புதுப்படம் வருமே?

புதுப்படம் வருமே?
 
ஊருக்குள்ளே உதுதான் பேச்சு
பழைய அதிபர் பட்டெனச் சரிய
பலநாள் இருந்த படஅரங்கத்தைப்
புதிய அதிபர் பொறுப்பேற்றாராம்.
நல்ல படமும் நாளை வருமென
ஏங்கியிருந்த எல்லோருக்கும்
உள்ளத்துள்ளே உவப்பு மிகுந்தது.
நீண்ட நாளாய் நேர்ந்து கிடந்த 
நிழற்படம் வருமென நினைந்த அவரும்
கடவுளை வேண்டி கைகுவித்தனராம்.

***
 
படம் வரும் முன்னே பலபல பேச்சு.
எப்படம் வருமென எவரும் அறியார்
அறிந்தார்போல அனைவரும் பேசினர்.
விருத்தாச்சலத்தார் வீட்டுத் திண்ணையில்,
பெரிசுகள் கூடிப் பேச்சைத் தொடங்கின.
 

 

***
பொன்னம்மா தன் பொக்கை வாயால்,
வாராச் செய்தி வருவித்துரைத்தாள்.
வரும்படம் சற்று வழமையில் மாறி,
சண்டைக்காட்சிகள் சற்றுமிலாத,
காதல் படமாம். கனபேர் சொல்லினம்.
 
***
 
பொன்னம்மாவின் புளுகை மெச்சி,
அன்னம்மாவும் ஆமோதித்தாள்.
வந்தபடமெலாம் வயித்தைக்கலக்கும்,
சண்டைப்படந்தான்! சலிச்சே போச்சு.
காதல் படத்தைக் காட்டுவன் என்கிறார்,
புண்ணியவானாம் புதிய அதிபர்.
எண்ணிய படத்தை எடுப்பரோ? என்றாள்.
 
***
 
பக்கத்திருந்த பண்டிதக்கிழவனார்,
'கெக்கடம்" போட்டுக் கெலிக்கச் சிரித்தார்.
முன்னை அதிபரும் முதலில் வந்து,
சண்டைப்படம் இனிச் சரிவராதெண்டவர்.
காதல் படம்தான் காட்டுவேன் என்றும்,
புதுப்படம் பலபல போடுவேன் என்றும்,
சொல்லிச் சொல்லிச் சோக்குக் காட்டினார்.
அப்போதெங்கட ஆக்கள்பட்ட,
பாட்டினை நினைக்கப் பகிடியாய் இருக்குது.
 
***
 
புதுப்படம் பார்க்கப் 'போலினில்" நின்றோர்,
ஆரைப்பிடித்தால் அப்படம் பார்க்க,
சீட்டுக் கிடைக்கும் என்று திரிந்தோர்,
நான் சொல்லித்தான் நல்லபடத்தை,
மாண்புறு அதிபர் மனங்கொண்டாரென,
வீம்புப் பொய்கள் விரித்து உரைத்தோர்,
முன்னரே சீற்றை முற்பதிவாக்க,
பெரியோர் சிலரைப் பின்கதவாலே, 
பிடிக்கமுயன்று பேதைமை செய்தோர்,
இப்படி இப்படி எத்தனை பேர்கள்,
செப்படி வித்தைகள் காட்ட முயன்றார்.
 
***
 
பண்டிதர் நிறுத்தப் பரமு தொடர்ந்தார்.
எங்கட சனங்கள் இப்படித்தானே.
வாராப் படத்தை வந்ததாய் நினைந்து,
ஊரைப்பிரட்டும் உலுத்த பிறவிகள்.
அன்று நடந்ததை ஆர் மறப்பார்கள்?
முதற் படம் போட்டு முடியுமுன்னரே,
திடுக்கென வந்து தியேட்டரை மூடி,
மக்கள் கருத்தை மனங்கொள்ளாது,
பழைய அதிபர் படுத்தியபாடும்,
கொஞ்ச நஞ்சமே? கொதிக்குது நெஞ்சம்.
காதலும் போரும் கலந்த படமென,
வேறொரு படத்தை வீணாய்ப் போட்டு,
ஆறுவருடமாய் யாருமில்லாது,
வீறுடன் ஓடி விழுத்தினர் தியேட்டரை.
 
***
 
நட்டத்தாலே நலிந்த தியேட்டரை,
புதிய அதிபர் புன்னகையோடு,
வந்து மகிழ்ந்து வாங்கிட இன்று,
மீண்டும் இந்த மேய்ப்பன் ஆடுகள்,
பட்டி அவிழ்த்த பரவசத்தாலே,
எட்டி எட்டி எழும்பிக் குதிக்கின.
ஒட்டுமொத்தமாய் ஓடலாம் என்று
மட்டி ஆடுகள் மடத்தனமாக
உண்மை மறந்து உவப்பதை என்சொல
என்றே சொல்லி ஏங்கிப் பரமர்,
திண்ணையைத் தாண்டித் தெருவில் நடந்தார்.
 
***
 
உவர் உப்படித்தான் ஒண்டையும் நம்பார்.
கண்டதில் எல்லாம் கரவுதான் இவர்க்கு.
புதிய அதிபர் புரிகிற புன்னகை,
ஒன்று போதாதே? உத்தமன் அவனென,
பொன்ராசாதான் புகழ்ந்து மொழிய,
வந்ததே கோவம் வடிவேலர்க்கு.
 
***
 
ஆரைச் சொல்லுறீர்? அவரோ நல்லவர்?
வாயாற் சோறு வடியாதேயும்.
ஆரிவரெண்டு அறிந்தோ பேசுறீர்?
தம்பியும் முன்பு தலைதெறித்தேதான் 
சண்டைப்படமே சரியென நினைந்து,
பத்தே ஆண்டுகள் படமெடுத்தோடி,
வீணாய்த் தியேட்டரை வீழ வைத்தவர்
தன்னையே சேர்ந்து சரணென வாழ்ந்து 
கூத்தடித்தவரின் குழுவிலே இருந்தவர்.
அப்ப தம்பியும் அவயளோடதான்,
ஒப்பி நிண்டது. உமக்கோ மறதி.
இப்ப வந்து ஏதெதோ சொல்லி,
தப்பப் பாக்குது. சலித்தார் வேலர்.
 
***
 
அப்ப இருந்த அறுந்தே போவார்
எப்ப இந்தத் தம்பியை முழுசா,
இயங்க விட்டவை? இப்ப நிலைமை,
மாறிப்போச்சு மனுசனுக்கு இருந்த 
வேலிகள் எல்லாம் விழுந்திடத் தம்பி
மதிப்பும் வந்து மலர்ந்து நிக்குது.
தெத்திப்பல்லுத் தெரியச் சிரிக்கிறான்.
தேசம் ஆளும் வேசம் இருக்குது.
பத்திரமாகப் பார்ப்பான் தியேட்டரை.
புதிய அதிபரைப் புகழ்ந்தார் புண்ணியர்.
 
***
 
மௌனித்திருந்த மதியாபரணம்,
இப்பநிலைமை என்னவாம்? சொல்லும்.
புதுப்படம் கெதியில போடுவராமே?
காதல் படத்தைக் காணுவம் என்று,
காத்துக்கிடக்குது கனக்கச் சனங்கள்.
என்றே கேட்க, ஏரம்பண்ணர்....
 
***
 
என்ன உமக்கு இது தெரியாதே? 
வந்ததும் தம்பி வரும் புதுப்படமென,
சொன்னது. சொன்னதைச் செய்திட என்று,
அரங்கைப் பெற்றதும் அவசரமாக,
படப்பெட்டிக்காய்ப் பலபல ஊர்கள்
சடக்கெனச் செல்லச் சங்கதி தெரிஞ்சு,
ஊரெலாம் கதைச்சது உது தெரியாதே?
எங்கையிருக்கிறீர்? என்றே உரைக்க,
 
***
 
விளக்கம் குறைஞ்ச விமலேந்திரனார்,
எங்கள் ஊரில் எம் சனம் பார்க்க 
ஏன்அயல் ஊரில் எடுக்கீனம் படத்தை 
இங்க எவரும் இல்லையே என்று
இழித்துக் கேட்க எழுந்தது சிரிப்பு.
 
***
 
சுப்பிரமணியம் சொல்லத்தொடங்கினார்.
அவங்கள் பெரிய ஆக்கள் அதனால்,
அந்தப்படம்தான் அருமையாய் ஓடுமாம்.
படம் பிழைச்சாலும் பரவாயில்லை,
செலவை அவங்கள் சரிக்கட்டுவங்கள்.
ஓடவும் பழைய ஒப்பிரேற்றர்தான்,
மீளவும் வருவராம் மேற்கிலயிருந்து.
என்றே சுப்பர் இயம்பும் முன்னர்,
 
***
 
ஆரும் எடுக்க ஆரும் ஓட 
நாங்கள் பார்ப்பது நல்லபகிடிதான்.
எடுக்கவும் ஓடவும் ஏலாதென்றால்
இவர்க்கு எதற்காம் இந்தத் தியேட்டர்?
இடக்காய்க் கேட்டார் இருதயநாதர்.
 
***
 
அப்ப எங்கட அதிபரின் வேலை,
அவங்கட படத்தை அரங்கேற்றுவதோ?
விமலேந்திரனார் வினவினார் மீண்டும்.
 
***
 
விழல் கேள்விகளை விடு விமலண்ணை.
ஆர்குத்திடினும் அரிசி கிடைச்சால்,
போதுந்தானே. புதுப்படம் ஒண்டு,
வந்தாச் சரிதான். வடிவாய்ப் பாக்கலாம்.
சுப்பிரமணியம் சொல்லியே முடிக்க,
கந்தசாமியார் கதைக்கத் தொடங்கினார்.
 
***
 
புதுப்படம் வந்தாற்போலச் சரியே,
தியேட்டருமெல்லே சிதைஞ்சு கிடக்குது.
கலரியில் கிடந்த கதிரைகள் எல்லாம்,
உடைஞ்சு, சனங்கள் ஓடித்திரிஞ்சவை.
திருத்தினாற் தானே திரிஞ்ச சனங்கள்,
புளுகமாய் இருந்து புதுப்படம் பார்க்கலாம்.
கந்தனார் நிறுத்தக் கனகர் தொடங்கினார்.
 
***

ஓமோம் அண்ணை உண்மைதான் அதிபர்,
வந்ததும் எல்லாம் வடிவாய்த் திருத்துவன்,
நூறுநாள் போதும் நோ இனி வேண்டாம்
எண்டவர். இன்று எல்லாம் விட்டு
அவை பின் பார்க்கலாம் அப்பைக்கு இப்ப,
எத்தனை திருத்தம் என்கிறார் அவரும்.
வந்த சனங்களை வரிசையில் நிறுத்தி,
கந்தறுத்திட்ட கதையெலாம் இனிமேல்,
இல்லை என்று எடுத்துப் போட்டார்.
அந்த அளவில் ஆறுதல் தானே.
 
***
 
கனகர் முடிக்க, கடுகடுப்பான,
பண்டிதர் மீண்டும் பறையத்தொடங்கினார்.
முந்தியும் இப்படித் தான்முழங்கினவ.
பந்திக்கிருத்த பரபரப்பாக 
முந்தியடிப்பினம் முழுதும் பொய்யே
அதுக்கு மயங்கி, ஆவெண்டாலோ
இலைதான் இருக்கும் ஏதும்விழாது.
இதுதான் வழக்கம். என்று சிரித்தார்.
 
***
 
முத்தர் முழியைப்பிரட்டிச் சொன்னார்.
கலரிச் சனத்தைக் கவனிக்காட்டி,
விடாங்கள் எங்கட வீரப்பெடியள்.
விசிலடிச்சு அவங்கள் வெளிக்கிட்டிட்டா,
ஒருவரும் தியேட்டரில் ஒழுங்காயிருந்து,
படம்பார்த்திடுதல் பகற்கனவேதான்.
பெடியளுக்கும்படம் பிடிச்சிட வேணும்.
முத்தர் முடிக்க, முணுமுணுப்பாக
சித்தம்பலத்தார் செருமித் தொடங்கினார்.
 
***
 
பல்கனியில சில 'பாட்டிகள்" சென்று,
குந்தியிருக்கக் கொடுத்ததாம் 'ரிக்கற்".
அவையள் என்னவாம் அங்க செய்வினம்?
சிற்றம்பலத்தார் செய்தி கேட்டிட 
 
***
 
பண்டிதர் மீண்டும் பகிடியாய்ச்சிரிச்சார்.
'பாட்டிகள்" எப்ப படம்பார்த்தவையள்.
போட்டிபோட்டுப் புதுப்படம் வந்தா,
'பாட்டிகள்" செல்வது 'பவர்" காட்டத்தான்.
'சோடா"க்குடிச்சு, 'சோற்டீற்ஸ்" திண்டு
படம்தொடங்கிட அவர் படுத்தே உறங்கி,
வெளியில வந்து விளாசித்திரிவினம்.
அதுகளவிடுங்கோ அறுதல் பழசுகள்.
 
***
 
பண்டிதர் முடிக்க பழையபடி தன்
பொக்கைவாயால் பொச்சங் கொட்டி,
சரிசரி பொழுதும் சாஞ்சே போச்சுது,
கதைச்சால் விடிய விடியக்கதைக்கலாம்.
முடிவாய்ச் சொல்லும் முடிவுதான் என்ன?
பொன்னம்மாவும் பொதுவாய்க் கேட்க,
 
***
 
வீட்டில் பிள்ளைகள் வெளியூர் போனதால்,
வாட்டும் மனத்தால் வருந்தும் முருகர்,
நீட்டி முழக்கி நெடுமூச்சுடனே,
வேட்டியை உதறி வெளிக்கிட்டபடி,
குஞ்சு குருமன் எல்லாம் இப்ப
இஞ்ச இல்லை. எல்லாம் வெளியில.
புதுப்படம் வந்தால் பொழுதினிப் போகும்.
அதுகளும் வந்து ஆர்வமாய்ப் பாக்கும்.
ஒன்றாய்க் கூடி ஒழுங்காய் இருக்கலாம்.
நல்லது நடந்தா நல்லது தானே.
எங்கட கையில ஏதுமே இல்லை.
ஓரிருநாளில உண்மைகள் தெரியும்.
வந்தாப்படத்தை வடிவாய்ப் பாப்பம்.
வாராவிட்டால் வழமையைப் போல
திண்ணையிற் கூடித் திட்டுவம் அதிபரை
என்றே சொல்ல எல்லாப் பழசும், 
ஓம்ஓம் என்று ஒப்பியபடியே 
திண்ணையை விட்டுத் திடுக்கென எழுந்தன.
பண்ணாகத்துப் பண்டாரங்கள் 
வாய்மடம் கட்டி வழமையைப் போல
போய்ச் சேர்ந்தனராம் புதுப்படம் வருமே?
 
*****
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.