அதிர்வுகள் 08 | "மிஸ்ரப் பிரபஞ்சம்"

அதிர்வுகள் 08 | "மிஸ்ரப் பிரபஞ்சம்"
 
 
உச்சி வெயில்,
ஒரு நாள் மதியப் பொழுது,
ஆண்டு நினைவில்லை.
வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
உச்சி வெயிலில் மனிதரில்லா வீதி, 
நிலையாமை உணர்த்தித் தனித்துக் கிடக்கிறது.
என் முன்னால் இரு குழந்தைகள்.
அவர்களின் வயது வெயிலை நிராகரிக்க,
நிழலில் நடக்குமாப் போல்,
தம்முள் சிரித்து விளையாடியபடி வெயிலில் நடை பயின்றனர்.
 

                 *****
 
வயது ஐந்திருக்குமோ?
என் மனம் ஆராய்ந்தது.
தோளில் தொங்கிய ‘நேர்சரி’ப் புத்தகப் பைகள், 
“நீ நினைப்பது சரிதான்” என்றன.
பின்னால் நான் வருவது அறியாமல்,
அவர்களின் விளையாட்டு நடை தொடர்ந்தது.
வீதியில் வேறு காட்சிகள் இல்லாத படியால், 
என் கவனம் முழுவதும் அவர்கள் மேலேயே.
                 *****
 
“இந்தா கடலை” ஒருத்தி நீட்டுகிறாள்.
‘உனக்கு ஒரு டொபி தரட்டே’ - இது மற்றவள்,
இருவழிப் பாதையாய் அன்பு.
வஞ்சனையும், பகையுமில்லா அவர்கள் அன்பால்,
வசீகரிக்கப்பட்டேன்.
குழந்தைகளாகவே இருந்து விட்டால்,
பகையற்ற உலகம் சாத்தியமோ?
என் மனத்துள் கேள்வி.
                 *****
 
அறிவு வளர வளரத்தான் தீய எண்ணங்களும் வளரும் போலும்.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்,
மண்ணில் பிறக்கையிலே”,
சினிமாக் கவிதை வரிகள் நெஞ்சில் நிழலாடின.
அங்ஙனமாயின்,  
நன்மை, தீமைகள் பிறப்பிலேயே வருவதாய்,
வள்ளுவர் சொன்னது பொய்யோ?
மீண்டும் என் மனத்துள் கேள்வி.
யதார்த்தம் வள்ளுவரோடு முரண்பட்டது.
குழம்பினேன்.
                 *****
 
“அங்க, ஒரு புளியங்கன்று. அது என்ர” 
திடீரென்று ஒரு குழந்தையின் குரல் ஓங்கி ஒலிக்க, 
என் எண்ணங்கள் சிதைந்தன.
அக்குழந்தையின் விழி காட்டிய திசையைப் பார்க்கிறேன்.
முதல் நாட்களில் பெய்த மழையால், 
நிலம் வெடித்துக் கிளம்பிய ஒரு பச்சைப் புளியங்கொட்டை, 
கோதவிழ்ந்து துளிர் விட்டு,
அடக்கு முறையைத் தாண்டி, தலை நிமிர்த்திய,
தமிழனைப் போல் நீண்டிருந்தது.
                 *****
 
நீலச் சட்டையணிந்த முதற் குழந்தை, 
தான் முதலில் கண்டதைத் தகுதியாக்கி,
அப்புளியங்கன்றில் உரிமை கொண்டாடினாள்.
எனக்குள் வியப்பு.
அக்குழந்தையின் வார்த்தைகளில், 
திடீரென மழலை மாறி ‘எனது’ எனும் மமகாரம்.
அதுவே அகங்காரமாகிக் குரலில் வெளிப்பட்டு,
பச்சைச் சட்டையணிந்த மறு குழந்தையை உசுப்பிற்று.
                 *****
 
முதற் குழந்தையின் உரிமைக் குரல்,
இரண்டாம் குழந்தைக்கு, 
உரிமை மீறலாய்த் தோன்ற,
அவள் வாடினாள்.
அக்குழந்தையின் முகத்தில் வெளிப்படையாய் வெறுப்பு.
எப்படி மற்றவளைத் தோற்கடிக்கலாம்? 
அவளது சிந்தனை, கண்களில் வெளிப்படத் தோன்றிற்று.
திடீரெனத் தோன்றிய முகப் பிரகாசம்,
அவள் ஏதோ முடிவெடுத்து விட்டாள் என்பதைத் தெரிவிக்க,
என்ன செய்யப் போகிறாள் என ஆவலாய்ப் பார்த்தேன்.
                 *****
 
“இல்ல அது என்ட” என்றபடி, 
அப்புளியங்கன்றை முதலிற் பறிக்கும் எண்ணத்துடன், 
பாய்ந்தோடத் தொடங்கியது பச்சை.
நீலத்தின் முகத்தில் குழப்பம்.
தன் பிரகடனம் மீறப்பட்ட வெறுப்பு. 
தன் பொருளை மற்றவள் பற்றி விடக் கூடாது எனும் வேகம்.
இவையெல்லாம் ஒன்று சேர,
அவளும் அப்புளியங்கன்றை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
யாருக்கும் சொந்தமில்லா அப்புளியங்கன்று,
யாருக்குச் சொந்தம்? எனும் கேள்வியெழ,
பகைக் காரணமாயிற்று.
                 *****
 
புளியங்கன்றை விட, 
அவரவர் ஆணவம் முதன்மை பெற்றது.
கிட்டத்தட்ட இருவரும் அப்புளியங்கன்றை அண்மித்த நிலை.
பச்சை சற்று முந்திவிட,
முதலில் கண்ட நீலம்,
அப்புளியங்கன்று,
தன் கை மீறி மற்றவளுக்குப் போய் விடுமோ? எனும் அச்சத்தில்,
வேகம் உந்தி ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து,
அக்கன்றைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்தது.
பச்சை, நீலம் இரண்டின் ஆணவப் போட்டியில்,
பலியாகி நசிந்து கிடந்தது புளியங்கன்று.
                 *****
 
தனக்குக் கிடைக்கா விடினும்,
எதிரிக்குக் கிடைக்கவில்லை எனும் பெருமிதம், 
நீலத்தின் முகத்தில்.
அவள் முகம் நிறைய வஞ்சனைச் சிரிப்பு.
முதலில் சென்றும்,
கடைசி நிமிடத்தில் தோற்றுப் போன கொந்தளிப்பு,
பச்சையின் முகத்தில்.
நிமிடத்தில் குழந்தைகள் பெரிவர்களாயினர்.
சில நிமிடங்களுக்கு முன்பு,
அன்பைத் தேக்கியிருந்த கண்கள் பகைக் கேணிகளாக,
வஞ்சமும் குரோதமும் குடிகொண்ட முகத்துடன்,
இரண்டும் பாம்புகளாய்ப் படமெடுத்தன.
என் மனத்துள் வள்ளுவர் சிரித்தார்.
அப்போது ....
                 *****
 
தோற்றவள் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம்,
அதிர்ச்சியடைந்தாற் போல் திடீரென அவள் முகபாவம் மாற்றினாள்.
மிகத் தேர்ந்த நடிப்பு.
புளியங்கன்றை மிதித்தவளை ஏங்கிப் பார்த்து,
“ஐயையோ புளியங்கண்டை மிதிச்சுப் போட்டீர், 
எக்கணம் உம்மட காலில, புளியமரம் முளைக்கப் போகுது பாரும்.”
தான் பயந்தாற் போல் வென்றவளைப் பயங் காட்டினாள்.
காரியத்தாற் தோற்றாலும், 
எதிரியை மனதளவில் வீழ்த்தி, வெற்றி காண நினைக்கும்,
அவள் உத்தி கண்டு அதிர்ந்தது என் உள்ளம்.
                 *****
 
இத்துணை சிறு வயதில், 
பிழை நோக்கி இத்தனை வீரியமா?
எதிரியை வீழ்த்தும் இந்நுட்பமான மனோ தத்துவத்தை,
அவள் எங்கு கற்றாள்?
கற்றுத் தந்தது யார்? 
திகைத்தேன்.
மீண்டும் மனத்துள் வள்ளுவர் சிரித்தார்.
                 *****
 
பச்சை, வார்த்தைகளால் மிரட்ட,
நீலம், உண்மையில் மிரண்டது.
அவள் கண்களில் பயமும் கண்ணீரும்.
சிதைந்து கிடந்த புளிங்கன்றையும்,
தன் காலையும் மாறி மாறிப் பார்த்தபடி, 
“உண்மையே?”
பதறியபடி பச்சையிடம் கேட்கிறாள்.
வினாடியில் வெற்றி மறந்து விம்முகிறாள்.
பெற்ற வெற்றியை,
எதிராளி அனுபவிக்காமல் செய்து விட்ட திருப்தி, 
பச்சையின் முகத்தில்,
திகைத்துப் போய் நிற்கிறேன் நான்.
                 *****
 
பிஞ்சுக் குழந்தைகள்,
நஞ்சுக் குழந்தைகளாய் நின்றன.
தம் ஆணவப் போட்டியின் முடிவில்,
காலில் புளியமரம் முளைத்து விடுமோ? எனும்,
பேதமையுடன் நின்றது ஒன்று.
காலில் புளியமரம் முளைக்கும் என மிரட்டும்,
வஞ்சனையுடன் நின்றது மற்றொன்று.
சற்று முன் சிற்றுண்டி பரிமாறிய அந்த அன்பு எங்கே?
வெற்றி நோக்கி,
மாறிமாறிக் காட்டப்பட்ட இந்தப் பகைமை எங்கே?
வினாடி மாற்றத்தில் இவ்வித்தியாசம்.
அன்பின் உச்சம் தொட்ட அதே குழந்தைகள்,
வஞ்சனையிலும் உச்சந் தொட்டன.
இரண்டும் அதே குழந்தைகளிடம்.
“இரு வேறு உலகத்து இயற்கை.”
பாடம் கற்றேன்.
                 *****
 
என்ன உங்கள் முகத்திற் குழப்பம்?
என்ன கதை இது?
தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு?
நீங்கள் குழம்புவது புரிகிறது.
இதனைக் கதை என்றும்,
நீலம், பச்சையென,
நான் குழந்தைகளைக் குறிப்பிட்டிருப்பதால்,
இக்கதையூடு,
குறிப்பால் நான் அரசியல் பேசுகிறேன் என்றும்,
நீங்கள் நினைத்தால் நான் அதற்குப் பொறுப்பாளியல்ல.
                 *****
 
நான் சொல்ல வந்த விஷயம் வேறு.
பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்கும் போது, 
பண்டிதர் ஒருவர்,
“நன்மை, தீமை கலந்தது இல்வுலகம்.
இக்கருத்தைக் குறிக்க,
வடமொழி, இவ்வுலகத்தை ‘மிஸ்ரப்பிரபஞ்சம்’ என்று சொல்லும்” 
என்று கற்பித்ததை,
அனுபவ பூர்வமாய் நான் உணர்ந்த விதம் சொல்லவே,
மேற்சொன்ன முயற்சி.
                 *****
 
தீமையற்ற நன்மையோ, 
நன்மையற்ற தீமையோ,
இவ்வுலகிலில்லை.
நல்லவர், தீயவர் என்பதெல்லாம்,
நன்மை, தீமையின் மிகுதி கருதியே.
நல்லவை மிகுந்தாரை நல்லவராய் இனங் காணும் நாம்,
அவரிடம் தீமையே இல்லையென்றும்,
தீயவை மிகுந்தாரை தீயவர் என்று இனங் காணும் நாம்,
அவரிடம் நன்மையே இல்லை என்றும்,
மயங்கித் தவறிழைக்கிறோம்.
“அவர் நல்லவர் ஒரு பிழையும் விடாதவர்” என
எம் அபிப்பிராயத்தை மற்றவர்களிடமும் சொல்லி,
மற்றவர்களையும் பிழையாய் வழிப்படுத்துகிறோம்.
சில வேளைகளில் குறித்த நபரிடமே, 
“நீங்கள் ஒரு பிழையும் இல்லாத நல்லவர்” எனச் சொல்லி, 
எங்கள் கருத்துக்காக,
அவரைப் பொய்யாய் நடிக்கச் செய்கிறோம்.
நன்மையே இல்லாத வில்லன்,
தீமையே இல்லாத கதாநாயகன் என மிகைசெய்து,
இன்றைய சினிமாக்காரர்கள் பலரும்,
தாமும் தவறு இழைத்து, 
எம்மையும் பிழையாய் வழிப்படுத்துகின்றனர்.
                 *****
 
பழைய இலக்கியப் புலவர்கள் இந்த விடயத்தில் கைகாரர்கள். 
தன் மனைவியின் துகில் பிடித்திழுத்து,
மேகலை அறுத்த நண்பன் கர்ணனிடம்,
“எடுக்கவோ? கோர்க்கவோ?” என்று பேசிய இடத்தில்
தீய துரியோதனன் தூய துரியோதனன் ஆகிறான். 
“அசுவத்தாமன் இறந்தானா?” என்ற துரோணரின் கேள்விக்கு,
வெற்றிக்காக, “ஆம்” எனப் பொய்யாய்த் தலையாட்டிய இடத்தில்,
தூய தர்மன் தீய தர்மனாகிறான்.
இவை மேற்சொன்ன உண்மையை உணர்த்தும்,
வில்லிபுத்தூராரின் படைப்புகள்.
இன்னும் சொல்லப் போனால் .....
“சரி சரி, பிரசங்கத்தை நிற்பாட்டும்,
ஒருமாதிரி கட்டுரைக்கும் தலைப்புக்கும் முடிச்சுப் போட்டுட்டீர்.
அது கிடக்கட்டும்.
இந்த உண்மையை உணர்ந்து நீர் என்னதான் சாதித்தீர்?
முதலில் அதைச் சொல்லும்.”
உங்கள் கேள்வி புரிகிறது.
அதைத்தான் ஐயா சொல்ல வருகிறேன்.
                 *****
 
என் முன்னைத் தவப் பயனால்,
சமயத் துறையில் சொற்பெருக்காற்றும் வாய்ப்பு, 
அடியேனுக்குக் கிடைத்தது.
“என்ன திடீரென ‘செந்தமிழ்’ “ என்று யோசிக்கிறீர் போல.
வேறு ஒன்றுமில்லை,
என் பெருமையைப் பண்டிதத் தமிழில் அடக்கத்தோடு 
சொல்லிப் பார்த்தேன்.
அது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். 
சரி வேண்டாம், சாதாரணமாகப் பேசுவோம்.
மேலே படியுங்கள்.
                 *****
 
அப்படிச் சமயப் பிரசங்கியாய் நான் இருந்ததால்,
பலருக்கும் என்மேல் ஒரு மதிப்பு.
பேச்சில் சொல்லும் அறத்தையெல்லாம்,
நான் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன் என்பதாய், 
பலருக்கும் ஓர் எண்ணம்.
அவர்களைத் திருப்திப்படுத்த, என்னை வருத்தி,
நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.
அது ஒரு தனிக்கதை. 
                 *****
 
“என்ன முறைக்கிறீர்கள்? உபகதை வேண்டாமா?”
பிரசங்கம் செய்து பழகிய பழக்கதோஷம் ஐயா, பழக்கதோஷம்.
என் இஷ்டத்திற்குச் சொல்ல என்றைக்குத்தான் விட்டீர்கள்?
சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
மற்றவர்களின் அந்த நம்பிக்கையால் வந்த புகழ், எனக்கிருந்தது.
இல்லாத இயல்புக்காய் பொய்யாய் வந்த புகழை,
நான் ஏற்கப் போய்,
அப்பொய்யை மறைக்க நான் பட்டபாடு இருக்கிறதே,
அது பெரிய கதை.
என்ன கதையென்றதும் திரும்பவும் முறைக்கிறீர்கள்.
நீங்கள் என்னதான் முதை;தாலும்,
இதைச் சொல்லாமல் விடமுடியாது.
                 *****
 
பதினைந்து வருடங்களின் முன் ஒரு நாள்.........
என் நண்பன் வீட்டில் கலியாணம்.
நாலாஞ் சடங்கில் மதிய விருந்து.
விருந்தில்,
வந்தவர்களுக்கெல்லாம் கோழிக்கறி வழங்கப்பட்டது.
சம்பந்தர் திருமணத்தில், 
வந்தவர்க்கெல்லாம் முத்தி வழங்கப்பட்டதாம்.
காலம் மாறிவிட்டது.
என் நண்பன் வீட்டில்,
வந்தவர்களால் வீட்டுக் கோழிகளுக்கு அன்று முத்தி.
தமக்கு நேர்ந்த அநியாயம் நினைந்து,
சட்டிக்குள் அவை கொதித்துக் கொண்டிருந்தன.
                 *****
 
என் உறவாய்ப் பழகிய வீடது.
சமயச் சொற்பொழிவாளனாயன்றி, 
என்னைச் சகோதரனாய்ப் பார்க்கும் குடும்பம்.
விருந்து தொடங்கிவிட்டது.
அதுநாள்வரை சோற்றைக் கொத்திய கோழிகள்,
வலுவிழந்த வயோதிபர் போல்,
இன்று, சோற்றின் மேலேயே வெந்து கிடந்தன.
“கறியைக் கொண்டு வாங்கோ”, 
கோழிக்காக ஒருவர் கூவினார்.
கொண்டு போக ஒருவரும் இல்லாத நிலை.
கோழிக் கறியைக் கொண்டு போய்,
அவர் இலையில் வைத்தேன்.
                 *****
 
திரும்பி உள்ளே வந்ததும்,
“இதென்ன வேலை, 
நீங்கள் போயோ கோழிக் கறி வைக்கிறது?”
என் சிஷ்யனாய்ச் சொல்லிக் கொண்ட, 
இன்னோர் சமயப் பிரசங்கி என்மேற் பாய்ந்தார்.
‘ஏனப்பா, வைத்தால் என்ன?’
“நீங்களும் கோழி தின்கிறவர் என்றல்லோ உலகம் 
நினைக்கும்.”
‘முந்தி நானும் தின்றனான் தான்.’
“இதென்ன விசர்க் கதை,
இப்பவும் தின்னுறதென்றா தின்னுங்கோ,
பிரசங்கம் பண்ணிற நீங்க,
அதை உலகத்துக்குத் தெரியாமலல்லோ செய்ய வேணும்.”
‘தெரியாமல் செய்தாப் பிழையில்லையே’
வெகுளியாய்க் கேட்டேன்.
உர்ர்ர் ..... என்று முறைத்தார்.
“சரி சரி, இனிப் பட்டிமன்றம் தொடங்கிடுவியள்.
ராங்கி பண்ணாமல் சொல்லுறதைக் கேளுங்கோ?
நாலு பேருக்கு இது தெரிஞ்சால் உங்கட மரியாதை என்னாகும்?”
அவர் குரலில் என்னைக் காப்பாற்றும் ஆர்வம், 
உலகைத் திருப்திப்படுத்தும் விருப்பு,
இரண்டும் கலந்திருந்தன.
                 *****
 
எனக்குள் சிரிப்பு.
அவரை அருகழைத்தேன்.
‘இப்படி இரும்’ என்று கூறி,
“மிஸ்ரப்பிரபஞ்சம்” என்றால் என்னவென்று தெரியுமோ?
நான் கேட்க, அவர் விழித்தார்!
அதை விளங்கினால் உமக்கும் நல்லது என்று சொல்லி,
“மிஸ்ரப்பிரபஞ்சம்” பற்றியும்,
என் வாழ்வில் நான் கடந்து வந்த இருண்ட பாதைகள் பற்றியும்,
விளக்கமாய்ச் சொல்லத் தொடங்கினேன்.
                 *****
 
“சரியாப் போச்சு,
உபதேசம் செய்து,
சிஷ்யரைத் திருத்திய கதை சொல்லத்தான், 
இத்துணை பெரிய கட்டுரையா?”
நீங்கள் கேட்பது புரிகிறது.
வயிற்றெரிச்சலை ஏன் ஐயா கிளப்புகிறீர்?
உங்களைப் போலத்தான் நானும்,
என் உபதேசம் கேட்டு அவர் திருந்துவார்,
உண்மை உணர்ந்து என்னை மதிப்பார்,
என்றெல்லாம் நினைத்தேன்.
நடந்ததோ வேறு கதை.
நான் சொல்லி முடிக்கும் வரை கேட்டு விட்டு,
“நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?” 
என்பது போல் என்னைப் பார்த்தார்.
எழுந்து போய் விட்டார். 
                 *****
 
ஒரு சில மாதங்களில்,
கடகடவெனச் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. 
வீதிகளில் என்னைப் பார்த்துச் சிரித்துச் சென்ற,
சில தெரிந்தவர்களின் கண்களில்,
முன்னைய மரியாதை தேய்ந்து போயிருந்தது.
என்னாயிற்று இவர்களுக்கு?
என் கேள்விக்கு ஒரு நாள் பதில் கிடைத்தது.
நான் இல்லா ஓர் இடத்தில்,
பலருக்கு மத்தியில்,
“மிஸ்ரப்பிரபஞ்சத்தை” விளக்கம் செய்வதற்காக,
என் மாணவருக்கு நான் உரைத்த,
என் வாழ்வின் இருண்ட பகுதிகள்,
உபகதைகள் சேர்த்து அவராற் சொல்லப்பட்டதாம்.
முடிவுரையாய்,
“தன் பிழைகளை மறைக்க, 
‘மிஸ்ரப்பிரபஞ்ச’க்கதை விடுகிறார் “என்று சொல்லி,
அவர் சிரித்ததாயும் அறிந்தேன்.
என்ன செய்ய? என் தலைவிதி.
                 *****
 
ஐயா, அவசரக்கார வாசகரே!
இன்றைய சில விமர்சகர்கள் போல், 
இக்கட்டுரையின் முதல் பந்தியை வாசித்துவிட்டு,
கடைசிப் பந்திக்கு ஒருவேளை நீர் வந்திருந்தால், 
இக்கட்டுரையில் நான் சொல்ல வந்த நீதி,
உமக்கு விளங்காமற் போகலாம்.
அதனால் இதோ உமக்காக ஒரு முடிவுரை.
இந்த “மிஸ்ரப்பிரபஞ்சத்தில்,” 
உண்மையை உணர்ந்து,
மற்றவருக்கும் அதை உணர்த்த வேண்டும் என்பதற்காய், 
“நடந்தவற்றையெல்லாம் மற்றவருக்கச் சொல்ல நினைக்காதீர்,”
அங்ஙனம் சொன்னால், நீர் முட்டாளாய்ப் போவது நிச்சயம்.
ஏனென்றால், 
உண்மை வேறு! உலகம் வேறு!
                 *****
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.