அதிர்வுகள் 10 | “அம்மா(க்)குழந்தை”

அதிர்வுகள் 10 | “அம்மா(க்)குழந்தை”
 
றவுகள் விசித்திரமானவை.
ஒரு வீட்டுப்பிள்ளைகளை,
இவன் அம்மா பிள்ளை, இவன் அப்பா பிள்ளை’ என்று,
கட்சி பிரித்துப்பார்ப்பதுவாய்  உறவுகளுக்குள் ஒரு வழக்கு இருக்கிறது.
வீட்டுப்பிள்ளைகளை அறிமுகம் செய்ததுமே,
நீங்கள் அப்பாட செல்லமோ?, அம்மாட செல்லமோ?’, என்று,
கேட்காத உறவினர்களை இதுவரை நான் காணவில்லை.
பிள்ளைகள் வாக்களிக்கும் இத்தேர்தலில்,
தாய், தந்தையருக்கிடையே வெற்றி, தோல்வி மட்டுமில்லாமல்,
இது என் பிள்ளை அது உன் பிள்ளை என்ற,
தேவையில்லாத பிரிவினைகளும் உருவாகத்தான் செய்கின்றன.
இது உறவுகளால் உருவாக்கப்படும் பிரிவினையா? அன்றேல்,
இயல்பாகப் பிள்ளைகளுக்குள் ,
பெற்றோர் மேலான பேதப்பட்ட அன்புநிலை உண்டா?,
இதுபற்றி பலதரம் சிந்தித்திருக்கிறேன்.
ஆழ்ந்து அவதானித்துச் சிந்தித்ததில்,
இப்பிரிவினை இயற்கையாய் அமைவது போல்தான் தெரிகிறது.
பிள்ளைகளுள் சில தாய் மீதும்,
வேறு சில தந்தை மீதும் இயல்பாய் அன்பு வைப்பது நிஜம்தான்.
பிள்ளைகட்கு பெற்றோரில் ஒருவர்மேல் தனித்த அன்பு வருதற்கு,
ஏதோ காரணம் இருக்கவேண்டும்போல் தோன்றுகிறது.
அக் காரணம் முன்னைப்பிறவித் தொடர்பா? விதியா? அன்றி வேறா? என,
எவராலும் உறுதிபடச் சொல்லமுடியவில்லை.
 

***

எங்கள் வீட்டில் நான், ‘அம்மா பிள்ளை’ என்று பெயர் எடுத்தவன்.
என் பெற்றோர்க்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்து,
கடைசிப்பிள்ளை எனும் பட்டத்தை,
பதினொரு ஆண்டுகள் தக்க வைத்துக்கொண்டவன்.
என் அப்பாவின் நாற்பத்தைந்தாவது வயதில்,
என் தங்கை பிறந்து,
அப்பட்டத்தை தனதாகப் பறித்துக்கொண்டாள்.
அவள் பிறக்கும் வரை அம்மாவின் முழு அன்பும்,
எனக்கு மட்டுமாய்த்தான் இருந்தது.
இரண்டரை வயது வரை அம்மாவிடம் பால் குடித்தவன் என்று,
என்னை சிறு வயதில் கிண்டல் செய்வார்கள்.
மூன்று, நான்கு வயது வந்த பிறகும்,
அம்மா என்னை இடுப்பில் கொண்டு திரியவேண்டும் என்று,
பிடிவாதம் பிடிப்பேனாம்.
இவையெல்லாம் மற்றவர் சொல்லிக் கேட்டவை.
இவை தவிர என் மனத்திரையில் பதிவான,
அம்மா பற்றிய அழியாத ஒரு சில சிறுவயது ஞாபகங்களும்,
இருக்கவே செய்கின்றன.
அவ் எண்ணங்கள் மீட்டப்படும் போதெல்லாம்,
குழந்தையாகி விடுகிறேன்.
***

சிறுவயதில் எனக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு வரும்.
அந்நோயால் அவதியுறுவேன்.
உணவில் சிறு வித்தியாசம் இருந்தாலும் வயிற்றோட்டம் தொடங்கிவிடும்.
அதனால் அம்மா எனக்காக உறைப்பில்லாமல் தினமும் சொதி வைப்பார்.
அது காரணமாக எனக்கு வீட்டில் ‘சொதி’ என்றே பட்டம் இருந்தது.
அது போலவே அம்மா எனக்கு மட்டும் எண்ணெய் விடாமல்,
பட்டர் போட்டு தோசை சுட்டுத் தருவதால்,
‘பட்டர் தோசை’ என்ற பட்டமும்,
என் சகோதரர்களால் எனக்குத் தரப்பட்டிருந்தது.
இப்படி சிறு வயதில் பல பட்டங்களை எடுத்ததால் தானோ என்னவோ,
வளர்ந்தப்பிறகு பட்டம் எடுக்கும் விருப்பம் வரவேயில்லை.
எனக்கு வயிற்றோட்டம் தொடங்கி விட்டால்,
அம்மா படும்பாடு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
அம்மாவின் முகம் பேயறைந்தது போல் ஆகிவிடும்.
எனக்கு வயிற்றோட்டம் தொடங்கி முடியும் வரை,
அம்மாவுக்குச் சாப்பாடே இறங்காது.
நான் ‘ரொயிலற்’ போகவேண்டும் என்று சொன்னதுமே,
அம்மா முழி பிதுங்குவார்.
என்னை ‘ரொயிலற்றில்’ உட்கார வைத்து விட்டு,
வாயில் நூல் ஒன்றை வைத்து அவர் படும் அந்தரத்தைப் பார்த்து,
வெள்ளமாய்ப் பாய்ந்து வரும் வயிற்றோட்டத்தை அடக்கி,
அம்மா பயப்படக்கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாய்,
அதனை வெளியேற்றுவேன்.
அந்தப் பாலப்பருவத்திலும்,
அம்மாவை மிரட்டக்கூடாது என்ற பக்குவம் எனக்கிருந்தது.
***

எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் போது,
ஒரு முறை வயிற்றோட்டம் கடுமையாகி,
என்னைக் கண்டி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து நாட்கள்.
எந்த மருந்திற்கும் வயிற்றோட்டம் குறைந்தபாடில்லை.
அப்போது அம்மா பட்டபாடு இப்போதும் கண்முன் காட்சியாய் விரிகிறது.
பிள்ளையை இழந்து விடுவோமோ? எனும் பயத்தில்,
உயிர்வற்றி அம்மா பதறிய பதற்றம்,
இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
***

டாக்டர்களெல்லாம் கைவிட்ட நிலையில்,
அந்த ஆஸ்பத்திரி முழுவதும் ஓடித்திரிந்து,
எல்லோரிடமும் தன் துன்பம் பகிர்ந்தார் அம்மா.
ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளப் பெண்மணி,
‘இது வெறும் குடலேத்தம் தானுங்கம்மா,
மூணுநேரம் எண்ணெய் தடவினா சரியாயிடும்’ என்று சொல்ல,
டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தெரியாமல்,
அம்மா அந்தப்பெண்மணியை  ரகசியமாய் அழைத்துவந்து,
என் வயிற்றில் எண்ணெய் தடவிவித்ததும்,
மூன்று நேரம் அந்தப்பெண்மணி எண்ணெய் தடவியதும்,
திடீரென வயிற்றோட்டம் நின்று போனதுவும்,
அம்மா அந்தப் பெண்ணைக் கண்ணீரோடு வணங்கி நின்றதுவும்,
இன்றும் என் நெஞ்சில் நிழலாடும் காட்சிகள்.
சுகமாகி வீட்டிற்கு வந்ததும்,
முதல் முதலாய் அம்மா இடியப்பமும், சொதியும் தீத்தும் போது,
அதில் கிடந்த வெந்தயத்தையும் வீச விடாமல்,
அம்மாவிடம் நான் பறித்துச் சாப்பிட்டதை,
என் குடும்பத்தார் நீண்ட நாட்கள் சொல்லிச் சிரித்தார்கள்.
***

புசல்லாவையில் நாங்கள் இருந்த போது,
அப்பா வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் போன பிறகு,
அம்மா ‘பாத்ரூமில்’ குளிக்கப் போக,
வெளியே இருந்த நான் தெரியாமல் ‘பாத்ரூமைப்’ பூட்டி விட்டு,
திறக்கத்தெரியாமல் கதறி அழுதேன்.
அம்மா உள்ளே இருந்தபடி,
வார்த்தைகளால் என்னை ஆறுதல்படுத்தி துணிவூட்ட,
பக்கத்திலிருந்த ‘றெஸ்ற் கவுஸ்ஸிற்கு’ அழுதழுது போய்,
அங்கிருந்த காவலாளியை அழைத்து வந்து,
கதவை நான் திறப்பிக்க,
தான் உள்ளே அகப்பட்டதை நினைக்காமல்,
பிள்ளை பயந்து விட்டானோ? எனும் பதட்டத்தில்,
அம்மா என்னைக் கட்டி அணைத்து,
முத்தமழை பொழிந்தது நேற்றுப் போல் இருக்கிறது.
***

அம்மா என் தங்கையைச் சுமந்து கர்ப்பமாய் இருந்தார்.
இரவில் அம்மாவின் கழுத்தைக்கட்டிப்பிடித்து,
வயிற்றின் மேல் கால் தூக்கிப் போட்டுப்படுப்பது என் வழக்கமாயிருந்தது.
ஒன்பது மாதம் முடிந்ததும்,
ஒரு நாள் ‘இவன் காலைத்தூக்கிப் போட்டால்,
வயிற்றுப்பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடும்’ என்று சொல்லி,
என்னை அப்பாவோடு படுக்கச்சொல்லி விட்டார்கள்.
எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.
அப்பா என்னிடம் ‘நீ நித்திரை போலக் கிட,
அம்மா என்ன செய்கிறா பார்ப்பம்’ என்று சொல்ல,
நான் அதன்படி நடித்துக்கிடந்தேன்.
வேலைகள் முடித்து படுக்க வந்த அம்மா,
‘அவன் என்ன செய்கிறான்’ என்று கேட்டார்.
‘அவன் நித்திரையாய்ப் போனான்’ என்று அப்பா சொன்னதும்,
அம்மா விம்மி அழத்தொடங்கினார்.
நித்திரை போலக் கிடந்த நான்,
ஓடிப்போய் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு,
மீண்டும் அவர் அருகிலேயே படுத்துக்கொண்டேன்.
அம்மா பற்றிய மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று.
***

மேற்சொன்னவை அம்மாவின் அருள் முகங்கள்.
கோபம் நிறைந்த மற்றொரு முகமும் அம்மாவிடம் இருந்தது.
இளமையிலேயே தந்தை இறந்து போக,
வீட்டின் மூத்த பெண்பிள்ளையாய்,
குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்று நடத்தியவர் அம்மா.
அம்மாவின் மூன்று சகோதரிகளும், சகோதரர்களும்,
அக்கா! என்று சொன்னாலே உருகுவார்கள்.
சிறுவயதில் சிக்கனமாய்,
அம்மா தங்களுக்கு சட்டைகள் தைத்துத் தந்ததையும்,
ஒழுக்கங்கள் கற்றுத் தந்ததையும்,
எங்களது நல்லம்மா, கண்மணி, ஆசையம்மாக்கள்,
உருகி உருகிச் சொல்வார்கள்.
நவரி மாமா, சோமு மாமா, சீனி மாமா ஆகியோர்,
‘குழப்படிக்கு நாங்கள் அக்காட்ட வாங்கின குட்டுக்களை,
மறக்கமுடியாது’ என்பார்கள்.
இவை பழைய கதைகள்.
***

நாங்கள் பிறந்து வளர்ந்து யாழ்ப்பாணம் வந்த பிறகு,
பெரியக்கா, சின்னக்கா ஆகியோருக்கு,
அம்மா சமையல் ‘ரேண்’ போட்டுக்கொடுத்திருந்தா.
விடிகாலையில் எழும்பிச் சமைத்து,
எனக்கும், அண்ணனுக்கும் சாப்பாடு கட்டித்தந்து,
தங்களுக்கும் கட்டிக்கொண்டு,
அவர்கள் பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்பது,
அம்மாவின் கட்டளையாய் இருந்தது.
காலையில் குறித்த நேரத்தில் அவர்கள் எழும்பத் தவறினால்,
அம்மா பிரம்பால்தான் பேசுவா.
ஒரு முறை எங்கள் வீட்டுப் புகைப்பட அல்பத்தில் இருந்த,
ஒரு படத்தை எனக்கு வேண்டும் என்று கிழித்து எடுத்துவிட்டேன்.
அம்மாவுக்குக் கடும் கோபம்.
‘திரும்ப அதைக்கொண்டு போய் ஒட்டு’ என்று உத்தரவு போட்டார்.
சிறுவயதிலேயே நான் பிடிவாதக்காரன்.
அம்மாவின் உத்தரவை நான் மறுக்க,
கையிலிருந்த சீப்பு உடைய உடைய நான் வாங்கிய அடியை,
இப்போதும் மறக்கமுடியவில்லை.
***

நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது,
ஒருமுறை குடும்பத்தோடு,
சிலாபத்திலிருந்து நல்லூர்த் திருவிழாவிற்காக வந்திருந்தோம்.
பூங்காவனத்திருவிழா அன்று,
அனைவரையும் அம்மா கடைவீதிக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு விளையாட்டுச்சாமான் கடையில்,
எல்லோருமாக நின்று வேடிக்கை பார்த்தோம்.
சில்வண்டு போல சோடா மூடியளவில் ஒரு விளையாட்டுச்சாமான்,
கடையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்தது.
கையில் எடுத்து அழுத்தினால் ‘டிக் டிக்’ என்று அது சத்தம் போடும்,
கடை நிறையக் கூட்டம் இருந்தது.
வியாபாரி என்னைக் கவனிக்காதபோது,
அவனுக்குத் தெரியாமல் அதில் ஒன்றை எடுத்து,
‘பொக்கற்றில்’ போட்டுக்கொண்டேன்.
கடை பார்த்து முடித்து சிறிது தூரம் போனதும்,
கெட்டித்தனமாய் அதை எடுத்து அம்மாவிடம் காட்ட,
தலையில் குழி விழும்படி அம்மா குட்டிய குட்டும்,
உடனடியாக என்னைத் திருப்பி அழைத்துச்சென்று,
என்னைக்கொண்டே அப்பொருளைக் கடைக்காரனிடம் கொடுக்க வைத்ததும்,
சிலிர்ப்பூட்டும் எண்ணப்பதிவுகள்.
***

குடும்பப்பொறுப்பு முழுவதையும் தாங்கி,
எங்களின் படிப்பு, வாழ்வு என,
அத்தனையையும் பொறுப்பேற்று ஓடித்திரிந்த அம்மாவை,
அக்காமாருக்குத் திருமணம் வந்த போது தனக்கென ஒன்றும் வைக்காமல்,
தனது நகை, உடைமை அத்தனையையும் அள்ளிக் கொடுத்த அம்மாவை,
விளையாட்டுப் பிள்ளையாய்க் கடைசி வரை இருந்த அப்பாவை பொறுத்து,
அவருக்குப் பயந்து அவரது இறுதிப்பயணம் வரை ஊழியம் செய்த அம்மாவை,
வந்த மருமக்கள் அத்தனை பேருக்கும் எந்த வித இடைஞ்சலும் கொடுக்காமல்,
அவர்களுக்கேற்ப வளைந்து கொடுத்து வாழ்ந்த அம்மாவை நினைக்க,
நெஞ்சுருகுகிறது.
***

இவற்றையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்கிறீர்களா?
இப்போது அம்மாவுக்கு எண்பத்தாறு வயது ஆகிறது.
சில காலம் லண்டனிலும், அவுஸ்திரேலியாவிலும் பிள்ளைகளுடன் வாழ்ந்த அவரை,
முதுமையில் யாரும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக,
இங்கு அழைத்து வந்துவிட்டேன்.
இப்போ அம்மாவை நானும் அக்காவுமாகப் பராமரிக்கிறோம்.
இன்று எங்களுக்கு அவர் ஒரு குழந்தை.
திடீர் திடீரென என்னென்னமோ பேசுகிறார்.
‘கண்மணி வந்திருக்கு சாப்பாடு குடுத்திட்டியோ?’,
‘நவரியும், பெஞ்சாதியும் ஏன் வந்திட்டுப் போகினம்?’,
‘மணி மாமியவையள் வந்திருக்கினம்,
நல்ல மீனா வாங்கிக்கொண்டு வந்து குழம்பு வையுங்கோ’, என்று,
வெளிநாடுகளிலிருக்கும் உறவுகள் தன்னிடம் வந்திருப்பதாய் நினைத்து பிதற்றுகிறார்.
***

லண்டனில் இருந்து பேசும் அண்ணனிடம்,
‘என்ர நகையெல்லாத்தையும் ஜெயா எடுத்து வித்துப்போட்டான்’, என்று,
கற்பனையாய் என்னைப் பற்றி முறைப்பாடு வைக்கிறார்.
‘பொலிஸ்ரேசனில போய் கனநேரமாய் நின்று காலெல்லாம் நோகுது’ என்கிறார்.
‘நீங்கள் நடக்க மாட்டியள்,
எப்படிப் பொலிஸ்ரேஷனுக்குப் போக முடியும்? அம்மா’ என்று கேட்டால்,
‘அவங்கள் தான் ஜீப்பில வந்து கூட்டிக்கொண்டு போனவங்கள்’, என்று,
அறிவுத்தொடர்பில்லாமல் பதில் சொல்கிறார்.
தன்னையறியாமல் மலம்,சலம் போய்விட்டால்,
மற்றவர்களுக்குத் துன்பம் கொடுப்பதாய் நினைந்து அழுகிறார்.
ஒவ்வொரு தரம் நான் அவரைப்பார்க்கும் போதும்,
என் தலையில் கை வைத்து,
‘நல்லாய் இருப்பாய்’, ‘நல்லாய் இருப்பாய்’, ‘நல்லாய் இருப்பாய்’ என,
மும்முறையாய் வாழ்த்துகிறார்.
அவரை ஊக்கப்படுத்துவதற்காக,
நான் ஆடிப்பாடி விளையாட்டுக்காட்டி சிரியுங்கோ என்றால்,
பொய்யாக எனக்கு ‘ஹீ... ஹீ.....’ என்று சிரித்துக்காட்டுகிறார்.
உறவினர்கள் அம்மாவிற்கு அறளைபெயர்ந்து  விட்டது என்கிறார்கள்.
***

இமயமாய் இருந்து எங்களை மடியில் தாங்கிய அம்மா,
இன்றைக்கு எங்கள் மடியில் குழந்தையாய் கிடக்கிறார்.
இளமையில் பிள்ளைகளைப் பராமரிக்காத பெற்றோர்களை விட,
முதுமையில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் பெரும்பாவிகள்.
முப்பத்தைந்து ஆண்டுகள் கம்பன் கழகம் நடத்தியிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுமாய்,
இரண்டு கம்பன்கோட்டங்கள் கட்டி முடித்து இருக்கிறேன்.
கொழும்பில் ஒரு கோயிலும் கட்டிக் கும்பாபிஷேகமும் செய்தாகிவிட்டது.
இவையெல்லாம் பெரிய புண்ணிய காரியங்கள் என்கிறார்கள்.
முதுமையால் குழந்தையாகி விட்ட அம்மாவைப் பராமரிக்கும் புண்ணிய காரியத்தின் முன்,
இப்புண்ணிய காரியங்கள்.
எனக்கு வெறும் தூசாய்ப்படுகின்றன.
******
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.