'பாவிகளை மன்னிப்பீராக!': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
சர்ச்சைக்களம் 21 Dec 2019
குறிப்பாகக் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சில மதத்தலைவர்களும், அம்மதத்தைப் பின்பற்றுவோர் சிலரும், நம் பிரதேசத்தில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு, பெரும்பான்மை பலம் பெற்ற இந்து மதத்தவர்களை, வெளிப்படையாக வெறுக்கவும் விமர்சிக்கவும் செய்வதோடு, அம் மதத்தாரை அடக்கியாளவும் முயன்று வருகின்றனர். தமது உலகளாவிய பலம்கொண்டு இப்பிரதேசங்களில், பகிரங்கமாக இந்து மத்தவர்களை மதமாற்றம் செய்யும், இவர்களது செயற்பாடுகள் அருவருக்கத்தக்கன. இது தவறு என்று யாரும் விரல் நீட்டினால், தம் மதத்திற்குள் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டி, நான் இல்லை அவர்தான், அவரில்லை இவர்தான் என்று, இவர்கள் செய்யும் விளையாட்டு வேடிக்கையானது. இவர்களுள் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அத்தனை பிரிவுகளும், மதமாற்ற முயற்சியைப் பகிரங்கமாகச் செய்வது வெளிப்படை. அதுபற்றிய ஒரு வேடிக்கையான விடயத்தை அடுத்தவாரம் சொல்கிறேன்.
⛳ ⛳ ⛳ ⛳
உலகம் எவ்வளவு வேடிக்கையானது என்பதற்கு,
நான் சொல்லப்போகும் நிகழ்வு, சாட்சி பகரும்.
ஒருநாள், நல்லூர்க் கோயிலுக்கு அருகில் உள்ள,
எங்களது கம்பன்கோட்டத்தின் வாசலில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
எனது நெற்றி நிறைய விபூதி.
நெற்றியின் நடுவில் பெரிய குங்குமப் பொட்டு.
வழமையான எனது காவிநிறத்து உடை.
ஏதோ வேலையாய் மேற்தோற்றத்தோடு வாசலில் நின்ற என்னை நோக்கி,
இளம் வயதுடைய ஓர் ஆணும் பெண்ணும் வந்தனர்.
எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.
என்னோடு சிறிது பேசவேண்டும் என்றார்கள்.
நம் பண்பாட்டின்படி உள்ளே அழைத்துச் சென்றேன்.
⛳ ⛳ ⛳ ⛳
உள்ளே வந்து அவர்கள் அமர்ந்ததும் தான்,
அவர்களின் கையில் இருந்த பைபிள் நூலும், செபமாலையும் என் கண்ணில் பட்டன.
உடனே அவர்கள் வந்தநோக்கம் எனக்குப் புரிந்தது.
என்றாலும் என்ன பேசப்போகிறார்கள் என்று அறிய,
'வந்தவிடயம் என்ன?' என்று அவர்களைப் பார்த்து அப்பாவியாய்க் கேட்டேன்.
உடனே அவர்கள் தங்கள் மதமாற்றப் பிரச்சாரத்தை வீச்சாகத் தொடங்கினார்கள்.
நான் தொடர்ந்தும் என் அப்பாவி வேடத்தைக் கடைப்பிடித்து,
அவர்களின் பேச்சை ஆர்வமாய்க் கேட்பதாய் சிறிது நடித்தேன்.
அவர்கள் ஊக்கம் மிகைப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் கடவுளே கடவுள் என்றும்,
மற்றைக் கடவுள்கள் எல்லாம் பேய்களின் வடிவங்கள் என்றும்,
துணிவாகச் சொல்லத் தொடங்கினார்கள்.
'இனி பொறுப்பதில்லை' என்ற நிலைக்கு நான் வந்தேன்.
⛳ ⛳ ⛳ ⛳
பேசிக் கொண்டிருந்த அவர்களைக் கைகாட்டி நிறுத்தினேன்.
'உங்கள் விடயங்கள் எல்லாம் சொல்லிவிட்டீர்களா?' என்று கேட்டேன்.
'ஆம்' என்றார்கள்.
'நான் மதம் மாறவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம்.'
என்று தொடர்ந்து கேட்டேன்.
அதற்கும் 'ஆம்' என்றார்கள்.
'நல்லது உங்கள் கருத்துக்களைச் சொல்லிவிட்டீர்கள்.
இனி என் சமயக் கருத்துக்களை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
நீங்களும் என்னைப்போலப் பொறுமையாக இருந்து கேட்கவேண்டும்' என்றேன்.
அவர்களுக்குள் சிறிய பதட்டம் உண்டானது.
'இல்லை இல்லை நாங்கள் இயேசுவின் விசுவாசிகள்,
மற்றச் சமயச் செய்திகளைக் கேட்கமாட்டோம்' என்றார்கள்.
⛳ ⛳ ⛳ ⛳
நான் சற்றுக் குரலை உயர்த்தினேன்.
'என் நெற்றியில் இருந்த விபூதி, குங்குமம் ஆகியவற்றைப் பார்த்து,
நான் சைவன் என்று தெரிந்த பின்னும்,
உங்கள் சமயச் செய்திகளை வீட்டுக்குள் வந்து சொன்னீர்களல்லவா?
அதுமட்டும் எப்படி உங்களால் முடிந்தது?' என்றேன்.
மெல்ல முழியைப் பிரட்டத் தொடங்கினார்கள்.
'இப்பொழுது நான் எனது சமயச் செய்திகளைச் சொல்லப்போகிறேன்.
நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இறுதியில் யார் சமயம் மாறுவது என்று முடிவு செய்வோம்.'
என்று சொல்லிக் கதவை இழுத்துப் பூட்டிவைத்து,
வேண்டுமென்றே எங்கள் சைவசமயச் செய்திகளை,
அவர்கள் வெறுக்க வெறுக்க எடுத்துச் சொன்னேன்.
நிறைவில் அழாக்குறையாக விட்டாற்போதும் என்று ஓடிவிட்டார்கள்.
⛳ ⛳ ⛳ ⛳
சைவக்கோயிலின் அருகில் சைவசின்னங்களோடு நின்;ற என்னையே,
மதம்மாற்ற நினைக்கிறார்கள் என்றால்,
அவர்களின் துணிவை என்ன சொல்வது?
இளையர்களான இவர்கள் இரண்டிரண்டுபேர்களாக,
நாள்முழுக்க இதே வேலையாக ஊர் முழுக்கத் திரிகிறார்கள் என்றால்,
அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழிதான் என்ன?
யாரோ சம்பளம் கொடுக்காமலா அவர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
அப்படி அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்கள் யார்?
கேள்விகளூடு விடயத்தின் வேரை அணுகினால்,
பலரும் வெட்கப்படவேண்டிவரும் என்பது நிச்சயம்.
⛳ ⛳ ⛳ ⛳
இந்த அனுபவம் கொழும்பு வந்த பிறகும் எனக்கு ஏற்பட்டது.
உலகளாவிய செல்வ வளமும், பலமும் இருக்கும் காரணத்தால்,
மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களை,
வசதிகளைக் காட்டி தம்பக்கம் இழுப்பதென்பது எப்படி நியாயமாகும்?
இதுதான் இயேசுநாதர் காட்டிய வழியா?
இல்லவே இல்லை!
முப்பத்திரண்டு வெள்ளிக்காசுகளைக் காட்டி,
'யூதாஸை' மனமாற்றி இயேசுபிரானைக் காட்டிக் கொடுக்கவைத்து,
அவரைச் சிலுவையில் அறைந்து மகிழ்ந்த.
துரோகிகளின் வழியல்லவா இது.
ஒரு மகானின் வழி நிற்பதாய்ச் சொல்லிக்கொண்டு,
ஒரு துரோகக் கும்பல் காட்டிய பாதையில் வழி நடப்பது எப்படி நியாயமாகும்?
⛳ ⛳ ⛳ ⛳
சமயத்துறை சார்ந்த என்னையே துணிந்து தம்பக்கம் ஈர்க்க முற்படுபவர்களிடம்,
சாதாரண மனப்பலயீனமும், வறுமையும் உற்ற மக்கள் அகப்பட்டால்,
அவர்கள் கதி என்னாகும்?
இது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும் நடக்கும் விடயமன்று.
நாடுபூராகவும் இது நடக்கிறது.
அதனால்த்தான் பௌத்த மதத்தவர்களும்,
மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டுவரவேண்டுமென்று,
இடையில் கொதித்தெழுந்தார்கள்.
⛳ ⛳ ⛳ ⛳
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும்,
மாற்று மதத்தவர்களை அணைத்து நடக்கும்,
இந்து மதத்தவர்களின் பெருந்தன்மையை,
அவர்களின் பலவீனமாய் நினைந்து,
அவர்களைச் சீண்டிப் பார்க்கும் வேலையை,
மேற்படி 'மத' மனிதர்கள் தொடங்கியிருப்பது,
மிகமிக வேதனையான விடயமாம்.
⛳ ⛳ ⛳ ⛳
இந்நாட்டின் பேரினத்தாருள் மொழியால் அங்கம் வகிப்பதாலும்,
உலகளாவி விரிந்த தம் மதத்தின் நிர்வாகப் பலத்தாலுமே,
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தாம் சிற்றினமாய் இருந்துகொண்டு,
பேரினமாய் அங்கு வாழும் இந்துக்களை விலைக்கு வாங்கவும்,
மிரட்டி வாழவும் இவர்களால் முடிகிறது.
⛳ ⛳ ⛳ ⛳
இவ்விடயத்தில் நம் இந்துமதத்தாரின் சில குறைகளையும்,
நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
உலகெங்கும் விரிந்திருந்தாலும் மதத்தை ஓர் அடையாளமாய்க் கொண்டு,
ஒன்றுபடும் சக்தியை நம் இந்துமதத்தார் இன்னும் பெறவில்லை.
அதுதான் நமது பலவீனத்தின் அடிப்படையாய் இருக்கிறது.
⛳ ⛳ ⛳ ⛳
ஆனால் அதனையும் பிழையென்று சொல்லமுடியவில்லை.
என்றைக்குமே தம் மதம் சார்ந்த மக்கள் தொகையைப் பெருக்குவதையும்,
உலகளாவிய நிர்வாகத்தை உருவாக்குவதையும்,
அதைவைத்து மற்றைய மதங்களை விழுங்க நினைப்பதையும்,
நம் இந்துமதம் என்றும் ஏற்றுக் கொண்டதில்லை.
அது பொருள் வளர்ச்சிக்காக ஏற்பட்ட மதமன்று.
அருள் வளர்ச்சிக்காக ஏற்பட்ட மதம்.
⛳ ⛳ ⛳ ⛳
ஞான பூமியாகிய கிழக்கில் உதித்ததால் இந்து மதத்திற்கு,
ஞானமே முதல் நோக்கமாய் என்றும் இருந்திருக்கிறது.
மேற்குலகாகிய பொருள் உலகில் உதித்ததாலோ என்னவோ?
மேற்படி மதத்தாருக்கு உலகியல் வெற்றியே உயர்வாய்த் தோன்றி நிற்கிறது.
அதனால்த்தான் தம் மதத்திற்கான மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியில்,
அம்மதம் சார்ந்தவர்கள் நேர்மையற்ற பலவிதத்தாலும் இயங்கி நிற்கின்றனர்.
⛳ ⛳ ⛳ ⛳
தாம் உயர்வென்று நினைத்த ஒரு கருத்தை,
உலகத்தார்க்கு உபகரிக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
சிலர் கேட்க நினைக்கலாம்.
நியாயமான கேள்விதான்.
ஆனால் அன்பையும் பொறுமையையும் உலகிற்கு உபதேசித்த,
ஒரு மகானின் வழிவந்தவர்களாய்ச் சொல்லிக்கொண்டு,
மதப்பலத்தைப் பெருக்குவதற்காக,
மனிதர்களுக்கிடையே வெறுப்பையும், பகையையும் உருவாக்கும்,
இவர்களது செயலே கண்டனத்திற்கு உரிய விடயமாகிறது.
தமது சமயம் வளர்க்க, மற்றைய சமயத்தை அழிக்க நினைக்கும்,
இவர்தம் செயற்பாடுகள்பற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.
⛳ ⛳ ⛳ ⛳⛳ ⛳ ⛳ ⛳
(மிகுதி அடுத்தவாரத்தில்)