நுண்மாண்நுழைபுலத்தரிசனம் !

நுண்மாண்நுழைபுலத்தரிசனம் !
12 Nov 2015
 
''நுண்மாண்நுழைபுலம்"
மேடைகளிலும் கட்டுரைகளிலும்,
அறிஞர்களை உயர்த்தப் பயன்படுத்தப்படும்,
வெறும் அலங்காரத் தொடராகவே,
ஆரம்பத்தில் இத் தொடர் எனக்கு அறிமுகமாகியிருந்தது.
பொருள் விளங்காமலே இத்தொடரைப் பாவித்து,
பலரை நான் பாராட்டியிருக்கிறேன்.
நுண்மையான மாட்சிமைப்பட்;ட நுழைந்து தேடும் அறிவு என,
இத்தொடருக்கான பொருளை பிற்காலத்தில் அறிந்தபோதும்,
அதன் முழுப்பெறுமதியையும் உணர்ந்திலேன்.
அத்தகு அறிவை நான் சந்திக்காமலே இருந்தது,
அதன் காரணமாக இருக்கலாம்.
பேராசான் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் அவர்களை,
என்று சந்தித்தேனோ,
அன்றுதான் இத்தொடரின் முழுப்பெறுமதியையும் உணர்ந்தேன்.
இத்தொடரின் பெறுமதியை என்பதைவிட,
தமிழின் பெறுமதியை,
அறிவின் பெறுமதியை,
தேடலின் பெறுமதியை,
உணர்ந்தேன் எனல் சாலப்பொருத்தமாம்.
 

✽✽✽

எளிமைப்படுத்துவதாகச் சொல்லி,
தமிழை,
மலினப்படுத்தி வரும் இக்காலத்தில்,
சிறுகதைகளும்,
நாவல்களும்,
மேலோட்டமான கட்டுரைகளுமே,
கல்வியாய் முடி சூட்டப்பட்டன.
''கனகா கதறிக்கதறி அழுதாள்" என்று,
எழுதப்படும் இன்றைய தமிழைப்படிக்க,
எவருக்கும் ''நுண்மாண்நுழைபுலம்"" ஒன்றும் அவசியமில்லை.
✽✽✽

பத்திரிகைத் தமிழளவில்,
படிக்குந்தமிழும் வந்துவிட்ட இக்காலத்தில்,
அறிவுலகில்,
''நுண்மாண்நுழைபுலம்"" எனும் தொடர்,
பெரும்பாலும் வழக்கொழிந்த தொடராயிற்று.
மேற்சொன்ன கல்விச் சூழலிலேயே வளர்ந்த எனக்கு,
இத்தொடர்பற்றி விளக்கம் இல்லாமற் போனதில்,
ஆச்சரியம் என்ன?
✽✽✽

நலிந்து கிடந்த இத்தகு அறிவுச் சூழலில்,
தமிழ் மேல் உள்ள ஆர்வம் மட்டுமே தகுதியாக,
ஒரு சில பெரியார்களின் தமிழினால் ஈர்க்கப்பட்டு,
மேடைகளில் ஓர் அறிஞன் போல,
நானும் உலா வந்த காலம் அது.
பல மேடைகளிலும் என்னை பேச அழைத்ததால்,
புதிது புதிதாய் பேச வேண்டிய தேவை உருவாக,
அது படிக்கும் தேவையை உணர்த்திற்று.
பதவிகளால் இனங்காணப்பட்டு,
பேரறிஞர்களாக உலாவந்த பலரையும்,
அடிக்கடி மேடைகளில் சந்தித்ததால்,
அவர்களிடம் நான்பெற ஒன்றும் இல்லையென்பது தெளிவாகியிருந்தது.
படிக்கும் பசியோடு தக்க குருவைத் தேடித்திரிந்தேன்.
✽✽✽

''பண்டிதர்கள் ஆழக்கற்றவர்கள்" எனும் செய்தி சொல்லப்பட,
பண்டிதர்கள் சிலரைத் தேடிப் படிக்க முயன்றேன்.
அவர்களிடம் கல்வி இருந்தது.
ஆனால் எனக்குத் திருப்தி உண்டாகவில்லை.
காரணம் பெரும்பாலும் அவர்களிடம் இருந்தது,
வெறும் ''மனனக்" கல்வியே.
அவர்களும் ஓதி இருந்தார்களே தவிர,
உணர்ந்திருக்கவில்லை.
சரியானதைத் தேடுவதைவிட,
பிழையைக் கண்டுபிடிப்பதிலேயே,
அவர்களுக்கு அதிக அக்கறை.
என் மனப்பசிக்கு அவர்களாலும் சோறிட முடியவில்லை.
என் தேடல் தொடர்ந்தது.
✽✽✽

இந்நிலையில்,
கோண்டாவிலில் ஒரு கூட்டம்.
பல்கலைக்கழகம் பட்டமளித்த ஒரு பண்டிதருக்குப் பாராட்டு,
அழைப்பிதழ் சொல்லிற்று.
பல்கலைக்கழகம் பண்டிதரைக் கௌரவிக்கிறதா?
''ஏதோ இருக்கவேண்டும்" என்று என் உணர்வு உந்த,
கூட்டம் சென்றேன்.
பாராட்டப் பெற்றவர் ''வித்தகர்"
வெள்ளை வேட்டி,
வெள்ளை நஷனல்,
வெள்ளைச் சால்வை,
வழமையான பண்டிதக்கோலம்.
அதே அச்சில் வார்க்கப்பட்டவர்தானோ?
என் மனதில் ஐயம்.
✽✽✽

அன்றைய அவர் பேச்சு,
அவ்வெண்ணத்தைத் தகர்த்தது.
தெளிந்த, தேடுதலுடன் கூடிய சிந்தனை,
பொருட்தேவையை அளவாய்க் கொண்டு,
சொற்கள் பிறந்தன.
அவர் பேச்சில் வெற்றுச் சொற்கள் ஏதுமில்லை.
என்னையறியாமல் என் உள்ளம் பணிந்தது.
குரு தரிசனம் கிட்டிய சிலிர்ப்பில்,
என்னை மறந்தேன்.
அவரைச் சந்தித்த அவ்விநாடியில்,
என் மன ஏக்கம் புரிந்து,
தேவதைகள் வாழ்த்தியிருக்கும் போலும்.
தொடர்ந்து அவரிடம் பாடங்கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.
அது ஒரு தனிக் கதை.
✽✽✽

மேற்சொன்ன சந்திப்பு நடந்து ஐந்து வருடங்களாகியும்,
அவரை அணுகவும், கற்கவும்,
வாய்ப்பில்லாமல் போயிற்று.
படிக்கும் ஆசை உந்த,
எப்படியும் அவரைப் பிடிப்பது என்ற துடிப்போடு,
எனது தேடல் தொடங்கியது.
''குற்றம் பொறுக்க மாட்டார்"
''அவரிடம் படிக்கவே ஆழமான அறிவு வேண்டும்".
''கடுமையான ஆசாரசீலர்".
இப்படிப் பல மிரட்டல்கள்.
இவை எல்லாவற்றையும் விட,
இலக்கணமே தெரியாத உனக்கு,
இலக்கண வித்தகரிடம் கல்வியா?
கேள்வி மிரட்டியது.
''ஆசை வெட்கமறியாது" என்பது எத்தனை உண்மை.
இத்தனையையும் தாண்டி,
அவரைத் தேடிச் சென்றேன்.
✽✽✽

மருதனார்மடம்.
கிராமத்தின் உட்புறத்தில் ஒரு வயல்வெளி.
அதை அண்டி ஒரு தென்னந்தோட்டம்.
அதனுள்ளே மிகச் சிறிய வைரவர் கோவில்.
அக்கோவிலின் சிறிய முற்றத்தில்,
ஒரு கிழிசல் பாய்.
அப்பாயில்,
அழுக்கு வேட்டி, நரைத்ததாடியுடன் கூடிய,
ஒரு வயோதிபர்,
இடுங்கிய கண்களால் ஒரு புத்தகத்தைப் படித்தபடி,
படுத்துக் கிடக்கிறார்.
''அதோ வித்தகர்!".
ஊர் கைகாட்ட.
மெல்ல அருகில் சென்றேன்.
✽✽✽

மேடைத் தோற்றத்திற்கும் நேரிற் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம்.
புத்தகங்களில் படித்த,
அறிவாளிகளைச் சூழ்ந்திருப்பதாய்ச் சொல்லப்படும்,
''தேஜஸ்"" ஒன்றும் அப்போது என்கண்களில் பட்டதாய் ஞாபகமில்லை.
கிட்டத்தட்ட ஒரு பிச்சைக்காரத் தோற்றம்.
''இவரிடமா படிக்கப்போகிறாய்?"
பட்டுவேட்டித் தோற்றத்தை அறிஞ இலட்சணமாய் பழகிய,
என் மனம் கேள்வி எழுப்புகிறது.
✽✽✽

அவர் பேச்சின் தெளிவு ஞாபகம் வர,
அருகில் சென்று அமர்கிறேன்.
என்னைக் கண்டதும் எழும்பி வெற்றிலையைத் துப்புகிறார்.
கையிலிருந்த புத்தகத்தை அவர் கீழே வைக்க,
அது காற்றில் பறந்து,
தன் பெயர் ''சிவஞானமாபாடியம்" என்கிறது.
புத்தகத்தின் தோற்றத்திலிருந்த பழைமையால்,
எனக்கு அதில் கவர்ச்சி இல்லை.
அதை அலட்சியம் செய்து அவர் பாதம் தொடுகிறேன்.
✽✽✽

''வாரும் இரும், என்ன காரியம்?",
தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது.
''உங்களிடம் படிக்க வேண்டும்".
நெளிந்தபடி சொல்கிறேன்.
''ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போகிறீரோ?"
கேள்வியா, கிண்டலா புரியவில்லை.
''இல்லை படிக்க ஆசையாக இருக்கிறது."
இது என் பதில்.
கூர்ந்து பார்க்கிறார்.
''இதற்கு முன் என்ன படிச்சிருக்கீறீர்?"
எதைச் சொல்ல,
ஏதாவது சொல்லப்போய் கேள்வி கேட்டாரானால்?
இவருக்கு பதில் சொல்லுமளவுக்கு என்னிடம் படிப்பில்லை.
வெறுமை உணர்ந்த வெட்கத்தில் தலை குனிகிறது.
சிறிது நேரம் மௌனம்.
''கொஞ்ச நாள்பொறுத்துப் பிறகு பார்ப்போம்."
எனக்குள் எரிச்சல்.
''வேறென்ன?"
புறப்படு என்பதை நாகரீகமாய்ச் சொல்கிறார்.
சிவஞான முனிவருடன் பேசும் அவசரம் அவருக்கு
சோர்வுடன் விடை பெற்றேன்.
✽✽✽

ஆனால் விடவில்லை.
இப்படியே தொடர்ந்து மூன்று சந்திப்புக்கள்.
என் பசி கொஞ்சம் புரிந்திருக்கும் போலும்.
மூன்றாம் சந்திப்பில்,
''பஞ்சாங்கத்தைக் கொண்டுவாரும்" என்றார்.
என் நட்சத்திரம் கேட்டு,
படுபட்சி இல்லாத நாட்குறித்து,
வகுப்புக்கு வாரும் என்றார்.
''என்ன படிக்கப்போகிறீர்?"
ஆழப்பார்வையுடன் கேள்வி பிறக்கிறது.
திருக்குறள்,
இராமாயணம்,
சங்கப்பாடல்கள்,
சிலப்பதிகாரம்,
இலக்கணம் என,
என் அறிவுப் பசியைக் காட்டுவதாய் நினைத்து,
பட்டியலை நீட்டுகிறேன்.
''முதலில் ஒன்றைப் படிப்போம்."
கன்னத்தில் அறைந்தாற் போற் பதில்.
என் அறியாமை உணர்ந்து நாணிச் சுருளுகிறேன்.
✽✽✽

''திருக்குறளைக் கொண்டுவாரும்,"
குறித்த நாளில்,
திருக்குறளுடன் அவர் முன் உட்காருகிறேன்.
நான் போனபோது காலை எட்டுமணி.
எப்படியும் இன்று பத்து அதிகாரமாவது படித்து முடித்துவிடவேண்டும்,
என்று எனக்குள் எண்ணம்.
''அகர முதல எழுத்தெல்லாம்"
முதல் குறளின் அரையடிக்கு,
விளக்கம் சொல்லத் தொடங்குகிறார்.
திடீரென பசிக்குமாற் போல் ஓர் உணர்வு,
நேரத்தைப் பார்த்தால் மதியம் இரண்டு மணி.
இன்னும் அந்த அரையடிக்கான விளக்கம் முடிந்தபாடில்லை.
மேலோட்டமாகப் படித்துப் பழகிய எனக்கு,
அன்று ஒரு புதிய அனுபவம்.
✽✽✽

இனி என்னால் ஏற்க முடியாது என,
மூளை பிடிவாதம் பிடிக்க,
மெல்ல நெளிகிறேன்.
''உமக்குப்பசி வந்திட்டுதுபோல?"
கேள்வியோடு பார்க்கிறார்.
உண்மையைச் சொல்லமுடியாமல் அசடுவழியச் சிரிக்கிறேன்.
''எனக்கு எண்ணங்கள் வந்திட்டுது நிற்பாட்ட முடியவில்லை.
இன்னும் கொஞ்ச நேரம் கேளும்"- தொடர்கிறார்.
ஒரு வழியாக மூன்று மணிக்கு,
அரையடிக்கான விளக்கமும் முடியாத நிலையில்,
வகுப்பு முடிகிறது.
✽✽✽

களைப்பு, வியப்பு, பிரமிப்பு, திகைப்பு என,
பல உணர்ச்சிகளும் தாக்க,
அந்த நிமிடம்,
நான் நானாக இல்லை.
''நுண்மாண்நுழைபுலம்" என்ற தொடரின் விளக்கத்தை,
முதன்முதல் உணர்ந்தேன்.
தமிழ் இவ்வளவு ஆழமானதா?
தமிழை இப்படியும் படிக்க முடியுமா?
தமிழை இப்படியும் படித்தவர்கள் இருக்கிறார்களா?
என் மனதில் உளைச்சல்.
தமிழறிவைப் பொறுத்தவரை,
என்னுள்,
பாலமை நீங்கிப்பருவமடைந்த ஓர் உ ணர்வு.
என் இனத்தின் பெருமை
என் மொழியின் பெருமை
என் சந்ததியின் பெருமை
ஏன் எனது பெருமை கூட
அன்று என்னுள் விசுவரூபம் எடுத்தது.
✽✽✽

அதன் பின் மூன்று ஆண்டுகள்
அவரிடம் படிக்கும் வாய்ப்புக் கிட்டிற்று.
அந்த மகானின் தொடர்பில்,
எனக்கு கிடைத்த தரிசனங்கள் பல,
உபதேசங்கள் பல,
தெளிந்த உண்மைகள் பல,
அறிவின் விஸ்வரூபத்தரிசனம் கிட்டியது.
''நுண்மாண்நுழைபுலம்" எனும் தொடரின் முழுவிளக்கத்தை,
அவர் அறிவில் கண்டு,
சிலிர்த்தேன்.
✽✽✽

கட்டுரைத் தலைப்பின்படி,
இந்த இடத்தில் நான் கட்டுரையை முடிக்க வேண்டும்.
ஆனால் இன்னும் சில விசயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
''மற்றொன்று விரித்தல்"
எனும் குற்றம் இருக்கிறது.
ஐயாவே இப்படிச் சொல்லப்போகிறார்.
எனக்குக் கவலையில்லை.
எண்ணங்கள் முடியாமல் கட்டுரை எப்படி முடியும்.
ஆகவே இன்னும் சில சொல்ல வேண்டும்.
வேண்டுமானால் இனிச் சொல்பவற்றை,
கடலைக்காரி சுண்டினால் அளந்த பிறகு,
உபரியாய்ப்போடும்,
ஒரு கைபிடிக்கடலைபோல,
ஆய்வாளர்களின் கட்டுரைகளில் வரும்,
பின் இணைப்புச் செய்திகள் போலக் கொண்டு,
ஏற்றருள்க.
✽✽✽

தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை,
ஐயாவுக்குச் சில தனி அபிப்பிராயங்கள் உண்டு.
அவற்றுட் சில,

"ஒரு நூலைத் தெளிவாய் விளங்கினால்,
பின் எல்லா நூலையும் தானாய் விளங்கலாம்."

"அதிகம் படித்தால் பிறகு பேசப்பயப்படவேண்டி வரும்."

"புத்தகங்களில் அவாப்படத்தேவையில்லை.
உண்மையாய்ப் படிக்க விரும்பினால், 
புத்தகம் தானே கைக்கு வரும்."

"தெரிந்தவர் மூலம் அணுகி,
பெரிய நூல்களோடு நட்புண்டாக்க வேண்டும்."

"ஒன்றை விளங்குவதற்கு முன், 
கேள்வி கேட்கக்கூடாது."

இவை அவர் எனக்கு உபதேசித்தவை.
✽✽✽

ஆரம்பத்தில் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந்தன.
நாளடைவில் அவற்றின் உண்மையை உணர்ந்து,
வியந்து சிலிர்த்;தேன்.
ஏதேனும் கேள்வி கேட்டால்,
கேள்வி கேட்ட வாய்மூடுமுன்,
பதில் சொல்லத் தொடங்குவதுதான்,
அறிவு என்று நினைக்கும் இன்றைய உலகில்,
கேள்வியை உள்வாங்கி,
நிதானித்துப் பதில் சொல்வதும்,
தேவை ஏற்படின்,
''நாளைக்கு வாரும் பதில் சொல்கிறேன்"
என்று சொல்வதும்,
அவரிடம் எனக்கு வியப்பூட்டிய விடயங்கள்.
✽✽✽

ஒரு நாள் என் கேள்விக்கு நாளை பதில் கூறுவதாகச் சொல்கிறார்.
அடுத்த நாள் நான் வகுப்புக்குச் செல்ல சிறிது தாமதம்.
ஒழுங்கை தாண்டி வீதியில் வந்து நிற்கிறார்.
என்னைக் கண்டதும் முகத்தில் சூரியன்.
''நீர் இன்றைக்கு வராமல் விட்டுவிடுவீரோ என்று பயந்திட்டன்.
நீர் கேட்ட கேள்விக்கு பதிலை விளங்கிட்டன்.
வாரும்" என்று சொல்லத் தொடங்குகிறார்.
சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் ஓர் நிம்மதி.
''இனி நீர் போவதென்றால் போகலாம்".
மாணவனின் ஐயம் தீர்த்துவிட்ட திருப்தி அவர் முகத்தில்.
இந்தக்காலத்தில் இப்படியொரு மனிதரா!
வியந்தது என் நெஞ்சம்.
✽✽✽

ஒரு கேள்வியைக் கேட்டால்,
அதற்குப் பதில் காட்டி,
பின் அப்பதிலையே கேள்வியாக்கி,
அதன் பதில் காட்டி,
மீண்டும் அதனைக் கேள்வியாக்கி.........
இப்படியே உள்நுழைந்து செல்லும் அவர் அறிவு கண்டு,
நான் கொண்ட திகைப்பை,
வார்த்தைகளுள் அடக்கமுடியாது.
✽✽✽

பொருள் பற்றிய சிந்தனையே இன்றி,
அறிவே வாழ்வாக,
அறிவே தேவையாக,
அறிவே உணவாக,
அறிவே சுவாசமாக வாழும்,
மனிதருள் மனிதரல்லாத மனிதர் அவர்.
''திருவேறு தள்ளியராதல்வேறு" எனும் குறளடிக்கு,
தன் வாழ்வால் விளக்கம் தந்தார்.
உலகத்தில் ஒட்டாத வாழ்வு.
இஃது எங்ஙனம் சாத்தியம்?
கேள்வி பிறக்கும்.
தமிழ் தந்த தெளிவு,
கூடவே பதிலும் பிறக்கும்.
✽✽✽

இப்படி ஒருசிலரேனும் வாழப்பழகினாற்றான்,
அறிவுலகம் நிலைக்கும்.
இன்றைய பொருளுலகிற்கு,
ஐயா ஒரு அருங்காட்சியகப்பொருள்.
தமிழைப்போலவே ஐயாவையும்,
விளங்க விளங்க,
விளங்காமையின் விரிவே விளங்குகிறது.
கல்வி உலகில் கால் வைக்க விரும்பும் இளைஞர்க்கு,
அவர் வாழ்வே ஒரு செய்தி,
விதியால் வந்த அறிவு.
அறிவால் வந்த அடக்கம்.
அடக்கத்தால் வாய்த்த குரு.
குருமேல் கொண்ட பக்தி,
இறை நம்பிக்கை,
இவை, விரிந்த இவரது அறிவின் வேர்கள்.
✽✽✽

''ஐயா", ''ஐயா" என,
தன் குருவான கணேசையர் மீது அவர் காட்டும் பக்தி அளப்பரியது.
''ஐயாவின் அறிவோடு ஒப்பிடும்போது,
எங்கள் அறிவு ஒரு துரும்பு" என,
அவர் சொல்லும்போது,
நான் என் அறிவு நிலை எண்ணி நாணுவேன்.
என்னுடைய,
அறிவின்மை கண்டபின்னும்,
''என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி,
 வண்ணப்பணித்து என்னை வா என்ற வான் கருணை",
எண்ணி வியப்பேன்.
✽✽✽

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுக்கிடக்கையிலும்,
கொழும்பில் இருந்து நான் தொலைபேசியில் கேட்ட கேள்விக்குப் பதில் கூறி,
பத்துக்கடிதங்கள் அவரிடமிருந்து அடுத்தடுத்து வருகின்றன.
இவரது கடவுள் நம்பிக்கை புதுமையானது,
அன்றாடம் ''மானதபூஜை."
''பண்டிதர் கோவில்களுக்கு அதிகம் போவதில்லை"
மற்றவர்களின் இத்தகு கூற்றுக்குச் சிரிப்பே பதிலாகும்.
சாதாரண தோட்டக்காரனோடும்,
அவன் நிலையில் நின்று,
அவர் பேசுவது கண்டு வியப்பேன்.
அப்பேச்சிலும் உண்மை இருக்கும்.
''நான்" எனும் தருக்கு அவர் வார்தைகளில் என்றும் இராது.
வினையம் சம்பந்தமான வித்தை.
இவரிடமிருந்து என்னால் பெறமுடியாமல் போனதில் இதுவும் ஒன்று.
✽✽✽

மொத்தத்தில்,
என் அறிவு கடந்து நிற்கும் அற்புதர் இவர்.
இப்பொழுது என் வேண்டுதல் எல்லாம்,
''அடுத்த பிறவியிலாவது, 
இவரிடம் இருக்கும் அறிவு முழுவதையும்,
அறியும் அறிவோடு என்னைப் படைத்துவிடு" என்பதே.
எண்ணங்கள் தொடர்கின்றன.
விரிவஞ்சி விடுகிறேன்.
முடிவுரையாய்,
இவரைச் சந்தித்ததால்,
இவர்மேல் கொண்ட பக்தியைவிட,
தமிழ் இலக்கியங்கள் மேலும்,
தமிழ்ப் புலவர்கள் மேலும்,
தமிழின் மேலும்,
உண்டான பக்தி அதிகமாயிற்று.
அவர் இட்ட அறிவுப் பிச்சையால்,
அறிவுலகில்,
இன்று நானும் ஒரு செல்வன் போல்...
✽✽✽✽✽✽✽✽✽✽✽✽✽✽✽

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பற்றிய 
கம்பவாரிதியின் எண்ணப்பதிவுகள் அடுத்தவாரம்...
"தாம் வரம்பாகிய தலைமையர்" எனும் தலைப்பில் பதிவாகின்றது..
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.