அருமைமிகு தேவதையை இழந்துவிட்டோம்!

அருமைமிகு தேவதையை இழந்துவிட்டோம்!
 
 
உயிர்பிழிந்து செவிபுகுந்த அந்தச்செய்தி
உதிரமெலாம் காய்ந்திடவே உள்ளம் சேர்ந்து
வயிரமென அறிவதனை வெட்டிச்சாய்த்து
வற்றாத பெருந்துன்பம் தந்துவாட்டும்
கயிறெனவே கண்டமதை இறுகப்பற்றி
காலமெலாம் மாறாத துயரம் தந்து
அயர்ந்திடவே செய்ததனை என்ன சொல்வேன்?
அன்புமகள் மண்விட்டு விண்சேர்ந்தாளாம்.
 

என் உயிரோன் ஜெயராமின் ஏற்றம் மிக்க
இனிய மனைவிளக்காக விளங்கி நின்ற
நன்மனையாள் அனுத்தம்மா என்ற நங்கை
நமக்கெல்லாம் உறவாக வந்து சேர்ந்தாள்.
தன் கணவன் வழி நிற்றல், தர்மம் காத்தல்
தளராத தன் கடமை என்று எண்ணி
மண்மகிழ வாழ்ந்தாளே மங்கை இன்று
மண்ணதற்கே விருந்தாகி மாய்ந்து போனாள்.

என்னை அவள் தந்தையென எண்ணித்தானே
எப்போதும் அன்பதனால் ஏற்றம் செய்வாள்
தன்னை நெடு நோய் வாட்ட தளரா நின்று
தயங்காது என் கடமை தானே செய்வாள்.
மண் அதிர நடக்காத மங்கை என்றும்
மணவாளன் உளமறிந்து மாண்பு செய்தாள்
அன்னையென நின்றாளே அவளும் போக
அவனியிலே வாழ்வதுவும் கொடுமை அம்மா.

கம்பனது பணியதனில் கணவன் செல்ல
கனிவோடு துணைசெய்து களித்து நின்றாள்
அம்புவியில் அனைத்தையுமே கணவற்காக்கி
அன்பு நிறை மனத்தோடு லயித்து நின்றாள்
வெம்புகிற நோய் வாட்டி வதைத்த போதும்
வீசி துயர் வீறோடு உழைத்து நின்றாள்.
நம்பி இவள் செய்தபணி நாதற்கென்றும்
நானிலத்தில் வேறாரும் செய்வராமோ?

தாக்குகிற நோய் வாட்ட தளர்ந்தாள் இல்லை.
தனித்து அவள் யமனோடு தினம் போராடி
மூக்கதனில் செயற்கையதாய் சுவாசம் கொண்டும்
முனங்காது நோய் வென்று முன்னே நின்று
வாக்கதனில் தேன்தடவி வருவோர்க்கெல்லாம்
வற்றாது மனம் மகிழ அன்பே செய்தாள்
ஆர்க்கு வரும் இத்துணிவு ஐயோ! எங்கள்
அருமைமிகு தேவதையை இழந்துவிட்டோம்.

என்னுடைய குறள் வகுப்பில் இனிமை பொங்க
ஏற்றமுடன் இருந்தவளா இன்று போனாள்?
தன்னுடை முகம் மலர ‘அண்ணா’ என்று
தயவுடனே அழைப்பவளா இன்று போனாள்?
கண்மலரச் சிரித்தெங்கள் வரவைக் காத்து
களிப்பவளா எமைவிட்டு இன்று போனாள்?
மண்ணதனில் இதனைவிடக் கொடுமையுண்டோ?
மனம்வற்றிப் போனதுவே என்ன செய்வோம்?

கம்பனது விழவுக்காய் நாங்கள் எல்லாம்
களித்தவளின் இல்லத்தை நிறைத்து நிற்க
எம்மை அவள் வீட்டுரிமைக்காரராக்கி
ஏந்திழையாள் ஓரத்தே மகிழ்ந்து நிற்பாள்.
வெம்புகிற விழியோடு அன்று எம்மை
விழிசோர அனுப்பினையே அம்மா! உந்தன்
அன்புநிறைத் திருமுகத்தை எங்கு காண்போம்?
ஆற்றாது தவிக்கின்றோம் அழுதுவாடி.

வானத்தில் கம்பனவன் வருக! என்று
வற்றாத பாசத்தால் அணைத்து நல்ல
தானத்தில் உனைவைத்துத் தழுவி அன்பாய்
தன்மகளாய் மற்றோர்க்கு உன்னைச் சொல்லி
தேன் ஒத்த தன் தமிழால் உன்னைப்பாடி
தேற்றிடுவான் அஞ்சாதே ! மகளே நல்ல
மான் ஒத்த உன் பணியை அவனும் நெஞ்சில்
மறக்காது வைத்திடுவான் மகிழ்ந்தே போற்றி.
                   ✿
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.