இவர்தமக்கும் இதயமது இருப்பதாமோ ? - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

இவர்தமக்கும் இதயமது இருப்பதாமோ ? - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்
 
லகதிர மீண்டும் ஒரு தீமை இந்த
ஒப்பற்ற தேயத்தில் விழைந்து போச்சாம்!
நலங்களெலாம் பொன்போல மெல்ல மெல்ல
நல்லவர்கள் வாழ்த்திடவே தலையைத் தூக்கி
நிலம் அதிர்ந்த போர் முடிந்து நிமிர்ந்து நிற்க
நிம்மதிதான் இனி என்று நினைந்தவேளை
குலம் அதிர குண்டுகளும் வெடித்துச் சீறி
குதறியதே கொடுமைதனை என்ன சொல்ல?
 


தீயவர்கள் பாவமெலாம் பொறுத்த ஐயன்
சிலுவைதனைத்  சுமந்தே தான் செகத்தோர் வாட
மாயும் வரை சிலுவையிலே அறையப்பட்டு
மண்மீது உயிர்போக்கி உயிர்த்த நாளில்
தேயமெலாம் அவன் புகழை நினைந்து நல்ல
தேற்றமுறும் வேளையிலே மனங்கள் ஒன்றி
தாயெனவே பகைவர்க்கும் அன்பு செய்த
தன்னளியோன் புகழ் பாடி வணங்கி நிற்க.

பேய்மனதில் புகுந்ததனால் பெரிய வஞ்சப்
பிழை செய்ய நினைத்தோர்கள் அருளே இன்றி
போய் வணங்கி நின்றவரைப் புல்லாய் எண்ணிப்
பொசுக்கிட்டார் புவியெல்லாம் நடுங்கிப் போக
வாய் மனது உடலெல்லாம் வஞ்சம் கொண்ட
வலிய மனத் தீயவரும் வற்றும் நெஞ்சால்
தாய் மகவோடன்பு நிறை உறவையெல்லாம்
தரணி தனில் புழுவாகப் பொசுக்கிவிட்டார்.

கருணை நிறை இயேசுபிரான் கழலைப் போற்றி
கண்மூடி இருந்தவரைக் காலன் ஒப்பார்
இருளகன்ற நன்னாளில் இரையாய்க் கொண்டார்
இவர்தமக்கும் இதயமது இருப்பதாமோ?
வருபகையால் உயிர்பறித்து மகிழும் இந்த
வஞ்சகரால் ஓருயிரை மீண்டும் மண்ணில்
உருவகித்துத் தந்திடவும் முடியுமாமோ?
ஒப்பற்ற தீச்செயலை என்னவென்போம்!

போர் நின்று போனதனால் புகழே பூத்து
பொன்னாக இத்தேசம் மலரும் வேளை
ஆர் கண்தான் பட்டதுவோ? அழிவை மீண்டும்
அரங்கேற்றி மகிழ்கின்றார் அசிங்கம் தோய
நேர் நின்று பகை முடிக்கத் தெரியாப் புல்லர்
நினைத்தபடி  உயிர்பறித்து மகிழ்வு கொண்டார்
வேர் அறுந்த பகை மீண்டும் விளைந்ததேயோ?
வேற்றுமைகள் விளைந்தேதான் தொலைந்ததேயோ!

மனிதர்களை ஒன்றாக்க வந்த நல்ல
மாண்புடைய மதங்களொடு மொழிகள் தம்மை
தனிப்பகையின் கருவிகளாய் ஆக்கித் தீயர்
தர்மமதைச் சிதைக்கின்றார், தருக்கே ஓங்க
இனிப் பழையபடி இந்த மண்ணில்த் தீமை
எழுந்திட்டால் என் செய்வோம்? எங்கள் தேயம்
சனி மகத்தில் புகுந்ததெனச் சரியுமன்றோ!
         சஞ்சலங்கள் தீர்த்திடுவார் எவரோ பாரில் ?

உயிர் இழந்து உடல் புண்ணாய் உழலும் எங்கள்
உறவுகளை அன்பதனால் அணைத்து நிற்போம்
பயம் அறுந்து அவர் நிமிரப் பக்கம் நின்று
பண்பாக அவர் துயரைப் பகிர்ந்து நிற்போம்.
கயவர்களால் இம்மண்ணின் அமைதி தானும்
கவிளாமல் நாம் கைகள் கோர்த்து நிற்போம்.
அயலவரை, மதம் மொழியைக் கடந்து நின்று
அன்பதனால் உறவாக்கி மகிழ்ந்து நிற்போம்

வம்பதனால் தீமைசெய்வோர் வற்றும் நெஞ்சும்
        வழிமாறி நன்மையின்பால் வருதல் வேண்டும்
தம் உறவை இழந்திதையம் வாடி நிற்கும்
        தமர் எல்லாம் மனம் தேறி நிமிர்தல் வேண்டும்
வெம்பகையை விழைக்கின்ற வீணரெல்லாம்
        விழி திறந்து உண்மை ஒளி காண வேண்டும்
கம்பனது எண்ணம் போல் கலியும் தேய
        கனிந்தேதான் மானுடமும் வெல்ல வேண்டும்
                                                  ***
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.