எறிகணை 39
கேள்வி :
சென்றமுறை கேள்வி பதிலில் தாங்கள் எங்களது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்ட கருத்தினைக் கண்டித்து விமர்சித்திருந்தீர்கள். உங்களுக்கு அவரைப் பிடிக்காதா என்ன?
பதில்:
யார் சொன்னது? ஆளுமை கண்டு நான் மதிக்கும் பெண்மணிகளில் அவரும் ஒருவர். இந்திராகாந்தி, மார்கிரட்தச்சர், ஜெயலலிதா போன்ற ஆளுமைப் பெண்மணிகளின் வரிசையில்த்தான் அவரை நான் என் மனதில் வைத்திருக்கிறேன்.
ஏதோ பக்கத்து வீட்டுப் பெண்மணி போன்ற மென்மையான அவருடைய தோற்ற எளிமை எப்போதும் என் மனதைக்கவரும். பாராளுமன்றத்தில் கர்ச்சிக்கும் போது அவரா இவர்? என ஆச்சரியப்படும்படியாய் வேறுவடிவம் எடுத்து வியக்க வைக்கிறார். எதிரணியின் கேள்விகளுக்குத் தேவையான பதில்களை, விரல் நுனியில் வைத்து வீசி எறிகையில், அவருடைய அறிவாழம் வெளிப்படுகிறது. எதிரிகளைப் பந்தாடும் அவரது இலாவகமான தர்க்க நுட்பம் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.
ஆண்கள் நிறைந்த பாரத பாராளுமன்றத்தினுள், பெண் சிங்கமாய் அவர் எழுந்து சீறுகையில், பாரதியின் புதுமைப்பெண்கனவு நனவாகி விட்டதாய் நினைக்கத் தோன்றுகிறது. எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தை உரைக்கும் அவரது துணிவு அலாதியானது.
மேற்சொன்ன அவரது இந்த இயல்புகளால் எப்போதும் கவரப்படுபவன் நான். நம் தமிழினம் பெருமை கொள்ளும் பெண்மணி இவர் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை.
என் மனதில் அத்தனை உயரத்தில் அவரை வைத்திருப்பதால்த்தான் சென்றமுறை அவரை விமர்சிக்க வேண்டி வந்தது. தேவை கருதி உயரந்தவர்கள் படி இறங்கிவிடக்கூடாது என்ற எனது ஆதங்கம் தான், சென்ற முறை எனது பதிலாய் வெளிப்பட்டது. மற்றும்படிக்கு நான் அவரது பரம ரசிகன்.
கேள்வி :
யாழ்ப்பாணத் திருவிழாக்களில், பல நாதஸ்வர தவில் வித்துவான்கள் ஒன்றாய்ச் சேர்ந்து மங்கள இசை வாசிக்கும் அற்புதமான காட்சிகளை ‘பேஸ்புக்கிலும’, ‘யூரியூப்புகளிலும்’ பார்க்கிறீர்களா?
பதில்:
பார்க்காமல் விடுவேனா?
மங்கள வாத்தியத்திற்கு இருக்கும் மதிப்பு, வேறு எந்த வாத்தியத்திற்கும் வர முடியாது. ஆயிரமாய் நிற்கும் மக்கள் கூட்டத்தினைத் தாண்டி தன்னை வெளிப்படுத்தும் “ராஜவாத்தியம்” அது. நம் பெரியவர்கள் எத்தனையோ வாத்தியங்கள்; இருக்க, இதற்கு மட்டும் ‘மங்களவாத்தியம்’ என்ற ‘டைட்டிலை’ சும்மாவா கொடுத்திருப்பார்கள்?
மங்களம் விளைவிக்கும் தன்மை கொண்டதால்த்தான் இறைவனின் சன்னிதானத்திலும் வீட்டின் மங்கள காரியங்களிலும் இந்த வாத்தியத்திற்கு தனி இடம் கொடுக்கப்பட்டது.
இன்று மேற்கு நாட்டுச் சில்லறை வாத்தியங்களுடன் இணைத்து இந்த ராஜவாத்தியத்தை சேவக வாத்தியகமாக சிலர் ஆக்கிக் கொண்டிருப்பது வேதனை தருகிறது.
இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன்! மங்களவாத்தியக் ‘கோஷ்டி’ ஒன்று நின்று வாசித்தாலே சூழ்நிலை தெய்வீகமாகும். இத்தனைபேர் நின்ற வாசித்தால் சூழ்நிலையின் செழிப்பைக் கேட்கவும் வேண்டுமா?
ஆனால் ஒன்று! இரண்டு வித்துவான்கள் தனித்து வாசிக்கும்போது உள் வாங்கப்படும் இசையின் சுத்தம், இந்த கோஷ்டி கானத்தில் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
பலர் சேர்ந்து வாசிக்கும்போது சரியான ‘அவுட்லைன்’ இல்லாமல் மொத்தமாக ஒரு பாட்டைக் கேட்க முடிகிறதே தவிர, சுத்தமான வரையறையுடன் அப்பாடலை நாம் கேட்க முடிவதில்லை.
“கும்பலில் கோவிந்தாவாக” ஆளுக்கொரு சங்கதி வாசித்து ‘அசத்துகிறார்கள்’(?) எந்த வித்துவானும் இத்தகைய கோஷ்டி வாசிப்பில் பயமின்றி இணைந்து கொள்ளலாம் போல்த் தெரிகிறது.
இந்த கோஷ்டி கானத்தில் பெரிய வித்வான்கள் அனுபவித்து வாசிக்க, வெறுமனே நாதஸ்வரத்தை வாய்க்குள் வைத்து ஆட்டிக்கொண்டு நின்றாற்கூட, ஒருவர் தன்னையும் வித்வானாகக் காட்டிக் கொள்ளலாம்.
பலரும் சேர்ந்து வாசிக்கும் அந்த வாசிப்பு, கண்ணுக்குத் தருகிற குளிர்ச்சியைக் காதுக்குத் தருவதில்லை என்பதுதான் நிஜம்.
கேள்வி :
ஒருநபர், நபிகள் நாயகத்தைக் கீழ்மையாய் விமர்சித்து சமூகவலைத்தளத்தில் போட்டிருந்த பதிவைப் பார்த்தீர்களா?
பதில்:
விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் கட்டுப்பாடற்ற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் அசிங்கம், அவரது அப்பதிவில் சிகரத்தைத் தொட்டிருக்கிறது. உலகத்தின் இந்தப் போக்கால் வெகுவிரைவில் மனிதநாகரிகமே சிதையப்போவது உறுதி.
“ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த மாதிரி” என்று பொதுவாகச் சொல்வார்கள். இது அதற்கும் மேலே! ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, மனிதனைக்கடித்து இப்போது மகோன்னதர்களையும் கடிக்கத் தொடங்கிவிட்டார்கள். கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் தகுதி நம்மவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.
ஒரு மதத்தினரால் போற்றப்படும் ஓர் ‘புனிதரை’, எந்தவிதக்கூச்சமும் இல்லாமல் அந்த அறிவிலி விமர்சித்திருக்கிறான். அவன் தானிட்ட பதிவில் போட்டிருக்கும் வார்த்தைகளை, ஒரு கீழ்மகன் கூட ரசிக்க மாட்டான் என்பது நிச்சயம்.
எனக்கென்னவோ அந்தப்பதிவை இட்டவன், புத்திசுவாதீனம் உள்ள ஒருவனாய் இருப்பானென்று தோன்றவில்லை. அவன் நபிகள்நாயகத்தை மட்டும் இழிவு செய்யவில்லை தமிழினத்தையும் சேர்த்தே இழிவுசெய்துவிட்டான் என்றுதான் தோன்றுகிறது.
பிந்தி வந்த, அவனது மன்னிப்பு அறிக்கையைக் கண்டபோது அவன்மேல் இரக்கம்தான் உண்டாயிற்று. கடுமையாய்ப் பயந்துபோய் இருந்தான். அவனைப் பார்த்தால், தன் செயலின் உண்மையான பாதிப்புப் பற்றி உணரும் புத்தி உள்ளவனாய்த் தோன்றவில்லை.
தான் எந்த நாட்டில் வசிக்கிறேன் என்பதையும், அந்த நாட்டில் இத்தகைய பிழைகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும்கூட விளங்காமல், அந்தப் பாதகப்பதிவை இட்டிருந்த அவனது அறியாமையை என்னவென்று சொல்வது?
நேற்று வரை அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தேன். இன்று அவனுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி :
யாழில் நடந்த தவில் வித்துவானின் தற்கொலை பற்றி?
பதில்:
அது பற்றி ஏற்கனவே எனது ‘யூரியூப்பில்’ பதிவிட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு எங்கள் கோவில் திருவிழாவிற்கு வந்து தவில் வாசித்து, அனைவரையும் கவர்ந்தான். அவன் வாசிப்பு இன்னும் மனதில் நிற்கிறது. அவன் தான் இன்று இல்லை.
தவிலை வாசிக்கத் தெரிந்த அவனுக்கு, வாழ்க்கைபற்றி யோசிக்கத் தெரியவில்லை. தாளங்கள் தெரிந்த அவனுக்கு வாழ்க்கையின் கோலங்கள்; தெரியவில்லை. ‘லயம்’ தெரிந்த அவனுக்கு மரணத்தின் பயம் தெரியவில்லை.
பலரும் போற்ற தாளம்தப்பாது தவில் வாசித்து வந்தவன், வாழ்க்கையில் அநியாயமாகத் தப்புத்தாளம் போட்டுவிட்டான். அவனுக்காகக் கவலைப்படுவதா? அவனை நினைத்துக் கோபப்படுவதா? என்று தெரியவில்லை.
கேள்வி :
தாம் இணைந்து நின்று கேட்ட கட்சி, தேர்தலில் தோற்றுப் போய்விட்டதால், அக்கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்ற சிலர், தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சி அமைக்கும் கட்சியில் இணைவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதைவிட, கேவலமான விடயம் இது! ஒரு கட்சியின் கொள்கைகளையேற்று அதன் பிரதிநிதியாய் தன்னை அறிவித்த பின்பு, அக்கட்சி தோற்றுவிட்டதற்காக வேறு கட்சியில் சென்று இணைவோருக்கும்
கட்டிய கணவனுக்கு வசதியில்லாமல் போக, அவனைக் கைவிட்டுவிட்டு தன் தேவைகளை நிறைவேற்ற வேறு ஆடவனுடன் செல்பவளுக்கும் இடையில் வேற்றுமை இருப்பதாய்ப்படவில்லை.
முதலாவது உடலை விற்கும் வேலை. இரண்டாவது மனச்சாட்சியை விற்கும் வேலை. முன்னையதைவிட பின்னையது மிகக் கேவலமானது.
வசதி தேடிவரும் அத்தகைய பெண்ணைச் சேர்த்துக் கொள்பவனுக்கு, தன்னை விட அதிக வசதியுடைய ஒருவனைக் கண்டால் அவள் தன்னை விட்டும் ஓடி விடுவாள் என்ற உண்மை தெரியவேண்டும்.
கவுண்டமணி சொன்னது போல “இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா” என்று சொல்வீர்களேயானால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி :
நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள வந்த நடிகைகளை ஊடகவியலாளர்கள் நடத்தியவிதம் பற்றியும், நடிகை ராதிகா, சுஹாசினி போன்றோர் ஊடகவியலாளர்களைத் திட்டியவிதம் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
உங்களது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக பாக்கியராஜாவிற்கு எனது அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். போட்டிகள் நிறைந்திருந்த சினிமா உலகத்தில் நுழைந்து, தன்னாற்றலால் தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொண்டவர் அவர்.
பாரதிராஜாவின் ‘சிவப்பு ரோஜாக்களில்’, ஒரு ‘ஹோட்டல் சர்வராய்’ தலைகாட்டி மறைந்தவர், பின்னர் நட்சத்திரமாய் மாறி மிளிர்ந்தார். அவர் அமைத்துக் கொண்ட நகைச்சுவை கலந்த ‘சீரியஸ்சான’ கதைக்களங்கள், அக்காலத்தில் மக்களைப் பெரிதும் ஈர்த்தன.
மற்றைய கதாநாயகர்கள் போல கம்பீரம் காட்டாமல், ஒரு அப்பாவி ‘அசடாய்’ தன்னைக்காட்டி, கதாநாயகத் தகுதிபெற்ற அவரது பாணி வித்தியாசமானது. இவரது ‘முந்தானை முடிச்சால்’ முருங்கைக்காய்க்குக் கிடைத்த முக்கியத்துவமே, மக்கள் மத்தியில் இவருக்குக் கிடைத்த வரவேற்புக்குச் சான்றானது.
இவரை எம்.ஜி ஆரே தனது வாரிசாய் அறிவிக்கின்ற அளவிற்கு பின்நாளில் முக்கியத்துவம் பெற்றார். நிறைய இயக்குனர்களை வளர்த்துவிட்ட பெருமை இவரது தனிப்பெருமை. காலம் இருக்கையிலேயே காலங்கடந்திருக்கிறார்.
இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஊடகக்காரர்களின் செயலிலும் நடிகைகளின் செயலிலும் நாகரீகம் இருக்கவில்லை என்பதே எனது அபிப்பிராயம். மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் தங்கள் செயல்களையும் விமர்சித்துக்கொள்வது நல்லது. அது போலவே நடிகைகள், தம்மீதான மரியாதையைப் பொதுமக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதும் நல்லது.