பேர் புகழைச் சிறிதளவும் மனத்தில் நாடாப் பெருந்துறவி ! அப்துல் கலாம்
கவிதை முற்றம் 05 Aug 2015
******************************************
அப்துல் கலாம் அஞ்சலிக் கவிதை
******************************************
அப்துல் கலாம் அஞ்சலிக் கவிதை
******************************************
உலகத்தார் வியந்திடவே ஓங்கும் நல்ல
உயர் புகழைத் தனதாக்கி ஓய்வே இன்றி
பலகற்றும் அடக்கத்தால் பாரில் நல்ல
பண்பாளன் இவன் என்றே பலரும் சொல்ல
நிலமுற்றும் உயரவென நீதி கற்று
நிமிர்ந்திட்ட நெஞ்சோடு நேர்மை செய்து
அளவற்ற கனவுகளால் அவனி ஓங்க
அன்றாடம் முயன்றவனும் கனவாய்ப் போனான்.
ஏழ்மை அதன் வயிற்றிருந்து எழுந்து வந்து
எல்லோரும் போற்றுகிற நபிகள் தன்னின்
ஆழமிகு கொள்கையினை உளத்திற் கொண்டு
அற்புதமாய்த் தன் வாழ்வை அமைத்துக் கொண்டோன்.
தாழுகிற மதப்பூசல் எதுவும் இன்றி
தனையொத்து உயிரெல்லாம் தழுவி நின்ற
நீள் புகழின் சிகரமென நின்ற வேந்தன்
நிலம் விட்டு விண் வளர்க்க நிமிர்ந்து சென்றான்.
பாரதிர அணுகுண்டை வெடிக்கச் செய்து
பலர் மூக்கில் விரல் வைத்துப் பதைத்துப் போக
பாரதத்தை வல்லரசாய் நிமிரச் செய்து
பலர் புகழப் பெரும் பெருமை வாங்கித் தந்தோன்.
பேர் புகழைச் சிறிதளவும் மனத்தில் நாடா
பெருந்துறவி போல் வாழ்வை அமைத்துக்கொண்டோன்.
ஆர் இவர்க்கு நிகராவர் என்றே இந்த
அகிலமெலாம் வியந்திடவே வாழ்ந்தோன் போனான்.
வாழ்வுயரக் கனவுகளைக் கண்டே நீங்கள்
வளமுறவே வேண்டுமென இளையோர் தம்மை
நாள் முழுதும் துடிப்போடு இருக்கச் செய்தோன்
நல்ல பல கொள்கைகளை அவர்தம் நெஞ்சில்
காலமெலாம் விதைப்பதற்காய் கனிந்து நாளும்
கால் நோக நடந்தவரைத் தேடிச் சென்று
நீள் புகழை அவர்க்காக்கி நிமிர்ந்து நின்ற
நெஞ்சத்தோன் நிலம் விட்டு விண்ணைச் சேர்ந்தான்.
தேடி எவர் வீட்டிற்கும் செல்லா நின்றும்
தேசத்தின் முதல் மனிதர் ஆன நல்லோன்
ஓடி வந்த பதவியையும் உவப்பேயின்றி
ஒரு கடமை என நினைந்து செய்த வேந்தன்
நீடு புகழ் பதவிகளை நினைந்து நாடா
நெஞ்சத்தன் நினைவெல்லாம் அன்பே ஆகி
வாடுகிற பயிர்களுக்காய் வாடி நின்ற
வற்றாத மெஞ்ஞானி வானம் சேர்ந்தான்.
ஏவுகணை பல செய்து எவர்க்கும் இந்த
எழில் தேசம் ஈடின்றி நிற்கும் என்று
தாவுகிற விண்கலன்கள் பலவும் ஏவி
தன்னறிவால் பெரும் புகழைத் தாங்கி நின்றோன்.
நோவு செய்யும் எதிரிகளை அஞ்சச் செய்து
நுவல்கின்ற வார்த்தையிலே அன்பைச் செய்து
சாவுதனைப் பொய்யாக்கி சகத்தில் என்றும்
சரித்திரமாய் வாழ்கின்ற சக்தி பெற்றான்.
விஞ்ஞானச் சிகரத்தில் ஏறி நின்று
விளங்குகிற வள்ளுவனைக் கம்பன் தன்னை
அஞ்ஞான இருள் அகற்ற ஒளியை நல்கும்
ஆதவனாய் உரைத்திட்ட அறிவில் மிக்கோன்.
எஞ்ஞான்றும் தமிழதனை உளத்தில் கொண்டு
எப்போதும் அதன் பெருமை சொல்லி வந்தோன்.
தன் ஞானக்கண் அதனால் உண்மை தேடித்
தத்துவங்கள் உள்வாங்கி தனித்து வாழ்ந்தோன்.
அக்கினியின் சிறகதனால் அவன்தன் வாழ்க்கை
அவனிக்கு எடுத்தியம்பி ஆன்றோர் மெச்ச
தக்க பெரும் நூல் செய்து தந்தே இந்த
தரணியதன் மைந்தர்களை நிமிரச்செய்தான்.
எக்கணமும் உயர்வன்றித் தாழ்வே எண்ணா
இதயத்தால் இத்தரணி முழுதும் வாழ
நிக்கையிலும் நடக்கையிலும் நினைந்து நின்ற
நேர்மையனாம் 'கலாம்" எங்கள் நெஞ்சில் வாழ்வான்.
*****