முன்னாள் வழிப்போக்கனின் உடன்போக்கு - ஸ்ரீ. பிரசாந்தன்
கவிதை முற்றம் 05 May 2019
வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம்.
போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில்,
மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே,
நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ,
பாழாகிப் போனவர்கள் பாவம் புரிந்தார்கள்!
மற்றை இனத்தை மனமதனில் பகை கொண்டு,
சுற்றும் பருந்தாய் சுட்டொழிக்க நினைக்கின்ற,
வெற்று மனிதர்களின் வீறிங்கே வளர்கிறது.
எண்ணப் பெருந்துன்பம் இதிலேதான் இருக்கிறது.
மொழியால் சமயத்தால் மூண்டு எழும் பகைதனக்கு,
அழிவென்னும் நெய் வார்த்து அதை வளர்க்கப் பார்க்கின்றார்.
ஓரிருவர் செய்யும் ஒப்பற்ற பிழைகளுக்கு,
வேரதனில் பகைகொண்டு வீழ்த்த நினைப்பதுவா?
நேற்றுவரை எங்கள் நெஞ்சத்தமர்ந்திருந்த,
மாற்றமிலா அன்பர்தமை மதிகெட்டுப் பகையாமல்,
ஊற்றமுடன் அவர்தாமும் உயர்ந்திடவே வழிசமைப்போம்!
நேற்றிருந்த பகையெல்லாம் நெஞ்சில் கணக்கிட்டு,
கூற்றுவனை இம்மண்ணில் கொணரும் வழி அடைப்போம்!
அன்பைக் கணக்கிட்டு அறம் ஆற்றும் நேரமிது!
துன்பைக் கணக்கிட்டு துயர் விளைக்க முனையாதீர்!
கூற்றத்தை இம்மண்ணில் கொணர நினைக்கின்ற,
வேற்றார்கள் செய்யும் வினை நினைந்து நாமெல்லாம்,
தேற்றமடைவோம்! தெளிவோடு கைகோர்ப்போம்!
நம் வீட்டின் உள்ளேயும் நாளை ஒருபிள்ளை,
தன்பாட்டில் தறிகெட்டு தலைதெறிக்க நடந்திடலாம்.
ஓரிருவர் செய்யும் உதவாத பிழைக்காக,
வேரோடு ஓர் இனத்தை வீழ்த்த நினைத்திடுதல்,
மாறாத பழிசேர்க்கும், மறந்தேதான் போகாதீர்!
ஏற்கெனவே தமிழினத்தை எல்லோரும் பழி சொல்லி,
நாட் கணக்கில் கொன்றொழித்து நடந்தவைகள் மறந்திடுமா?
நேற்றெங்கள் துயர்க்கணக்கு நிகழ்காலம் அவர் கணக்கு,
வேற்றுவராய் எண்ணாமல் விரைந்தவரின் கைபிடித்து,
'ஆற்றுதற்கு நாம் உள்ளோம் அயராதீர்' என்றுரைத்து
தேற்றிடுதல் செய்வோம்! திகழ் தேசம் தனைக் காப்போம்!