வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 6 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 24 Feb 2017
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
உங்கள் முகத்தில் சென்ற வாரக்களைப்பு இன்னும் தெரிகிறது.வர்ண, ஆச்சிரமங்களை சென்ற அத்தியாயத்தில் விளங்கப்போய்,
ரொம்பத்தான் களைத்துப்போய் விட்டீர்களாக்கும்.
சென்ற அத்தியாயத்தைப் படித்துவிட்டு,
வர்ணாஆஆ ....... “சிரமம்” என்கிறான் என் நக்கல் நண்பன்.
சிரமப்பட்டாலும் இந்த விஷயத்தை நீங்கள் விளங்கிக்கொண்டதில்,
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தயைகூர்ந்து சென்றவார விடயத்தை ஒருதரம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
சமூக அமைப்பின் நான்கு பிரிவுகளை வர்ணம் என்றும்,
தனிமனிதவாழ்வின் நான்கு பிரிவுகளை ஆச்சிரமம் என்றும்,
நம் பெரியோர் வகுத்த விபரங்களைச் சொல்லியிருந்தேன்.
வர்ணம், ஆச்சிரமம் என்பவற்றோடு,
தர்மம் என்ற சொல் இணைக்கப்பட்டது ஏன்?
இந்த விடயத்தை அடுத்த அத்தியாயத்தில் விளக்குவதாய்ச் சொல்லி,
விடைபெற்றது ஞாபகம் இருக்கிறதா?
நல்லது!
இனி இந்த அத்தியாயத்திற்குள் நுழையலாம்.
♦ ♦ ♦
தனிமனிதவாழ்வுப் பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் வகுத்துக்கொண்டுதான்,
சமூகத்திற்கான அறக்கட்டுப்பாடுகளைச் சொல்லமுடியும் என்றும் சொன்னேன் அல்லவா?
அங்ஙனம் அற வகுப்புக்காய், தனிமனிதவாழ்வையும், சமூகத்தையும்,
பிரிக்கவேண்டி வந்ததன் தேவை பற்றி இவ்விடத்தில்,
சற்று விளக்கிச் சொல்கிறேன்.
♦ ♦ ♦
கற்கும் மாணவன் ஒருவன் புலன் ஒடுக்கி வாழ்தல் அவசியம்.
மனக்கட்டுப்பாடு சிதையுமேல் கல்வி புத்தியில் பதியாது போவது இயற்கை.
எனவே, ‘புலன் ஒடுக்கத்தைச் சிதைக்கின்ற பெண் இன்பத்தை விலக்குக!’ என,
பிரம்மச்சாரிக்கு உரைத்தல் அறமாயிற்று.
ஆனால் மாணவனுக்கான இந்நன்மை நோக்கிய அறத்தை,
ஒட்டுமொத்த சமூகத்திற்குமாய்ப் பொதுப்பட உரைத்தல் முடியாது.
அங்ஙனம் உரைத்தால் தனிமனிதவாழ்வின் ஒரு பிரிவான இல்லறம்,
முற்றாய்ச் சிதைந்துபோகும்.
இதேபோல இல்லற நிலைக்கான பெண்ணின்பத்தை,
அனைவர்க்கும் உரியதாய்ப் பொதுப்பட உரைத்தால்,
பிரமச்சரியம், துறவறம் போன்ற தனிவாழ்வு நிலைகள் சிதைவுறும்.
இதனாலேயே தனிமனிதவாழ்வு நிலைகளை வேறுபடப் பிரித்து,
அறம் உரைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
♦ ♦ ♦
தனிமனித வாழ்வுக்கூறுகளான ஆச்சிரமப் பிரிவுகளில் அமைந்தாற் போலவே,
சமூகவாழ்வின் கூறுகளான வர்ணப்பிரிவுகளிலும்,
அறத்தை அனைவர்க்குமாய் ஒருமித்து உரைப்பது ஆகாதாயிற்று.
அதுபற்றி சற்று விரிவாய்ச் சொல்லுகிறேன்.
♦ ♦ ♦
தீயவர்களை அடக்கி நல்லவர்களைக் காக்கும் கடமை கொண்ட சத்திரியனுக்கு,
மற்றவர்களைத் தண்டிக்கும் உரிமை வேண்டுவதாயிற்று.
அதனால் அவ்வுரிமை சத்திரியனுக்குரிய அறமாக்கப்பட்டது.
சமூக அறங்காப்பதற்காக ஒருவனைக் கொலையால் தண்டிக்கும் உரிமையைக்கூட,
நம் சான்றோர் அறத்தின் பெயரால் சத்திரியனுக்கு வழங்கினர்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர் என்று வள்ளுவரும் இக்கருத்தை அனுவதிக்கிறார்.
இக்குறளுக்கு, கொடியாரை வேந்து கொலையால் ஒறுத்தல் என,
சொற்களை முன்பின்னாய்க் கொண்டு கூட்டிப் பொருளுரைப்பார் பரிமேலழகர்.
ஒருவரைத் தண்டிக்கும் இச்சத்திரிய அறத்தை,
சமூகப்பிரிவுகளை வகுக்காமல் பொதுப்பட உரைத்தால்,
தண்டித்தல் எனும் உரிமையை எல்லோரும் கையிலெடுக்க,
சமூகம் சண்டைக் களமாகும்.
எனவேதான் சத்திரியரைத் தனித்துப் பிரித்து அறம் உரைத்தல் அவசியமாயிற்று
♦ ♦ ♦
இதே போலத்தான் அந்தணர்க்கான அறங்களிலும் சில விதிவிலக்குகள் வகுக்கப்பட்டன.
அறிவுத்துறையைப் பொறுப்பேற்ற அந்தணருக்கு,
மற்றைச் சமூகப் பிரிவுகளையும் வளர்க்கவேண்டிய பொறுப்பு இருந்ததால்,
அவர்கள் தமது வாழ்வை கல்விக்கென முழுநேரமாய் ஒதுக்கவேண்டியிருந்தது.
அதனால் அவர்கள் தமது உடற்செயற்பாடுகளைக் குறைத்து,
புத்திச் செயற்பாடுகளை அதிகரிக்க வகைசெய்து,
சமூகத்தின் மற்றைய பிரிவினரிடம் தானம் முதலியனவற்றைப் பெறும் உரிமையை,
அந்தணர்களுக்கான அறமாய் ஓதினர் நம் சான்றோர்.
அக்காலத்தில் அந்தணர்க்கான பிரம்மச்சரிய வயது நாற்பத்தெட்டு என,
வரையறுக்கப்பட்டிருந்ததாய் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் உரைக்கிறார்.
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
(அறுநான்கு-இருபத்தினான்கு, இரட்டி-இருமடங்கு)
அக்காலத்தில் அவ் வயது வரை திருமண வாழ்வின்றி அந்தணர்கள் வாழ்ந்தனராம்.
மற்றை வர்ணத்தாரிடம் தானம் பெறும் இவ் அந்தண அறத்தை,
உற்பத்தியாளனாகிய சூத்திரனுக்கும் ஆக்கினால்,
அவன் சோம்பலுற உற்பத்திகள் பெருகாமல் சமூகம் சிதைவுறும்.
♦ ♦ ♦
இவற்றைக் கருத்தில் கொண்டே,
தனிமனித வாழ்வுப் பிரிவுகளுக்கேற்ப அறத்தை வேறுபடுத்தி உரைத்தாற் போலவே,
சமூகத்திற்கான அறம் உரைப்பதற்கு முன்னாலும்,
சமூகவாழ்க்கையைப் பிரிவுபடுத்தி அப்பிரிவுகளுக்கேற்ப,
அறங்களை வேறுபடுத்திச் சொல்லும் அவசியம் ஏற்பட்டது.
கூட்டுவாழ்வின் வெற்றிக்காய், கட்டுப்பாடுகளை விதித்து,
அனைவருக்கும் அறமுரைக்கத் தலைப்படுகையில்,
தனிவாழ்வையும் சமூகவாழ்வையும் பிரிவுபடுத்தினால் மட்டுமே,
அறமுரைத்தல் சாத்தியப்படும் எனும் உண்மையை உணர்ந்தே,
வர்ண, ஆச்சிரமப் பிரிவுகளை நம் ஆன்றோர் ஏற்படுத்தினர்.
♦ ♦ ♦
இவ்விடத்தில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு.
ஏதோ, அக்காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட சட்டம் இது என நீங்கள் எண்ணுவீர்கள்.
ஆனால் இன்றும் இப்பிரிவுகளை உட்படுத்தியே,
நீதி, சட்டம் என்பவை வகுக்கப்படுகின்றன எனும் உண்மையை,
சற்று ஆழ்ந்து சிந்தித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
♦ ♦ ♦
கட்டுரையைப் படித்துக் கருத்துக்களைப் பதிவு செய்யும் பலர்,
வர்ணாச்சிரமதர்மம்தான் சமூகத்தைப் பிரித்தது எனும்,
தம் புத்தியில் ஊறியதான எண்ணத்தை அசையாத அடிப்படையாய்க் கொண்டு,
சேணம் கட்டிய குதிரைகள் போல,
வர்ணாச்சிரமதர்மம்தான் மனிதர்களைப் பிரித்துவிட்டது என்று ஓலமிட்டு வருகிறார்கள்.
தர்க்கரீதியான எனது கருத்துகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல்,
கண்மூடித்தனமாய் திரும்பத்திரும்ப ஒன்றையே உரைத்து நிற்கும் அவர்களைக் காண,
இரக்கம்தான் வருகிறது.
திரும்பத்திரும்ப வர்ணாச்சிரமதர்மத்தைக் குற்றம் சாட்டியும்,
மாக்ஸ், அம்பேத்கார், பெரியார் என்பவர்களை உச்சியில் வைத்து உவந்தும்,
அவர்கள் எழுதும் எழுத்துக்களைக் காண நகைப்புத்தான் வருகிறது.
அத்தகையோரின் புத்தியில் உரைக்க இதுவரை எழுதிய விடயங்களின் அடிப்படையில்,
சில கேள்விகளை முன் வைக்கிறேன்.
முடிந்தால் அக்கேள்விகளுக்குத் தர்க்கரீதியாய் அப்புலம்பல்காரர்கள் பதில் சொல்லிப்பார்க்கட்டும்.
♦ ♦ ♦
கேள்வி 1
நீங்கள் சொல்லும் உயர்ந்ததான இன்றைய நீதியில், வயதுப்பிரிவிற்கேற்பவும் சமூக அந்தஸ்திற்கேற்பவும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளனவா? இல்லையா?
கேள்வி 2
முன்னர் இருந்த ஜாதி பேதத்தை விட பெரியாரின் வழிவந்ததாய்ச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளர் காலத்தில் ஜாதிபேதம் பன்மடங்கு வளர்ந்துள்ளதா? இல்லையா?
கேள்வி 3
இன்று கொலைவெறியாய்ப் பரவிக்கிடக்கும் ஜாதி பேதங்களுக்குத் திராவிடக்கழகங்களை ஆரம்பித்து வைத்த பெரியார் மேல் பழி சொல்லுதல் தகுமா?
கேள்வி 4
மனித சமத்துவம் பேசிய மாக்ஸைப் பின்பற்றி புரட்சிகள் விளைவித்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இன்று உலகளாவி உண்மை மனிதஉரிமைகளையும் சமத்துவத்தையும் நடுநிலையோடு பேணுகின்றனவா?
கேள்வி 5
அவ்வல்லரசுகள் சிறிய நாடுகளை தமது வல்லாதிக்கத்திற்குள் கொண்டுவந்து மேலான்மை செய்யும் குற்றத்தை மாக்ஸின் தத்துவத்தின் மீது ஏற்றலாமா?
கேள்வி 6
இன்றும் தொழிலாளிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் கல்வியாளர்களுக்குமிடையில் சமூக அந்தஸ்தில் பேதம் இருப்பது உண்மையா? இல்லையா?
கேள்வி 7
சமூக அந்தஸ்தில் உயர்நிலைக்குப் போனவர்கள் தகுதி இருக்கிறதோ இல்லையோ தமது வாரிசுகளை தாம் பெற்ற சமூக அந்தஸ்தில் நிலைக்கச் செய்ய முனைகிறார்களா? இல்லையா?
கேள்வி 8
கற்கும் காலம், வாழும் காலம், ஓயத்தொடங்கும் காலம், முற்றாய் ஓயும் காலம் எனும் தனிமனித வாழ்வுப்பிரிவுகளும் உற்பத்தியாளன், விநியோகஸ்தன், நிர்வாகி, கல்வியாளன் எனும் சமூகப்பிரிவுகளும் இல்லாத ஒரு தேசத்தைக் காட்ட முடியுமா?
கேள்வி 9
தனிமனித வாழ்விலும் சமூகவாழ்விலும் மேற்குறிப்பிட்ட நன்னான்கு பிரிவுகளுக்கு அப்பால் புதிய பிரிவுகள் ஏதேனும் எங்கேனும் இருக்கின்றனவா?
கேள்வி 10
இந்தியாவுக்கான புதிய சட்ட அமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் வகுத்த புதிய நீதி நெறியில் சமூகத்திற்குள் பிரிவுகள் செய்யாமல் நீதி உரைக்கப்பட்டுள்ளதா?
♦ ♦ ♦
இனி வர்ணாச்சிரம தர்மத்தைக் கண்டிக்க விரும்புவோர்,
தெம்பிருந்தால் என்னைத் திட்டுவதைவிட்டு மேற்கேள்விகளுக்கு,
நடுநிலையோடு தர்க்கரீதியான பதில் சொல்லிவிட்டுத் தாராளமாகத் திட்டட்டும்.
அங்ஙனம் செய்ய முடியாவிட்டால்,
வர்ணாச்சிரம தர்மத்தில்தான் தவறிருக்கிறது எனும் தமது வழமையான ஒப்பாரியை விட்டுவிட்டு,
சமூகத்தைப் பிரிவுபடுத்தாமல் அறம் உரைக்க முடியாது எனும் உண்மையை,
இறங்கிவந்து ஒத்துக் கொள்ளட்டும்.
எனக்கும் அவர்களுக்குமான பிரச்சினையில் தீர்ப்புரைக்கும் பொறுப்பை,
இனி உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
சரி வர்ணாச்சிரம தர்மம் பற்றிய எமது சிந்தனையை நாங்கள் தொடர்வோம்.
♦ ♦ ♦
பலபேர் கூடியுள்ள ஒரு சமூகத்திற்கு அறமுரைக்கையில்,
எவ்வெவ் அறம் எவ்வெவர்க்காகும்? என்ற குழப்பம் ஏற்படாதிருக்க,
வர்ண ஆச்சிரமப்பிரிவு பெரிதும் துணை செய்தது.
ஒரு குழுமத்தில் வாழும் தனியொருவனுக்காம் அறம்,
அவன் தனிவாழ்வு நிலை, சமூகவாழ்வு நிலை என்பவற்றின் இணைப்பால்,
தீர்மானிக்கப்பட்டது.
தனிவாழ்வு, சமூகவாழ்வு ஆகியவற்றின் சந்திப்புப் புள்ளியே,
ஒரு தனிமனித வாழ்வின் அறமாய் ஒதப்பட்டது.
♦ ♦ ♦
விஞ்ஞான ரீதியாக இதையே சொல்லிப் பார்க்கிறேன்.
(நான் ஒரு விஞ்ஞான மாணவன் என்பதை வேறு எப்படித்தான் சொல்வதாம்?)
உங்கள் விளக்கத்திற்காய் சிறிதாய் ஒரு வரைபடம் போட்டுப்பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது?
வாருங்கள் பார்த்துவிடுவோம்.
♦ ♦ ♦
ஒரு புள்ளிவரைபின் கிடைக்கோடாய்,
தனிமனிதவாழ்வுப் பிரிவுகளை அமைத்துக்கொள்வோம்.
அதன் நெடுங்கோடாய் சமூகவாழ்வுப்பிரிவுகளை அமைத்துக் கொள்வோம்.
ஒரு சமூக மனிதன், தனக்குரியதான அறத்தை அறியவிரும்பின்,
கிடைக்கோட்டில் தன் தனிவாழ்வு நிலையையும்,
நெடுங்கோட்டில் தன் சமூக நிலையையும் குறித்து,
பின்னர் இவ்விரு கோடுகளையும் நீட்டி குறித்த ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்து,
அக்கோடுகள் சந்திக்கும் புள்ளியை வைத்தே,
தனக்குரியதான தனிஅறத்தைத் தெளிவுற விளங்கமுடியும்.
♦ ♦ ♦
உதாரணத்திற்காய் சமூகநிலையில் சத்திரியனாகவும்,
தனிமனித நிலையில் வானப்பிரஸ்தனாகவும் இருக்கும் ஒருவனது,
அறநிலை என்ன என்பதை கீழ்க்கண்ட வரைபடத்தின் மூலம் இனம் காட்டலாம்.
குறிப்பிட்ட இம்மனிதன் சமூகநிலையில் சத்திரியனுக்கான அறங்களையும்,
தனிமனித வாழ்வு நிலையில் வானப்பிரஸ்தனுக்கான அறங்களையும் கடைப்பிடித்தல் வேண்டும்.
இதுவே அம்மனிதனது அறவரையறையாம்.
இவ் வர்ண, ஆச்சிரமப்பிரிவுகளை வைத்து,
அவரவர் தர்மம் தீர்மானிக்கப்பட்டதால்தான்,
வர்ணம்-ஆச்சிரமம் என்னும் சொற்களோடு தர்மம் எனும் பெயரும் இணைக்கப்பட்டது.
♦ ♦ ♦
இப்பொழுது எனக்கு ஒரு தேநீர் தேவைப்படுகிறது.
இந்த விஷயத்தை உங்களுக்கு தெளிவாய்ச் சொல்லவேண்டும் என்ற அக்கறையில்,
நான் இப்போ சற்றுக் களைத்துப்போய்விட்டேன்.
ஆனால் உங்களில் ஒருசிலபேரின் முகம் மலர்வது தெரிகிறது.
என்ன மெல்ல மெல்ல எனது பக்கம் சாயத் தொடங்குகிறீர்களாக்கும்.
அல்லது
இதற்கு எப்படி யாரைக் குற்றம் சொல்லி பதில் எழுதலாம் என்று யோசிக்கிறீர்களாக்கும்.
என்னவென்றாலும் செய்து தொலையுங்கள்.
நான் சொன்ன விஷயத்தை விளங்கினால் எனக்குத் திருப்திதான்.
நீங்கள் களைத்தீர்களோ இல்லையோ நான் களைத்துப் போய்விட்டேன்.
அதனால் மிகுதியை அடுத்தவாரத்தில் பார்ப்போம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Comments
Copyright ©
2024 - உகரம் - All rights reserved.