வாக்காளப் பெருமக்காள்! வணக்கம்.
கவிதை முற்றம் 08 Jul 2015
உங்களைப் பலநாளாய்ப்
பார்க்கேல்லை என்றுதான்
பாராளுமன்றைக் கலைத்தனம்.
வாக்கெடுத்து மன்றுக்கு
வந்ததன் பின்னால்,
உம்மை
நோக்க ஒரு நொடியில்லை.
நூறு அலுவல்கள் நமக்கு.
'குட்டி ராசா" என்று
குளிர்பதனக் கார்ப்
பெட்டிக்குள் ஏறிப்
பிரயாணம் தொடங்கினால்,
ஹோட்டலில் எத்தனை கூட்டங்கள்.
நான் மாட்டேன் என்று மறுக்க முடியாதே!
வீட்டில் உம்மை விரைந்து
குடியேற்றப்
போட்ட திட்டங்கள் 'பொலிஷ்" பண்ண
பல
நாட்டுக்கு நாடு நான் பறந்து
சுற்றுலாப் பாட்டுக்கள் படித்தேன்,
'ஃபமிலியொடு".
.....இப்படி உம்மை
நோக்க ஒரு நொடியில்லை,
நூறு அலுவல்கள் நமக்கு.
தலைநகரத்தில் 'மன்று" அமைத்ததே தவறு.
தப்பாமல் அங்கேயே
நிலைகொள்ள நேர்கிறது நெடுக.
அங்குமிங்கும்
அலைவதில் ஏதும் ஆகாது என்று
கொழும்பில்
விலை அதிகமான வீடுகள் வாங்கினேன்.
அதனாற்றான்
உமது உலைவுகள் எவையும்
உளம் புகவில்லை.
ஊர்ப் பள்ளம் எதுவும்
பார்வை படவில்லை.
என்றாலும் என்ன?
வாக்காளப் பெருமக்காள்! வணக்கம்.
உங்களைப் பலநாள் பின்
பாக்கலாம் என்றுதான்
பாராளுமன்றைக் கலைத்தனம்.
*****