"சேர்ந்தும் கெடுத்த சீதக்காதிகள்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"சேர்ந்தும் கெடுத்த சீதக்காதிகள்"  -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(தமிழ்மக்கள் கூட்டணிபற்றிய விமர்சனத்தொடர் அடுத்தவாரம் தொடரும் கால முக்கியத்துவம் கருதி இவ்வாரம் இக்கட்டுரை வெளியாகிறது.)

ள்ளம் மீண்டும் சோர்வில்,
யாரும் எதிர்பாராத வகையில்,
பல்கலைக்கழக மாணவர்களின் தூண்டுதலால்,
சேராத நவக்கிரகங்கள் ஒன்று சேர்ந்தாற்போல,
திசைக்குத் திசை திரும்பி நின்ற நம் தலைவர்கள் ஐவர்,
ஒரே திசைநோக்கி ஒன்று சேர்ந்த அதிசயம்,
ஒருசில நாட்களின் முன் நடந்தது.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர்களின் ஒற்றுமை கண்டு,
தமிழ்மக்கள் மகிழ்ந்து போனது உண்மை.
ஆனால்,
இதுவரைகாலமும் இவர்கள் எப்படி சேராமல் நின்று இனத்தைக் கெடுத்தார்களோ,
அதுபோலவே சேர்ந்து நின்றும் இனத்தைக் கெடுத்துவிட்டார்களோ? என,
இன்றைய நிலையில் எண்ணத்தோன்றுகிறது.

✠✠✠
 


தத்தம் கட்சிநலம், பதவிநலம் என்கின்ற பேரலைகளுக்குள்,
தம் பிரிவினையால் இனநலம் என்கின்ற பெரிய விடயத்தை,
தொலைத்து நின்ற அத்தலைவர்கள்,
இப்போது 'தேரை இழுத்துத் தெருவில் விட்ட' கதையாய்,
தமது தீர்க்கதரிசனம் இல்லாத செயற்பாட்டால்,
மீண்டும் இனத்தைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றனர்.

✠✠✠

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலின்,
பெரும்பான்மையின முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு,
தமிழர் சார்பான 13 நிபந்தனைகளை முன்வைத்து,
அதனை ஏற்க முன்வரும் ஜனாதிபதி வேட்பாளருக்கே,
தமது ஆதரவைத் தெரிவிப்போம் என, 
அபூர்வமாய் இணைந்த ஐந்து தலைவர்களும்,
ஒருமித்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.

✠✠✠

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும்,
தமிழர் நலம் சார்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் அந்நிபந்தனைகள் வைக்கப்பட்ட காலம் தான் தவறுபோல் தோன்றுகிறது.
இன்றும் பேரினத்தாரில் பலர் தமிழர் நலன்களைக் கிஞ்சித்தும் ஏற்கத் தயாராயில்லை.
இந்நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களும் வாக்களிக்கும் ஜனாதிபதித் தேர்தலில்,
சிறுபான்மைத் தமிழர் நலம் நோக்கிய நிபந்தனைகளை ஏற்று,
பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பகையைத் தேடிக் கொள்ள,
எந்தச் சிங்களத் தலைவர்தான் முன்வரப்போகின்றார்?
ஒன்றுசேர்ந்த நம் தலைவர்கள் இதைக்கூட சிந்திக்காமல்,
பொருத்தமற்ற நேரத்தில், முன்வைத்திருக்கும் பகிரங்க நிபந்தனைகளால்,
அனைத்துப் பேரின ஜனாதிபதி வேட்பாளர்களாலும்,
நிராகரிக்கப்படும் நிலைக்கு நம் இனம் தள்ளப்பட்டிருக்கிறது.

✠✠✠

கேட்ட விடயங்கள் சரியானவை தான்.
கேட்ட நேரந்தான் பொருத்தமற்றது.
மேற்படி நிபந்தனைகளை,
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித்துப் பேசுகையில்,
ரகசியமாய் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
நம்தலைவர்களின் கூட்டணி இந்நிபந்தனைகளைப் பகிரங்கமாய் முன்வைத்ததால்,
இனவாத ஊடகங்களினூடு அச்செய்தி பரப்பப்பட்டு,
பேரினத்தார் மத்தியில் பெருநெருப்பாய் அது மூண்டிருக்கிறது.
இன்று அதுபற்றிப்பேசவே பேரினத்தலைவர்கள் மருண்டு நிற்கின்றனர்.
யதார்த்தத்திற்கு ஒவ்வாத இலட்சியங்கள் என்றும் நிலைக்கப்போவதில்லை.
ஒரு பேச்சுக்காய் மேற்படி நிபந்தனைகளை,
ஒரு சிங்களத் தலைவர் ஏற்பதாகவே வைத்துக் கொள்வோம்.
(அது நடக்காது என்பது சர்வநிச்சயம்.)
தேர்தல் வெற்றியின் பின் அவர் அவற்றை நடைமுறைப்படுத்துவார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அடுத்தடுத்து பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாற்றைப் பார்த்தபின்பும்,
மீண்டும் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராகும் நம் தலைவர்களை என்னென்பது?
பகிரங்கமாய் வைக்கப்ட்ட இந்நிபந்தனைகள் சிறுபிள்ளைத்தனமானவை என்பதில்,
எந்த ஐயத்திற்கும் இடமில்லை.

✠✠✠

தமிழர் உரிமைபற்றிச் சிங்களத் தலைவர்கள் பேசவே தயாராகவில்லை.
நாமோ சமஷ்டி என்றும் ஒற்றையாட்சி என்றும்,
ஒருநாட்டுக்குள் இரு தேசம் என்றும் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
சபையில் சாப்பாடே இல்லை என்று சொன்னபிறகு,
போட்ட இலையில் ஓட்டை என்று சண்டை பிடித்தானாம் ஒருவன்.
நம் நிலையும் அதுவாகத்தான் இருக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டாய் பேச்சுவார்த்தை, சண்டையென,
பலவழிகளாலும் நம் உரிமை நோக்கி முயன்று தோற்றுவிட்டோம்.
இன்னும் உலக அரசியலுக்கேற்ப புதுவழி காணாமல்,
அதே பழைய வழிகளில் உரிமை பெற எண்ணும் நம் தலைவர்களை என்சொல்ல?
ஒருவேளை தமிழர் சார்பான ஓர் தீர்வுத்திட்டம் வந்தாலும்,
அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாய் வெற்றிபெற வேண்டும்.
பின்னர் சர்வஜன வாக்கெடுப்பில் அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இதுதான் இன்றைய யதார்த்தநிலை.
இதெல்லாம் நடக்கவா போகிறது?
அத்திவாரமே இல்லாமல் கட்டிடம் கட்ட முயல்கிறார்கள் நம் தலைவர்கள்.

✠✠✠

மேற்சொன்னவற்றை எல்லாம் அறியாதவர்கள்போல்,
யதார்த்தம் அறியாமல் 13 நிபந்தனைகளை,
பகிரங்கமாய் முன்வைத்திருக்கும் நம் தலைவர்களின் செயல்,
நகைப்பூட்டுவதாய் இருக்கிறது.
மேற்படி நிபந்தனைகளால் இனத்திற்கு விளையக்கூடிய நன்மை தீமைகளை,
நம் தலைவர்கள் ஏனோ  ஊகிக்கத் தவறி விட்டார்கள்.
வரும் பொருள் அறிவதில் ஏற்பட்ட வறுமை.
முன் சொன்னாற்போல மேற்படி நிபந்தனைகள்பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களுடனான,
தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அழுத்தி உரைத்து ஆதரவளித்தபின்,
அந்நட்பால் அவற்றைப் பெற்றிருக்கவேண்டுமேதவிர,
இங்ஙனம் அந்நிபந்தனைகளைப் பகிரங்கப்படுத்தியது மாபெரும் தவறேயாம்.
சொற்ப இலாபத்திற்காகப் பெரிய இலாபத்தை இழக்க,
எந்த மடையனும் முன் வரமாட்டான் எனும் உண்மையை,
ஏன்தான் நம் தலைவர்கள் சிந்திக்கத் தவறினார்களோ? தெரியவில்லை.

✠✠✠

முக்கிய வேட்பாளர்கள் மூவரும் இவர்தம் நிபந்தனைகளை,
முற்றாக நிராகரித்துவிட்ட இன்றைய நிலையில்,
அடுத்த நடவடிக்கைபற்றி நம் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
எமது நிலையிலிருந்து இறங்கமாட்டோம் என,
இவர்கள் பிடிவாதம் பிடித்தால்,
இவர்களைக் கைவிட்டு தேர்தலைச் சந்திக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் தயாராகிவிட்டார்கள்.
ஒருவேளை அங்ஙனம் நிகழ்ந்தால்,
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில்,
வென்றவர், தோற்றவர் எனும் இருவர்க்கும் நம் இனம் பகையாகும்.
அதனால் யாரோ ஒருவரால் நம்மீது அறம்மீறிய அழுத்தம் செலுத்தப்படுகையில்,
பாராளுமன்றினுள் நமக்குச் சார்பாகக் குரல் கொடுக்க எவரும் இல்லாது போவர்.
இந்நிலை நம் இனத்திற்கு உகந்தததா? சிந்திக்கவேண்டியிருக்கிறது.

✠✠✠

தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாகவோ அல்லது,
தம் நிபந்தனைகளை முன்னிலைப்படுத்துமுகமாக,
சிவாஜிலிங்கத்தை ஆதரவளிக்கப்போவதாகவோ,
இவர்கள் முடிவெடுக்கும் பட்சத்திலும் மேற்சொன்னதுதான் நடக்கப்போகிறது.
ஒருவேனை இனி இவர்கள் தம் நிபந்தனைகளைக் கைவிட்டு இறங்கி வந்தாலும்,
நம் பலயீனம் தெரிந்து எதிரிகள் மேலும் பலம் பெறுவார்கள்.
ஏலவே இந்தத் தலைவர்களோடு இணையமாட்டோம் என்று பிரிந்து நிற்கும்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிரிகளின் சறுக்கல் கண்டு எள்ளிநகையாடுவார்.
'ஏறினால் கழுதைக்குக் கோபம் இறங்கினால் முடவனுக்குக் கோபம்' என்ற நிலையில்,
என்ன செய்யப் போகிறார்கள் நம்பஞ்சமூர்த்திகள்?
மொத்தத்தில் நம் தலைவர்களின் கூட்டுமுயற்சி,
நம் இனத்திற்கான வேட்டு முயற்சியாய் ஆகிவிட்டது,
விதியின் பிழை!

✠✠✠

அபூர்வமாய் நிகழ்ந்த நம் ஐந்துதலைவர்களின் கூட்டு,
புலி வாலைப்பிடித்த கதையாய் ஆகியிருக்கிறது.
விட்டாலும் சரி பிடித்தாலும் சரி கடி விழப்போவது நிச்சயம்.
காலம் அறிந்து ஆழச்சிந்திக்காமல் எதிரியின் மூக்கைத் தொட்டுவிட்டு,
இப்போது முழிபிரட்டி நிற்கிறார்கள் நம் தலைவர்கள்.
யாரினது வழிகாட்டலோ அல்லது அவசரப்பட்ட கைகோர்ப்போ,
மீண்டும் நம் தலைவர்களால் இனம் சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது.
இதுநாள் வரை சேராது நின்று இனத்தைக்கெடுத்த சீதக்காதிகள்,
இப்பொழுது மீண்டும் சேர்ந்து கெடுத்திருக்கிறார்கள்.

✠✠✠

அதிமானம் அரசர்க்குக் குற்றம் என்கிறான் வள்ளுவன்.
ஒரு தலைவன், பிழையான ஓர் முடிவை எடுத்துவிட்டு,
மானம் காப்பதாய்ச்சொல்லி அம்முடிவில் வலிந்து நிற்றல்,
அவன் இனத்தை அழிக்கும் என்பது வள்ளுவன் கருத்து.
இதற்கான முன் உதாரணம் வேண்டுவோர்,
மு.முதலமைச்சரின் செயற்பாடுகளைக் காண்பார்களாக!
அவரை மட்டும் சொல்வது சரிதானா?
இதைத்தான் நம் முன்னைத் தலைவர்கள் பலரும் செய்தார்கள்.
காலம் அறியாமல் இடமறியாமல், வலியறியாமல் செயற்பட்ட,
நம் தலைவர்களின் செயலால் நம் இனத்தார் அரசியல் அனாதைகளாகி நிற்கின்றனர்.
எங்ஙனம் இப்பிரச்சினை தீரப்போகிறது?
இத்தலைவர்கள் கட்சி நலனுக்கு அப்பால் சிந்திக்கப்போவதில்லை.
இவர்களை ஒன்றிணைத்த இளையோரே,
இவர்தமக்கு வழிகாட்டி இனத்தைக் காக்கட்டும்.
இப்போதைக்கு அது ஒன்றே வழியாம்.

✠✠✠✠ 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.