பேட்டி பகுதி 2

பேட்டி பகுதி 2
மற்றவை 03 Jul 2026

கேள்வி            :-          குறைநினைக்கமாட்டீர்களேயானால் மற்றொன்று…..! சிலர் உங்களைச் சண்டைக்காரன் என்று சொல்கிறார்களே?

பதில்   :-          அவர்கள் சொல்வதிலும் பிழையில்லை என்றே நினைக்கிறேன். தமிழறிஞர்கள் எல்லோருக்கும் “ஆமாம்” போட்டுத்தான் மதிப்பிழந்து போனார்கள். பிழையான விட்டுக்கொடுப்புக்களின்போது நான் என்னை மட்டுமல்ல தமிழையும் சேர்த்துத் தாழ்த்துவதாய்க் கருதுகிறேன்.

                                அதனால்த்தான் சிலருடன் சண்டைகள் செய்யவேண்டியிருக்கிறது. டாக்டர், எஞ்சினியர், புறொக்டர் என்று எவரும், மற்றவரை எதிர்த்து வாதிட்டால் உலகம் அதனை ஒப்புகிறது. தமிழ் படித்தவர்கள் மட்டும் எதிர்த்துப் பேசக்கூடாது என்று பலரும் நினைக்கிறார்கள்.

                                மற்றவர்களைப் பொய்யாய்ப் புகழ்வதும், தம்மைவிட வலியவர்களை வழிமொழிவதும் தமிழ்ப்புலவர்களது வழக்கமாகிவிட்டது. அதனையே நானும் செய்யவேண்டும் என, சிலர் எதிர்பார்க்கிறார்கள். அங்ஙனம் செய்யாது உண்மைக்காக நான் போராடுகிறபொழுது எனக்குச் சண்டைக்காரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படுவதில்லை.

                                'மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ உன்னை அறிந்தோ யாம் தமிழை ஓதினோம்" என்று சோழச்சக்கரவர்த்தியையே எதிர்த்த கம்பனும் ஒரு சண்டைக்காரன் தான். அதனால்த்தான் அவனை நான் ரசிக்கின்றேன்.

                                சாகும்வரையிலும் என் போக்கு இப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அறம் உரைத்த வள்ளுவர் கூட சில பகைகளை விலை கொடுத்தேனும் வாங்க வேண்டும் என்கிறார் .

                                'கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்து இருந்து

                                 மாணாத செய்வான் பகை"    

                                உயர்ந்தோரின் வழிப்படுத்தலிலேயே நான் நடக்கிறேன் என்பதற்கு மேற்சொன்னவை சான்றுகள்.

கேள்வி            :-          நீங்கள் வெளியிட்ட 'உன்னைச்சரணடைந்தேன்" நூலில் கம்பன் கழகத்தோடு தொடர்புபட்ட பலரையும் குற்றம் சாட்டியிருந்தீர்கள். அது பற்றி சர்ச்சைகள் கிளம்பின. உங்கள் எழுத்தினை, பகை தீர்க்கும் கருவியாய்ப் பயன்படுத்துவது சரியா?

பதில்   :-          எவரையும் குற்றம் சாட்டுவதோ, நோகச் செய்வதோ என் நோக்கம் அல்ல. அதை அந்நூலின் முன்னுரையிலேயே நான் சொல்லியிருக்கிறேன். கம்பன்கழகத்தைத் தொடங்கிய நாள் முதல், யாழ்ப்பாணத்தைவிட்டு நாங்கள் புறப்பட்டது வரையிலான விபரங்களையே அந்நூலில் எழுதியிருக்கிறேன்.

                                காலத்தால் அழியாது நிலைக்கச் செய்வதற்காய், கழக வரலாற்றை நான் பதிவு செய்ய முயலவில்லை. அது என் நோக்கமல்ல. காலம் தான் வரலாறுகளைப் பதிவு செய்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். பின் ஏன் இந்த நூல் முயற்சி? என்று கேட்பீர்கள்.

                                கழகத்தைத் தொடங்கிய நாள் முதல், இன்று வரை முழுமையாய் அதனோடு தொடர்புபட்டு இருப்பவன் நான் மட்டுமே. அதனால் கழகம் பற்றிய விபரங்கள் ஆதி முதல் எனக்குத்தான் முழுமையாய்த் தெரியும்.

                                இன்று பலர் என்முன்னாலேயே, கழகத்திற்கு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்றும், நாங்கள் தான் கழகத்தை வளர்த்தோம் என்றும் பொய்யாக உரைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

                                நான் இருக்கும்போதே நிலைமை இதுவானால், நான் இல்லாத காலத்தில் இன்னும் என்னென்ன சொல்வார்களோ? என்று அச்சம் தோன்றியதாலேயே, கழகம் வளர்ந்த கதையைச் சரியாய். முழுமையாய்ப் பதிவு செய்ய முனைந்தேன்.

                                குற்றம் சொல்கிறவர்களிடம் ஒரு கேள்வி! அந்நூலில் நான் எழுதியவற்றில் ஏதேனும் பொய் இருக்கிறதா? இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்க நான் தயாராயிருக்கிறேன்.

கேள்வி:                       தடைகள் தாண்டி வளர்ந்த பிறகு மற்றவர்கள் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டுமா?

பதில்               இன்றைய நிலையில் அப்பிழைகள் சின்னவிடயங்கள். அன்றோ, அந்தச் சின்ன விடயங்கள் எங்கள் பயணத்தை மலைகளாய்த் தடுத்து நின்றன. அவற்றைத் தாண்ட நாம் பட்ட வலியும் வேதனையும் எங்களுக்குத்தான் தெரியும். அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதுதான் என் முதல் நோக்கம்.

                                அதுமட்டுமல்லாமல் எங்களைப்போல இலட்சியப் பயணத்தைத் தொடங்குகிற இளையோருக்கு, எங்கள் அனுபவங்கள் பாடமாக இருக்கும் என்பதும் அந்நூல் எழுதப்பட்ட காரணங்களுள் ஒன்றாயிற்று.

                                சமூகம், கம்பன்கழகத்தை மேடைகளில்த்தான் சந்திக்கிறது. அம்மேடைகளில் இயங்கி பாராட்டுப் பெறுவோரையே, கம்பன் கழகத்தை வளர்ப்பவர்களாய்ப் பலரும் கற்பனை பண்ணிக்கொள்கிறார்கள்.

                                மேடைகளில் முகம் காட்டிப் பாராட்டுப் பெற்று, கழகப் பிரதிநிதிகளாய் தம்மை அடையாளப்படுத்திவிட்டு, அவ் அங்கீகாரத்தைத் தம் சொந்த வாழ்விற்காகப் பயன்படுத்த சிலர் நினைத்தனர். வேறு சிலர் அப்படி வளர்ந்துவிட்டு, எம்மை வீழ்த்தவும் நினைத்தார்கள். மேடைகளில் முகமே காட்டாமல், கழகத்திற்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.

                                இந்நூலின் மூலம், கம்பன்கழகத்தை யார் வளர்த்தார்கள்? யார் பயன்படுத்தினார்கள்? யார் எதிர்த்தார்கள்? என்ற செய்திகளை வருங்காலத்தவருக்கு உரைக்க முற்பட்டு இருக்கிறேன். எனது  இந்நூல், கழகத்தின் உண்மைத் தரிசனத்தை உலகிற்கு உணர்த்தும் முயற்சியே. வேறொன்றும் இல்லை.

கேள்வி            :-          அண்மைக்காலமாக அரசியல் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். இலக்கியவாதிக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை? என்று பலரும் விமர்சிக்கிறார்களே அதுபற்றி …..?

பதில்   :-          இப்படியான விமர்சனங்களைக் கேட்கும் போது கடுங்கோபம் வருகிறது. எல்லாத் துறை சார்ந்தவர்களும் அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். இலக்கியவாதிகள் மட்டும் அது பற்றிப் பேசக்கூடாதா என்ன?

                                இது என்ன முட்டாள்த்தனமான பேச்சு. சமூகத்தைக் கவனித்து, சமூகத்தைத் திருத்தி, சமூகத்தை இலட்சியம் நோக்கிச் செலுத்துவதே இலக்கியவாதிகளின் வேலை. அவர்கள் அரசியல் பேசாமல் வேறு யார் அரசியல் பேசுவதாம்?

                                தமிழறிஞர்களுக்கு உலகம் தெரியாது என்னும் திமிர்த்தனத்தின் வெளிப்பாடே மேற்சொன்ன விமர்சனத்தின் அடிப்படை. சங்ககாலத்திலிருந்து தமிழ்ப்புலவர்கள் அரசியலில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது.

                                மூவேந்தர்களை ஒன்றுபடுத்திய ஒளவை, சோழனை எதிர்த்த கம்பன், பாண்டியனை மாற்றுச் சமயத்திலிருந்து மீட்ட சம்பந்தர், சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பாரதி, ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிதர் க.பொ.ரத்தினம், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசியானந்தன், கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன்  என அன்று தொட்டு இன்றுவரை அரசியலை நெறிப்படுத்த முயன்ற இலக்கியவாதிகளை வரிசைப்படுத்தலாம்.

                                வேறுசிலர், அரசியல் ஒரு சாக்கடை, அதற்குள் நீங்கள் ஏன் போகிறீர்கள்? என்று என்னை உயர்வாய்ப் பேசி மகிழ்வித்து மேற்சொன்ன அதே விமர்சனத்தை வேறுவிதமாய்ச் சொல்கிறார்கள்.

                                அரசியல் கலப்பில்லாத சமூகத்தின் கூறுகள் ஏதேனும் உளதா? என அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். அரசியல், சாக்கடை என்றால் நாமெல்லாம் அதனுள் வாழும் புழுக்களாகிவிடுவோம் அல்லவா?

                                புழுவாக இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. அவர்கள் சொல்லுவது போல அரசியல் சாக்கடையாகவே இருந்தாலும், ஓர் இலக்கியவாதியாக, இலக்கியம் செய்வதைவிட அந்த அரசியல்ச் சாக்கடையை சுத்தம் செய்ய முயல்வதே எனது முதல் வேலையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

கேள்வி            :-          யாழில் இருந்தபோது மட்டும், நீங்கள் அதிக அரசியல் விமர்சனங்கள் செய்யவில்லையே?

(கழகத்தின் அரசியல் தொடர்புகள் அடுத்தவாரத்தில்)

 

 

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.