பொற்புறு நல் திலகமொடு பூவணிந்து செல்லும்
பெண்களினைக் காணுதலோ கனவாதல் கண்டீர்
மற்றவரின் பண்பாட்டை மனங்கொள்ள  வேண்டி
மாண்பான எம் பெருமை மறந்தேதான் நொந்தோம்

கலைச் செல்வம் நம் நாட்டில் செழித்தோங்கும் என்று
காளையரே சென்றிடுவீர் திக்கெல்லாம் என்றான் 
நிலச்செல்வம் விற்றழித்து  வெளிநாடு சென்று 
நெட்டழியும் எம்மினத்தை என்னவெனச் சொல்வோம்
விலைப்பொம்மை என இன்று விற்பனைக்கு ஏங்கும் 
விந்தை இனம்  எழிச்சியுற  வழி என்ன கொள்வோம்
மலையொத்த எம்மான்பு  மறுவாழ்வு காண
மங்காத பணி செய்ய விரைந்தோடி வாரீர்!
                                     ✹✹✹
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.