முதுசம் - ச.முகுந்தன்

முதுசம்   - ச.முகுந்தன்
 
காரை பெயர்ந்தும்
கம்பீரம் குறையாத ஓர்வீடு,
முப்பாட்டன் வியர்வையிலே சுவறி
வேய்ந்த பெருங்கூரை
மாரியம்புகள் தைத்து
மரத்த அதன் மார்பில்
வீரவடுக்கள்!!


கம்பன் பவணந்தி
கச்சியப்பரென்று பலர்
வந்தமர்ந்து சென்ற
திண்ணை.....
கடந்தால் திருமாடம்
விட்டத்தில்
அன்ன ஊஞ்சல் என்றே
அற்றைப் பழம்பெருமை
அறிவித்து நிற்கின்ற
சொத்தே உனக்காஇச்
சோதனைகள்!!

பாட்டி இடித்த பாக்குரல்
என்பாட்டன்
பூட்டி உழுத பூண்கலப்பை
நெற்சொரியும்
பத்தாயத் தோடெல்லாம்
'பழசாக' இற்றைவரை
மூச்சைப் பிடித்தபடி
முந்தைப் பழம்பெருமை
வீச்சைப் பறைசாற்றும் வீடே
உன்முகமும்
நாகரிகச் சாணவீச்சிற்குள்
சிக்கியதா?!
                       ✦✦✦
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.