கவிதை
உலகத்தார் வியந்திடவே ஓங்கும் நல்ல
உயர் தமிழர் தனைக்காக்க ஓய்வே இன்றி
நலம்திகழ ஆளுமையால் நிமிர்ந்து நின்று
நல்லோரை ஈர்த்தேதான் வெற்றி கண்டார்.
பலர் புகழ ஆற்றாமல் பகையைத் தேக்கி
பண்பற்றார் சிலர் அவரை ஒதுக்கி வைக்க
நிலமதிரத் துணிவோடு வெளியில் வந்து
நிம்மதியாய்ச் செயலாற்ற நினைவு கொண்டார்.
உண்மை தனை உணராது ஒதுக்கி வைத்தோர்
உளம் அதிரத் தனித்தே தான் தலைமை கொண்டு
எண்ணியதை நிறைவேற்றும் ஆர்வத்தோடு
எழுந்து புது அவதாரம் எடுத்து வந்தார்.
விண்ணதிர அன்பரெலாம் விரைந்து வந்து
விழுத்துணையாய் அவரோடு உடனாய் நிற்க
கண்விரித்து மாற்றணிகள் கவலை கொண்டு
கதியிழப்போம் என அஞ்சிக் கவன்று நின்றார்.
பல காலம் ஆட்சி தனைக் கையில் வைத்து
பாரில்தமை எதிர்த்திடவே இனியாரென்று
வலம் வந்தோர் வலிமையுடன் வந்து நின்ற
வல்லவரைக் கண்டேதான் மயங்கி நின்றார்.
நலமுறவே தமிழ் நாட்டின் பெருமை காக்க
நல்லவராய் வந்தவரைத் தமிழரெல்லாம்
தளமதனில் இனி நமக்கு நல்வாழ்வென்று
தாம் உரைத்து அவர் பின்னே திரண்டு நின்றார்.
மாற்றங்கள் செய்யவென வந்தோர்கூட
மன்னவரின் வருகையினால் மயக்கம் கொண்டார்
ஏற்றுரைக்க முடியாது இகழ்ச்சி செய்து
இயலாமையால் பேசி இனிமை கண்டார்.
வேற்றவரின் உரைக்கெல்லாம் அஞ்சிடாமல்
வேழம் என நின்றவரின் நிமிர்வு கண்டு
காற்றடித்த பக்கமதாய்ப் பறக்கும் நல்ல
காற்றாடி போல் மக்கள் தொடர்ந்து வந்தார்.
மற்றவரின் கீழ்மைக்கு விருந்திடாமல்
மண்காக்க நிமிர்வுடையோர் மட்டும் போதும்
எற்றித்தான் தீமைகளை எதிர்ப்போம் நாங்கள்
எங்கள் அணி எவரையுமே வெறுத்திடாது
பற்றித்தான் கைபிடித்து எளியோர் தம்மை
பாரினிலே உயர்த்துவதே எங்கள் வேலை.
முற்றித்தான் போயிருக்கும் தீமையெல்லாம்
முடித்திடுவோம் எனச் சொல்லி முடுகி வந்தார்.
தனை வளர்த்த தாய்க்கட்சி தன்னைப் போற்றி
தரமுடனே அவர் உரைத்த வார்த்தை கேட்டு
அனைவருமே கண்கலங்கி நின்றாரம்மா!
அவருடைய நன்றிதனைக் கண்டாரம்மா!
முனைப்போடு பாரதத்தைக் காத்து நிற்கும்
“மோடி”தனின் மேல் அன்பு குன்றிடாமல்
நினைந்தேதான் புதிய வழி சமைத்துக் கொண்டு
நிற்பதற்குத் துணிந்தவரைப் போற்றி நிற்போம்!
ஆற்றலொடு அறிவன்பு அறிவோர் சேர்க்கை
அஞ்சாத மனவலிமை ஆசையின்மை
நேற்றைவிடத் தமிழர்களை உயர்த்தும் எண்ணம்
நேர் நின்று எதிரிகளைக் காணும் வீரம்
போற்றித்தான் பெரியோரை உயர்த்தி வைத்தல்
புல்லர்களைத் துடைத்தெறிந்து வீசும் நோக்கம்
ஏற்று உயர் பண்பெல்லாம் எடுத்துக் கொண்டு
எழுந்தவரை இளையோர்கள் பணிந்து நின்றார்.
நாளொன்றில் பல லட்சம் தொண்டர் சேரும்
நயமிகுந்த வெற்றிதனை எவரே கொள்வார்?
வாள் ஒத்த கூர்மையுடன் வழிகள் சொல்லி
வருங்காலத் தலைமுறையை எவரே வெல்வார்?
நீளத்தான் தமிழ்நாட்டின் பெருமை யெல்லாம்
நெஞ்சத்துள் புகுமாறு எவரே சொல்வார்?
தேள் ஒத்து விடம் நல்கும் தீயோர் தம்மை
தீர்த்தேதான் தேயத்தை இவரே வெல்வார்.