எங்கள் காலத்துக் கவிகாள மேகம் !
கவிதை முற்றம் 15 Dec 2016
சுவைமிகு படையலீந்தளித்த
கல்வயல் இன்று இல்லையா? அந்தோ!
காலனுக் கணி தெரியாதோ?
தொல்லியல் பறிந்து கவிதையின்
நவமாம் துறைதொறும் தன்பெயர்நிறுவி
நல்லியல் வாணன் நடந்தனன், நாங்கள்
‘இனியாரைத் துணைக்கொள் வதுவே?’
தங்கவோர் இடமும் இன்றியே தமிழர்
தாங்கொணாத் துயர்உறு வேளை
‘இங்குவாருங்கள்’ என்றுவந் தழைத்து
இருப்பிட மீந்தெமைப் புரந்தோன்
எங்கள் காலத்துக் கவிகாள மேகம்
என்றிருந் தாண்டனன், புகழ்
தங்கிடு மாறு தனிப்பெயர் நிறுவி
தாவினன் கவி தவித்திடவே.
கம்பன் கழகத்தின் சார்பில்
ஸ்ரீ. பிரசாந்தன்