ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே! பாகம் 2

ஆராதனை எந்தன்  அறியாமை ஒன்றுமே! பாகம் 2
 



பாகம் ஒன்றினைப் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்>> பாகம் 1
லகுய்யக் கவி செய்தான் கம்பன்,
அவன் உயர் கவிகளுள் ஒன்று.
ஒப்பற்ற ஓர் தத்துவ உண்மையை,
தெளிவுற விளக்கம் செய்கிறது.
ஆழ்ந்த பேருண்மையை அகத்திருத்தி,
கம்பன் செய்த அவ் அற்புதக் கவிதை இது.

“நாராயணாய நம” என்னும் நன்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராறு மேனி கருணாகரமூர்த்திக்கு
ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!

இக்கவிதையில் கம்பன் பொதித்திருக்கும்,
ஆழ்ந்த தத்துவ உண்மையை வெளிப்படுத்துவதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.
 

***

தாம் வணங்கும் இறைவர்க்கு, பொருள்களை அர்ப்பணித்து,
ஆராதனை செய்வது அடியார்தம் வழக்கு.
அங்ஙனம் ஆராதனை செய்யும் அடியார்கள்.
தேடற்கரிய உயர் பொருள்களையே
தாம் வணங்கும் தெய்வத்திற்குச் சமர்ப்பிப்பர்.
இப்பாடலிலோ கம்பன்,
தாழ்வுற்ற ஒரு பொருளைத் தலைவர்க்குத் தருகிறான்.
அறிவு உயர்ந்தது.
அறியாமை தாழ்ந்தது.
இஃது உலகியலார்தம் கருத்து.
அங்ஙனமாயின்,
அறிவை இறைவர்க்கு அர்ப்பணிப்பதன்றோ பொருத்தம்?
இங்கோ, கம்பன் அறியாமையே தன் ஆராதனையென அறிவித்து,
ஆண்டவர்க்கு அதனை அர்ப்பணிக்கின்றான்.
உயர்ந்த அறிவைவிட்டு, தாழ்ந்த அறியாமையை,
ஆண்டவர்க்கு அர்ப்பணிக்கும் கம்பனது இச்செயல்,
இறையை இழிவு செய்யும் முயற்சியாய்த் தோன்றுகிறது.
மரபு மீறி மருட்சி தருகிறது.
கல்வியில் பெரியனான கம்பன் தவறிழைப்பானா?
இல்லை என்பது தெளிவாக,
அவன் செயற்காம் காரணம் தேடத் தலைப்படுகிறோம் நாம்.
***

இறையை அடைதற்காம் வழி யாது?
உண்மை உணரத் தலைப்படும் உலகுயிர்கள் அனைத்தினதும்,
உளத்து உதிக்கும் ஒப்பற்ற கேள்வி இது.
இவ் வினாவுக்காம் விடையை ஆராய்ந்த பலரும்,
இறை நோக்கிய பயணத்தின் வழியடைக்கும் கல்லாய் இருப்பது,
அறியாமையே! என்றனர்.
மேல் ஆராய்ச்சியில் புகுந்த,
உயர்ந்தோர் அனைவரதும் ஒத்த முடிவு இதுவேயாம்.
***

அவர்தம் கருத்தினைப் பின்பற்றியே,
அறியாமை நீக்கமே இறையை அடைதற்காம் வழியென,
பலரும் உரைத்து வருகின்றனர்.
இவ் விடயம் பற்றி, மேற் பாடல் மூலம்,
கம்பன் புதியதோர் சிந்தனையை முன் வைக்கிறான்.
மரபை மீறிய கம்பனது அச்சிந்தனை,
தத்துவவியலாளர்களது எண்ண வரம்புகளை விரிவித்து,
உயிர்களது இறை நோக்கிய பயணம் பற்றிய,
புதியதொரு கருத்து நிலையை உரைக்கிறது.
தத்துவக்கம்பன் உரைக்கும் அவ்வித்தகம் காண்பாம்.
***

இறைவன் முற்றறிவு வடிவினன்.
உயிர்கள் சிற்றறிவு உடையவை.
ஆணவப் பொருளால் விளைந்த அறியாமையே,
உயிர்களின் அறிவைச் சிற்றறிவாக்கிற்றாம்.
அவ் அறியாமை நீங்கின்,
உயிரது அறிவும், பேரறிவோடு பொருந்தி இறை நிலை உறும்.
இது தத்துவவாதிகளின் பொதுக்கருத்து.
***

அறியாமை எங்ஙனம் நீங்கும்?
ஒளி வர இருள் நீங்குதல் போல,
அறிவு வர அறியாமை நீங்கும் என்பர் கற்றோர்.
அஃதுணர, அறியாமையை நீக்கும் கருவி
அறிவே எனும் உண்மை எளிதாய்ப் பெறப்படுகிறது.
***

இவ் உண்மை உணர்ந்த பின் மீண்டும் மனத்துள் ஒரு வினா.
மேற்கருத்து உண்மையாயின்,
அறிவு பெற்றார் அனைவரும் அறியாமை நீங்கி,
இறையை அடைந்திருத்தல் வேண்டுமன்றோ?
ஆனால் அஃது இயற்கை முரண்.
அறிவு பெற்றார் அனைவரும்,
இறையை அடைந்ததாய்த் தெரியவில்லை.
இன்னும் தெளிவுற உரைப்பதாயின்,
அறிவுற்றார் பலர், அவ் அறிவினால் செருக்குற்று,
இறையை எய்த முடியாது இடர்ப்படுவதே நிதர்சனமாம்.
***

பெரியபுராணம் உரைக்கும் அடியாருள்,
மிகக் கற்றவர் என்று கருதத்தக்கவர் திருநாவுக்கரசர்.
அவர் தம் அறிவாற்றல் கண்டு,
அரசும், அமணரும் அவரைத் தம் வயப்படுத்தியமையே,
அக்கருத்திற்குத் தக்கசான்றாம்.
அறுபத்து மூவருள்,
கற்றறிவு முற்றும் இலாதவராய்க் கருதத்தக்கவர் கண்ணப்பநாயனாரே.
இவ் இருவருள் அறிவார்ந்த முதலாமவர்,
இறையை அடைய எண்பத்தொரு வயதுவரை இடருற்றார்.
அறிவற்ற பின்னவரோ, இறையைக் கண்ட ஆறாம் நாளே கதியுற்றார்.
அறிவு அறியாமையை நீக்குமெனின்,
நாவுக்கரசரே முதலில் இறையை அடைந்திருத்தல் வேண்டும்.
அறியாமை இறையை அடைதற்கு இடையூறெனின்,
கண்ணப்பர் இறையை அடைந்திருக்கவே கூடாது.
நிகழ்வுகளோ எதிர்மறையாய் நிகழ்ந்திருக்கின்றன.
இதனால் அறியாமை முத்திக்கு இடையூறென்பதும்,
அறிவே முத்தியின் வழி என்பதும்,
ஐயத்திற்கு உரியதாய் ஆகின்றன.
***

அது மட்டுமன்றி,
இறை நிலையுற்ற ஞானியர் பலரும் கூட,
தம் அனுபவத்தைப் பதிவு செய்கையில்,
கல்வியினையும், அறிவினையும்,
இறை அனுபவத்திற்காம் இடையூறாய் உரைத்துச் செல்கின்றனர்.
வைத்தநிதி பெண்டிர், மக்கள், குலம், கல்வி எனும்
பித்த உலகில்-மணிவாசகர்
கற்றாரை நான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்- மணிவாசகர்
படிப்பற்று, கேள்வியற்று, பற்றற்று, சிந்தைத்
துடிப்பற்று இருப்போர்க்கே, சுகம் காண் பராபரமே.-தாயுமானவர்

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ- அருணகிரிநாதர்

அனுபூதி மான்களின் மேற் தொடர்களும்,
அறிவு அறியாமை பற்றிய நம் மரபுச் சிந்தனைக்கு,
இடையூறு செய்தே நிற்கின்றன.
அங்ஙனமாயின் உண்மை தான் என்ன?
ஆய்தல் அவசியமாகிறது.
***

அறிவு என்பது யாது?
ஆழச்சிந்திக்கின் வியாக்கியானம் விரியும்.
ஒன்றைப்பற்றி அறிந்து கொள்ளுதலே அறிவாம்.
எளிய வரைவு இஃது.
இவ் அறிவினைத் தேடும் கருவியே கல்வியாம்.இங்ஙனமாய் இங்ஙனமாய், கல்வியூடு நாம் தேடும் அறிவுகள் பலவாக,
அறிவு பெருகியதாய் ஆனந்திக்கிறோம்.
ஆனால் உண்மை நிலைமை என்ன?
புதிதாய் ஒன்றினை நாம் தெரிந்து கொள்ள,
அறிவு பெருகுகிறதா? அறியாமை பெருகுகிறதா?
அறிதல் அவசியமாகிறது.
***

உதாரணத்திற்கு........
இது ஒரு பானை என,
புதிதாய் ஒரு பொருள் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம்.
இந்நிலையில் அறிவு வளர்ந்ததா? அறியாமை வளர்ந்ததா?
புதிதாய் ஒரு பொருள் பற்றித் தெரிந்து கொண்டதால்,
அறிவு வளர்ந்தது என்பது உண்மையே.
அதே நேரம்,
அதுவரை தெரியாதிருந்த பானை பற்றித் தெரியவந்ததும்,
இப்பானையை எதனால்ச்செய்தார்கள்?
இப்பானை எதற்குச் செய்யப்பட்டது?
இப்பானையைச் செய்தவர் யார்?
இப்பானை எவர் சொல்லிச் செய்யப்பட்டது?
இப்பானை செய்தற்காம் கருவி எது?
அக்கருவி எங்குள்ளது?
இப்பானையின் விலை என்ன?
இப்பானை எதுவரை நிலைக்கும்?
இப்பானையைப் பயன்படுத்துவது எப்படி?
இப்பானைக்கு உரியவர் யார்? என,
அது பற்றிய அறியாத கேள்விகள் பத்தாய் விளைகின்றன.
***

அறிவு ஒன்றாக,
அறியாமை பத்தாகிறது.
அறிவு பத்தாக அறியாமை நூறாகிறது.
அறிவு நூறாக அறியாமை ஆயிரமாகிறது.
எனவே, பெறப்படும் அறிவால்,
அறிவை விட அறியாமையே பெருகுகிறது.
இக்கருத்தினை வள்ளுவக் கடவுளாரும்,
அறிதொறும் அறியாமை கண்டற்றால், என
தமது காமத்துப்பாலில் வலியுறுத்துகிறார்.
***

இறையை அறிய,
நம் அறியாமை நீங்குதல் அவசியமெனக் கண்டோம்.
அறியாமை நீங்க அறிவே வழியெனவும் கண்டோம்.
அறிவு பெருகப்பெருக,
அறியாமை பன்மடங்காய்ப் பெருகுதலையும் அறிந்தோம்.
அறிவு நிகழும் போது அறியாமை நீங்காமல் பன்மடங்காகுமெனின்,
அறிவால் அறியாமை நீங்குதல் கூடுமோ?
வினா நம்மைத் திகைக்க வைக்கிறது.
மேற் கருத்து உண்மையாமேல்,
அறியாமை நீங்கி இறையை அடைதற்காம் வழிதான் என்ன?
கேள்வி குழப்ப விதிர்விதிர்த்து நிற்கிறோம் நாம்.
***

இறையை அடைதற்காம் ஆராதனை,
அறிவா? அறியாமையா?
அறிவு அறியாமையைப் பெருக்குதல் கண்கூடு.
அறிவு வளர அறியாமை பன்மடங்காய்ப் பெருகுமெனின்,
அறிவு சுருங்க அறியாமை பன் மடங்கு சுருங்குதல் வேண்டுமன்றோ.
இஃது அருத்தாபத்தி நியாயமாம்.
இவ் உண்மை கொண்டு சிந்திக்க,
அறியாமை முற்றாய் நீங்க,
அறிவு முற்றாய் நீங்குதலும்.
அறிவு முற்றாக நீங்க,
அறியாமை முற்றாக நீங்குதலும் திண்ணம் எனத் தெரிகிறது.
அங்ஙனமாயின்,
அறியாமையை நீக்க வழி அறிவை நீக்குவதேயாம்.
மேற்கருத்தை, ஆன்றோர் ஆமோதிப்பரோ?
அருணகிரிநாதர் ஆமோதிக்கிறார்.
தனது கந்தரனுபூதியில்,

அறிவற்று அறியாமையும் அற்றதுவே என்றும்,
அறிவு ஒன்று அற, நின்று அறிவார் அறிவில்,
பிரிவு ஒன்று அற, நின்ற பிரான் அலையோ என்றும்,

அவர் பாடுவது மேலும் சிந்தனையைத் தூண்டுகிறது.
***

அறியாமையை நீக்க அறிவை நீக்குவதே வழியெனக் கண்டோம்.
அங்ஙனமாயின், அறிவைப் பெறுதல் எதற்கு?
நீக்க வேண்டிய ஒன்றைப் பெற ஏன் வீணே முயலவேண்டும்?
ஆணவத்தால் அறியாமைபெற்று நிற்கும் ஆன்மா,
அறிவு நோக்கிய முயற்சியை விட்டுவிட்;;டு,
வாழாது இருந்து விடலாமன்றோ?
உயிர் உய்ய அறிவு அவசியமற்றதொன்றா? வினாப் பிறக்கும்,
ஆம் என உரைத்தலும் கூடாதாம்.
அஃதும் உலக முரணேயாம்.
கல்வியைக் கண் என்கிறார் திருவள்ளுவர்.
பொய்யாமொழிப் புலவனின் வார்த்தை பொய்க்குமா?
அவரே கற்றதனால் ஆய பயன் என்கொல்? என வினவி,
வால்அறிவன் நற்றாள் தொழலே அதன் பயன் என முடிக்கிறார்
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்கிறது திருவிசைப்பா.
கல்வி அறிவை இம் மேற்கோள்கள் வலியுறுத்துகின்றன.
முன்கண்ட மேற்கோள்களுக்கு நேர் எதிரான மேற்கோள்கள் இவை.
முன்பின் முரணான இம் மேற்கோள்களால்,
மீண்டும் குழப்பம்.
தேடுதல் தொடர்கிறது.
***

இறைவனை அடைதற்கு,
கல்வியும், அறிவும் அவசியமானவையா? அன்றா?
முரண்பட்ட மேற்கோள்களால் ஏற்பட்டிருக்கும் கேள்வி இதுவே.
தக்க உவமை கொண்டு ஆராயப்புகுகிறோம்.
***

செம்பில் களிம்பு இயற்கை,
அக் களிம்பினை நீக்கப் புளியினைப் பயன்படுத்துகிறோம்.
களிம்பு நீங்கியதும்,
அக் களிம்போடு புளியையும் நீக்கிக் கழுவுதல் அவசியமாம்.
அன்றேல் அப்புளியே களிம்பினை மேலும் விளைவிக்கும்.
புளியின்றிக் களிம்பு நீங்காது.
ஆகவே களிம்பு நீங்க புளியின் சேர்க்கை அவசியமே.
களிம்பு நீங்கியதும் புளியும் நீங்காவிடின் அதுவே களிம்பாகும் ஆதலால்,
களிம்பு நீங்க புளியின் நீக்கமும் அவசியமே.
இங்கு புளியாய் உவமிக்கப்பட்டது அறிவு.
களிம்பாய் உவமிக்கப்பட்டது அறியாமை.
மேல் உவமை கொண்டு சிந்திக்க,
அறியாமை நீக்கத்திற்கு,
அறிவின் சேர்க்கையும், அறிவின் நீக்கமும் அவசியம் என்பது,
தெற்றெனத் தெளிவாகிறது.
***

இங்கு மற்றோர் கேள்வி பிறக்கிறது.
அனைத்து அறிவும் அறியாமை ஆகுமா?
அன்றாம்.
குறை அறிவான நூல் அறிவுக்கே இவ்வரையறை பொருந்தும்.
நிறை அறிவான வால் அறிவு அத்தகையதன்று.
அஃது இயற்கை அறிவு, இறை அறிவு,
அவ் அறிவில் அறியாமை பதியாது.
உண்மை அறிய மீண்டும் உவமை தேடுகிறது மனம்.
***

சிறிய விளக்கொளியில்,
இருள் சிறிது நீங்குவது உண்மை.
அதே நேரம் அவ் ஒளியால்,
சூழ இருக்கும் இருள் புலனாவதும் உண்மை.
விளக்கொளி பெருகப்பெருக,
இருள் நீக்கத்தோடு சூழ்ந்த, இருட்பெருக்கமும் தெரியவருமாம்.
ஒளியின் விரிவில்,
அவ்வொளியை விட இருளே பன்மடங்கு விரிந்து தெரியும்.
இதன் காரணம் யாது? ஆராய்வாம்.
***
 
விளக்கொளிக்குள்ளும் இருட்சாயல் உண்டு.
ஒளிச் சுடருக்கும் புறத்தே இருள் நிழல் உண்டு.
எனவே விளக்கொளி இருள் தொடர்புற்றதேயாம்.
அதனால் விளக்கொளியால் இருளை முற்ற நீக்குதல் முடியாத காரியம்.
அங்ஙனமாயின், இருளை முற்ற நீக்குதல் எங்ஙனம்?
இருள் தொடர்பற்ற ஒளி வருமாயின்,
அவ் ஒளியில் இருளும் முற்ற நீங்கும்.
விளக்கொளியும் தன் நிலைகெட்டு மறையும்.
அது சாத்தியமா?
அத்தகையதோர் ஒளி உண்டா?
***
 
உண்டென்பது பிரத்தியட்சப் பிரமாணமாய்த் தெரிகிறது.
இருள் தொடர்பற்ற ஒளியே சூரியஒளியாம்.
சூரியஒளிக்கு மேற் சொன்ன விளக்கொளியின் குறைகள் இலவாம்.
சூரியஒளியின் அகத்தும் இருள் நில்லாது.
சூரியஒளியின் புறத்தும் இருள் நில்லாது.
அஃது இருள் சாரா ஒளி.
அவ்வொளி வர இருள் முற்ற நீங்கும்.
அவ்வொளியில் தன்நிலை கெட்டு விளக்கொளி மூழ்கும்.
அந்நிலையில் இருளும் கெடும், ஒளியும் கெடும்.

அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

அறிவு ஒன்று அற, நின்று அறிவார் அறிவில்,
பிரிவு ஒன்று அற, நின்ற பிரான் அலையோ
அருணகிரியார் பாடற் பொருள் விரிந்து வியப்பேற்படுத்துகிறது.
இங்கு, அறியாமை இருள்.
விளக்கொளி நூல் அறிவு.
சூரியஒளி வால் அறிவு.
***
 
நாம் அறியாமை நீங்க நூல் அறிவை நாடி நிற்கிறோம்.
நூல் அறிவு அறிவைத் தருவதோடு,
அறியாமையைப் பெருக்கவும் செய்யுமாம்.
எனினும் வால் அறிவைத் தொட நூல் அறிவும் அவசியமே.
நூல் அறிவால் கூர்மையுற்று,
நாம் வால் அறிவைப் பற்ற நூல் அறிவு, தானே நீங்கும்.
நூல் அறிவு நீங்கவே அறியாமை தொலைந்தொளியும்.
மறுதலையாய்ச் சிந்திக்க,
அறியாமை தொலைந்தொளிந்தால் நூல் அறிவு நீங்கும்.
நூல் அறிவு நீங்க, வால் அறிவு பற்றப்படும்.
***
 
இப்பேருண்மையைக் கல்வியில் பெரியனான கம்பன் உணர்கிறான்.
பெற்ற நூல் அறிவால் அறியாமை முற்ற நீங்காதென அறிந்து,
அறிவை வளர்ப்பதைவிட அறியாமையை நீக்குவதே அவசியம் என.
முடிவு செய்கிறான்.
அதனால் தன் அறியாமையை நீக்க முயல்கிறான்.
இறைவர்க்கு அறிவைச் சமர்ப்பித்தால்,
அறியாமை எஞ்சி நிற்கும்,
அறியாமையைச் சமர்ப்பித்தால்,
அதனோடு அறிவும் முற்ற நீங்கும் என உணர்கிறான்.
அவை நீங்க வால் அறிவு வயப்படும் எனும் உண்மை,
அவனுக்குத் தெற்றெனப் புலனாகிறது.
நீண்ட நெடிய சிந்தனையின் பின் உளம் மகிழ,
ஆண்டவர்க்கு ஆராதனையாய்த் தன் அறியாமையைச் சமர்ப்பிக்கிறான்.
அச்சமர்ப்பிப்பால் அறியாமை முற்ற நீங்க,
பெற்ற நூல் அறிவும், முற்ற நீங்கிப்போகிறது.
அதைத் தொடர்ந்து கம்பனின் அறிவு,
வால் அறிவின் தொடர்பைப் பெறுகிறது.
அதனால் தான், அவ் வால் அறிவோடு அவன் படைத்த காவியம்
காலங்கடந்து நிலைக்கிறது.
அதுமட்டுமன்றி,
கற்போர்க்கும் அக்காவியம் வால் அறிவைப் பெறும் வல்லமை தருகிறது.
***
 
எனினும் நம் மனத்துள் ஒரு குடைச்சல்.
எது எப்படியாயினும்,
இறைவர்க்குத் தாழ்ச்சியைச் சமர்பித்தல் முறையாமோ?
உலகியலைக் கம்பன் மீறுவது சரியா?
சிந்திக்க விடை கிடைக்கிறது.
உயர்வும், தாழ்வும் நூல் அறிவுடைய நமக்கேயாம்.
இருவினை ஒப்பு நிலையை இயல்பாய் உற்ற,
இறைவர்க்கு அவை இல்லை.
அதனால் தான் அச்சமின்றிக்; கம்பன்,
அறிவு, அறியாமையின் உயர்வு, தாழ்வு பற்றிச் சிந்திக்காமல்,
அந்த ஆண்டவன் திருவடியில் அறியாமையைச் சமர்ப்பித்தனன் போலும்.
***
“நாராயணாய நம” என்னும் நன்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராறு மேனி கருணாகரமூர்த்திக்கு
ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!"

மீண்டும் பாயிரப்பாடலைக் காண்கிறோம்.
நம் மனத்துள்ளும்,
ஆண்டவர்க்கு ஆராதனையாய்,
அறியாமையைச் சமர்ப்பிக்கலாமோ? எனும் எண்ணம் துளிர்க்கிறது.
அறியாமை நீங்க அறிவு நீங்குமன்றோ!
வருந்திப்பெற்ற அறிவை நீக்குவதா?
அச்சத்தால் அயர்கிறது நம் மனம்.
நூல் அறிவையே அறிவெனப் பற்றி நிற்கும்,
எம்மனோர்க்கு அஃது முடிந்த காரியமா?
கம்பன் வாழ்க!
******
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.